ஓர் ஆண்டுக்கு முன் கரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த சமயம், வில்லிசைக் கலைஞர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். வெளியே நின்று பேசினார், வீட்டுக்குள் வரவில்லை. அழைத்தேன்; வர மறுத்துவிட்டார். தொற்றுநோயால் ஏற்பட்ட கலாச்சாரச் சரிவு; வீட்டுக்கு வந்தவர்களை ‘வாங்க... வாங்க... வாங்க’ என்று மூன்று முறை அழைத்த பண்பாடு சரிந்துவிட்டது.
ஏடு தந்தார்: அந்தக் கலைஞர் நாட்டுப்புறத் தெய்வக் கோயில்களில் வழிபாடு இல்லாமல் ஆனதும் - கலை நிகழ்ச்சிகள் நடக்காமல் போனதும் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிவிட்டு வந்த விஷயத்தைச் சொன்னார். “சார், கொஞ்சம் பணம் தர முடியுமா? என்னிடம் வில்லுப்பாட்டு ஏடுகள் உள்ளன. விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். விற்பதற்கு வேறு எதுவுமில்லை” என்றார். நான் அவருக்குப் பணம் கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து, ஆறு கதைப்பாடல்களின் ஏடுகளைக் கொண்டுவந்தார். எல்லாம் பழைய ஏடுகள். அவற்றில் மூன்று அச்சானவை.
பண்பாட்டுச் சரிவு: பெருந்தொற்று ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் கோயில் விழா, திரையரங்கு, கல்லூரி, பள்ளி எனப் பலவும் மூடப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கிராமியக் கலைஞர்களும் உண்டு என்பது பலரும் அறியாதது. பெரும்பாலும் ஊடகங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை.
இந்தக் காலத்தில் கடினமாக உழைத்து சம்பளம் வாங்கியவர்களும் உண்டு; வேலை செய்யாமல், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக்கொண்டு சம்பளம் வாங்கியவர்களும் உண்டு. வேலையும் இல்லை... வேறு வருமானமும் இல்லை என்பதால், பட்டினி கிடந்தவர்களும் உண்டு. வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு. இப்படியான விஷயங்களெல்லாம் அதிகாரபூர்வமாக எழுதி வைக்கப்படவில்லை. ஆனால், பண்பாட்டுரீதியான ஒரு சரிவு வந்ததை நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல் ஆய்வாளர்களில் மிகச் சிலர் தொகுத்திருக்கிறார்கள்.
கலைஞர்களுக்குச் சோதனை: வழிபாட்டுத் தலங்களை அடைக்க வேண்டும்; பக்தர்களுக்கு அனுமதி இல்லை; விழாவிற்கு அனுமதி இல்லை என்னும் உத்தரவுகள், கிராமத்துக் கோயில்களுக்கும் விதிவிலக்காக இருக்கவில்லை. கோயில் விழாக்கள் அல்லது பொது விழாக்களை மட்டுமே நம்பி வாழ்ந்த கிராமியக் கலைஞர்களுக்கு இந்தக் காலம் மிகப் பெரிய சோதனைக் காலம்.
பெருந்தொற்றுக் காலத்தில் கிராமியக் கலைஞர்களுக்கு வந்த பிரச்சினைகளை ஓரளவு வரையறுத்துச் சொல்ல முடியும். கிராமியக் கலைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் கலையை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். இவர்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது. வேறு தொழில்களுக்குப் போகும் மனநிலையும் இல்லாதவர்கள். அவர்களால் போகவும் முடியாது. வேறு தொழில்களையும் கூலி வேலை, சிறு வியாபாரம் போன்றவற்றையும் செய்துகொண்டே கலை நிகழ்த்தியவர்கள்கூட பாதிக்கப்பட்டார்கள். விவசாயம், தோட்டத் தொழில் செய்துவந்தவர்களில் கலைஞர்களாகவும் வாழ்ந்தவர்களின் நிலை ஓரளவு சொல்லும்படியாக இருந்தது.
கிராமியக் கலைஞர்களில் பெரும்பாலோருக்குச் சேமிப்புப் பழக்கம் கிடையாது. குடிப்பழக்கம் இவர்களை எப்போதும் கடனாளியாக வைத்திருந்தது. பெருந்தொற்று இல்லாத காலத்திலும் கலைஞர்களுக்கு ஆண்டு முழுக்க வருமானம் வருவதில்லை. ஓர் ஆண்டில் சில மாதங்களில் விழாக்கள் நடக்காது. இது வட்டாரரீதியாக மாறிக்கொண்டே இருக்கும்.
கடன் கொடுக்க ஆளில்லை: இந்தக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி இல்லாத காலங்களில், கடன் வாங்கியே காலம் கழித்தனர். பெரும்பாலும் கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்களே கலைஞர்களுக்குக் கடன் கொடுத்து, விழாக் காலங்களில் கடனை வட்டியுடன் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் இடைத்தரகர்களின் நிலையே தடுமாறியது; விழாக்கள் எப்போது நடக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. விழாவின் கூறுகளாக அல்லது சடங்குகள் சாராத கலைகளை நிகழ்த்தியவர்கள் கிராமத்து மக்களை அல்லது தனிப்பட்ட உபயதாரர்களை நம்பியே கலைகளை நிகழ்த்தினார்கள். இவர்களுக்கு நிகழ்த்துவதற்கென்ற காலம் இல்லாவிட்டாலும் வாழ்க்கையை நகர்த்துவதற்குரிய வருமானம் வந்தது. இத்தகு கலைஞர்களின் மனைவிகள் சிறு வியாபாரம் செய்தோ வேறு தொழில் செய்தோ சம்பாதித்தனர்.
யாசகக் கலைஞர்கள்: நோய்த்தொற்றின்போது பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டது. கட்டுப்பாடு இறுக்கமானபோது பார்வையாளர்களோ உபயதாரர்களோ இன்றிக் கலைஞர்கள் ஆதரவற்ற நிலைக்கு ஆளானார்கள். இவர்களில் யாசகர்களான, கலை நிகழ்த்தியவர்களின் நிலை இன்னும் மோசமானது. (எ.கா. தோல்பாவைக் கூத்து, சாட்டையடிக்காரர், கழைக்கூத்து, பூம்பூம் மாட்டுக்காரர் எனச் சிலர்).
இவர்களில் சிலர் சமூகநலக் காடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். சிறு விலங்குகள், சிறு பறவைகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டுத் தின்றதாகவும் கிழங்குகளை வேகவைத்துத் தின்று வாழ்ந்ததாகவும் கேள்விப்பட்டேன். தாதுவருஷப் பஞ்சத்தில் (1876) ஏற்பட்ட நிகழ்வுகளைப் பஞ்சலட்சண திருமுகவிலாசம் பதிவுசெய்ததுபோல் இந்தப் புலம்பெயர் கலைஞர்கள் பற்றி ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. 15 முதல் 20 மாதங்களுக்கு மேல் கிராமியக் கலைஞர்களின் கலைகளுக்குரிய இசைக்கருவிகளும் பிற உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பழுதடைந்துவிட்டன (எ.கா. கணியான் ஆட்டத்துக்குரிய மகுடம், தோல்பாவைக் கூத்துக்குரிய பாவைகள், ஆலி, பொய்க்கால் குதிரை எனப் பல). இதனால், இன்றைய நிலையில் இவர்கள் பரவலாக கலை நிகழ்த்துவதில் சிக்கல் இருக்கிறது.
நலவாரிய அட்டை: நோய்த்தொற்றுக் காலத்தில் கிராமியக் கலைஞர்களுக்கும் அரசு உதவி கிடைத்தது. பெரும்பாலும் வருவாய்த் துறையின் வழி இந்த உதவி கிடைத்தது. நலவாரிய அட்டையை வாங்கிய கலைஞர்களுக்கு மட்டுமே பண உதவி கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்தது பலருக்கும் தெரியாது. வருவாய்த் துறை அலுவலர்களுக்கு கிராமியக் கலைஞர்களை அடையாளம் காண முடியவில்லை. கலைஞர்களுக்கான நலவாரிய அட்டையை மண்டலக் கலை, பண்பாட்டு மையங்கள் வழிதான் பெற முடியும். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களுக்கும் பண்பாட்டு மைய அலுவலகங்கள் காஞ்சிபுரம், தஞ்சாவூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஏழு இடங்களில் மட்டுமே உள்ளன. இந்த மையங்களிலிருந்து நலவாரிய அட்டையைப் பெற ஒரு இடைத்தரகர் தேவைப்படுகிறார். புலம்பெயர் கலைஞர்களில் பலருக்கு இந்த அட்டை கிடையாது. இப்படியான சிக்கலில் ஒரு மாவட்டத்தில் 20-30% கலைஞர்களே உதவி பெற முடிந்தது.
வருவாய்த் துறை வழியாகக் கலைஞர்களுக்கு உதவி கிடைத்ததில் பெரும்பாலும் ஊழல் இல்லை. அதன் வழிமுறை அப்படி வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், முறையான முகவரியோ விவரங்களோ இல்லாத நிலையில் அரசின் உதவி கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
நிகழ்த்துதலில் தொய்வு: கலை நிகழ்த்துதலில் 20 மாதங்களுக்கு மேலாகத் தொய்வு இருந்தது. கோயில் விழாக்கள் நடத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, கலை நிகழ்த்துவதில் கலைஞர்கள் தடுமாற்றம் அடைந்தனர். ஒரு கதைப் பாடலை 8 மணி நேரம் நினைவிலிருந்தே பாடி விளக்கம் சொன்ன கணியான் கலைஞர் ஒருவர், பழைய மாதிரி பாட முடியவில்லை; பாட்டுத் தொடர்ச்சி விட்டுப்போகிறது என்றார். தங்கள் தடத்தில் வருவதற்கு அவர்களுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படும் என்று தோன்றுகிறது. இந்தக் கலைஞர்களில் காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், கொக்கலிக்கை ஆட்டம் போன்ற கலைகளை நிகழ்த்துபவர்களுக்கு இன்னும் சிக்கல் ஏற்படலாம். இவர்களுக்குப் பயிற்சி/ பழக்கம் முக்கியம். பெருந்தொற்றுக் காலத்தில் அது விடுபட்டது.
புதுமணத் தம்பதிகள்: பெருந்தொற்றுக் காலத்தில் கிராமியக் கலைஞர்களுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் தாமாகத் தேடிச்சென்று உதவியவர்கள் சிலரை அறிவேன். புதுச்சேரியில் ஒரு அமைப்பு, நாஞ்சில் நாட்டுத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களைத் தத்தெடுத்துக்கொண்டது. பெருந்தொற்று பாதிப்பு குறைந்த சமயம், ஒரு நாள் என் வீட்டின் முன் இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. ஒரு முஸ்லிம் இளம் பெண்ணும் இளைஞரும் அதிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பின், “உங்கள் தோல்பாவைக் கூத்து நூலைப் படித்தோம்; அந்தக் கலைஞர்களுக்கு உதவ விரும்புகிறோம்” என்றனர். அந்த இளைஞர் சிறுதொழில் அதிபர். கிராமியக் கலையில் ஈடுபாடுள்ளவர். திருமணமாகி மூன்று மாதங்கள் ஆனதாம். “உங்களிடம் பணம் தரவா; கொடுத்துவிடுவீர்களா அந்தக் கலைஞர்களுக்கு” என்று கேட்டார்.
நான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் வாழும் காலனியின் முகவரியை விவரமாகச் சொல்லிவிட்டு, “அந்தக் கலைஞர்களின் காலனியில் கலைமாமணி முத்துச்சந்திரனைப் பார்த்துப் பணம் கொடுங்கள்; அவர் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார்” என்றேன். அந்தத் தம்பதி தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களுக்குக் கணிசமான பணம் கொடுத்ததைப் பிறகு அறிந்தேன். இருபது ஆண்டுகளாக வில்லுப்பாட்டுக் கலை நிகழ்த்திய தங்கமணி என்ற கலைஞருக்கு, மரவள்ளிக்கிழங்கு வியாபாரம் செய்யத் தள்ளுவண்டி வாங்கிக்கொடுத்தார் புதுச்சேரிக்காரர் ஒருவர். சென்னை இண்டாக் அமைப்பிடம் கேட்டபோது கணிசமான பண உதவிசெய்தார்கள். ஈரோடு கலைக்கோவன் தன் நண்பர்களிடமிருந்து சேகரித்து அனுப்பினார். இப்படி எத்தனையோ பேர்.
கலையடையாளம்: பெருந்தொற்றுக் காலத்திலிருந்து மீண்டு தாங்கள் நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா என்ற ஏக்கம் கிராமியக் கலைஞர்களிடம் இருந்ததற்கு வருமானம், வாழ்க்கையை நகர்த்தத் தேவையான பணம் என்பது மட்டுமல்ல காரணம். தாங்கள் கலைஞர்கள் என்ற அடையாளம் இல்லாமலாகிவிடுமோ என்ற அச்சமும்தான். கூலி வேலை, கட்டிட வேலை, விவசாய வேலை செய்யும் தொழிலாளர்களைப் போன்றவர்கள் அல்லர் இந்தக் கலைஞர்கள். இவர்களுக்குத் தங்களின் கலை நிகழ்த்துதலின் மேலிருந்த சிரத்தை வேறு விதமானது. அதற்கான தொய்வு இவர்களைப் பாதித்ததுதான் கொடுமை.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு கிராமக் கோயிலில் நடந்த கிராமியக் கலை விழாவுக்குக் கலைஞர்களை நான் ஏற்பாடு செய்தபோது, “எங்கள் உடம்பு இப்போதுதான் முறுக்கேறுகிறது சார்” என்றார் தப்புக் கலைஞர் ஒருவர்.
சமூகத்தின் ஏனைய தொழில்களைப் போலவே முக்கியமானவை கிராமியக் கலைகள். இந்தக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களின் வாழ்க்கை நசிவடைந்தால் பெரும் பண்பாட்டுச் சரிவு ஏற்படும். இந்தக் கலைஞர்களுக்கு உதவி வழங்கத் திட்டங்கள் இருந்தாலும் அவை குறைந்த அளவிலான கலைஞர்களையே சென்றுசேர்கின்றன. நாடோடிக் கலைஞர்கள், யாசகக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லாவிட்டாலும் உரிய உதவிகள் போய்ச்சேர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago