உலக நாடுகளில் தமிழ்க் கல்வி… இந்தியாவுக்கு ஒரு பாடம்!

By செய்திப்பிரிவு

மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கான ஊடகம் மட்டுமல்ல. அதைப் பேசுவோரின் பண்பாட்டு, வரலாற்றுத் தொடர்ச்சியின் மதிப்பீடும் அதில் உள்ளது! ஆகவேதான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவை தங்கள் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான இனக்குழுவினருக்கு அவரவர் தாய்மொழிகளைப் பள்ளிக்கல்வி முதலே வழங்கிவருகின்றன.

ஃபின்லாந்தின் ஆய்வு ஒன்று, ‘‘தாய்மொழிக் கல்வி என்பது அவரவர் வாழும் குடும்பச் சூழலோடு தொடர்புடையது என்பதால், குழந்தை தன்னை நெறிப்படுத்திக்கொள்ளவும், வாழ்க்கை நிகழ்வுகளைத் திட்டமிட்டபடி முறைப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. அத்துடன், தன் பண்பாட்டில் உணரும் நல்லொழுக்கங்களையும் கற்பதால், பன்மொழிச் சூழலில் அக்குழந்தையால் வெற்றிகரமாகவும் திகழ முடிகிறது.

மேலும், எந்தவொரு மனிதரும் தங்கள் இன அடையாளம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிக்காக்கத் தாய்மொழி மிகவும் அவசியமாதலால், தாய்மொழிக் கல்வியானது அடிப்படை மனித உரிமையின் கீழ் உள்ளடக்கப்படுகிறது” என்று கூறுகிறது. தமிழர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் சூழலில், தமிழ்க் கல்விக்கான வாய்ப்புகள் உலக அரங்கில் எப்படி இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வகுப்புகளை அந்தந்த நாட்டு அரசுகளே நடத்திவருகின்றன. நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் மற்றும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சில மாநிலங்களிலும் தமிழ் மதிப்பெண்ணானது பல்கலைக்கழக (மருத்துவம்/ பொறியியல்/ அறிவியல்) நுழைவு மதிப்பீட்டில் கணக்கில் கொள்ளப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பாடத்திட்டத்தில், உயர்நிலை வகுப்பு, மேல்நிலை வகுப்புத் தேர்வுகளில் சர்வதேச மொழிப் பிரிவின் கீழ் தமிழுக்கான தேர்வும் நடத்தப்பட்டு, உலகெங்கும் இருக்கும் 25 நாடுகளின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான நுழைவு மதிப்பீட்டில் அது அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்காவின், ‘சீல் ஆஃப் பைலிட்டரஸி’ தேர்வின் கீழ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 22 மொழிகளுக்கான பாடத் தேர்வுகளிலும் அமெரிக்காவின் ‘ஏசிடிஎஃப்எல்’ நடத்தும் 122 மொழிகளுக்கான தேர்வில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளது.

டென்மார்க்கைப் பொறுத்தவரை 1980-களில் இருந்து 2000 வரை தமிழுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி வழங்கியிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில், ஒரே ஒரு தமிழ் மாணவர் வாழ்ந்துவந்தாலும், அவருக்கான சிறப்புப் பயிற்சிக்காக வாகனத்தை அனுப்பிப் பள்ளிக்கு அழைத்துவந்து தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தற்போது, புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 15 தமிழ்ப் பள்ளிகளை நடத்திவருகின்றன. ஸ்வீடன் தலைநகரத்தில் (ஸ்டாக்ஹோம்) ‘ஈழத் தமிழர் ஒன்றியம்’ 90 மாணவ, மாணவிகளோடு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையில் தமிழ்ப் பள்ளி நடத்திவருகிறார்கள்.

ஃபின்லாந்திலும் தமிழுக்கென்று அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. ஜெர்மனியில் 110-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. சில மாவட்ட நிர்வாகங்கள் மொழிப் பாடத்துக்கான மதிப்பெண் அங்கீகாரத்தைத் தமிழுக்கும் வழங்குகின்றன.

நார்வேயில் தாய்மொழிகளின் கல்விக்கென்று ஒரு இணையதளத்தை நார்வே கல்வித் துறை நடத்துகிறது (www.morsmal.no). அதில், நார்வேயில் கற்பிக்கப்படும் மொழிகளுக்கான தனித்தனிப் பக்கங்கள் உள்ளன. தமிழுக்கான பக்கத்தில், தமிழ் மொழிக் கல்விக்கான பாடத்திட்டம், துணைச் செய்திகள், துணைப்பாடங்கள் உள்ளன. கூடவே, 7 – 9-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தின் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புப் பக்கங்களையும் இணைத்துவருகின்றனர்.

நார்வேயில் பள்ளி மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளோடு சர்வதேச மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், தமிழ், பாரசீகம், அரபி உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்துத் தேர்வெழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப் பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால், மருத்துவம்/ பொறியியல் சேர்க்கைக்கான கூட்டு மதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப் பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது, நார்வேயில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், அந்நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவுக்கு உதவுகிறது.

அரசுப் பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் தவிர்த்து, தமிழர் அமைப்புகளின் செயல்பாடுகளால், நார்வேயில் 18 தமிழ்ப் பள்ளிகள் இயங்குகின்றன. தோராயமாக, 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் கல்வி கற்கின்றனர்.

தமிழின் தொன்மை, தமிழர்களின் அரசியல் உறவு, புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிமை போன்ற காரணங்களால் இந்த நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம், ஸ்காண்டிநேவிய நாடுகளின் மொழிக் கல்வி, ஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் ஆகியவை வலியுறுத்தும் ‘அனைவருக்குமான தாய்மொழிக் கல்வி’ என்ற அடிப்படையில்தான் இந்த நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

ஸ்வீடன் கல்வித் துறையைப் பொறுத்தவரை, ஸ்வீடனுக்குப் புலம்பெயர்ந்து வருபவரின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஸ்வீடன் நாட்டுத் தம்பதியர், வேறு ஒரு நாட்டிலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவந்தாலும், அக்குழந்தை தன் தாய்மொழியை வீட்டில் பேசாமல் இருந்தாலும்கூட, அக்குழந்தை தன் தாய்மொழியில் பேச, எழுதும் வகையில் கல்வித் துறையின் சட்டங்களை அமைத்துள்ளனர்.

பல மொழி மக்கள் செறிந்து வாழும் நிலப் பகுதிகளில், அந்தந்த நிலங்களின் ‘தேசிய’, ‘அலுவல்’ மொழியே பயிற்றுமொழியாக இருக்கும் நிலையில், சிறுபான்மை மொழியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த நீண்ட கால ஆய்வை யுனெஸ்கோ மேற்கொண்டுவருகிறது. இடம்பெயர்ந்தோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்பவர்களின் குழந்தைகள் தங்கள் குடும்பம், சமூகம் சாராத மொழியில் கல்வி கற்கும்போது, பெரும்பான்மை சமூகத்திலிருந்து விலகி நிற்க வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்படுவதோடு, சமூக, அரசியல் ஓட்டத்தில் பங்குகொள்ள முடியாமலும் போவதாக யுனெஸ்கோ கண்டறிந்தது.

‘காமன் யூரோப்பியன் ஃப்ரேம்வொர்க் ஆஃப் ரெஃபரென்ஸ்’ (சி.ஈ.ஃப்.ஆர்.) போன்ற அரசுகளுக்கு இடையிலான அமைப்புகளின் வழிகாட்டுதலில் இன்று ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய மொழியல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் கல்வி வழங்கப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்வீடனில் நான் வசிக்கும் கோத்தென்பர்க் நகரில் மட்டும் 70 மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த ஸ்வீடனில் 200 சிறுபான்மை மொழி பேசும் பிரிவினர் வாழ்கிறார்கள். இனிவரும் காலத்தில் குறைந்தது 110-140 மொழிகளில் கல்வி வழங்க ஏற்பாடாகிவருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 1998, 2004, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட கல்வி வழிகாட்டல் நெறிமுறைகள், ”எந்தவொரு குழந்தையும் அதன் குடும்பச் சமூகத்தின் முதன் மொழியைக் கற்காமல் இரண்டாவது மொழியைக் கற்கும் நிலை இருக்கக் கூடாது. அது, அக்குழந்தையின் இரண்டாவது மொழியைக் கற்கும் திறனையே பாதிக்கும். அதேபோல, பன்மொழிச் சமூக வாழ்க்கைச் சூழலில், அவரவர் தாய்மொழியை முறையே கற்று, புலம்பெயர்ந்த சூழலின் அலுவல் மொழியையும் கற்பது, புலம்பெயர்ந்த நாட்டினுள் நல்லிணக்கத்துடன் வெற்றிகரமாகவும் இருப்பதற்கு அந்தக் குழந்தைக்கு வழி அமைத்துக்கொடுக்கும்” என்று எடுத்துக்கூறின.

இங்கிலாந்தின் தேசியக் கல்விப் பாடத்திட்டத்தில் பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் குறித்தான ஆய்வுகள் வெளிவந்த பின் ஏப்ரல் 22, 2016-ல் பல மொழிகளுக்கான கல்வித் திட்டம் அறிமுகமானது. இந்திய மொழிகளில் குஜராத்தி, வங்க மொழி, பஞ்சாபி ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இம்மூன்று இனக்குழுக்களுக்கு இணையாகத் தமிழர்களும் இங்கிலாந்தில் வாழ்ந்துவரும்போதும், இன்னும் அங்கே தமிழ் மொழி இங்கிலாந்தின் தேசியக் கல்விப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதற்குரிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆகவே கல்வித் துறையில், இருமொழிக் கல்வி முறை, பன்மொழிக் கல்வி முறையை எவ்விதப் பிரித்தாளும், மேலாதிக்கத் தன்மையற்ற, ‘நல்லிணக்க’ வடிவிலும், அறிவியல் அடிப்படையிலும், வருங்காலத் தேவை அடிப்படையிலும் அமைத்தல் அவசியமாகிறது. அதனை விடுத்து, ஆட்சி அதிகாரத்தின் பேராளுமை கொண்டு மொழிக் கொள்கையைக் கல்வியில் புகுத்த நினைத்தால் பன்மைக் கலாச்சார, பன்மை மொழிச் சூழலுக்கு மிக மோசமான விளைவுகளே ஏற்படும்.

- விஜய் அசோகன், அறிவியல் ஆராய்ச்சியாளர், ஸ்வீடன். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்