விளம்பரங்களின் விலை என்ன?

By வெ.சந்திரமோகன்

தேர்தல்களும் விளம்பரங்களும் பிரிக்க முடியாதவை. என்றாலும், தேர்தல் முடிவுகளையே தீர்மானிப்பவை என்றே விளம்பரங்களை நம்புகிறார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இந்த முறை தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தை விளம்பர நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. இதன் பின்னுள்ள அரசியல் என்ன?

தேர்தல் பிரச்சார அசைவுகளை முழுக்க விளம்பர நிறுவனங்களின் வடிவமைப்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்ட தோடு, சமூக வலைதளங்களைத் தன் பிரச்சாரத்துக்கு முக்கியக் கருவியாகவும் பயன்படுத்தி வென்று காட்டியவர் பராக் ஒபாமா. ஜான். எஃப். கென்னடி, தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தி வென்றதைப் போல், 2008 தேர்தலில் ஒபாமா சமூக வலைதளங்களை பயன்படுத்தினார். அத்தேர்தலின்போது ஒபாமாவுக்கு ஆதரவாக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அதே எண்ணிக்கையிலான வீடியோக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஒபாமாவின் யூடியூப் பிரச்சார வீடியோக்கள் மட்டும் 1.4 கோடி மணிநேரம் பார்க்கப்பட்டன.

‘பெரிய அண்ணன்’ காட்டிய வழி

ஒபாமாவின் பிரச்சாரத்தில் ஷெப்பர்டு ஃபேரி எனும் தெரு ஓவியக் கலைஞர் வடிவமைத்த ‘ஹோப்’ (Hope) என்று எழுதப்பட்ட போஸ்டர் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தின்போது மட்டும் இணைய வழி அழைப்புகள் மூலம், சுமார் 3 லட்சம் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஒபாமாவுக்கு ஆதரவு திரட்டப்பட்டது. அத்தேர்தலில், ஒபாமா 76 கோடி டாலர்கள் செலவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஒபாமாவுக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சராசரியாக, ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 10.94 டாலர்கள் செலவிடப்பட்டது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னைவிட 7.2% வாக்குகள் அதிகம் பெற ஒபாமாவுக்குப் பெரிய உதவியாக இருந்தது இந்த உத்திகள்தான்.

அப்படியே அமெரிக்காவையே மாற்றிவிடுவார் என்கிற அளவுக்கு ஒபாமா உருவாக்கிய நம்பிக்கைகள் காலப்போக்கில் தளர்ந்தன. 2010-ல் அவர் கொண்டுவந்த ஒபாமா கேர் திட்டம் தொடர்பான சர்ச்சைகள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அவரது செல்வாக்கு முதலாவது ஆட்சிக் காலகட்டத்தில் (2008-12) கொஞ்சம் கொஞ்சமாகச் சரியத் தொடங்கியது. 2012 தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னியை ஒபாமா எதிர்கொண்டபோது அத்தனை நம்பிக்கை இல்லை. ஒபாமாவின் எதிர்ப்பாளர்கள் அவர் ஜெயிக்க மாட்டார் என்று அடித்துக் கூறினார்கள். கருத்துக் கணிப்புகளும் சந்தேகம் கிளப்பின. ஆனால், இறுதியில் மிட் ரோம்னியைவிட 3.9% வாக்குகள் கூடுதல் பெற்று ஒபாமா மீண்டும் ஜெயித்தார். காரணம், விளம்பர உத்திகள்.

2012-ல் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தை முழுமையாக வடிவமைத்தது ‘சிவிஸ் அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான் வாக்னர். 54 பேர் கொண்ட அவரது குழு, ஒபாமாவின் ஒவ்வொரு அசைவையும் வடிவமைத்தது. இணைய வழி பிரச்சாரத்துக்கு மட்டும் 52 கோடி டாலர்கள் ஒபாமா தரப்பில் செலவு செய்யப்பட்டதாக அமெரிக்கத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது!

மோடியை வடிவமைத்தவர்கள்!

இந்தியாவில் ஒபாமா பாணி பிரச்சாரத்தை உடனடியாகச் சுவீகரித்துக்கொண்டவர் மோடி. 2014 மக்களவைத் தேர்தலில் அமித் ஷா ஒருபக்கம் கட்சிக் கட்டமைப்புகளில் புகுந்து வேலை செய்துகொண்டிருந்தார் என்றால், இன்னொரு பக்கம் கைலாஷ்நாதன், ஹிரேன் ஜோஷி, ராஜேஷ் ஜெயின், அர்விந்த் ஷர்மா, பரத் லால், கிரிஷ் முர்மு, சுரேந்திர படேல் என்று ஒரு பட்டாளமே ஒபாமா பாணி தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்தது. இவர்களில் முக்கியமானவர், ‘பொறுப்புள்ள நிர்வாகத்தின் குடிமக்கள்’ எனும் அமைப்பை நடத்திவந்த பிரஷாந்த் கிஷோர்.

கிஷோர் ஹைடெக் கில்லாடி. கூடவே எந்த விவாதத்தையும் தன் தரப்பு விவாதமாக மாற்றக்கூடியவர். “மோடி விரும்பினால் காங்கிரஸ் கூட்டங்களில் வந்து தேநீர் விற்கலாம்” என்று மணிசங்கர் அய்யர் சொன்னதை வைத்தே ‘சாய் பே சர்ச்சா’ போன்ற வியூகங்களை வடிவமைத்தது அவர்தான். கூடவே, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓகில்வி அண்ட் மேத்தர்’, பிரிட்டனைச் சேர்ந்த ‘சோஹோ ஸ்கொயர்’, இந்தியா, இலங்கை, தாய்லாந்தில் செயல்படும் ‘மேடிஸன் வேர்ல்டு’ போன்ற நிறுவனங்களும் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பங்காற்றின. மோடிக்கு ஏற்கெனவே வெற்றி வாய்ப்புகள் பிராகாசமாக இருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில், பாஜக 282 இடங்களில் வெற்றிபெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம் முக்கியக் காரணம்.

மக்களவைத் தேர்தலில் மோடியின் பிரச்சாரத்தை வடிவமைத்த பிரஷாந்த் கிஷோர் பிஹார் தேர்தலின்போது, நிதிஷ் குமார் பக்கம் வந்துவிட்டார். பிஹாரில் பிஹாருக்கு ஏற்ற மாதிரி அவர் திட்டமிட்டார். ஆவேசமான உரை நிகழ்த்தும் திறன் கொண்ட மோடியைச் சமாளிக்கும் வகையில் திட்டங்கள் அமைந்தன. ஒரு சைக்கிள் படை மூலம் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்; ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10,000 அலைபேசி எண்களை வாட்ஸ் அப் குழுக்களில் சேர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டது; நிதிஷையும் லாலுவையும் தனித்தனிப் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது; பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குச் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிலளிக்க ஒரு குழுவை உருவாக்கியது; ‘பிஹாரி x பஹாரி’ கோஷத்தை உருவாக்கியதன் மூலம் பாஜகவினரை அந்நியர்கள் என்று சித்தரித்தது இவையெல்லாம் கிஷோர் தந்திரங்கள்தான்.

பின்தொடரும் தமிழகம்

மோடி வெற்றிக்குப் பின்னால் உள்ள விளம்பர சூத்திரம் தமிழக அரசியலிலும் தாக்கம் செலுத்தியது. தமிழகத்தில் முந்திக்கொண்டவர் அன்புமணி. ஒபாமா பாணியில், ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ போஸ்டரில் தொடங்கி முதல்வராகப் பதவியேற்பது போன்ற பாணியில் ‘அன்புமணியாகிய நான்…’ என்று வடிவமைக்கப்பட்ட விளம்பரங்கள் வரை பாமகவின் தேர்தல் வியூகங்களின் பின்னணி இதுதான். ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பின்னிக்கொண்டிருந்த திமுக வெகு சீக்கிரம் இந்தப் பாணியைச் சுவிகரித்துக்கொண்டது. ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ முதல் சமீபத்திய ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்ம்மா விளம்பரங்கள்’ வரை சகலத்தையும் தீர்மானிப்பவை இப்படியான நிறுவனங்களே.

அரசியல் கட்சிகளின் வியூகங்கள், விளம்பரங்களை வடிவமைக்கும் விளம்பர நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் சந்தை மதிப்பு கொண்டவை. இவர்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் கட்டணமும் கனரகம்தான். எல்லாம் கோடிகள், கோடிகள், கோடிகள்... ஏனென்றால், இவர்கள் உருவாக்கும் மாயைக்குப் பெரிய விலையுண்டு. உதாரணமாக, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பேஸ்புக் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20 ஆயிரத்திலிருந்து 1.27 லட்சம் ஆனது; இது எப்படி விலை கொடுத்து வாங்கப்பட்டது என்பதைப் புட்டுப்புட்டு வைத்தன பிரிட்டிஷ் எதிர்க்கட்சிகள். ஃபேஸ்புக்கில் சாதாரணமாகத் தெரியும் ‘லைக்’குகளின் பின்னணியில் பல கோடிகள் புரள்கின்றன என்கிறார்கள்.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், பாஜக ரூ. 714 கோடி; காங்கிரஸ் ரூ. 516 கோடி செலவிட்டன என்பது அதிகாரபூர்வக் கணக்கு. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் செலவழிக்கும் தொகை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை. எப்படியும் பல நூறு கோடிகள் முதல் சில ஆயிரம் கோடிகள் வரை அவை நீளும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வாக்காளரைக் கவர்வதற்கான இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது? ஏனென்றால், எல்லாவற்றுக்கும் விலை உண்டு. இந்தப் பணம் வரும் இடங்களுக்குக் கொடுக்கப்படும் விலை நாமும் நம் எதிர்காலமும்தான்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்