கரோனாவின் சூறாவளித் தாக்கத்தில் சமூகத்தின் செல்வங்களான குழந்தைகள் கற்றதை, கற்றலையே, இழந்து சாம்பிக் கிடக்கின்றனர். ஒரு தலைமுறையின் சோகம் இது. இந்நிலையில், கல்வி மீட்சிக்காக ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியிருக்கிறது. இதன்படி, குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் ஆறு மாதங்கள் கல்விப் பயிற்சி நடக்கும். பெற்றோரும் ஊர் மக்களும் மையங்களை நிர்வகிப்பதில் பெருமளவில் பங்கேற்பார்கள்; குழந்தைகள் இழந்ததை மீட்டுக்கொள்வார்கள்; முன்பு காணாத புதியவற்றையும் பெறுவார்கள் என்பது திட்டத்தின் நோக்கம். வகுப்பறையின் மூச்சு முட்டும் சூழலுக்கு மாற்றாக, மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்ட புரியாத கற்றலுக்கு மாற்றாக, சுதந்திரக் காற்று வீச, ஆடல் பாடலுடன் கற்றல் செயல்பாடு நடக்கும் என்பது எதிர்பார்ப்பு. வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருங்கே இந்தத் திட்டம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதைக் குறுகிய காலத் திட்டமாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டுக் கல்வியின் நீண்ட காலத் தவிப்புகள் சிலவற்றுக்கான மாற்றைக் காணும் மார்க்கத்துக்கு, அறிந்தோ அறியாமலோ தமிழ்நாடு அரசு வழிவகுத்திருக்கிறது.
குழந்தைகளுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கல்வி உரிமைச் சட்டம்-2009, பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்குப் பெரும் பங்கு அளித்திருக்கிறது. குழு உறுப்பினரில் 75% அப்பள்ளிப் பெற்றோர், பாதியளவு பெண்கள் என்று இருக்க வேண்டும். இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக இணைத்துக்கொண்ட உறுப்பினர், செலவினங்களுக்குக் காசோலையில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் குழுத் தலைவரிடம் அனுப்பினால் போதும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது. அடித்தட்டு மக்களை, பள்ளிகளின் பயனாளிகளான பெற்றோரை இத்தகைய அவமதிப்புக்கும் அநீதிக்கும் பல ஆண்டுகளாக உள்ளாக்கியிருப்பது யார் குற்றம்? கல்வியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில், பள்ளி நிர்வாகம் பெற்றோரும், உள்ளாட்சி உறுப்பினர்களும் கொண்ட குழுக்களால்தான் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகாரிகளின் ஆதிக்கத்தில் அந்த நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ முதல் முறையாகக் கல்வி மேலாண்மைக் குழுக்களுக்கு உயிரும் செயலும் ஊட்டியிருக்கிறது. திட்ட மையங்களை வழிநடத்தும், மேற்பார்வை பார்க்கும் அனைத்துப் பொறுப்புகளும் இக்குழுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. அனைத்துக் குழந்தைகளும் ஒருவர் விடாமல் பள்ளிகளில் சேர்ந்தார்களா, சத்துணவு சாப்பிட்டார்களா, மையங்களில் சுகாதாரச் சூழல் நிலவுகிறதா, தகுதியுடையோர் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனரா, ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனும் கவனமுடன் வளர்க்கப்படுகிறதா என்று பலவற்றையும் அந்தந்தக் குழு உறுப்பினர்களான குடியிருப்பின் பெற்றோர்கள் அக்கறையுடன் கண்காணிப்பார்கள். இதனால், ஒவ்வொரு கிராமத்தின் அடித்தட்டுக் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளும் தன்னம்பிக்கையும் கற்றலில் ஆர்வமும் கற்றல் திறன்களும் பெறுவார்கள் என்பது திட்டத்தின் கனவு.
எதிர்க் குரல்கள் எழுந்துள்ளன. மக்கள் பணியில் நீண்ட காலமாக உழைக்கும் தலைவர்களிடமிருந்தும் இந்தக் குரல்கள் எழுந்துள்ளன. அவற்றின் சாராம்சம் இதுதான்: பள்ளிக்குள் ஆசிரியர் செய்ய வேண்டியதைப் பள்ளிக்கு வெளியே, தன்னார்வலர்கள் செய்வதன் மூலம், முறையான பள்ளி அமைப்பைச் சீர்குலைக்கும் தந்திரத் திட்டம் இது; தன்னார்வலர்களுக்குக் களத்தைத் திறந்துவிட்டால், பிளவு சக்திகள் விஷம் விதைப்பதைத் தடுக்க இயலாது; தமிழ்நாடு எதிர்க்கும் நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை கொல்லைப்புறமாக உள்ளே நுழைய கதவைத் திறக்கும்; பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு மட்டுமே முடித்த இளைஞர்கள் ஆசிரியர்களுக்கு இணையாக எவ்வாறு கற்றுத்தர இயலும்?
அரசே இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இது பள்ளிகளின் இடத்தை அபகரிக்கும் தந்திரம் அல்ல. பள்ளிகளுக்கு வலு சேர்க்கும், உதவிக்கரம் நீட்டும் ஆறு மாத காலத்துக்கான, பள்ளியின் நீட்சி அமைப்பு. இந்தக் கனவு மெய்ப்படுவதற்குச் செய்ய வேண்டியதோ ஏராளம். திட்ட வடிவில் இருக்கும் சில குறைகள் நீக்கப்பட வேண்டும். அரசு அமைப்பை உருவாக்கிவிட்டது. அமைப்பில் ஆன்மாவைக் காணும் பொறுப்பு நம் அனைவரினுடையது. இதற்குச் சில ஆலோசனைகள்:
‘தன்னார்வலர்கள்’ என்ற பெயர் நடுவண் அரசின் ‘புதிய கல்விக் கொள்கை-2019-ன்’ சொல்லாடலை நினைவூட்டுகிறது. தகுந்த மாற்றுச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
பணியில் இருக்கும் எந்த ஆசிரியரையும் முழு நேரப் பணியாளர்களாகத் திட்டத்தில் சேர்த்தல் கூடாது. ஒவ்வொரு மாணவரும் இழந்தது என்னென்ன என்று கண்டறிந்து, ஈடுசெய்தல், தேற்றுதல், பாடத்திட்ட சுமையைச் சமாளித்தல் போன்ற எத்தனையோ பணிகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வகுப்பறையில் காத்திருக்கின்றன. விருப்பமுள்ள ஆசிரியர்கள் பள்ளி நேரத்துக்குப் பின் திட்டப் பணிகளை ஏற்கலாம்.
அப்படி என்றால், பிரம்மாண்டமான இத்திட்டத்தை, 34 லட்சம் குழந்தைகளை வளர்க்கும் இத்திட்டத்தை யாரைக் கொண்டு நடத்துவது? அறிவும் அனுபவமும் கொண்ட மனித வளம் நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்தப் பெரும் மனித வளத்தை மீண்டும் கல்விப் பணியில் ஈடுபடுத்த நல்ல தருணம் இது. குறிப்பாக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களின் நிர்வாக அனுபவம் திட்டத்துக்குப் பெரும் வலிமை சேர்க்கும்.
பள்ளித் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வாரத்தில் ஓரிரு நாட்கள் மையங்களுக்குச் சென்று, அவற்றின் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மையங்களில் கற்கும் மாணவர் முகத்தில் கொப்பளிக்கும் மகிழ்ச்சி வகுப்பறையில் ஏன் காணாமல் போகிறது என்ற கேள்வி ஒரு புதிய ஞானோதயத்துக்கு வழிவகுக்கும்.
மையங்கள் வகுப்பில் கற்றுத்தரும் பாடங்களையே மீண்டும் கற்பிக்கும் ‘தனிப்பயிற்சி மையங்கள்’ அல்ல. முதல் சில வாரங்கள் கரோனா கால உடல், மன வலிகளிலிருந்து மாணவரை மீட்கும் பணி; தன்னம்பிக்கையும் சக மாணவருடன் தடையின்றிப் பழகும் சமூகத் திறன்கள் பழகுதல்; பின், கற்றல் திறன்களைப் பெறுதல் இதுதான் நோக்கம். இத்திறன்களை மாணவர்கள் பெறுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியின் பெரும் தோல்வி என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
பள்ளி முடிந்து 5.00 மணிக்கு மையங்களுக்குக் குழந்தைகள் சோர்வடைந்தும் பசியுடனும்தான் வருவார்கள். அவர்களுக்குச் சத்தான சிற்றுண்டி அளிப்பதுடன்தான் மையப் பணிகள் தொடங்க வேண்டும்.
கல்வியின் உடனடித் தேவைகளின் ஒரு பரிமாணம்தான் ‘இல்லம் தேடிக் கல்வி’. பள்ளிகளுக்கு உள்ளேயே நிலைத்த, நீடித்த மாற்றங்கள் நடைபெற வேண்டும். தரமான உள்கட்டமைப்பு, போதுமான, சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் சமமான கல்வி, மனிதம் போற்றும் கல்வி, குழந்தை நேய, சமத்துவக் கல்வி போன்ற பல மாற்றங்களைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மையங்கள் வெறுப்பை உமிழும் மதவாத சக்திகளின் ஊடுருவலுக்கு இரையாகாமல் தடுக்க வேண்டும். மையங்களில் அதன் முதல் அறிகுறி தென்படும்போதே இனங்கண்டு, வெட்டி எறிவதற்கான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எச்சரிக்கை மணியின் முதல் அபாய சங்கு மாநில அரசியல் தலைமையை உடனே எட்டும் சங்கிலிப் பிணைப்பு (information network) அமைக்கப்பட வேண்டும்.
நடுவண் அரசின் கல்விக் கொள்கைக்குத் திட்டம் வழிவகுத்துவிடுமோ என்ற அச்சமும் தேவையில்லை. அக்கொள்கை தமிழ்நாட்டுக்குள் வர விட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். ‘மாநில சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற அண்ணாவின் முழக்கம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இறுதியாக, ஒரு ஜனநாயக நாட்டில் அமைப்புக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அமைப்பைச் சுற்றியும் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்திகள் இயங்க வேண்டும். இன்று தமிழ்நாட்டின் அரசியல் தலைமையும் நிர்வாகத் தலைமையும் சக்கரத்தை முன் நோக்கித் தள்ளும் நெம்புகோல் அமைத்து அளிக்கும்போது, நகர மறுப்பது விவேகமல்ல. தோள் கொடுப்போம்; கவனமாகக் கண்காணிப்போம்; தவறு நேர்ந்தால் தட்டிக்கேட்போம்; ஜனநாயக அறம் காப்போம்.
- வே.வசந்தி தேவி, தலைவர், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம். தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago