நவம்பா் இரண்டாம் வாரத்திலிருந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெள்ள நீரானது குளங்களின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, பயிர்களையும் முழ்கடித்துப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறக்குறைய 347 டிஎம்சி நீா்க் கொள்ளளவுடன் 41,127 குளங்களைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இது எப்படி நடக்க முடியும்? தற்போது பெய்துள்ள மழையால் குளங்களின் மொத்த நீா்க் கொள்ளளவும் தாண்டிவிட்டதா என்ன?
நவீனப் பாசனமுறை ஏற்படுத்துவதற்கு முன்னால், இந்தியாவில் விவசாயம் மற்றும் இதரப் பயன்பாடுகளுக்காகக் குளங்கள் பயன்படுத்தப்பட்டுவந்தன. மற்ற நீர் ஆதாரங்களைவிடக் குளங்கள் பல வகைகளில் சிறப்பானவை. குளங்கள் சிறியவை, இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடிவது மட்டுமல்லாமல், இவற்றைப் புதிதாக அமைப்பதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் ஆகும் செலவு மற்ற நீர் ஆதாரங்களை விட மிகவும் குறைவு. குளங்கள் மூலமாகப் பயிர்ச் சாகுபடிக்கு நீர்ப்பகிர்வு மேலாண்மை செய்வதும் மிகவும் எளிது. கால்வாய்ப் பாசனம்போல் அல்லாமல், இதன் நீர்ப்பகிர்வுப் பயன்பாட்டில் சண்டை சச்சரவுகள் குறைவே. சுற்றுச்சூழலுக்கும் குளங்கள் எந்தக் கெடுதலும் ஏற்படுத்துவதில்லை.
குளங்களைப் பெரும்பாலும் சிறு-குறு விவசாயிகள் நம்பியிருப்பதால் இதனை ஏழை விவசாயிகளின் நீர் ஆதாரம் எனலாம். இவற்றுக்கும் மேலாக, மழை பெய்கிறபோதெல்லாம் அந்த நீரைச் சேமித்து, நீர்வளத்தைப் பெருக்கி, கிணற்றுப் பாசனம் வளர்வதற்கும், விவசாயிகள் தங்குதடையின்றி விவசாயம் செய்வதற்கும் குளங்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால், இன்று குளங்களின் குரல்வளை நசுக்கப்பட்டு வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன.
குளங்களின் முக்கியத்துவத்தை அறிந்து, அவற்றின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் மாநில, மத்திய அரசுகள் பல முயற்சிகளை அவ்வப்போது எடுத்துவருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐரோப்பா பொருளாதாரக் குழுமங்களின் உதவியுடன் குளங்களைச் சீர்ப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2004-05-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் குளங்களை சரிசெய்ய ஒரு புத்துயிர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிக நிதியும் ஒதுக்கப்பட்டது. 11–வது 12–வது ஐந்தாண்டுத் திட்டங்களிலும் குளங்களை சரிசெய்து நீரின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
குளங்களின் நிலைமை
நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன், மழை வெள்ளநீா் சேமிப்புக் கிடங்காக இருந்த குளங்கள், தற்போது வேகமாக அழிந்துவருகின்றன. தொடர் ஆக்கிரமிப்பாலும் தேவையான நிதி ஒதுக்கிக் குளங்களை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்யாத காரணத்தாலும், நீர்க் கொள்ளளவும், அவற்றின் பாசனப் பரப்பளவும் கடுமையாகக் குறைந்துவிட்டது.
குளங்கள் மூலமாக 1960-61-ல் இந்தியா பெற்ற நீர்ப்பாசனத்தின் மொத்த பரப்பளவு 46.30 லட்சம் ஹெக்டேர்கள். இது 2017-18-ல் 17.07 லட்சமாகக் குறைந்துவிட்டது. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் குளப் பாசனப் பரப்பளவு 9.36 லட்சத்திலிருந்து 3.02 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%-லிருந்து 12.66%-மாகக் குறைந்துவிட்டது. இதனால் குளப் பாசனத்தை நம்பிப் பயிர்ச் சாகுபடி செய்துவந்த விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. நன்கு மழை பெய்த ஆண்டுகளில் கூடத் தமிழ்நாட்டில் குளப் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவில்லை. இது, ஆக்கிரமிப்புகளால் குளங்கள் தொடா்ந்து கொலைசெய்யப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
அதீதமான நகரப்புற வளர்ச்சியின் காரணமாக, நகரங்களுக்கு அருகிலுள்ள குளங்கள் அரசுத் துறையால் கட்டிடங்கள் கட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. சாக்கடை நீரைச் சுமக்கும் இடமாகப் பல இடங்களில் குளத்தை மாற்றிவிட்டார்கள். இந்திய அரசின் நீர்வள நிலைக்குழுவால் 2012-13-ல் வெளியிடப்படுள்ள 16-வது அறிக்கை அரசின் அமைப்புகளால் குளங்கள் தொடா்ந்து ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு அழிக்கப்படுவதாகக் கூறியுள்ளது. டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு, டெல்லியில் மொத்தமுள்ள 1,012 நீர்நிலைகளில், 168 ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. சென்னை,
ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் இதே நிலைமைதான். இந்தியாவின் ஐந்தாவது குறு நீர்ப்பாசனக் கணக்கெடுப்பின்படி மொத்தமாக 5.92 லட்சம் குளம் மற்றும் குறு நீர்நிலைகள் இந்தியாவில் உள்ளதாகவும், ஆக்கிரமிப்பாலும் போதிய பராமரிப்பு இல்லாததாலும் இவற்றில் தற்போது 72,853 உபயோகத்தில் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் குளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களில் சில ஐயங்கள் இருந்தாலும், இவற்றின் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசனப் பரப்பளவு 1960-61 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில் 68% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஆக்கிரமிப்பு.
நடவடிக்கை தேவை
2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நீா்வழித்தடம் மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனப் பேசினோம், 2018-லும் பேசினோம், இப்போதும் அதையே பேசிக்கொண்டிருக்கிறோம். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களைப் போல் மழை நீருக்கு மறதி கிடையாது, அது தன் இருப்பிடம் தேடித்தான் செல்லும், அது பெரும்பாலும் குளமாகத்தான் ஒரு காலத்தில் இருந்திருக்க முடியும். எனவே, குளங்களைப் பாதுகாத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பெருமழை வெள்ள பாதிப்பைக் குறைக்க முடியும்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான குளங்கள் சங்கிலித் தொடா்புடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளம் நிரம்பினால், அதன் உபரிநீா் அடுத்த குளத்துக்கும், அதன் பிறகு அடுத்த குளத்துக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அரசியல்வாதிகளும், ஆதிக்க வர்க்க விவசாயிகளும், நீர்வழித் தடங்களை விவசாயத்துக்காகவும் பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதால், இதன் சங்கிலித் தொடா்பு அறுக்கப்பட்டுள்ளது.
குளங்களுக்கு அருகில் அமைக்கப்படும் செல்வாக்கு படைத்தவர்களின் பெரிய தனியார் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பணக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போன்றவை குளங்களில் தண்ணீர் பெருகுவதை விரும்பாத காரணத்தால், குளத்துக்குச் செல்லும் நீர்வழிப் பாதையை அவர்களின் சுயலாபத்துக்காக அடைத்து, திசைதிருப்பிவிடுவதால் குளங்களின் சங்கிலித் தொடர்பு துண்டிக்கப்படுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால், அதிக மழை பெய்யும் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் உடைபட்டு, பயிர்ச் சேதமும் ஏற்படுகிறது. எனவே, உடைக்கப்பட்டுள்ள குளங்களுக்கு இடையிலான சங்கிலித் தொடா்பை எந்த சமரசமும் செய்யாமல் சரிசெய்ய வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை செப்டம்பர் 6, 2014-ல் கொடுத்துள்ள தீர்ப்பை மதித்துக் குளம், ஏரிகள் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது, அவர்கள் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கும் வகையிலும், அவர்களுக்குத் துணைநிற்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
நீர் மேலாண்மை பற்றிய நுணுக்கங்கள் தெரியாத காரணத்தால், குளங்களைச் சரிவர மேலாண்மை செய்ய முடியாமல் பொதுப்பணித் துறை திணறுகிறது. எனவே, தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்ட எண் 7/2006) கூறியுள்ளதுபோல், அனைத்துக் குளங்களையும் மேலாண்மை செய்யும் அதிகாரத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். குடிமராமத்துத் திட்டத்தில் குளங்களிலுள்ள வண்டல் மண்ணை நீக்கி நீர்க் கொள்ளளவை அதிகரிப்பதோடு, ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ள நீர்வரத்துக் வாய்க்கால்களைச் சரிசெய்து, குளத்துக்கு மழைநீர் தங்குதடையின்றி வந்துசேர முக்கியத்துவம் கொடுத்தால், வெள்ளச் சேதத்தைக் குறைக்க முடியும்.
வெள்ளச் சேதத்தைக் குறைக்க, குளங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தற்போது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குளங்கள் பராமரிக்கப்படுகின்றன. குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குளங்களில் பராமரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும். பெரிய தொழில்நிறுவனங்கள் நடத்தும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலமாக, குளங்களைச் சீரமைத்துப் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
- அ. நாராயணமூர்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் முழுநேர உறுப்பினா். தொடர்புக்கு: narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
13 days ago