விருதுநகர். வெயில் இந்த ஊரில்தான் இப்படி அடிக்கிறதா அல்லது இந்த ஊரில்தான் இப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. காலையிலேயே சுள்ளென்று விழுந்தது. ஊரில் அன்றைக்கு முழுவதும் சுற்றித் திரிந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. யார் தலையிலும் துண்டு இல்லை, முக்காடு இல்லை, கையில் குடையில்லை; விருதுநகர்க்காரர்கள் நாளெல்லாம் வெயிலில் நனைந்துகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வாகும் சேர்ந்துத்தான் காமராஜரின் அலுக்காத உழைப்பில் வெளிப்பட்டிருக்குமோ என்று தோன்றியது.
சுலோச்சனா தெரு முக்கில் வண்டியை நிறுத்தினார் ஆட்டோக்காரர். “இதுல நேரே போனா அப்பச்சி வீடு, நடந்துருவோம்” என்று சொல்லிவிட்டு அவரே துணைக்குக் கூட வந்தார். குறுகலான தெரு. சின்னச் சின்ன கடைகள். நான்கு பேர் சேர்ந்தாற்போல் உட்கார முடியாத இடங்கள் வணிகத்தளங்களாக இருந்தன. பரபரவென்று வேலையில் இருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக் கடை. கடையைக் காட்டிலும், கடைக்கு வெளியே இருந்த உணவு வகைகளின் பட்டியலின் நீளம் அதிகமாகத் தோன்றியது. நடக்க ஆரம்பித்தோம்.
காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பின் அரை நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. அவருக்கு முன்பும் சரி, அவருக்குப் பின்னும் சரி; ஆட்சியில் இருந்த முதல்வர்கள் எவருமே சாமானியமானவர்கள் அல்ல. சாதுர்யர்கள், ராஜதந்திரிகள் என்று பெயரெடுத்தவர்கள். தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட முதல்வரும் அல்ல அவர். வெறும் 9 வருஷங்கள்தான் ஆட்சியில் இருந்தார். 1954 முதல் 1963 வரை. எது இன்னமும் மீண்டும் மீண்டும் காமராஜர் பெயரை உச்சரிக்க வைக்கிறது?
நாலு எட்டு நடையில் காமராஜர் வீடு வந்துவிட்டது. வாசலில் சின்ன கோயில். “கும்பிட்டுங்கண்ணே” என்றார் ஆட்டோக்காரர். ஒரு கும்பிடு போட்டுவிட்டு உள்ளே நுழைந்தோம். கோயிலைவிடவும் அதிகமான அதிர்வலைகளை அந்த வீட்டினுள் உணர முடிந்தது. “அப்பச்சி பொறந்த வூடு இது இல்ல. அது ரெண்டு மூணு தெரு தள்ளிக் கெடக்கு. இப்பம் யாருக்கோ சொந்தமான வூடு. இது அப்பச்சியோட பாட்டன் காலத்து வூடு. ஆனா, அவரு வளந்தது போனது வந்தது பூராம் இங்கனதாம். அப்பச்சியோட அம்மா இங்கதான் இருந்தாங்க, கடைசி காலம் வரைக்கும்” என்றார் ஆட்டோக்காரர்.
வீட்டின் நடுவில் காமராஜரின் மார்பளவு சிலையை வைத்திருக்கிறார்கள். ஏனைய எல்லா அறைகளிலும் அவருடைய புகைப்படங்கள், அவர் அணிந்த உடைகள், உபயோகப்படுத்திய பொருட்கள், படுக்கை ஆகியவை இருந்தன. ஒரு இடத்தில் அவரது ஆரம்பக் கால வரவு செலவு நோட்டுப் புத்தகம் ஒன்றின் சில பக்கங்களைப் பிரதியெடுத்துப் படமாக மாட்டியிருந்தார்கள். 26.9.1923 அன்று எழுதப்பட்ட ஒரு கணக்கைப் படித்துப் பார்த்தேன். சாத்தூர் தாலுகா மாநாட்டுக்காக வாங்கிய நன்கொடைகளை எழுதியிருந்தார் காமராஜர். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், நான்கு ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாய்க்குமான கணக்குகள் இருந்தன.
காமராஜரின் படங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தபோது, ஐந்து படங்கள் விசேஷமாகத் தோன்றின. அவற்றில் முதல் மூன்று படங்கள் காமராஜர் முதல்வராக, தன் ச் சகாக்களுடன் வீற்றிருக்கும் படங்கள். காமராஜரின் அமைச்சரவைகளுமே அவரது ஆட்சியைப் பற்றிப் பல விசேஷங்களைச் சொல்லக் கூடியது. காமராஜரின் மூன்று அமைச்சரவையுமே ஒற்றை இலக்கத்திற்குள் அமைந்தவைதான். இன்றைக்கெல்லாம் ‘சிறிய அமைச்சரவை; நிறைவான நிர்வாகம்’ என்பதைத் தேர்தல் முழக்கமாகச் சொல்லி ஆட்சிக்கு வருபவர்கள் ஒரு வண்டி ஆட்களை அமைச்சரவையில் வைத்திருப்பதைப் பார்க்கிறோம். காமராஜர் அப்படியெல்லாம் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. மனிதர் காரிய சித்தர். சாதித்திருக்கிறார்.
தனக்கு முன்பு ஆட்சியிலிருந்த ராஜாஜியின் அமைச்சரவையில் சரிபாதிக்கும் குறைவான அளவிலேயே தன் அமைச்சரவையை அமைத்தார் காமராஜர். அன்றைக்கு ராஜாஜிக்கும் காமராஜருக்கும் இடையே கட்சிக்குள் நடந்த போர் பகிரங்கமானது. ‘குலக்கல்வித் திட்டம்’ உருவாக்கிய எதிர்ப்பு, முதல்வர் பதவியைவிட்டு இறங்க வேண்டிய நிர்பந்தத்தைக் கட்சிக்குள் ராஜாஜிக்கு உருவாக்கியது. ராஜாஜி பதவியை விட்டு விலகினாலும், அதிகாரத்தின் மீதான தன் பிடியை விடத் தயாராக இல்லை. அடுத்த முதல்வருக்கான போட்டியில் காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்தினார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வரான காமராஜர், அவருடைய ஆதரவாளர்கள் என்று ஒரு புதிய படையை உள்ளே கொண்டுவருவார் என்பதே அன்றைக்குப் பலரும் எதிர்பார்த்தது. யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள். காமராஜர் அதைச் செய்யவில்லை.
வெறும் எட்டுப் பேரை மட்டுமே கொண்டதாக அவர் திட்டமிட்ட அமைச்சரவையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ராஜாஜி முகாமைச் சேர்ந்தவர்கள். எந்த சுப்பிரமணியம் தன்னை எதிர்த்து முதல்வர் பதவிக்கு ராஜாஜியால் நிறுத்தப்பட்டாரோ அந்த சுப்பிரமணியத்துக்கு அமைச்சரவையில் அதே இடத்தைக் கொடுத்தார் காமராஜர். எந்த பக்தவத்சலம் சுப்பிரமணியம் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தாரோ அந்த பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். புதிதாகத் தன்னுடைய அமைச்சரவைக்கு காமராஜர் தேர்ந்தெடுத்தவர்களிலும் விசேஷம் இருந்தது. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, அன்றைக்குப் பிற்படுத்த சமூகத்தினருக்காகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர். அவருடைய உழைப்பாளர் கட்சி அப்போது எதிர்க்கட்சி. அவரை காங்கிரஸுக்குள் கொண்டுவந்து அமைச்சராக்கினார். இன்னொருவர் பி.பரமேஸ்வரன். காங்கிரஸில் அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனுக்குத் தன் அமைச்சரவையில் காமராஜர் ஒதுக்கிய துறை, அவருடைய தொலைநோக்குப் பார்வைக்கும் உண்மையான கரிசனத்துக்கும் என்றைக்கும் உதாரணம். இந்து அறநிலையத் துறையை பரமேஸ்வரனுக்கு ஒதுக்கினார் காமராஜர். எந்தச் சமூகம் உள்ளே நுழைந்தால் தீட்டு என்று கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததோ, அதே சமூகத்தைச் சேர்ந்தவரைப் பூரண கும்ப மரியாதையுடன் கோயிலுக்குள் உள்ளே அழைக்கும் சூழலை உருவாக்கினார்.
கட்சிக்குள்ளும் இதே புரட்சியை காமராஜர் செய்தார். முதல்வர் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய காமராஜரால், அந்த இடத்துக்குக் கொண்டுவரப்பட்டவர் இன்றைக்கும் நேர்மைக்கும் எளிமைக்குமான உதாரணராகப் போற்றப்படும் கக்கன், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய அடுத்தடுத்த அமைச்சரவைகளிலும் கக்கனுக்கு முக்கியமான இடத்தை காமராஜர் அளித்தார். உள்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் அவரை அமரவைத்தார். இதேபோல, தன் அடுத்தடுத்த அமைச்சரவைகளுக்கு அவர் கொண்டுவந்தவர்களில் குறிப்பிட வேண்டிய இன்னொருவர் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த லூர்து அம்மாள் சைமன். தமிழகத்தில் கடலோடிகள் சமூகத்தை நோக்கி அக்கறையோடு கொண்டுசெல்லப்பட்ட சொற்பத் திட்டங்களில் பெரும்பாலானவை இவர் காலத்தில் நடந்தவை.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தில் அமர்ந்தால்தான், அவர்களுக்கு நியாயமான சமூகநீதி கிடைக்கும் என்பதில் மட்டுமல்ல; கல்வியின் துணையின்றி சமூகநீதியை அடைய முடியாது என்பதிலும் தீர்க்கமான உறுதி காமராஜரிடம் இருந்திருக்கிறது. காமராஜர் ஆட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு முன் 7% ஆக இருந்த பள்ளி செல்வோர் எண்ணிக்கை காமராஜர் ஆட்சிக் காலத்தில் 37% ஆக உயர்ந்ததாகச் சொன்னார் பெரியார். “படிப்பைக் கொடுத்தே சாதியை ஒழிப்பேன் என்கிறார் காமராஜ். இதிலென்ன ஓட்டை? காமராஜரை ஒழிப்பேன் என்று கூறுபவர்களால் சாதியை ஒழிக்க முடியுமா?” என்று கேட்டார் பெரியார். இன்றைக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக-பொருளாதாரரீதியாக அழுத்தப்பட்டவர்கள் கல்வியின் துணையோடு மேலெழும்பிவர முக்கியமான உத்வேக சக்தியாக இருப்பது காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம். கிராமங்களிலும் சேரிகளிலும் ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்த, சில்லறை வேலைகள் பார்த்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களை நோக்கி நகர்த்திய புரட்சித் திட்டம் அது.
கல்வியில் மட்டும் அல்ல; பொருளாதாரத்திலும் உள்கட்டமைப்பிலும் தமிழகம் இன்றைக்கு அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பலவற்றுக்கும் அடிக்கல் நாட்டியவர் காமராஜர். மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவிரிப் படுகை வடிகால் விரிவாக்கத் திட்டம், கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், விளாத்துறை திட்டம், புள்ளம்பாடி திட்டம், வீடுர் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் இவை யாவும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை. சென்னை கிண்டி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, விருதுநகர் தொழிற்பேட்டை, மதுரை தொழிற்பேட்டை, திருநெல்வேலி தொழிற்பேட்டை, திருச்சி தொழில்பேட்டை யாவும் அவர் காலத்தில் திட்டமிடப்பட்டவை. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, மணலி சிபிசிஎல், ஆவடி ஆயுதத் தொழிற்சாலை, திருச்சி பெல் நிறுவனம், நெய்வேலி அனல் மின் நிலையம் யாவும் அவர் காலத்தில் தொடங்கப்பட்டவை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணியில் இருந்தது தமிழகம். அதனால்தான் “இன்றைய காமராஜர் ஆட்சியில், நமது நாடு அடைந்துவரும் முன்னேற்றம் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்திராதது” என்று சொல்லி ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு காமராஜருக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பெரியார்.
காமராஜர் படிக்காதவர் என்று பலர் பேசுவது உண்டு. ஆனால், மிகச் சிறந்த வாசகர். காலையில் எழுந்ததுமே எல்லா தினசரிகளையும் வாசித்துவிடும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. ஆச்சரியமான இன்னொரு விஷயம், சிறு பத்திரிகைகள் மீது இருந்த ஈடுபாடு. நாடாளுமன்றத்தில் அவர் பேசியதை ஒருமுறை “மாசில்லாத ஆங்கிலத்தில் உரையாற்றினார் காமராஜர்” என்று ‘தி இந்து’ விவரித்திருக்கிறது. காமராஜர் படித்த பல புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் எதிலும் ஆடம்பரத்துக்கு இடமில்லை.
வெவ்வேறு சட்டங்களில் அடைக்கப்பட்டிருந்த இரு படங்கள் ஒரு தலைவனுக்கான இலக்கணத்தைக் கூறின. இந்திய பிரதமரும் அன்றைய காங்கிரஸின் ஈடில்லா தலைவருமாக இருந்த நேருவுடன் காமராஜர் உரையாடும் ஒரு புகைப்படம். தன்னுடைய பால்ய கால சிநேகிதன் ஒருவருடன் வீட்டு அறையில் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருப்பதுபோல பொதுநிகழ்வு ஒன்றில் நேருவுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் காமராஜர். நேருவின் சாய்மானத் தலையணையில் ஒருபுறம் நேரு சாய்ந்திருக்க மறுபுறம் காமராஜர் சாய்ந்திருக்கிறார். இருவரும் தீவிரமான ஏதோ ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இன்னொரு படம், எங்கோ ஒரு கூட்டத்தில், மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்திருக்கிறார் காமராஜர். ஒரு தலைவன் அதிகாரத்தில் தனக்கு மேல் இருக்கும் தலைவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், தன்னைச் சார்ந்திருக்கும் மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தன அந்தப் படங்கள்.
அன்றையப் பொழுது நிறைய உணர்ச்சிவசப்படுத்தியது. ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் இங்கு வந்து செல்வார்கள் என்று நினைவில்லக் காப்பாளரிடம் கேட்டேன். “அம்பது பேர் வரைக்கும் வந்து போவாங்க சார்” என்றார் இழுத்தபடி. “எனக்கு ஏன் சொத்து? காங்கிரஸ் என் சொத்துதான். மக்கள் என் சொத்துதான்” என்று பேசிய தலைவர். இன்றைக்கு அவருக்கும் நம் தலைமுறைகளுக்குமான உறவு எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. “அப்பச்சி பொறந்த நாள் அன்னிக்கு பல பக்கிட்டிருந்தும் வருவாங்க. இன்னைக்கும் அவரை மனசில வெச்சிருக்கவங்க. அவங்கங்க வசதிக்குத் தக்கன நூறு, எறநூறு, ஆயிரம்னு நோட்டுப் புஸ்தகங்களை வாங்கியாந்து அப்பச்சி சிலைக்கு முன்னாடிக் கொண்டாந்து வெச்சிப் படைச்சிட்டு, பிரசாதம்போல வசதியில்லாப் புள்ளைங்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பாங்க” என்று சொன்னார் ஆட்டோக்காரர். “அப்பச்சியோட சிலைக்கு, ஒரு சக்தி இருக்கு. சாமி சிலை மாதிரி. அப்பச்சியும் சாமிதான்” என்றவர் காதருகே நெருங்கி வந்து சொன்னார், “நேர்மையில்லாத ஆளுக இங்க வந்து போனா, இருக்கிற பதவியும் போயிடும். வர வேண்டிய பதவியும் போயிடும். அதனாலேயே அதிகாரத்தில் இருக்கிற பல பேரு இங்க வர்றதில்லை..” சிரித்தார்.
அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்படியே அந்தச் சிலையை கொண்டுவந்து தமிழ்நாட்டின் சட்டசபையின் மத்தியில் வைக்கலாம் என்றும் தோன்றியது.
(குரல் ஒலிக்கும்..)
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
5 days ago