உருவானார் தலைவர்: ஜெயலலிதா

By எம்.மணிகண்டன்

ஜெயலலிதாவின் ‘சின்னட கொம்பே’ வெளியாகியிருந்த நேரம். இயக்குநர் தர் ஜெயலலிதாவின் தாயாரைச் சந்தித்து, தனது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கூறினார். வழக்கறிஞர் ஆகும் கனவோடு இருந்த ஜெயலலிதாவுக்கு அதில் நாட்டமில்லை. அம்மாவின் விருப்பத்துக்காக சட்டப் படிப்புக் கனவை மறந்து கேமரா சட்டத்துக்குள் நின்றார். “என் வாழ்க்கையை நான் அமைத்துக்கொள்ள நினைத்த விதம் வேறு; அது அமைந்த விதம் வேறு” என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அதற்காக தன்னை நோக்கி வந்த களம் எதையும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில்லை. இறுதிவரை போராடினார்; போராடுகிறார்.

1948 பிப்ரவரி 24-ல் ஜெயராம் - வேதவல்லி தம்பதிக்கு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் பெங்களூர் சென்றது. வேதவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தபோது, அவர் சந்தியாவானார்.

ஜெயலலிதாவைப் புகழ்ந்த சிவாஜி

பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார் ஜெயலலிதா. பரதம், குச்சிபுடி, மணிப்புரி, கதக் எனப் பெரும்பாலான இந்திய நடனங்கள் ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. குடும்பம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, சென்னை சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். ஒருபுறம் படிப்பு, இன்னொருபுறம், பரதநாட்டிய அரங்கேற்றங்கள், நாடகங்கள். 1960-ல் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி அரங்கில் 12 வயது ஜெயலலிதா ஆடிய பரதநாட்டியத்தைப் பார்த்து வானளாவப் புகழ்ந்தார் சிவாஜி கணேசன்.

1961-ல் ‘சைல மகாத்மே’ படத்தில் பார்வதி வேடத்தில் நடித்ததுதான் ஜெயலலிதாவின் சினிமா அறிமுகம். அடுத்து ‘Epistle’ என்று ஒரு ஆங்கிலப் படம். 1964-ல் ‘சின்னட கொம்பே’ கன்னடப் படம். 1964-ல் மெட்ரிக் தேர்ச்சியடைந்த ஜெ.வுக்கு ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பியுசி படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால், 1965-ல் ‘வெண்ணிற ஆடை’யில் இயக்குநர் தர் அறிமுகப்படுத்தவும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர், ஜெயலலிதா படிப்புக்கு விடை தர வேண்டி இருந்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா சேர்ந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அதற்குப் பின் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக உருவானார் ஜெயலலிதா. 1964 - 1980 இடைப்பட்ட 16 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அவர் கோலோச்சினார்.

அதிமுகவின் பிரச்சார பீரங்கி

ஜெயலலிதாவின் கேரியர் கிராஃப் உச்சத்திலிருந்த 1972-ல் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். 1977-ல் அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போதே ஜெயலலிதா முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்’ ஜெயலலிதாவின் கடைசிப் படம். அந்தப் படத்தின் பெயரைப் போலத்தான் ஆனது ஜெயலலிதாவின் வாழ்க்கையும்; ஆமாம், ஜெயலலிதா எனும் நதி அதிமுக எனும் கடலை அடைந்தது.

அதிமுகவில் இணைந்த புதிதில் ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் ஜெயலலிதா ஆற்றிய கன்னி உரை எம்ஜிஆரைப் பெரிதும் கவர்ந்தது. 1983 ஜனவரியில் அவர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார். அப்போது, திருச்செந்தூர் மக்களவை இடைத்தேர்தல் வரவே, அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக ஜெயலலிதா களமிறக்கப்பட்டார். அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது.

சேவலும் புறாவும்

ஜெயலலிதாவின் ஆங்கில ஆற்றலை உணர்ந்தே அவரை 1984-ல் மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எம்ஜிஆர். முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட 185 எண் கொண்ட இருக்கை இன்னாள் முதல்வருக்கு அப்போது ஒதுக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மூலம் சசிகலாவுடனான நட்பு 1980-களின் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.

1987-ல் எம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தனது ஆதரவாளரும் பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியனின் காய் நகர்த்தல்களால் ஜானகி முதல்வரானார். ஆனால், அந்த ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டது. 1989 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவே, சேவல் சின்னத்தில் போட்டியிட்டது ஜெயலலிதா அணி. ஜானகி அணி புறா சின்னத்தில் போட்டியிட்டது.

மீட்கப்பட்ட சின்னம்

அதைத் தொடர்ந்து, 27 இடங்களுடன் உள்ளே நுழைந்தது அதிமுக ஜெயலலிதா அணி. தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. விரைவில் ஜானகி அரசியலுக்கு விடை கொடுக்கவும் இரண்டான அதிமுக ஒன்றானது. இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.

1989-ல் அமைந்த திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டது. ராஜீவ் படுகொலை பின்னணியில் நடந்த 1991 தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. சட்டப்பேரவையில் தொகுதிகளைப் பிடித்ததோடு தமிழகம் - புதுவையின் 40 தொகுதிகளையும் வென்றது. காங்கேயம், பர்கூரில் இரு தொகுதிகளிலும் வென்றார் ஜெயலலிதா. முதல்வர் நாற்காலியில் அவர் அமர்ந்தபோது வயது 43. ஆரம்ப காலத்தில் ‘அம்மு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அம்மா’ என்று அழைக்கப்படலானது இதன் பின்னர்தான்.

ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக் காலகட்டம் அதிருப்தியை உருவாக்கியது. விளைவு, 1996-ல் பெரும் தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார். திமுக அரசால் ஏராளமான ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. அதோடு ஜெயலலிதா ஒழிந்தார், அதிமுகவும் அழிந்தது என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. ஆனால், ஜெயலலிதா விடவில்லை. அடுத்து வந்த மக்களவைத் தேர்தலிலேயே மீண்டெழுந்தார். 2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது கருணாநிதியின் அத்தனை ராஜதந்திரங்களையும் தவிடு பொடியாக்கி, தமாகா, பாமக, இடதுசாரிகள், காங்கிரஸ் என வலுவான கூட்டணியை அமைத்த அவர், 197 இடங்களில் தன் கூட்டணியை வெற்றி பெற வைத்தார். இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வரானார்.

எனினும், 4 தொகுதிகளில் வேட்பு மனு செய்தது, டான்ஸி வழக்கு என அவர் மீதான வழக்குகளின் போக்கு எதிராக அமையவே, 2001 செப்டம்பரில் பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். விரைவில் அந்த வழக்குகளை எதிர்கொண்டு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 2006 தேர்தலில் மீண்டும் சரிந்தது அதிமுக.

மூன்றாவது பெரிய கட்சி

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட கூட்டணி அமைத்தார். திமுகவுக்குப் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமல் தோற்கடித்தார். மூன்றாவது முறை முதல்வரானார். 2014 மக்களவைத் தேர்தல் அதிமுக வரலாற்றில் உச்சம். எவர் கூட்டணியும் இல்லாமல், அதிமுக 37 இடங்களைக் கைப்பற்றியது, அதுவும் நாடு முழுக்க மோடி அலை அடித்த சூழலில். நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களவையில் அமர்ந்தது.

ஆனால், 2001-ல் நடந்த கதை 2014-ல் மீண்டும் நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பால், மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வரானார். மிக விரைவில் மேல் முறையீட்டில் தனக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கிய ஜெயலலிதா 2015-ல் ஐந்தாவது முறையாக முதல்வரானார்.

இதோ எல்லாக் கட்சிகளையும்போல அதிமுகவிலும் வேட்பாளர் நேர்காணல் தொடங்கிவிட்டது. ஐந்தாண்டு காலம் ஜெயலலிதாவுக்கு அடுத்த அதிகார மையமாக வலம் வந்த ஐவரணி இந்த நேர்காணலின்போது பக்கத்திலேயே இல்லை. ஏனைய கட்சிகளில்தான் இதெல்லாம் ஒரு விஷயம். அதிமுகவில் அவர் ஒருவர்தான் தலைவர். ஒரு நபர் ராணுவம். இந்த கட்சியின் பலமும் பலவீனமும் அதுவேதான்!

தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்