வெறும் பேச்சுகள் பூவுலகைக் காப்பாற்றுமா?

By ஆதி வள்ளியப்பன்

கிளாஸ்கோவில் கடந்த வாரம் நிறைவடைந்த பருவநிலை மாற்ற மாநாட்டை சுருக்கமாக எப்படி வர்ணிப்பீர்கள் என்று கேட்டபோது, “பிளா பிளா பிளா (அர்த்தமற்ற வெறும் பேச்சு) என்றுதான் கூற வேண்டும்” என்று பிரபல பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் கூறியுள்ளார்.

ஐ.நா. பருவநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையின் (UNFCCC) 26-வது மாநாடு (CoP26) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றது. 197 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி, திட்டமிட்டபடி நவம்பர் 12 முடிந்திருக்க வேண்டும். ஆனால், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளிடையே ஒப்பந்தம் உருவாகாத நிலையில், பேச்சுவார்த்தை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. பிறகு ‘கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்தம்’ (Glasgow Climate Pact - GCP) அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2015 பாரிஸ் உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி 2030-ம் ஆண்டுக்குள் உலக சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் கட்டுப்படுத்துவதற்கு கிளாஸ்கோ ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அப்படி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரிக்குள் வைத்திருக்க வேண்டுமென்றால், 2030-ம் ஆண்டுக்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை 45% கட்டுப்படுத்தியாக வேண்டும். 2050-ம் ஆண்டுக்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை ஒட்டுமொத்தமாக நிறுத்தி பூஜ்ய நிலைக்குக் (Net Zero Emissions) கொண்டுவர வேண்டும்.

ஆனால், உலக நாடுகள் ஆரோக்கியமான அந்தப் பாதையில் செல்லவில்லை என்பதே நிதர்சனம். ‘கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர்’ (CAT) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்தியக் கணிப்புப்படி, பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதாக நாடுகள் கொடுத்துள்ள வாக்குறுதிகளின்படி பார்த்தாலும்கூட நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் கூடுதலாக 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துவிடும். இது மிகப் பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் என அறிவியல் ஆய்வுகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன.

உதவுமா ஒப்பந்தம்?

கிளாஸ்கோ மாநாடு தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (ஐ.பி.சி.சி.) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையும் இதே போன்ற கணிப்புகளை வெளியிட்டிருந்தது. ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த அறிக்கை, அறிவியல்பூர்வமாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட, உலக சராசரி வெப்பநிலை ஏற்கெனவே 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் நிறுத்த வேண்டும் என்பதே 2015 ‘பாரிஸ் உடன்படிக்கை’யின் அடிப்படை. அந்த எல்லையைக் கடந்துவிட்டால், பருவநிலைப் பேரழிவு எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலாததாகிவிடும், நிலைமை கைமீறிச் சென்றுவிடும் என்பதே அறிவியலாளர்களின் வலியுறுத்தல்.

அதே நேரம் தீவிர பருவநிலைப் பேரழிவுகளைத் தடுத்துநிறுத்தி, பூவுலகை வாழ்வதற்கு உகந்த வகையில் காப்பாற்றி வைத்திருப்பதற்கு வெறும் 100 மாதங்களே எஞ்சியுள்ளன என்பதை மனதில் கொண்டு கிளாஸ்கோ ஒப்பந்தம் உருவாகவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. நீர்த்துப்போன இந்த ஒப்பந்தம் பருவநிலை நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவதற்குப் பயனளிக்காது என அறிவியலர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மாற்றப்பட்ட வார்த்தை

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் முக்கிய விவாதப் புள்ளியாக இருந்தது புதைபடிவ-பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, அவற்றுக்குத் தரப்படும் மானியத்தை நிறுத்துவது, மின்சாரத் தயாரிப்புக்கான நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்துவது ஆகியவையே. முந்தைய பாரிஸ் உடன்படிக்கையில் நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பிந்தைய காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின்படி, பருவநிலை மாற்றம் பேராபத்தாக உருவெடுத்துவிட்டது. ஆனால், பெட்ரோலிய எரிபொருட்கள், நிலக்கரிப் பயன்பாட்டைக் காலக்கெடு நிர்ணயித்து நிறுத்துவது குறித்த கிளாஸ்கோ மாநாட்டுப் பரிந்துரைகளை இந்தியா பெரிய அளவில் எதிர்த்தது. ஈரான், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் எதிர்த்தன.

கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்த வரைவில், நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டை ‘படிப்படியாகக் கைவிட வேண்டும்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது. மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பரிந்துரையின் பேரில் இந்த வார்த்தை மாற்றப்பட்டது. அதற்கு பதிலாக, திட்டவட்டமான எந்த உத்தரவாதமும் வழங்காத ‘படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம்’ என்கிற வார்த்தை கிளாஸ்கோ இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் பேராபத்தை எதிர்க்கொண்டிருக்கும் சிறு தீவு நாடுகள் இதனால் பெருத்த ஏமாற்றமடைந்தன. காரணம், பசுங்குடில் வாயு வெளியீட்டுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெருமளவு எரிக்கப்பட்டுவரும் நிலக்கரி. அதைக் கைவிடவில்லை என்றால், தீவு நாடுகள் விரைவில் மூழ்கும் சாத்தியம் உண்டு.

எது உண்மை?

வளரும் நாடான இந்தியா 2070-க்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடும் என இந்த மாநாட்டின் தொடக்க நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மோடியின் இந்த அதிரடி அறிவிப்பு உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அவரது அமைச்சரவை சகாவான பூபேந்தரோ அதற்கு நேரெதிராக நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்துவதற்கு இதே மாநாட்டில் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த முரண்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருட்களைப் படிப்படியாகக் கைவிட முடியாது என்கிறார் பூபேந்தர். ஆனால், நரேந்திர மோடியோ 2070-க்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் என்கிறார். இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே சாத்தியம். அந்த வகையில் நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருட்களை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் இந்தியா கைவிடப் போவதில்லை என்பதே உண்மையாக இருக்க முடியும். இது இந்தியாவுக்கு மட்டும் ஆபத்தாக இல்லாமல், உலகப் பருவநிலை மாற்றத்தையும் தீவிரப்படுத்தவே செய்யும். காரணம், உலகப் பசுங்குடில் வாயு வெளியீட்டில் இந்தியா ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாரபட்ச அணுகுமுறை

உலக கார்பன் பட்ஜெட்டில் தனக்கான நியாயமான பங்கை வழங்க வேண்டும்; பொறுப்புள்ள வழிமுறைகளில் பெட்ரோலிய எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இப்படி வலியுறுத்துவதாக இந்தியா கூறுகிறது. பணக்கார நாடுகள் உருவாக்கிய பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பணக்கார நாடுகளே பங்களிக்க வேண்டுமென கொள்கை அளவில் இந்தியா கூறுவது சரியான வாதமே.

இப்படி உலக மாநாடுகளில் தனக்குரிய நியாயமான பங்குக்காக வாதாடும் இந்தியா, உள்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமான வகையில் வளர்ச்சியைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்பதே பதில். இந்திய மக்கள்தொகையில் வசதி படைத்த 20% பேர், எஞ்சியுள்ள மக்கள்தொகையைவிட ஏழு மடங்கு அதிகப் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுகிறார்கள். இந்த 20%-ல் மேல்தட்டு வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தினரும் அடங்குவார்கள்.

அப்படியானால், உலக மாநாடுகளில் ஏழை மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதற்கு மட்டும்தான், நியாயமான பங்கை இந்தியா வலியுறுத்துகிறதா என்கிற கேள்வி எழுகிறது. பூவுலகின், மனித குலத்தின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டிருந்தால், இந்தியாவும் சரி, வளர்ந்த நாடுகளும் சரி தெளிவான பார்வையோடும் உறுதியோடும் இந்த மாநாட்டை அணுகியிருப்பார்கள். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயல்பாடுகளில் தீவிரமாக இறங்க முன்வந்திருப்பார்கள். ஆனால், சமீபகாலமாகப் பெருகிவரும் பசுமைக் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஒன்றுபோல பருவநிலை மாற்ற மாநாடுகளும் மாறிவருவது, மனித குலத்தின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்