புரிதல் இன்றி வரம்பில்லாமல் நோயுயிர் முறி மருந்துகளைப் பயன்படுத்துவது பெரும் ஆபத்து
நோயுயிர்முறி (Anitbiotic) மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதும், முறையான புரிதல் இன்றி வரம்பில்லாமல் பயன்படுத்துவதும் ஆபத்துகளையே விளைவிக்கும். இதைப் பொதுமக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மத்திய சுகாதார - குடும்ப நலத் துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
சில மருந்துகளின் உறைகளின் மேல் சிவப்பு வரியால் கட்டம் கட்டி, அந்த மருந்து எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்று எழுத்திலேயே இனி விவரிக்கப்படும். இதை எதற்குப் பயன்படுத்த வேண்டும், எதற்குப் பயன்படுத்தக் கூடாது, மருத்துவர் ஆலோசனை அவசியம் என்ற குறிப்புகள்கூட சேர்க்கப்படலாம். சாதாரண சளி, காய்ச்சல், கண் எரிச்சல், கை - கால் குடைச்சல், முதுகு வலி, ஒவ்வாமை, இடைவிடாத இருமல், தலைவலி, பல் வலி போன்றவற்றுக்கெல்லாம் மருந்துக் கடைக்காரரிடமே, ‘எதையாவது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவது இந்தியாவில் அதிகமாகிக்கொண்டு வருகிறது.
வேலை, தொழில் போன்றவற்றுக்காக இடம் மாறுதல், சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை காரணமாக நோய்களின் எண்ணிக்கையும் தன்மையும் அதிகரித்துவருகின்றன. சிறு வியாதிக்குக்கூட உடனே அரசு மருத்துவரையோ அரசு மருத்துவமனையையோ நாட முடியாதபடிக்கு மருத்துவமனைகளின் இருப்பிடமும், புற நோயாளிகள் பிரிவு செயல்படும் நேரமும் இருக்கின்றன. இதனால், நோய் அறிகுறிகளைச் சொல்லி, கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடும் நிலை வளர்ந்திருக்கிறது.
2010-ல் இந்தியாவில் 1,300 கோடி யூனிட்டுகள் அளவுக்கு நோயுயிர்முறி மருந்து உட்கொள்ளப்பட்டிருப்பதாக, ‘தி லான்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்’ என்ற பத்திரிகை 2014-ல் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இது உலகிலேயே அதிகபட்ச அளவாகும். 2005 முதல் 2009 வரையிலான காலத்தில் இந்த நுகர்வு 40% அதிகரித்திருக்கிறது.
முரண்பாடுகளைக் கொண்டது
கட்டுப்படுத்தப்படாத இந்த மருந்து நுகர்வின் விளைவுகள் ஏற்கெனவே வெளிப்படத் தொடங்கிவிட்டன. 2008 முதல் 2013 வரையிலான காலத்தில் செஃபலோஸ்போரின்ஸ் என்ற மருந்தை எதிர்த்துத் தாக்குப்பிடிக்கும் திறனை இ.கோலி பாக்டீரியாக்கள் 70%-லிருந்து 83% ஆக வளர்த்துக்கொண்டுவிட்டன. இத்தனைக்கும் அது மூன்றாவது தலைமுறை மருந்து. கார்பாபெனம்ஸ் விஷயத்தில் இது 8%-13% ஆக உயர்ந்தது. ஃப்ளோரோகுவினிலோன் விஷயத்தில் 78%-லிருந்து 85% ஆகிவிட்டது. 2016 மார்ச் 3-ல் வெளியான ‘பிளாஸ்’ மெடிசின் அறிக்கை இதைத் தெரிவிக்கிறது.
‘செப்சிஸ்’ என்ற நோய்க்கிருமித் தொற்றால் மட்டும் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 57,000 இளம் சிசுக்கள் இறக்கின்றன. இந்தத் தொற்று, முதல்வரிசை நோயுயிர்முறி மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவை. 2012-ல் (ஒட்டுமொத்தமாக) பல்வேறு நோய்த் தொற்றுகளால் இறந்த சிசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,79,000.
இதில் சோகமான ஒரு முரண் என்னவென்றால் மருந்து எதிர்ப்புத் திறனைப் பெற்றுவிட்ட பாக்டீரியாவால் இறந்த குழந்தைகளைவிட நோய்த்தொற்றைத் தடுக்கக்கூடிய எந்த மருந்துமே தரப்படாததாலோ, அப்படித் தருவதற்குத் தாமதமானதாலோ இறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் இறக்கும் விஷயத்தில் இது வெளிப்படையாகத் தெரிந்தது.
2013-ல் நிமோனியா காய்ச்சலால் இந்தியாவில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1,70,000. வலுவான நோயுயிர்முறி மருந்துகளைக் கொடுத்திருந்தால், இதில் பெரும்பாலான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். நிமோனியா காய்ச்சலுக்கு நோயுயிர்முறி மருந்தை நம்பியிருப்பதைத் தவிர்க்க, தடுப்பூசி மருந்துகளைப் போடும்போது இதற்கும் சேர்த்து மருந்து கொடுத்துவிடலாம். இப்போது டிப்தீரியா, டெடனஸ், பெர்டுசிஸ் (டி.பி.டி.) என்ற தடுப்பூசி 72% குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.
எனவே, பிற வளரும் நாடுகளைப் போல இந்தியாவும் நோயுயிர்முறி மருந்துகளின் வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்வதுடன் அத்தகைய மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு, நோயாளிகள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருந்து நிறுவனங்கள் என்று எல்லாத் தரப்புமே அவரவர் பங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்திக்காக உட்கொள்ளும் மருந்துகளைச் சில நாட்களுக்குப் பிறகு சாப்பிடாமல் நிறுத்திவிடுவது, வேளை தவறி மருந்தைச் சாப்பிடுவது, தேவைக்கும் குறைவான அளவில் சாப்பிடுவது, சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றுக்குக்கூட எதையாவது வாங்கிச் சாப்பிடுவது போன்றவற்றால் நோயை எதிர்கொள்ளும் சக்தியைக் கணிசமாக இழந்துவிடுகிறார்கள்.
இதனால், அடுத்த முறை அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்போது முதலில் உட்கொண்டதைவிட வீரியமுள்ள மருந்தை உட்கொண்டால்தான் நோய் கட்டுக்குள் வரும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது அல்லது நோய் கட்டுப்படாமலேயே போய்விடுகிறது. இதற்கு நல்ல உதாரணம் காசநோய். காசநோய் ஏற்பட்டால் பல்வேறு கூட்டுப்பொருட்களைக் கொண்ட மருந்தை நீண்ட காலத்துக்கு உட்கொள்ள வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டுவிடுகிறது. இந்த மருந்துகள் சாதாரண மருந்துகளைவிடப் பல மடங்கு விலை உள்ளவை.
அரசு நடவடிக்கை தேவை
முறையாக சீல் செய்யப்படாமலும், மருந்தின் பெயர் என்னவென்று குறிப்பிடப்படாமலும், உற்பத்தியாளர் பெயர், உற்பத்தியான தேதி, மருந்து காலாவதியாகும் தேதி போன்ற எதுவுமே இல்லாமல் சில நோயுயிர் முறி மருந்துகள் நுகர்வுக்கு வருகின்றன. அரசு திடீர் ஆய்வுகள் மூலம் இவற்றைத் தடுக்க வேண்டும்.
நுண்ணிய நோய்க் கிருமிகளை எதிர்க்கும் மருந்துகள் காலாவதியானதும் அழிக்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். காற்றிலோ, நீரிலோ அப்படியே கலக்கும்படி விட்டுவிடக் கூடாது. கால்நடைகளுக்கு நோய் வந்தாலோ, நோய் வராமல் இருக்கவோ தரும் நோயுயிர்முறி மருந்துகளைக் கையாள்வதிலும் எச்சரிக்கை தேவை. இவை புகட்டப்பட்ட கால்நடைகளின் பால் அல்லது இறைச்சி ஆகியவற்றை மனிதர்கள் உண்ணும்போது இந்த மருந்துகளும் அவர்களுடைய உடலில் சேரும். இதனால் அவர்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். அவர்களுக்கு நோய் ஏற்பட்டால் வழக்கத்தைவிட அதிக வீரியமுள்ள நோயுயிர்முறி மருந்து தேவைப்படும்.
2013-ல் நடத்திய ஓர் ஆய்வில், நோய்த் தடுப்பு மருந்தைச் செயலற்றதாக்கும் நோய்க் கிருமிகளின் வளர்ச்சி குறித்து இந்திய மருத்துவர்களுக்கு நல்ல புரிந்துணர்வு இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், அதைக் கையாள்வதில் அவர்கள் குறைந்த முக்கியத்துவமே தருகிறார்கள் என்ற உண்மையும் சேர்ந்தே வெளிப்பட்டது.
நோய்க்கிருமி இருப்பதை அறிவதற்குப் போதிய வசதிகள் இல்லாததும், நோயுயிர் முறி மருந்துகளை எப்படி வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுக் குறிப்புகள் தரப்படாததும், நோய் உடனே தீர வேண்டும் என்று நோயாளிகள் வற்புறுத்துவதும் சேர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டில் வெளிப்படுகிறது. 2014-ல், ‘எச்-1’ என்று பல மருந்துகளை வகைப்படுத்தி, உரிய பரிந்துரை இல்லாமல் விற்கக் கூடாது என்று கட்டாயப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
அதே சமயம், பொதுவாகப் பயன்படும் நோயுயிர் முறி மருந்துகளுக்குக்கூட மருத்துவர்களின் பரிந்துரை அவசியம் என்று கட்டாயப்படுத்துவதால் மருத்துவர்களை அணுக முடியாத பெரும்பாலான கிராமவாசிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் போய்விடவும் வாய்ப்புகள் அதிகம்.
தமிழில்: சாரி,
© ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago