யெச்சூரி யுத்த களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல; இந்திய இடதுசாரி இயக்கம் முழுமைக்கும் இது முக்கியமான ஒரு யுத்தம். பாஜக நாட்டின் எல்லா பாகங்களிலும் கிளை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில், இடதுசாரிகள் தம் கோட்டையாகப் பார்க்கும் வங்கத்திலும் கேரளத்திலும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இரு இடங்களிலுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்; கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் காலம் அவர்களை நிறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அரை நூற்றாண்டு `திமுக - அதிமுக' அரசியலுக்கு முடிவுகட்டும் நோக்கில் கட்சி கட்டியிருக்கும் கூட்டணியை நம்பிக்கையுடனே பார்க்கிறார் யெச்சூரி. தேர்தல் களத்தைத் தாண்டியும் நிறையப் பேசினோம்.
உங்கள் கட்சியைத் தாண்டி, ஒட்டுமொத்த இடதுசாரிகள் இயக்கத்துக்கும் மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து பெரிய மாற்றங்களை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஓராண்டாகிறது. எந்த அளவுக்குத் தயாராகியிருக்கிறீர்கள்?
மிகவும் சவாலான காலகட்டம்தான். இடதுசாரிகளுக்கு மட்டும் அல்ல; நாட்டுக்கும். சகிப்பின்மையின் காலகட்டத்தில் இருக்கிறோம். சங்கப் பரிவாரங்கள் தெளிவான செயல்திட்டத்தோடு முன்னேறுகின்றன. இந்த நாட்டின் அடிநாதமான ஜனநாயகத்தின் மீதும் மதச்சார்பின்மை மீதும் தாக்குதல் நடக்கும் காலகட்டத்தில் எங்களுடைய கடமை என்னவென்பதை நாங்கள் முழுமையாகவே உணர்ந்திருக்கிறோம். எங்கள் பலவீனங்களையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். பலவீனங்களிலிருந்து நாங்கள் வெளியே வர வேண்டும். பலவீனங்கள் முறியடிக்கப்பட வேண்டும். 2015 டிசம்பரில் இது தொடர்பாக ஆழ்ந்து யோசித்தோம். வியூகங்களை வகுத்தாயிற்று. மாற்றங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை வெளியே நீங்களும் உணர்வீர்கள்.
இந்தியாவில் இடதுசாரிகள் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு முக்கியமானது. இதை நீங்களும் உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. போராட்டக் களங்களிலும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்தே நிற்கிறீர்கள். கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த பெரும் சக்தியாக எழுந்து நிற்பதில் என்ன சிக்கல்?
ஆரம்பத்தில் ஒரே கட்சியாகத்தானே இருந்தோம்! முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் பிரிந்து வந்தோம். அதிலிருந்து மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் வந்தார்கள். அப்புறம் இப்படிப் பல குழுக்கள். ஏன் இத்தனை பிரிவினைகள்? தத்துவார்த்த வேறுபாடுகள். எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே நாளில் எல்லோரும் சேர்வது சாத்தியம் அல்ல. ஆனால், பொது எதிரி நம் கண் முன்னே விஸ்வரூபம் எடுக்கிறான். நாடு நாளுக்கு நாள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. போர்க்களத்தில் எங்களுக்குள்ளான வேறுபாடுகளை விவாதித்து, நாங்கள் ஒன்றுசேர்வதற்கான அவகாசத்துக்கு இடம் இல்லை. விவாதிப்பதற்கான நேரத்தைவிடவும் எதிர்கொள்வதற்கான சவால்கள் பல மடங்கு அதிகரித்து நிற்கின்றன. ஆகையால், இணைப்பைப் பற்றி அப்புறம் பேசுவோம், முதலில் ஒன்றுபட்டு போரை எதிர்கொள்வோம் என்று ஓடுகிறோம்.
இணைப்பு தொடர்பாக நீண்ட காலமாக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது…
இப்போது செயலில் இறங்கிவிட்டோமே! அதன் விளைவாகத்தானே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், ஐக்கிய மையம் என்று ஆறு இடதுசாரி அமைப்புகள் இன்று ஒரே மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம்!
பொதுவாக, இந்த விஷயத்தில் ஏனைய இடதுசாரி அமைப்புகளிடம் இருக்கும் ஆர்வத்தை மார்க்சிஸ்ட்டுகளிடம் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பிடுகையில், மார்க்சிஸ்ட்டுகளிடம் மேலாதிக்க மனோபாவமும் பெரியண்ணன் அணுகுமுறையும் இருக்கிறதோ?
பெரியண்ணன் மனோபாவமும் இல்லை; சின்னத்தம்பி மனோபாவமும் இல்லை. நாங்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள் மனநிலையில்தான் இருக்கிறோம். இணைப்புக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. தலைவர்கள் அளவில் கை குலுக்கி உடன்பாடு போடுவது ஒரு வழி. தொண்டர்கள் அளவில் போராட்டங்கள் வழி கைகோத்து இணைவது இரண்டாவது வழி. இடதுசாரிகள் இயல்புக்கேற்ப கீழிருந்தே இணைப்பைக் கொண்டுவர நாங்கள் நினைக்கிறோம். போராட்டங்களின்போது வரும் ஒற்றுமையே எல்லாக் காலத்துக்கும் நீடிக்கக் கூடிய ஒன்றுகூடல். சர்வதேச அனுபவங்களும் நமக்கு இதையே சொல்கின்றன.
உங்கள் பொறுப்புக் காலத்துக்குள் இடதுசாரிகள் ஒன்றிணைந்துவிடுவீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
எல்லாத் தரப்புத் தொண்டர்களிடம் முகிழும் ஒற்றுமையே அதைத் தீர்மானிக்கும். நிச்சயம் ஒன்று சொல்வேன், என் காலத்தில் மிகப் பெரிய நெருக்கம் உருவாகும்.
இந்தியா போன்ற ஒரு தேசத்தை ஆள நினைக்கும் ஒரு கட்சி எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்! குறைந்தபட்சம் மக்கள்தொகையில் 5% பேரையாவது உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும் அல்லவா? ஏன் உங்களால் பெரும் ஜனத்திரளை உள்ளிழுக்க முடியவில்லை?
பெரும் ஜனத்திரளை உள்ளே கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். சொல்லப்போனால், நாம் ஆரம்பத்தில் பேசிய மாற்றங்களின் அடிப்படை வியூகமே அதுதான். கட்சியின் புரட்சிகரத் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மேலும் மக்கள் திரளை ஈர்ப்பது. ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் மாதிரியல்ல இடதுசாரி இயக்கம். அடிப்படையில் இது ஒரு மாற்று இயக்கம். மாற்றுப் பொருளாதாரத்தை, மாற்று அரசியலைப் பேசுகிற இயக்கம். பெருநிறுவனங்களுக்கான வரிச் சலுகையாக மட்டும் இந்த முதலாளித்துவக் கட்சிகள் வாரி இறைத்திருப்பது ரூ.6.11 லட்சம் கோடி. வாராக் கடன் ரூ.6.52 லட்சம் கோடி. இவ்வளவு தொகையும் சாமானிய மக்களுக்கான கல்விக்கும் சுகாதாரத்துக்கும் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்! எத்தனை கல்வி நிலையங்களை, மருத்துவமனைகளை அரசு சார்பில் உருவாக்கியிருக்க முடியும்! இப்படியெல்லாம் ஒரு சூழலைக் கொண்டுவர வேண்டும் என்றால், எல்லோரும் போகும் பாதையிலேயே சென்று அதைச் சாதிக்க முடியாது. அந்த மாற்றுப் பாதைக்கான கொள்கைகளை ஏற்கிறவர்களைத்தான் நாம் கட்சிக்குள் கொண்டுவர முடியும். இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது. கொள்கைகளாலேயே நாங்கள் விரிவோம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் ஏழை - பணக்காரர் வேறுபாடு அதிகரிக்கிறது. வறுமையும் சாதி, மதப் பாகுபாடுகளும் விளிம்புநிலை மக்களை வாட்டி வதைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் தன்னெழுச்சியாக இடதுசாரிகளை நோக்கி வர வேண்டும். மாறாக, வலதுசாரி அமைப்புகளே நாளுக்கு நாள் வலுவடைகின்றன, கிளைகள் விரிக்கின்றன. இடதுசாரிகளோ நாளுக்கு நாள் பலவீனமடைகிறீர்கள்...
ஆர்எஸ்எஸ் மேலும் மேலும் பல அமைப்புகளை உருவாக்குகிறது. விஷத்தைத் தூவுகிறது. சங்கப் பரிவாரங்கள் பலம் அதிகரிக்கிறது என்பது உண்மைதான். பணமும் அதிகாரமும் அதன் பின்னால் இருக்கிறது. அரசின் பின்புலம் கூடுதல் பலம். அதேசமயம், இடதுசாரிகள் குறுகிக்கொண்டுவருகிறோம் என்பது உண்மை அல்ல. இன்றைக்கு இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இது. போராடும் இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள். ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தில் போராடிக்கொண்டிருப்பவர்கள் இளைஞர்களா, முதியவர்களா? அவர்கள் இடதுசாரிகளா, வலதுசாரிகளா? இன்றைக்கு இந்த அரசாங்கம் ஏன் நாடு முழுக்க பல்கலைக்கழகங்களையும் கல்வி நிலையங்களையும் குறிவைக்கிறது? அது வலதுசாரிகளின் கோட்டை என்றால், இளைஞர்கள் அவர்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றால், ஏன் இவ்வளவு பதற்றமடைகிறது? ஏன் மாணவர்களை ஒடுக்க நினைக்கிறது? ரோஹித் வெமுலாவும் கண்ணைய குமாரும் யாரைப் பிரதிபலிக்கிறார்கள்? சலனங்களைக் கவனியுங்கள். மும்பையில் சில கல்லூரிகளில் எங்களுக்கு மாணவர் அமைப்புகளே கிடையாது. ஆனால், பல்கலைக்கழகங்களில் இந்த சங்கப்பரிவார அரசு நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக நாங்கள் அறைகூவல் விடுத்தபோது, தன்னெழுச்சியாக மாணவர்கள் இடதுசாரிகளை நோக்கி வருகிறார்கள். ஒரே மாற்று இடதுசாரிகள்தான்.
ரோஹித் வெமுலா உங்களைப் பிரதிபலிப்பதாக நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால், அவர் அம்பேத்கரிய இயக்கத்தை நோக்கி நகர்ந்த புள்ளி இடதுசாரிகள் விவாதிக்க வேண்டியது…
ரோஹித் வெமுலாவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். நான் ஹைதராபாத் சென்றிருந்தபோது, பேசிய கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார். நிறையக் கேள்விகளை அவர் கேட்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்தபோதுகூட நாங்கள் இருவரும் விவாதித்தோம். இடதுசாரி இயக்கத்திடம் அவருக்குச் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அவர் முன்வைத்த தலித் விடுதலை முழக்கமான ‘ஜெய் பீம்’, இடதுசாரி மாணவர்கள் இயக்கத்தினரின் முழக்கமான ‘லால் சலாம்’எல்லாமே பகத் சிங்கின் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’முழக்கத்தில் கலப்பவை என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.
சரி, தலித்துகள் விவகாரங்களில் இடதுசாரிகள் போதிய அளவு அக்கறை காட்டுவது உண்மைதான் என்றால், நாட்டில் ஏன் இவ்வளவு தலித் இயக்கங்கள் தோன்றுகின்றன? இடதுசாரிகளின் தோல்வியும் போதாமையும்தானே இதைக் காட்டுகிறது?
தலித்துகளும் நாங்களும் விலகியிருப்பதாக நான் கருதவில்லை. எல்லாக் காலத்திலுமே இடதுசாரி அமைப்புகளின் மிக முக்கியமான அங்கமாக தலித்துகள் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கும் கட்சியில் பல மாநிலங்களில் பல முக்கியப் பொறுப்புகளில் அவர்கள் இருக்கிறார்கள். இடதுசாரிகள் ஆரம்பத்திலிருந்தே ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகக் கடுமையாகப் போராடுகிறோம். தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்வோம்.. ஒப்பீட்டளவில் ஏனைய பகுதிகளைவிட தஞ்சாவூர் பிராந்தியத்தில் சாதிய ஒடுக்குமுறைகளும் வர்க்க ஒடுக்குமுறைகளும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன என்றால், அதற்கு யார் காரணம்? அங்குள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு அதில் முக்கியப் பங்கிருக்கிறது இல்லையா? சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறதோ அதேபோல, அனைத்திந்திய அளவிலும் அமைப்புகள் செயல்படுகின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்பே பம்பாய் மாகாணத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே தலித் மக்களின் விடியலுக்காகப் பாடுபட்டார். அங்கே தொடங்கினால்கூட காந்தி, பெரியார், அம்பேத்கர் என்று எத்தனை எத்தனை ஆளுமைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறார்கள்; எவ்வளவு அமைப்புகள் போராடியிருக்கின்றன! அவ்வளவு உழைப்பையும் கடந்தும் இன்றைக்கும் நாம் போராடத்தானே வேண்டியிருக்கிறது! ஒருவர் சிந்தாந்தரீதியான தேர்வுகள் சார்ந்து அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதை ஒரு அமைப்பின் போக்கோடு நாம் இணைத்துப் பார்க்கக் கூடாது.
இன்றைய சூழலில், சமூக விடுதலையில் சாதிய விடுதலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?
எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நான் குறிப்பிட்ட விஷயம் இது, ‘இந்தியாவில் வர்க்கப் போராட்டம் இரண்டு கால்களில் நிற்கிறது. ஒன்று, பொருளாதார ஒடுக்குமுறை ஒழிப்பு. மற்றொன்று, சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு. இந்தியாவில் இந்த இரண்டு கால்களில் நடக்காமல் இங்கே வர்க்கப் போராட்டம் நகராது.’ சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டை எங்கள் அடிப்படைகளில் ஒன்றாகவே பார்க்கிறோம்.
இடதுசாரி கட்சிகள் இணைப்பு தொண்டர்கள் கையில் இருக்கிறது!
இணைப்புக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. தலைவர்கள் அளவில் கை குலுக்கி உடன்பாடு போடுவது ஒரு வழி. தொண்டர்கள் அளவில் போராட்டங்கள் வழி கைகோத்து இணைவது இரண்டாவது வழி. இடதுசாரிகள் இயல்புக்கேற்ப கீழிருந்தே இணைப்பைக் கொண்டுவர நாங்கள் நினைக்கிறோம்.
தேர்தல் களத்தில் தவறாக முடிவெடுக்கும் கலாச்சாரம் இடதுசாரிகளிடம் தொடர்கிறதா?
வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மம்தாவுக்குக் கற்றுக்கொடுத்தது யார்? கால் நூற்றாண்டு அங்கு ஆட்சியில் இருந்த உங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது இல்லையா?
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்தை முன்னிறுத்தியிருக்கிறீர்கள். எந்த வகையில் அவர் இவர்களுக்கான மாற்று?
யெச்சூரியுடனான உரையாடல் நாளையும் தொடர்கிறது...
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago