ஊட்டமேற்றப்பட்ட உணவு எனும் ஆபத்து!

By அனந்து

செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசியை (Fortified Rice) பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், அரிசியிலோ எண்ணெயிலோ இயற்கையாக இருக்கும் ஊட்டச்சத்தைத் தொழில்நுட்பம் கொண்டு எடுத்துவிட்டு, சத்தற்ற தானியத்துக்குச் செயற்கையாகச் சத்து சேர்க்கப்படுகிறது. இதையே ‘ஊட்டமேற்றப்பட்ட உணவு’ என்று அழைக்கிறார்கள். இது வலிமையூட்டப்பட்ட உணவா, வலியூட்டப்பட்ட உணவா என்கிற பெருங்கேள்வி எழுந்துள்ளது.

அரிசியை முதலில் மாவாக்கி, ‘சத்து’ எனப்படும் பொருளைக் கலந்து, அவற்றைக் கூழாக்கி, பின் இயந்திரம் வழியாக அரிசி வடிவில் மீண்டும் வார்க்கப்படுகிறது. இப்படி அதிக வெப்பநிலை, உயர் அழுத்தத்தில் அரிசியாக்கப்படுபவைதான் ‘ஊட்டமேற்றப்பட்ட அரிசிகள்’ என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. உணவு தானியங்களில் செயற்கை வழியில் வேதிப்பொருட்களைக் கொண்டு ஊட்டமேற்ற வேண்டும் என்பதற்கான வரைவு விதிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி சமையல் எண்ணெயிலும் பாலிலும் வைட்டமின் ஏ, டி செயற்கையாக ஊட்டமேற்றப்பட வேண்டும். 2024 முதல் அரிசியில் வைட்டமின் பி 12, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலத்தின் மூலம் கட்டாயம் ஊட்டமேற்றப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கான 3 ஆண்டு முன்னோடித் திட்டத்தை அரசு சமீபத்தில் தொடங்கியது.

மதிய உணவுத் திட்டம், ஐசிடிஎஸ் திட்டத்தின் மூலம் 2021 ஏப்ரல் முதல் 15 மாவட்டங்களில் ஊட்டமேற்றப்பட்ட அரிசியை அரசு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பரிசோதனை முயற்சிக்கு மட்டுமே ரூ. 1,700 கோடி செலவுசெய்யப்படுகிறது! ஐக்கிய நாடுகள் உணவு உச்சி மாநாடு உணவில் ஊட்டமேற்றல் நடைமுறைகளுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுப்பதன் விளைவு இது.

தேசிய அளவில் ஊட்டமேற்றலை நியாயப்படுத்துவதற்கு, இதில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் நிதியில் நடத்தப்பெற்ற ஆய்வுகளை ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ மேற்கோள் காட்டியுள்ளது. இது கேள்விக்குரியது, ஏனெனில், இத்தகைய கொள்கையால் மக்கள் பலன் பெறுவதற்கு மாறாக, அந்த நிறுவனங்களே அதிக லாபம் ஈட்டுகின்றன.

இந்தியாவில் சமையல் இடுபொருட்களின் செயற்கை/வேதி ஊட்டமேற்றலை ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ கட்டாயமாக்கியதன் உள்நோக்கம் குறித்தும், அதன் அறிவியல் ஆதாரத்தை கேள்விக்கு உட்படுத்தியும் ‘நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு’ (ஆஷா) கண்டனம் தெரிவித்துள்ளது. பல வல்லுநர்களும் அறிவியலர்களும் மருத்துவர்களும் இந்த ஊட்டமேற்றல், அதன் பின்விளைவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதனால் விளையும் தீங்கு, மீள முடியாத ஆரோக்கிய நசிவு, சந்தை மாற்றங்கள் போன்ற சமூக-பொருளாதாரப் பாதிப்புகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். மேலும், இத்திட்டம் பெருநிறுவனங்களின் நலனை மட்டுமே கணக்கில் கொண்டும், எளிய, முறைசாராத மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் விதமாகவும் இருக்கிறது.

உணவில் ஒற்றைமயத்தையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மீதான சாய்வையும் இத்திட்டம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சமையல் இடுபொருட்களுக்கு ஊட்டமேற்றுதல் குறித்து உறுதியான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இதனால் பயனடைந்தவர்கள் குறித்த ஆய்வுகள் உலகில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம், இதனால் விளையக்கூடிய பிரச்சினைகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவிலும் பல வல்லுநர்கள் இதை எதிர்த்திருக்கிறார்கள்.

‘‘இந்த செயற்கை ஊட்டமேற்றல் தீங்கு விளைவிக்கும்… சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவர்களுக்கும் இப்படிப் பொதுப்படையாக ஊட்டமேற்றப்பட்ட உணவை அளிப்பதன் மூலம் உருவாகக்கூடிய பிரச்சினைகளை ஆராய வேண்டும்’’ என்கிறார் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வீணா சத்ருக்னா.

அது மட்டுமல்லாமல், ஒருவருடைய உடல் கிரகித்துக்கொள்ளும் தன்மையைப் பற்றியும் பல கேள்விகள் உள்ளன. முதலாவதாக, இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல உணவே கிடைப்பதில்லை, இந்த நிலையில் ‘கொழுப்பில் கரையக்கூடிய’ வைட்டமின்களை அவர்களுக்குக் கொடுப்பதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

சமையல் இடுபொருட்களில் வேதி ஊட்டமேற்றம் செய்வதில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், எந்த ஊட்டச்சத்தும் தனித்து இயங்குவதில்லை. ஒன்றோடொன்று இணைந்து செயல்படுபவை. கலோரிக் குறைபாட்டுடனும் புரதக் குறைபாட்டுடனும் ஏற்கெனவே போதிய அளவு உணவு கிடைக்காத நமது நாட்டின் ஏழைகளுக்கு வெறும் அரிசியில் ஏற்றப்பட்ட ஊட்டம் மட்டும் எப்படிப் பயனளிக்கும்? இது புதிய பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். அது மட்டுமில்லாமல் மற்றுமொரு முக்கியக் கேள்வி, சமையல் இடுபொருட்களைக் கழுவி - அதிக அழுத்தத்தில் குக்கரில் சமைத்த பின் அல்லது கஞ்சியை வடித்த பின், இந்த செயற்கை ஊட்டத்தில் எவ்வளவு மிஞ்சியிருக்கும்?

ரத்த சோகைக்கு இரும்புச் சத்து மட்டுமே போதாது. மேலும் பல ஊட்டச்சத்துகள் தேவை. அதனால்தான் உணவு/பயிர் பன்மைத்துவம்தான் இதற்குத் தீர்வு என உலகெங்கிலும் பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இரும்புச்சத்தை எல்லோருக்கும் கொடுத்தால், பல உடல் உபாதைகள் உருவாகும். நீரிழிவு நோய், கணையக் குறைபாடுகள் போன்றவை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஓரிரு வைட்டமின்கள், கனிமங்களைச் செயற்கையாகச் சேர்ப்பதால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ள மக்களிடம் இவை நஞ்சாக மாறுவதுடன், தேவையற்ற உடல்நலக் கோளாறுகளையும் உருவாக்கும்.

‘‘ஒருபுறம் ஊட்டச்சத்தை இழந்த பளபளப்பாகத் தீட்டப்பட்ட அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மறுபுறம் வேதி ஊட்டமேற்றல் பற்றிப் பேசுகிறது. இரண்டு செயல்பாடுகளுமே முரணானவை’’ என்று மரபு அரிசிப் பாதுகாவலர் தேபால் தேவ் சுட்டிக்காட்டுகிறார். பல மரபு அரிசி ரகங்களில் உள்ள சத்துக்களை ஆய்வுகள் மூலம் நிரூபித்து, அவற்றைப் பற்றி உலக அளவில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டவர் இவர்.

ஊட்டமேற்றப்பட்ட உணவு இடுபொருட்களை அரசு ஊக்குவிக்கும்போது, நுகர்வோர் மட்டுமில்லாமல் சிறிய, முறைசாரா அரிசி ஆலைகள், எண்ணெய்க் கானிகள்/மரச் செக்குகள், சிறு விவசாயிகள், உள்ளூர் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் நலிந்துபோகும். இப்போதிருக்கும் அரிசி ஆலை நடைமுறை தகர்ந்துபோகும். சிறிய, உள்ளூர் அரிசி ஆலைகள் இதற்குத் தேவையான அதிக முதலீடுகளைச் செய்ய முடியாது. விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். உற்பத்தி விலை வீழ்ச்சி அடையும். மாற்றுச் சந்தைகளும் அழிக்கப்பட்டுவிடும்.

அரசு மதிப்பீடுகளின்படி இந்த நடைமுறைக்கான செலவு சில கோடிகளில் இருக்கும். இதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துக்களின் ஒரே விநியோகஸ்தர்கள் சில பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே. அந்தச் சத்துக்களுக்கு அவர்கள் நிர்ணயிப்பதே விலை. அந்நிறுவனங்கள் தங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் ஏற்கெனவே விலை ஏற்றம் செய்து லாபம் பெருக்கிக்கொண்டுவருகின்றன. வெனிசூலா போன்ற நாடுகள் ஊட்டமேற்றப்பட்ட உணவை சமீபத்தில் நிறுத்தியுள்ளன.

இந்த நாடுகளைப் போல் நமது உணவுப் பாதுகாப்பும் எதிர்காலத்தில் தகர்ந்துபோகும். இதற்கு ‘எஃப்எஸ்எஸ்ஏஐ’யும் அரசும் துணைபோவது பெரும் துயரம். ஏற்கெனவே, பாகிஸ்தான் போன்ற நாடுகளில், உணவு ஒழுங்குமுறை விதிமுறைகளை வகுத்து சில்லறை பால் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது; இது சிறிய விவசாயிகளை, சிறு ஆலைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இப்படிப் பெருமளவில் மக்களுக்கும் விவசாயத்துக்கும் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய நவீனத் தொழில்நுட்பங்கள் தேவையா?

அப்படியென்றால், நமது ஏழைகளின் ஊட்டச்சத்துக்கு என்னதான் தீர்வு? மாடித் தோட்டம்/ கொல்லைப்புறத் தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், மகளிர் குழுக்களின் கறிவேப்பிலைப் பொடி, சிறுதானிய லட்டு, விலங்கு புரதம் போன்ற உணவுப் பொருள் உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு உதாரண முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றுள்ளன. சிறுதானியங்கள், கோழி, கால்நடைகள், பால் எனப் பலவும் கைகொடுக்கும். இவற்றைத் தாண்டி கர்ப்ப காலத்தில் ரத்த சோகை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரவலாகக் கொடுக்கப்படும் துணை மருந்துகள் போதுமானவை. ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான அவசிய ஊட்டச்சத்துக்களில் பலவும் ஒரு நாளைக்கு 30-50 கிராம் மட்டுமே தேவைப்படுகின்றன. அவை பாலீஷ் செய்யப்படாத தானியங்கள், சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களிலேயே கிடைத்துவிடும்.

‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்று ஒரு பக்கம் முழங்கிவிட்டு, செயற்கையான நுண்ணூட்டங்களை உலக நிறுவனங்களிடம் பெற்று, சந்தையைக் கட்டுப்படுத்தி, விலையை உயர்த்தும் வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒருசில பன்னாட்டு நிறுவனங்களிடம் உணவுக்காகக் கையேந்தும் நிலையையே இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் செய்கிறதோ என்ற ஐயம் பலரிடமும் எழுந்துள்ளது.

- அனந்து, ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு. தொடர்புக்கு: organicananthoo@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்