சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்தபோது சென்னை மாகாணம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகத்தின் சில பகுதிகள், மலபார் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. ஏறக்குறைய 2¾ கோடி வாக்காளர்கள். மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 375. அப்போது ஆகப்பெரிய கட்சி, காங்கிரஸ். மேலும், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், சோஷலிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, ஃபார்வர்ட் ப்ளாக் உள்ளிட்டவையும் களத்தில் இருந்தன.
சுதந்திர மாளிகையைக் கட்டமைப்பதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார் நேரு. சென்னை மாகாணத்தின் பிரதான பிரச்சினை அரிசிப் பஞ்சம். நெருக்கடியைச் சமாளிக்க வீட்டுக்கு ஆறு அவுன்ஸ் அரிசி மட்டுமே (இன்றைய அளவில் 170 கிராம்) என்றது காங்கிரஸ் அரசு. மக்கள் கொந்தளித்தனர். அந்த அதிருப்தியைக் காங்கிரஸுக்கு எதிரான கணையாக மாற்றின எதிர்க் கட்சிகள். விளைவு, தேர்தல் முடிவில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
152 இடங்களே கிடைத்ததால் மைனாரிட்டி அரசை அமைக்க காமராஜர் விரும்பவில்லை. ஆனால், மற்றவர்கள் விரும்பினர். அப்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜி, மீண்டும் களத்துக்கு வரவழைக்கப்பட்டார். வந்த வேகத்தில் ஆட்சிக்கான ஆதரவைத் திரட்டினார். அப்போது மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சியும் ராமசாமி படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியும் அவரது கவனத்தைக் கவர்ந்தன.
தேர்தல் நெருக்கத்தில் உருவான அந்தக் கட்சிகள், திமுக ஆதரவோடு போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தன. தேர்தலில் வெற்றிபெற்று, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தேடுவோம் என்று திமுகவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனாலும், ராஜாஜி அழைப்பை ஏற்று அவர் ஆட்சியமைக்க ஆதரவளித்தனர். முக்கியமாக, காங்கிரஸில் சேர்ந்து அமைச்சரானார் மாணிக்கவேலர். அதன்மூலம், கூட்டணி ஆட்சிக்கான முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்திருந்தது காங்கிரஸ்.
இவ்வளவு சிரமப்பட்டு ஆட்சி அமைத்த ராஜாஜிக்கு இரண்டே ஆண்டுகளில் இடையூறு வந்தது. உபயம்: புதிய கல்வித் திட்டம். தகப்பன் தொழிலையே தனயனும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் கூறிய எதிர்க் கட்சிகள், அதனை குலக் கல்வித் திட்டம் என்று விமர்சித்தன. காங்கிரஸுக்கு உள்ளும் புறமும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த விவகாரம், ராஜாஜியின் ராஜினாமாவில் வந்துமுடிந்தது. காமராஜர் முதலமைச்சரானார்.
இடைப்பட்ட காலங்களில் இந்தியா முழுக்க மொழிவாரி மாகாணப் பிரிவினை நடந்திருந்தது. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டு ஆந்திரா தனி மாநிலமாகியிருந்தது. அண்டை மாநிலங்களுக்குச் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டதால், சென்னை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆகச் சுருங்கியிருந்தது. மக்களவைத் தொகுதிகள் 41.
1957-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கட்சியும் ஆட்சியும் காமராஜரின் கட்டுப்பாட்டில் இருந்தன. மதிய உணவுத் திட்டம் தந்த மகத்தான ஆதரவோடு தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாரானபோது, களத்தில் புதிய எதிரி உருவாகியிருந்தது. திமுக.
- கட்டுரையாளர், ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago