கரோனா காலத்துக்கும் நேருவின் அறிவியல்

By ஆ.கோபண்ணா

உலகப் பேரிடராக கரோனா தொற்று மாறியிருக்கும் சூழலில், ஜவாஹர்லால் நேருவின் அன்றைய அறிவியல்பூர்வமான பார்வையும் ஒரு அறிவியல் சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. நேருவின் கூற்றுப்படி, அறிவியல் என்பது மனித மனதின் முக்கியமான வெற்றியாகும். இது, மனித குலத்தை நோய், தேவை, துயரம் போன்றவற்றிலிருந்து விடுவிக்கும்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறிவியலின் பங்களிப்பை நேரு புரிந்துகொண்டிருந்தார். இது குறித்து நேரு எழுதும்போது, உண்மையையும் புதிய அறிவையும் தேடுதல், சோதனையின்றி எதையும் ஏற்க மறுத்தல், புதிய சான்றுகளின் அடிப்படையில் முந்தைய முடிவுகளை மாற்றும் திறன், உண்மைகளை நம்புதல், முந்தைய கோட்பாட்டைத் தொடராமல் இருத்தல், கடினமான ஒழுக்கம் கொண்ட மனம் இருத்தல் அவசியம் என்கிறார். கேம்ப்ரிட்ஜ் சயின்ஸ் டிரிபோஸ், ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன் மற்றும் பிரிட்டனின் முன்னணி அறிவியலர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நேருவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை அறியலாம்.

இந்தியாவில் உயர் தரமான கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்பதே நேருவின் திட்டமாக இருந்தது. அமெரிக்கப் பயணத்தின்போது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குத் தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றத்தை வழங்குவதைப் புரிந்துகொண்டார். 1949-ல் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கழகத்துக்கு அவர் சென்றதுதான் 1950-ல் காரக்பூரிலும், 1958-ல் பம்பாயிலும், 1959-ல் சென்னை, டெல்லியிலும் ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வழிவகுத்தது.

அறிவியல் கற்றலுக்கும் ஆராய்ச்சிக்குமான நிறுவனங்களை நடத்திய விக்ரம் சாராபாய், சர் சி.வி.ராமன், ஹோமி ஜே.பாபா, சதீஷ் தவான், எஸ்.எஸ்.பட்நாகர் போன்ற பல அறிவியலர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையை நேரு பெற்றிருந்தார்.

அறிவியலுக்குச் சமூகத்தின் ஏற்பும் அரசின் ஆதரவும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை நேரு முழுமையாக அறிந்திருந்தார். இதனால்தான் 1954-ல் அணுசக்தித் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், 1949-ல் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், 1952-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றைத் தொடங்கி, அறிவியல் முன்னேற்றத்தின் அதிகாரத்துவ இயந்திரங்களாக மாற்றினார்.

நேருவுக்கு எதிரிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவரது அறிவியல் பணியைத் தடுக்கப் போலி தேசியவாதம் தூண்டப்பட்டது. அறிவியலுக்கு எல்லைகள் இல்லை. ஆங்கில அறிவியல், பிரெஞ்சு அறிவியல் என்றெல்லாம் பேச முடியாது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறிவியலின் பங்கு முக்கியமானது என்பதை நேரு புரிந்து வைத்திருந்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. 1953-ல் மலேரியா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 1951-ல் பெரியம்மை பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரமாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 300 ஆகக் குறைக்கப்பட்டது. மக்களைப் பாதிக்கும் இது போன்ற நோய்களிடம் போராட ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

1950-களில் பாலியல் நோய்கள், தொழுநோய், டைஃபாய்டு, கக்குவான் இருமல், நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. மருத்துவம், பரவலான தடுப்பூசித் திட்டங்கள் மூலம் இந்த நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. 1940-களில் பரவிய பிளேக் நோயால், நாட்டு மக்கள்தொகையில் 3% பேர் இறந்துபோனார்கள். கடுமையாகப் போராடி 1950-களில் பிளேக் நோய் முற்றிலும் அழிக்கப்பட்டது.

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகளுடன், அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டன. அதற்காகப் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணியும், இருக்கும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தும் பணியும் நடைபெற்றன. 1946-ல் 15 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 1965-ல் 81 ஆக உயர்ந்தது. 1951-ல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1,200. இது 1961-ல் 10 ஆயிரமாக உயர்ந்தது.

கரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, கடந்த கால நோய்களுக்கு எதிரான நேருவின் போராட்டத்தை நினைவில்கொள்வது அவசியம். சீனா, தைவான், வியட்நாம், சிங்கப்பூர், கியூபா போன்ற நாடுகளில் மலிவாக மருத்துவம் கிடைப்பதால்தான், மற்ற பெரிய பணக்கார நாடுகளைவிட கரோனா தொற்றை இந்த நாடுகள் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.

பிளேக், காலரா நோய்களை அறிவியல்பூர்வமாக முறியடித்ததைக் குறிப்பிட்டு, மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், சில நோய்களின் மீதான வெற்றி போன்றவை அறிவியலைப் பொறுத்தது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

தான் கட்டமைத்த நிறுவனங்கள் மூலம் கரோனா பரவல் காலத்திலும் நேரு வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1952-லேயே பூனாவில் நிறுவப்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கரோனா காலத்தில் பெருமளவில் பயன்படுவதை மறக்க முடியாது.

மனிதர்களின் அறிவியல் தேடல் குறித்த நேருவின் நம்பிக்கை, கரோனா பரவல் இருக்கும் இந்தக் காலத்திலும் பொருந்தும். அறிவியலின் மீது நேரு வைத்திருந்த இந்த நம்பிக்கையும், மனிதர்களின் திறமையுடன் அவர் உருவாக்கிய அறிவியல் நிறுவனங்களும்தான், இந்த அழிவுகரமான உலகப் பேரிடரிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

- ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசியமுரசு. தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

நவம்பர்-14: நேருவின் பிறந்த நாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்