தஞ்சை அ.இராமமூர்த்தி: அறம் பிறழா வாழ்வு

By செல்வ புவியரசன்

தமிழறிஞர்களாகவும் விளங்கிய வழக்கறிஞர்களின் பட்டியல் மிக நீண்டது. அரசியல் செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ளும் வழக்கறிஞர்களின் பட்டியலும்கூட நீளமானதே. இலக்கிய வெளியிலும் அரசியல் களத்திலும் வழக்கறிஞர் பணியிலும் ஒருசேர முத்திரை பதித்த அரிதான ஒருசிலரில் அண்மையில் மறைந்த தஞ்சை அ.இராமமூர்த்தியும் ஒருவர். அறுபதுகளின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராகப் பெயர்பெற்றவர், பாரதியைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், தஞ்சைப் பகுதியில் பிரபலமான குற்றவியல் வழக்கறிஞராகவும் விளங்கியவர். எந்த நிலையிலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காத அரசியலராகவும் தொழிலறம் தவறாதவராகவும் பெயரெடுத்தவர்.

‘தஞ்சையார்’ என்று அழைக்கப்படும் அ.இராமமூர்த்தி, ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கமான உமாமகேஸ்வரனார் மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பிறகு சட்டம் பயின்று வழக்கறிஞரானார்; அறுபதுகளின் இறுதியில் சென்னைச் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அளவில் மாணவர்களைத் திரட்டித் தந்ததாக அந்நாட்களில் கரந்தைத் தமிழ்க் கல்லூரி மாணவராக இருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவர் அமைப்பு, மன்னர் மானிய ஒழிப்பையும் வங்கிகள் தேசியமயமாக்கலையும் இந்திரா காந்தி நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே வலியுறுத்திவந்தது.

கல்லூரி மாணவர்கள் திராவிட இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுவது இயல்பாக இருந்த அந்நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களின் பங்கேற்பை உயிர்ப்போடு வைத்திருந்தவர் தஞ்சையார். இத்தனைக்கும் திராவிட இயக்கத்தால் ஊக்கம் பெற்று பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவர் அவர். பகுத்தறிவுக் கொள்கைகளை மேடைகளில் முழங்கியவர். திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடித்தபோது காமராஜரை வலுப்படுத்த அவரோடு சேர்ந்துவிட்டார். வாழப்பாடி இராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு, பி.எஸ்.ஞானதேசிகன் என்று தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தேசிய மாணவர்கள் தமிழ் வளர்ச்சிக் குழுவின் வழியாக அக்கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சிக்குள் தனித்தியங்கிய சோஷலிஸக் குழுவின் தமிழ்நாடு அமைப்பாளராக இருந்தவர். அவரே ஆசிரியராக இருந்து ‘சோஷலிஸ்ட்’ என்ற தமிழ் வார இதழையும் சிறிது காலம் நடத்தினார். 1969-ல் காங்கிரஸ் கட்சி பிளவுற்றபோது, இந்திரா காந்தியை ஆதரித்தார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது இந்திரா காந்திக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார். வி.பி.சிங் காங்கிரஸை விட்டு வெளியேறி ஜனதா தளத்தைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக தஞ்சையார் நின்றார். கட்சி சார்பானவராக இல்லாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கை வழியே பயணப்பட்டது அவரது அரசியல் பாதை.

எல்லாக் காலத்திலும் ஆர்வமிக்க வாசகராக இருந்தவர் தஞ்சையார். அவரது மறைவுக்குச் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘புத்தர் எனும் மானுடன்’ என்ற தலைப்பிலான புத்தகமே அதற்குச் சான்று. பௌத்தத்துக்குத் தமிழர்களின் பங்களிப்பைச் சிறப்பித்துக் கூறியிருக்கும் அவர் புத்தரைக் குறித்து விவேகானந்தர், ராகுல் சாங்கிருத்யாயன், பி.வி.பாபட், ஏ.பி.வள்ளிநாயகம், அருணன், டி.தருமராஜ் என்று வெவ்வேறு முனைகளிலிருந்து மேற்கோள் காட்டுவது வியப்பளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியவர் தஞ்சையார். முழுமை பெற்ற மூத்த வழக்கறிஞர் என்று அவரைக் குறிப்பிட்டுள்ளார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.நாகமுத்து. ‘தன் மனதிற்குச் சரியல்ல எனப்படும் சட்டக் கருத்துகளை எக்காரணத்தைக் கொண்டும் முன்வைத்து ஒரு வெற்றியினை அடைய முயற்சிக்காத நல்லவர் அவர்’ என்று அதற்கான உதாரணத்தையும் காட்டியுள்ளார் நாகமுத்து.

பேச்சாற்றலால், வழக்காடும் திறமையால் கிடைத்த நற்பெயரைப் பொருளீட்டப் பயன்படுத்திக்கொள்ளாத தஞ்சையார், அரசியல் அணிதிரட்டும் தனது ஆற்றலுக்கும் விலைபேசத் தயாராக இருந்ததில்லை. எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் சட்டரீதியான போராட்டங்களுக்கு அவர் எப்போதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கட்சி அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர், மக்கள் நலனுக்காகப் போராடும் எல்லோருக்கும் பொதுவானவராக ஒரு புதிய பாதையைத் தேர்ந்துகொண்டார். காவிரி நீர் உரிமை, ஈழத் தமிழர் துயரங்கள் என முக்கியமான பிரச்சினைகளில் அனைத்து அமைப்புகளுக்கும் மையப் புள்ளியாக இருந்தவர் அவர்.

‘அநீதியைச் சகியாப் பான்மை, நெஞ்சுரம் குன்றா நேர்மை’ என்று தஞ்சையாருக்கு வாழ்த்துப் பா எழுதியுள்ளார் தொ.மு.சி.ரகுநாதன். ‘அரசியல் இயக்கத்தோடு உறவுகொண்ட நிலையிலும் அன்பும் அறமும் வழுவாது வாழ்ந்துவரும் பேராளுமை’ என்பது கோவை ஞானியின் மதிப்பீடு. தஞ்சையில் ராமநாதன் அரங்கத்திலும் பெசன்ட் அரங்கத்திலும் அவர் ஆற்றிய உரைகள் பல நூறு இருக்கும். விவாதங்கள் எல்லை மீறும் தருணங்களில் அவர் எழுந்து நின்றால், அனைத்து சப்தங்களும் அடங்கிப்போகும். தஞ்சை அறிவுலகின் பெருமிதம் அவர். ஊரின் பெயரே தன் பெயராகவும் மாறிப்போனவர். தஞ்சைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் ஆறு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ‘தஞ்சையில் அனைத்துக் கட்சி அரசியல் அரை நூற்றாண்டாகத் தஞ்சையாரைத் தழுவியே’ என்று தனது கட்டுரையொன்றில் கூறியுள்ளார்.

மணிவிழா, மணவிழாவின் பொன்விழா என்று தனது இல்ல விழாக்களையும்கூட அறிஞர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளாக நடத்தி, கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர். குன்றக்குடி அடிகளார், ஜெயகாந்தன், ஆர்.நல்லகண்ணு, பெ.மணியரசன், தியாகு முதலானோர் அந்தக் கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். அத்தகு கருத்தரங்குகள் கொள்கை முரண்பாடுகளின் விவாதக் களங்களாகவும் மாறியிருக்கின்றன.

இந்தியத் தேசியத்தின் மீது பற்று கொண்டவர் என்றாலும் தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்டவராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்திருந்தாலும் பொதுவுடைமைக் கொள்கையின் தேவையை உணர்ந்தவராகவும் இருந்ததோடு அதை இரு தரப்புக்கும் உணர்த்தவும் அவர் முயன்றார். அந்த முயற்சிகள் அவர் காலத்தில் நிறைவேறவில்லை. காங்கிரஸ் இயக்கம் மக்களிடத்தில் தனது செல்வாக்கைப் படிப்படியாக இழந்துகொண்டிருப்பதற்கு, துணைதேசியங்களின் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்ததும் இடதுசாரிகளைத் தங்களது அரசியல் எதிரிகளாகக் கருதிக்கொண்டதும் முக்கியமான காரணங்கள் என்பதைக் காலம் கடந்தேனும் உணரக்கூடும். அந்தப் பிழைகள் சரிசெய்யப்படும் நாட்களில் தஞ்சையாரின் வார்த்தைகள் ஒளிவீசி வழிகாட்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்