நல்ல வாழ்க்கையைத் தேடி 15 வருடங்களுக்கு முன்னால் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகருக்கு வந்தார் இஸ்மாயில். அவரது சொந்த ஊரான அசாம் பார்பேடா மாவட்டத்துக்குப் போனால், அவர் விவசாயக் கூலியாக குறைந்த கூலியில் வாட வேண்டும். அசாமை விட்டு லக்னோவுக்கு வந்த மற்றவர்களைப் போலவே இஸ்மாயிலும் குப்பைப் பொறுக்கும் வேலையை எடுத்துக்கொண்டார். லக்னோவில் அவர் அசாமைவிட சுமாரான வாழ்க்கையை வாழ்ந்தார். அதைவிடவும் வசதி குறைவான வாழ்க்கையாகவே ஒருவேளை இது இருந்தாலும், போடோ இயக்கத்தின் வன்முறை இல்லாத பாதுகாப்பான இடம் இது.
பொருளாதாரக் காரணங்களுக்காக அவர் வெளியேறி, அவரது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கி.மீ-க்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தனது இந்தியக் குடியுரிமை பறிபோய்விடுமோ என்ற பயம்தான் அவரது தற்போதைய பெரிய கவலை.
ஒவ்வொரு தேர்தலுக்கும் எப்படியாவது போய் வாக்களிக்க வேண்டும் என்ற கவலைதான் அவரை விரட்டுகிறது. அசாம் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்னும் சில நாட்களில் அவர் தன்னைப் போல லக்னோவின் சேரிகளில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கானவர்களுடன் 36 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். போடோ இயக்கத்தின் வன்முறைக்குப் பேர்போன கோக்ரஜார் மாவட்டத்தின் வழியாகத்தான் பயணிக்க வேண்டும்.
“நான் வாக்களிக்கவில்லை என்றால், வாக்காளர் பட்டியலிலிருந்து என்னை எடுத்துவிடுவார்கள். என்னை வங்க தேசத்துக்காரன் என்பார்கள். அதனால் எனக்கு எல்லாப் பிரச்சினைகளும் வரும்’’ என்கிறார் 30 வயதான இஸ்மாயில்.
வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் வெள்ளங்கள் ஏற்படுத்தும் அழிவுகளும் கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தைவிட்டு அசாமியர்களை ஓட வைத்திருக்கிறது. போடோலாந்து இயக்கத்தின் வன்முறை இப்படி இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.
லக்னோவில் 60 ஆயிரம் அசாமியர்கள் வரை இருக்கிறார்கள் என்கிறது விக்யான் எனும் அமைப்பு. வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிட்டால் மீண்டும் சேர்வது கடினம் என்கிறார் முகமது. வாக்குப் பதிவு நடக்கும்போது எங்கே போனாய் வங்க தேசத்துக்கா என்று உடனே கேள்வி எழும். அடிக்கடி ஊருக்குப் போய் வர வேண்டியிருக்கும். அதிக பணம் செலவாகும் அதன் பிறகுதான் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்.
‘‘சரியான அடையாள அட்டை இல்லை என்றால், எங்களை வங்கதேசிகள் என்று கொடுமைப்படுத்துவார்கள். சில நேரம் பயங்கரவாதிகள் என்றுகூட நினைத்து விடுவார்கள்’’ என்கிறார் பயத்துடன் குவாசிம். சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து வந்த வங்கதேசத்தவர்கள் என்னும் பிரச் சாரத்தை பாஜக இந்தத் தேர்தலில் தீவிரப்படுத் தியிருப்பதால் இவர்கள் இந்த முறை தங்களின் வீடுகளுக்குக் கட்டாயம் போயே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
ஊருக்குப் போய் வருவதற்காக அஜ்ரத் அலி (35) தனது வண்டியையே விற்றுவிட்டார். வாக்குப்பட்டியலில் பெயர் இல்லாமல் போய்விடும் என்பதே பெரிய பயம் என்கிறார் இதீஷ். பத்ருதீன் நடத்தும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை இதீஷ் ஆதரிக்கிறார். லக்னோ வாக்காளர் பட்டியலுக்குத் தங்களின் வாக்காளர் விவரங்களை மாற்றலாம்தான். ஆனாலும், தங்களின் உள்ளூர் அடையாளத்தை இழப்பதில் பெரும்பாலானோருக்கு இஷ்ட மில்லை. ‘‘ஊரில் உள்ள எனது வேர்களை நான் இழந்துவிட்டால் எனது அடையாளத்தை நான் இழந்துவிடுவேன். நான் எங்கே போனாலும் ஒரு வங்கதேசக்காரன்போலப் பார்க்கப்படுவேன்’’ என்கிறார் இதீஷ்.
‘‘வங்கதேசத்தினர் போன்ற தோற்றம், பேச்சு மட்டுமல்ல, அவர்களின் அடையாளம் பற்றிய அரசியலாலும் அவர்கள் காவல் துறைக்கு எளிதில் இலக்காகிறார்கள். என்கிறார்கள் நிபுணர்கள். ‘‘இடம்பெயர்ந்து வாழ்வோரை வங்க தேசத்த வர்கள் என்று சொல்வதன் மூலம் அவர்களுக்குக் குடிமக்கள் என்ற முறையில் செய்ய வேண்டிய கடமைகளை அதிகாரவர்க்கத்தினர் தவிர்த்துவிடுகின்றனர்’’ என்கின்றனர் விக்யான் பவுண்டேஷனின் செயலாளர் சந்தீப் கர்ரே, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே.
‘‘லக்னோவின் குப்பைகளை அகற்றுவதில் 60% பணிகளை அவர்களே செய்கின்றனர். ஆனால், அவர்கள் பெரும்பாலானோர் கொத்தடிமை நிலையில் தான் பணியாற்றுகின்றனர்’’ என்கிறார் கர்ரே. தேர்தல்கள் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பாவிட்டாலும் ஏதேனும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
© ‘தி இந்து' ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக: த.நீதிராஜன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago