தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அந்தத் துறையில் பெரும் சீர்திருத்தம் ஏற்படுத்தப் பல கட்ட முயற்சிகளை எடுத்துவருகிறார். கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்டு, கோயில் வசம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில், முஸ்லிம் மக்களின் கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வக்பு வாரியம், பள்ளிவாசல்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்டு, அதனுடைய முழுமையான பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் மக்களிடையே எழுந்திருக்கிறது.
விஷயத்துக்குப் போகும் முன், வக்பு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.
தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது.
இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது.
வக்பு வாரியம், மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், அது ஒரு அரசு சார்பு நிறுவனமாக இயங்குகிறது. அதே நேரத்தில், அது மாநில அரசு சொல்லும் எல்லாவற்றையும் கேட்டு நடக்க வேண்டும் என்பதில்லை. வக்பு வாரியம் கூடி என்ன முடிவெடுக்கிறதோ, அதுதான் முடிவு. அரசு இதில் சட்டரீதியாகத் தலையிட்டு, எந்த முடிவையும் எடுக்க வைக்கவோ, எடுத்த முடிவை மாற்றவோ முடியாது. வக்பு வாரியம் தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிர்வாகச் செலவுக்கு இன்று வரை அரசை எதிர்பார்த்தே உள்ளது.
வக்பு வாரியம் கட்சி சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் வாரியப் பதவிகள் அனைத்தும், ஏலம் விடப்படாத குறைதான் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் விஷயத்தில், ஆண்டாண்டு காலமாக அரசியல் தலையீடு இருப்பதாகவும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுக அரசு ஒரு தெளிவான முடிவெடுத்திருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் வக்பு வாரியத்தைத் திறம்பட நடத்திச் செல்வதற்காக, நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மானை வக்பு வாரியத் தலைவராக நியமித்திருக்கிறது. பொறுப்பேற்ற பின், அப்துல் ரஹ்மான் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவது நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகிறது.
இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. வாரியத்தின் சொத்துக்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அந்த கமிட்டி கண்டறிந்தது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையெல்லாம் மீட்க வாரியத்துக்குப் போதுமான சட்ட அதிகாரம் இல்லை. ஆகவே, வலுவான சட்டப் பாதுகாப்புடன் வக்பு வாரியம் கட்டமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சொத்துக்களையெல்லாம் மீட்டு, அவற்றிலிருந்து வருவாய் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்பட்சத்தில், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். வாரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசிடம் கையேந்த வேண்டியதில்லை.
வக்பு வாரியம், வேறெந்தச் சமூகமும் பெற்றிருக்காத அளவுக்குச் சொத்துக்களைப் பெற்றிருக்கிறது. ஆனால், வறியவர்கள் அதிகம் இருக்கும் சமூகம் என முஸ்லிம் சமூகம் அடையாளம் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், தொழிற்சாலைகள், குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்டவை எங்கெல்லாம் குறைவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
முஸ்லிம் சமூகத்தை அரசும் பொதுச் சமூகமும் கைவிடக் கூடாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லிம் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக வக்பு வாரியம் தன்னலமற்றுச் செயல்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது.
- புதுமடம் ஜாபர்அலி,
தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago