மழை - வெள்ளம்: அரசு செய்ய வேண்டியது என்ன?

By மு.இராமனாதன்

அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழைதான் தமிழ்நாட்டுக்குப் பிரதான நீராதாரம். அந்த மழையை நாம் வரவேற்க வேண்டும். பொழிகிற நீரைச் சேமித்து வைக்க வேண்டும். ஆனால், ஒன்றிரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து பெய்தால் அந்த மழையை நாம் சபிக்கிறோம். சென்னையில் சனிக்கிழமை (நவம்பர் 6) தொடங்கியது மழை. ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தது. திங்கட்கிழமை விட்டு விட்டுப் பெய்தது. இது மூன்று நாட்களுக்குத் தொடரும், அது கனமழையாகவும் இருக்கும் என்பது கணிப்பு. நகரில் மொத்தம் 164 பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதாகத் தெரிவித்தது ஒரு செய்திக் குறிப்பு. திறந்துவிடப்பட்ட நீர்த்தேக்கங்களின் வழியாகவும் நீர் பெருகி வழிகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மாநகராட்சி லட்சக்கணக்கான உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்கள் பசியாற்றியது. அவர்கள் வரிசையில் நின்று அந்த உணவைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் சிலரேனும் ஜூலை 2019-ல் தண்ணீர் லாரிகளின் முன்னால் வரிசையில் நின்றதை நினைத்துப் பார்த்திருக்கக் கூடும். ஏன் இந்த முரண்? எங்கே நேர்கிறது பிழை?

இந்தியா வெகு வேகமாக நகரமயமாகிவருகிறது. நகரங்கள் கட்டிடங்களாலும் சாலைகளாலும் உருவாக்கப்பட்டவை. நீராலும் மின்சாரத்தாலும் இயங்குபவை. ஆனால், நமது நகரங்களால் பெருமழையை எதிர்கொள்ள முடியவில்லை. புத்தாயிரமாண்டுக்குப் பிறகு சென்னை 2004-லும், மீண்டும் 2015-லும் பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. ஹைதராபாத் 2001-லும் 2012-லும் எதிர்கொண்டது. இந்தப் பட்டியலில் சேரும் மற்ற நகரங்கள்: டெல்லி (2002, 2003, 2009, 2010, 2011), மும்பை (2005, 2008, 2009), கொல்கத்தா (2007), சூரத் (2006), ஜாம்ஷெட்பூர் (2008), குவாஹாட்டி (2010), ஜெய்பூர் (2012). இதில் கேரளத்தையும் (2018) சேர்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை திரும்பத் திரும்ப எச்சரித்தும் நமது செவிகள் மூடியிருக்கின்றன. இதில் மற்ற நகரங்களைவிட சென்னை பாரம்பரிய நீர்மேலாண்மை மிக்க நகரம்.

சென்னையின் செல்வங்கள்

சென்னை நகரை மூன்று ஆறுகளும் (கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம்), ஆற்றையொத்த ஒரு கால்வாயும் (பக்கிங்காம்) நனைக்கின்றன. இவற்றுக்கு நீர் கொண்டுவரும் பல மைல் நீளமுள்ள வரத்துக் கால்வாய்களின் எண்ணிக்கை 16. நீர்த்தேக்கங்கள் நான்கு (செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், செங்குன்றம்). இவை எல்லாவற்றின் மொத்தக் கொள்ளளவு 11 டி.எம்.சி. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்! இவை தவிர, நகரிலும் நகரைச் சுற்றிலும் 4,100 ஏரிகளும் குளங்களும் இருந்தன. இவற்றின் கொள்ளளவு 150 டி.எம்.சி. சென்னை நகரின் ஒரு மாதக் குடிநீர்த் தேவை 1 டி.எம்.சி. என்பதோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளலாம். நமது நீர்மேலாண்மையின் குறைபாட்டால் கையில் உள்ள செல்வங்களைப் பாழாக்கிவிட்டு, கிருஷ்ணாவையும், வீராணத்தையும், உவர்ப்பு நீக்கப்பட்ட கடல்நீரையும், லாரிகள் சுமந்து வரும் நிலத்தடி நீரையும் நம்பி இருக்கிறோம்.

நீரோடிய சென்னையின் ஆறுகளில் ஒரு காலத்தில் மீன்கள் நின்றாடின. இப்போது நகருக்குள் ஓடும் எந்த நதியிலும் எந்தக் கால்வாயிலும் மீன்கள் இல்லை. அதாவது, நதிகள் செத்துவிட்டன. அவை கழிவுநீரையும் குப்பைக் கூளங்களையும் சுமந்து செல்கின்றன. நதிகள் குறுகிவிட்டன. நதியைத் தாண்டி கரைகளிலும் வெள்ளச் சமவெளிகளிலும் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. ஏரி, குளங்களின் நிலையும் இதேதான்.

நீலத்தடி நீர்த்தேக்கம்

நீர்த்தேக்கங்களின் மகிமையை அறிய நாம் ஹாங்காங்குக்கும் டோக்கியோவுக்கும் போய்வர வேண்டும். ஹாங்காங்கின் மழைநீர் வடிகால்கள் 1989-ல் விரிவுபடுத்தப்பட்டன. அப்போது வளர்ச்சியடைந்த பகுதிகளில் இடப் பற்றாக்குறையால் வடிகால்களைப் போதிய அளவில் அமைக்க முடியவில்லை. அதனால் தை-ஹாங் என்கிற இடத்தில் ஒரு பாதாளக் கிடங்கைக் கட்டினார்கள். பெருமழையின்போது, வடிகால்கள் பெருகினால், கூடுதல் மழைநீரை இந்தக் கிடங்குக்குக் கடத்திவிடுவார்கள். பிற்பாடு மழை குறைந்ததும் இந்த நீரை வடிகால்களுக்கு வெளியேற்றுவார்கள். இந்தக் கிடங்கு, மூன்று கால்பந்தாட்ட மைதானப் பரப்பளவிலானது. இதன் கொள்ளளவு 35 லட்சம் கனஅடி. 2017-ல் ஹேப்பி வேலி எனும் இடத்தில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தின் கீழும் இதே போன்ற ஒரு பாதாளக் கிடங்கைக் கட்டினார்கள். 2006-ல் இது போன்ற கிடங்கை டோக்கியோ கட்டியது. ஆனால், இதன் கொள்ளளவு ஹாங்காங்கைவிட நான்கு மடங்கு பெரிதானது. இவை பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டவை. ஹாங்காங்கும் டோக்கியோவும் இடநெருக்கடி மிகுந்த நகரங்கள். ஆகவே, அவர்கள் மழை நீரைச் சேமிக்க நிலத்துக்குக் கீழே போனார்கள். ஆனால், நிலத்துக்கு மேல் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ணற்ற குளங்களையும் ஏரிகளையும் அவற்றின் வரத்துக் கால்வாய்களையும் நாம் ஆக்கிரமித்தது எப்படிச் சரியாகும்? அவற்றில் கழிவுநீரையும் குப்பைக் கூளங்களையும் கலப்பது எப்படி நீதியாகும்?

மேலும், முன்குறிப்பிட்ட கிடங்குகளில் சேகரிக்கப்படும் நீர், மழை குறைந்ததும் கால்வாய் வழியோடிக் கடலில் கலக்கும். ஆனால், நமது ஏரிகளும் குளங்களும் மழைக்காலத்தில் சேகரித்த நீரைக் கோடைக்காலத்தில் திருப்பித் தர வல்லவை. வேரால் உண்ட நீரைத் தலையால் தரும் தென்னை மரம் போன்றவை நமது நீர்நிலைகள்.

என்ன செய்யலாம்?

சரி, இப்போது நாம் என்ன செய்யலாம்? முதலாவதாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கரைகளிலும், வெள்ளச் சமவெளிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மூன்று லட்சம் குடும்பங்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இவர்களில் பலரும் இப்படியான கரையோர நிலங்களில் வாழ்பவர்கள்தான். இவர்களுக்குப் புதிய வீடு வழங்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது. அதன் மூலம் நகரின் தொழிலாளர்களுக்குக் கண்ணியமான வாழ்விடம் வழங்க முடியும்; நகரின் நீர்ப் பரப்பையும் மீட்டெடுக்க முடியும். மேலும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் இவற்றை ஆழப்படுத்தவும் வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறோம். வேளாண்மை, தொழிற்சாலை, குடிநீர் எல்லாவற்றுக்கும் கணிசமான அளவு நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். முக்கியமாக நிலத்துக்கு நீரைத் திருப்பிச் செலுத்தவும் வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீடு கட்டும்போது மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயமாக இருந்தது. இப்போது அது சடங்காகிவிட்டது. கட்டப்பட்ட தொட்டிகளிலும் பல பராமரிப்பின்றித் தூர்ந்துபோயிருக்கும். இந்தத் தொட்டிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும். இதைத் தவிர அதிகமான மழை வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளில் மறுஊட்டக் கிணறுகளை (recharge wells) அமைக்கலாம். இவை 100 அடி ஆழம் வரை இருக்கும். இதன் மூலம் மழை வெள்ளத்தின் ஒரு பகுதி கடலில் கலக்காமல் நிலத்துக்குக் கீழே செல்லும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். டோக்கியோவின் மழைநீர் வடிகால்களில்கூட இடையிடையே இப்படியான மறுஊட்டக் கிணறுகள் இருக்கும். மூன்றாவதாக மழைநீர் வடிகால்கள். சென்னை நகரச் சாலைகளின் நீளம் 5,750 கிமீ. மழைநீர் வடிகால்களின் நீளம் 2,180 கிமீ. அதாவது, செம்பாதிகூட இல்லை. இது ஓராண்டுக்கு முந்தைய புள்ளிவிவரம். தவிர, இதில் பல வடிகால்கள் ஆற்றோடு இணைக்கப்படவில்லை. ஆகவேதான் மழைநீர் சாலைகளில் தேங்குகிறது. நகர் நெடுகிலும் வடிகால் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு, அவை முறையாகப் பராமரிக்கப்படவும் வேண்டும்.

வெள்ளப் பெருக்கும் குடிநீர்ப் பஞ்சமும் இரு வேறு பிரச்சினைகள் அல்ல. ஒன்றைச் சமாளிப்பதன் மூலம் மற்றதை எதிர்கொள்ள முடியும். மழைக்காலம் தொடங்கும் நேரம் பார்த்து ஏரிகளைத் தூர்வாரத் தொடங்குவது, மழைநீர் வடிகால்களைச் சரிசெய்யத் தொடங்குவது, பிறகு மழை பெய்ய ஆரம்பித்ததும் அந்தப் பணிகளைப் பாதியிலேயே விட்டுவிடுவது என்ற கடந்த காலக் காட்சிகள் இனியும் தொடரக் கூடாது. இதற்கு எந்த ஆட்சியும் விதிவிலக்கில்லை. வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தை சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் எதிர்கொண்ட 2015-க்குப் பிறகுகூட ஆட்சியில் இருந்தோர் விழித்துக்கொள்ளவில்லை என்பது பெருந்துயரம். அதன் விளைவுகளைத்தான் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறோம். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தில் முதல்வரும் அமைச்சர்களும் வந்து பார்வையிடுவது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயம். திமுக அரசு இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அடுத்த ஆண்டின் மழைக் காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல், வடிகால் அமைத்தல் முதலிய பணிகளை மேற்கொண்டால் இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்