நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!

By சமஸ்

கொல்கத்தாவில் 2016 தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களிடம் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். கள்ளக்கூட்டு. இந்த ஒரு வார்த்தைதான் திரிணமுல் காங்கிரஸாருக்கு மம்தா அளித்திருக்கும் தேர்தல் மந்திரம். இதை ஊர் ஊராக மக்களிடம் போய் சொல்ல பிரத்யா பாசு, தேவ ராய், சிரஞ்ஜீத், தேவ், மூன் மூன் சென், பாய்சுங் பூட்டியா, லக்ஷ்மி ரத்தன் சுக்லா என்று ஒரு பெரிய நடிக - விளையாட்டு நட்சத்திரப் பட்டாளத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

மம்தா பிரயோகிக்கும் வார்த்தை கூசவைப்பதாக இருக்கலாம். அப்படியான உறவைத்தான் அங்கு தேர்தல் உத்தியாக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதன்படி, தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் இரு தரப்பும் அதிகாரபூர்வமாக தனித்தனியே நிற்கும். ‘கள்ளப் பங்கீட்டு தொகுதிகளில்’ பரஸ்பரம் ‘டம்மி வேட்பாளர்கள்’ போட்டு விட்டுக்கொடுத்துக்கொள்வார்கள்; மம்தாவுக்கு எதிராக பரஸ்பரம் கை கோத்து வேலை செய்வார்கள்.

நொறுக்கப்படும் கோட்டை

தங்களை ஜனநாயகவாதிகளாகவும் தாராளச் சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் நாட்டின் இரு முக்கியக் கட்சிகளின் இப்படியான ‘கள்ளக்கூட்டு’ உறவு வெட்கக்கேடு. அதைத் தாண்டி தேர்தலில் கரைசேருவதற்கான உத்தியும் அல்ல இது.

தங்கள் நம்பிக்கைக்குரிய கோட்டையாக இடதுசாரிகள் நம்பியிருந்த வங்கத்தை 2011 சட்டசபைத் தேர்தலில் தன் வசமாக்கிவிட்டார் மம்தா. மொத்தமுள்ள 294 இடங்களில் 233 இடங்களை 2006-ல் தன் வசம் வைத்திருந்த இடது கூட்டணி 2011-ல் 62 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, காங்கிரஸைத் தன் கூட்டணியில் வைத்திருந்த திரிணமுல் காங்கிரஸ் 184 இடங்களை வென்றது; காங்கிரஸ் 42 இடங்களை வென்றது.

2014 மக்களவைத் தேர்தலில் மேலும் அடி வாங்கினர் இடதுசாரிகள். நாடு முழுக்க மோடி அலை அடித்த சூழலிலும், மொத்தமுள்ள 42 இடங்களில் 34 இடங்களைக் கைப்பற்றினார் மம்தா. காங்கிரஸ் 4 இடங்களில் ஜெயிக்க, பாஜகவுக்கு இணையாக வெறும் இரண்டு இடங்களை மட்டுமே இடதுசாரிகள் வென்றார்கள்.

2015 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நிலைமையை மேலும் மோசமாக்கின. உள்ளாட்சி அமைப்புகளில் பெரிய பதவிகளுக்கான 235 இடங்களில் 183 இடங்களை திரிணமுல் காங்கிரஸ் வென்றது. பல இடங்களில் இரண்டாம் இடத்தைத் தக்கவைக்கப் போராட வேண்டிய சூழலுக்கு இடதுசாரிகளும் மூன்றாம் இடத்தைத் தக்கவைக்கப் போராட வேண்டிய சூழலுக்கு காங்கிரஸும் தள்ளப்பட்டார்கள்; பின்னால் பாஜக ஆவேசத்தோடு துரத்திக்கொண்டிருக்கிறது.

வங்கத்தைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி என்பது இன்றைக்கு வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல; உயிரோடு பிழைத்திருப்பதற்கான போராட்டம். இடதுசாரிகளிடமிருந்து எதிர் அரசியலைக் கற்றுக்கொண்ட மம்தா, எதிக்கட்சிகளுக்கான வன்களமாக மாநிலத்தை மாற்றியிருக்கிறார். எனினும், இடதுசாரிகளுக்கு உள்ள நெருக்கடி காங்கிரஸுக்கு அங்கு இல்லை. வெளிப்படையான கூட்டணிக்கு இடதுசாரிகள் தயாரில்லாத சூழலில் தனித்து நிற்கும் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கலாம்.

தமிழகத்தைப் போலவே இரு பிரதான கட்சிகளையும் தாண்டி ஒரு மாற்றத்துக்கான எதிர்ப்பார்ப்பு வங்காளி களையும் சூழ்ந்திருக்கிறது. எப்படியும் ஆளுங்கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சிக்கான பந்தயத்தில் காங்கிரஸ் இல்லாத சூழலில், களத்தில் தன்னை ஒரு மாற்றாக முன்னிறுத்திக்கொள்வதற்கு காங்கிரஸுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பு. சரியாகச் சொல்ல வேண்டுமானால், தமிழகத்திலிருந்து ராகுல் தன் கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும்.

தமிழகக் கட்சிகள் ஏன் தனித்து நிற்கின்றன?

தமிழகத் தேர்தல் களத்தில் அரிதான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து, குறைந்தது நான்கு கூட்டணிகள் தெரிகின்றன. ஆறு முனைப் போட்டி. பிரதான போட்டி இரு திராவிடக் கட்சிகள் இடையில்தான் என்றாலும், கண்ணுக்கு எதிரே தெரியும் இழப்பையும் பொருட்படுத்தாமல், எது ஏனைய நான்கு தரப்புகளைக் களத்தில் தீவிரமாக நிறுத்தியிருக்கிறது? குறுகிய காலப் பலன்களைத் தாண்டிய தொலைநோக்குக் கணக்குகள்.

இந்தத் தேர்தலின் அதிமுக்கியத்துவம் 2016-ல் யார் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; 2021-ல் யார் பந்தயத்தில் முன்னால் இருக்கப்போகிறார்கள் என்பதும்தான்!

இது ஒன்றும் ரகசியமல்ல. பாமக போன்ற இன்னமும் மாநிலம் முழுக்க கிராமங்களில் கிளைகள் பரப்ப முடியாத ஒரு கட்சி, தங்கள் தலைமையில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என்ற முடிவை முந்திக்கொண்டு எடுப்பதற்கு என்ன காரணம்? அரை நூற்றாண்டு காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சி மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் அதிருப்தி.

இந்த அதிருப்தியை இந்தத் தேர்தலில் அறுவடை செய்ய முடியாமல் இருக்கலாம்; நிச்சயம் அடுத்த தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளைத் தாண்டிய சக்திமிக்க மாற்றுத் தரப்பாகத் தங்களைக் களத்தில் முன்னிறுத்திக்கொள்ள இந்த முடிவு உதவும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே காங்கிரஸைக் காட்டிலும் சிறிய கட்சிகள். மரபார்ந்த வாக்கு வங்கி அடிப்படையில் இன்னமும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ். காமராஜருக்குப் பின் தமிழகத்தில் மக்களை ஈர்க்கக் கூடிய, புதிதாக இளைஞர் கூட்டத்தை உள்ளே இழுத்துவரக் கூடிய, வசீகரமான ஒரு பெரிய தலைவரைக்கூட காங்கிரஸால் உருவாக்க முடியவில்லை. சாமானிய மக்களிடம் களத்தில் துடிப்பாகப் பணியாற்றக் கூடிய தொண்டர் பட்டாளத்தை அது இழந்து நீண்ட காலம் ஆகிறது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு இருக்கும் ஓட்டு வங்கியானது பெருமளவில் பாரம்பரியத்தின் மிச்சம் அல்லது தேசிய அரசியலின் எச்சம். இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் குறுகிய கால பலன்களின் அடிப்படையில், இரு கட்சிகள் தலைமையிலும் மாற்றி மாற்றி கூட்டணி சவாரி செய்தது.

ராகுலின் கனவுகள் நனவாகுமா?

டெல்லியில் ராகுலைப் பற்றித் தனிப்பட்ட அளவில் காதில் விழக்கூடிய விஷயங்கள் ஓரளவுக்கு நம்பிக்கை தரக் கூடியவை. அவருடைய தந்தை அல்லது பாட்டியைப் போல, அதிகார வெறி ராகுலிடம் கிடையாது என்பார்கள். நிறையப் படிப்பார் என்பார்கள். முக்கியமாக, அடித்தட்டு மக்கள் மத்தியில் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்பார்கள். நான் உத்தரப் பிரதேசம் சென்றிருந்தபோது, வெயில் பிளக்கும் பொட்டல் கிராமங்களில் நூறு ரூபாய்க்கு வழியில்லாத மக்கள் மத்தியில் தன்னுடைய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் தங்கியிருந்து பணியாற்றியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

காங்கிரஸுக்குப் புத்துயிர் அளிப்பது தொடர்பாக ராகுலுக்கு நிறையக் கனவுகள் இருக்கின்றன. கைவசம் நிறையத் திட்டங்களையும் அவர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் முக்கியமானது, பழம்பெருச்சாளிகளை ஒழித்துக்கட்டுவது. காங்கிரஸில் முடிவெடுக்கும் இடங்களை ஆக்கிரமித்திருக்கும் ஆதிக்கச் சாதி, பண்ணையார் வழி வாரிசுகளைத் துடைத்தெறிவது. நாட்டிலேயே முன்னோடியாக, கட்சிப் பதவிகளில் 50% இடங்களைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு உறுதிசெய்வதாகக் கடந்த ஆண்டு காங்கிரஸ் வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ராகுல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே வெளியிடப்பட்டது.

சமூகத்தின் அடித்தட்டிலிருந்து கட்சியை நோக்கி வரும் இளைஞர்களுக்குக் கட்சியில் முக்கிய இடமளிக்க விரும்புகிறார் ராகுல். காங்கிரஸ் ஒரு வலுவான கட்சியாக இருக்கும் மாநிலங்களில், மூத்தத் தலைவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களில் இதை ராகுலால் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தமிழகம், வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த முயற்சிக்கு நல்ல வாய்ப்பான களங்கள்.

ஒரு புதிய இளைஞர் படையின் கைகளில் கட்சியை ஒப்படைப்பது, அவர்கள் கூடவே மாநிலம் எங்கும் தானும் பயணிப்பது, கிராமம் கிராமமாகச் செல்வது, மக்களைச் சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது, அரசியல் மாற்றத்துக்கான இயக்கமாக தன் கட்சியை முன்னிறுத்துவது என்பதான அணுகுமுறைகள் ராகுலின் திட்டங்களை அடைய உதவக் கூடியவை. ராகுலால் தமிழகத்தில் ஒரு மாதம் முகாமிட்டு மக்கள் மத்தியில் பணியாற்ற முடிந்தால், தமிழகத்தில் மட்டும் அல்லாமல், தேசிய அளவிலும் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்க முடியும். அடித்தட்டு மக்களிடத்தில் காங்கிரஸை எடுத்துச்செல்ல உதவுவதோடு, கட்சிக்குள் கார்பரேட் பண்ணையார்களை ஒழித்து புது ரத்தம் பாய்ச்சவும் அது வழிவகுத்திருக்கும்.

முதலில் தமிழகத்தில், கூடவே மேற்கு வங்கத்தில், அடுத்து உத்தரப் பிரதேசத்தில் என்று நாடு முழுமைக்கும் இந்த உத்தியை அவர் எடுத்துச் சென்றிருக்கலாம். காங்கிரஸ் எனும் கட்சியைத் தாண்டி, 15-35 வயதுக்குட்பட்ட 42.2 கோடி இந்தியர்களின் அரசியலிலும் ஏதோ ஒரு வகையில், குறைந்தபட்ச சில நல் விளைவுகளை அது உருவாக்கியிருக்கும். கூடவே மக்களை நோக்கிச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏனைய அரசியல் கட்சிகளிடமும் அது உண்டாக்கியிருக்கும்.

ராகுல் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித் திருக்கிறார். கூடவே மோசமான முடிவுகளுக்கும் மௌன சாட்சியாகியிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி. வங்கத்தில் இடதுசாரிகளுடன் கள்ளக்கூட்டணி. டெல்லியிலிருந்து மாநிலங்களைப் பார்க்கும் மனோபாவம் மாறும் வரை வீழ்ந்துகொண்டேயிருக்கும் காங்கிரஸுக்கு விமோசனமே இல்லை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்