ஆவேசமான மேடைப் பேச்சு, போராட்ட குணம், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஈடுபாடு என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரபரப்பாக இயங்கிவரும் அரசியல் தலைவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டு களத்தில் இறங்கிய வைகோவின் பயணம், தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இன்றும் தொடர்கிறது. அவரது செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நடைபோடுகிறார். முல்லைப் பெரியாறு, மீத்தேன், மதுவிலக்கு, இலங்கைப் பிரச்சினை என்று எல்லா பிரச்சினைகளிலும் முதலில் ஒலிக்கும் குரல் அவருடையதுதான்.
அண்ணாவின் அழைப்பு
இன்றைக்கு நரம்பு புடைக்கப் பேசும் வைகோவின் பொது வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1964-ல் சென்னை கோகலே அரங்கத்தில் இந்தியை எதிர்த்துப் பேசிய வைகோவை ரசித்த அண்ணா, அவரை அழைத்துப் பாரட்டினார். திமுகவில் இணைந்தபோது வைகோவுக்கு 20-வயது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக மாணவர் அமைப் பினருடனும் கைகோத்துக் களப்பணியாற்றினார். பிரம்மாண்ட மேடையில் பேச வேண்டும் என்ற ஏக்கம் வைகோவுக்கு இருந்தது. அந்த ஏக்கம் சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளராக இருந்த அ. பழநிசாமி மூலம் 1966-ல் சாத்தியமானது. சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடத்தில் அவர் பேசியது சென்னை வரை அதிர்வுகளை உண்டுபண்ணியது.
60-களின் மத்தியில் வைகோ - முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நட்பு உருவானது. இருவரும் மாணவர்களாகப் பட்டிதொட்டி எங்கும் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்காகப் பயணப்பட்டனர். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற வைகோ, அங்கே திமுகவின் முகமாகத் திகழ்ந்தார். 1968-ம் ஆண்டு நடந்த மாணவர் தேர்தலில் போட்டியிட்ட வைகோ, சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவியபோது, ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்தினார் அண்ணா. திமுக இளைஞர் மன்ற அமைப்பாளர், திமுக மாணவரணித் துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகள் அவரைத் தேடிவந்தன.
இன்றைக்கு ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்துள்ள வைகோ, முதலில் வகித்தது கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவியைத்தான். 1970-ம் ஆண்டு கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரானார். இதையடுத்து, குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர், திருநெல்வேலி கூட்டுறவு சங்கத் தலைவர் என்று பதவிகளை வகித்தார். 1975 சேலம் மாநாட்டில் அவரது பேச்சு வரவேற்பைப் பெற்றது. 1976 ஜனவரி 30-ல் திமுக அரசை இந்திரா காந்தி கலைத்தபோது, கட்சித் தரப்பில் கைதான முதள் ஆள் வைகோ. மிசா சட்டத்தின் கீழ் திருநெல்வேலியில் கைதானார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மிசா கைதியாகச் சிறையிலிருந்தார். 1978-ல் மாநிலங்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்ட வைகோ பேசிய முதல் உரை, மாநில சுயாட்சி பற்றியது. வட இந்தியத் தலைவர்களை அவரது உரை வெகுவாக ஈர்த்தது.
இலங்கைப் பயணம்
1989-ல் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார் வைகோ, 23 நாட்கள் வன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தார். இந்தியா திரும்பும் வழியில் இலங்கை ராணுவத்தினர் வைகோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது வைகோவுடன் வந்த விடுதலைப் புலி சரத் தனது உயிரைக் கொடுத்து அவரைக் காப்பாற்றினார். சரத்தின் உருவப் படத்தைத் தனது வீட்டின் பிரதான இடத்தில் மாட்டிவைத்துள்ளார் வைகோ.
1989 மக்களவைத் தேர்தலில் தனது நண்பர் காளிமுத்துவிடம் தோல்வியைத் தழுவினார் வைகோ. 90-களின் தொடக்கம் திமுகவுக்கு சரிவைத் தந்தது. வைகோவின் இலங்கைப் பயணம், ஸ்டாலினின் வளர்ச்சி எனப் பல்வேறு காரணங்களால் வைகோவுக்கும் திமுக தலைமைக்கும் உரசல்கள் தோன்றின. ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். “விடுதலைப் புலிகளின் மூலம் தன்னைக் கொல்லப் பார்ப்பதாகக் கூறிக் கட்சியிலிருந்து என்னை நீக்கினார் கருணாநிதி” என்று இன்றும் சொல்கிறார் வைகோ. அவரை நீக்கக் கூடாது என்று கூறி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய தொண்டர்கள் தீக்குளித்தனர். வைகோவுடன் 9 மாவட்டச் செயலாளர்கள், நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியேறினர். திமுகவில் ஏற்பட்ட ‘செங்குத்துப் பிளவு’ என்றே அது வர்ணிக்கப்படுகிறது.
1994-ல் மதிமுகவைத் தொடங்கினார் வைகோ. தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட அறையில், மதிமுக கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மதிமுக சந்தித்த முதல் தேர்தல் 1996 சட்டப் பேரவைத் தேர்தல். மார்க்சிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைந்தது. திமுக தரப்பில் இருந்த தமாகா, ரஜினி ஆதரவு, அதிமுக எதிர்ப்பலையால்,வைகோ அணி அந்தத் தேர்தலில் எடுபடவில்லை.
1998-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மதிமுக. சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய 3 இடங்களில் வெற்றியும் பெற்றது. இடையில், அதிமுகவால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவிழ்க்கப்படவே, திமுக அந்தக் கூட்டணியில் இணைந்தது. அதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக 4 தொகுதிகளைக் கைப்பற்றியது. மதிமுகவுக்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் கிடைத்தனர்.
பொடா கைதி
புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோவை 2002-ல் பொடாவில் கைது செய்தது அதிமுக அரசு. வைகோ விடுதலைக்காகப் பேச மத்திய பாஜக அரசின் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால், பிணை வாங்க மாட்டேன் என்று கூறிய வைகோ 18 மாதம் சிறையில் இருந்தார்.
இதையடுத்து, பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்து வைகோவைச் சந்தித்தார் கருணாநிதி. பிணையில் வெளியே வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வைகோ வெளியே வந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், திமுகவுடன் இணைந்தது மதிமுக.
மத்திய அமைச்சரவையில் மதிமுகவுக்கு இடம் கிடைக்காமல் போனதை அடுத்து திமுக தன்னை ஓரங்கட்டுகிறது என்று குற்றஞ்சாட்டிய வைகோ, 2006-ல் ஆகப்பெரிய திருப்பமாக, ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆறு தொகுதிகளில் மதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது.
2007-ல் ஐமு கூட்டணிக்குத் தெரிவித்த ஆதரவை விலக்கிக் கொண்டார். 2011 வரை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் வைகோ. ஆனால், அந்தத் தேர்தலில் குறைந்த இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்றதும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆச்சர்யப்படுத்தினார்.
காத்திருக்கும் சவால்!
2014-மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவு தெரிவித்தார் வைகோ. பலமான கூட்டணி அமைந்தும் தோல்வியே கிடைத்தது. ஆனால், அந்தக் கூட்டணி ஓராண்டுகூட நிலைக்கவில்லை. ராஜபக்சவை மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்து வர, தே.ஜ.கூட்டணியிலிருந்து வெளியே சென்றது மதிமுக. ஆயிரம் சோதனைகள் வந்தாலும் சோதனை முயற்சிகளிலிருந்து வைகோ பின் வாங்கியதில்லை. 1996-ல் தொடங்கிய இடத்திலேயே தற்போது வந்து நிற்கிறார் வைகோ. அப்போதுபோல், இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சியுடனும், அதன் முயற்சியில் வந்த சிபிஐ, விசிகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது மதிமுக. காத்திருக்கிறது கடும் சவால்! எப்போதும்போல் துணிச்சலாக நிற்கிறார் வைகோ!
- எம். மணிகண்டன்,
தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago