அக்டோபர் 1 சீனாவின் தேசிய தினம். அக்டோபர் 10 தைவானின் தேசிய தினம். அகன்று விரிந்து கிடக்கும் நாடு சீனா. அருகில் ஒரு சிறிய இலையைப் போல் மிதக்கும் தீவு தைவான். இரண்டுக்கும் இடையே ஒரு நீரிணை. அதன் அகலம் 130 கிமீ. ஆனால், அங்கே அரசியல் அலைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. எனில், அக்டோபர் முதல் வாரத்தில் இந்த அலைகள் முன்னெப்போதைக் காட்டிலும் மேலுயர்ந்தன. காரணம், தைவானின் வான் பாதுகாப்பு வெளியின் மீது சீனாவின் 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பறந்தன. பதற்றம் பற்றிக்கொண்டது.
‘தைவான் சீனாவின் ஒரு பகுதி, அது இடையில் பிரிந்தது, மீண்டும் இணைத்துக்கொள்வோம்’ என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. அக்டோபர் 1 அன்று உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங் அதை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால், தைவானின் பெருவாரியான மக்கள் அதை விரும்பவில்லை என்றார் தைவான் அதிபர் சாய் இங் வென். அக்டோபர் 10 அன்று உரையாற்றிய அவர், சீனாவின் அழுத்தத்துக்குப் பணிய மாட்டோம் என்றார்.
வரலாற்றில் மிதக்கும் தீவு
இந்த உரசலின் வரலாறு நீண்டது. 16-ம் நூற்றாண்டில் தைவான் சுயேச்சையாக இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் சிங் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது தைவான். இது 17-ம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. முதலாவது, சீன-ஜப்பான் யுத்தத்தில் சீனா தோல்வியுற்றது; சீனாவின் சிங் அரசாங்கம், தைவானை ஜப்பானுக்குத் தாரைவார்த்தது. தைவான், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறியது.
1912-ல் சீனாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கோமிங்டாங் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசுக்கு சீனக் குடியரசு (ROC) என்று பெயர். அப்போதும் தைவான் ஜப்பானிய காலனியாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் சீனா, நேச நாடுகளின் (அமெரிக்கா-பிரிட்டன்-ரஷ்யா) கூட்டணியில் இருந்தது. ஜப்பான், அச்சு நாடுகளின் (ஜெர்மனி-இத்தாலி) கூட்டணியில் இருந்தது. நேச நாடுகள் வென்றன. 1945-ல் ஜப்பான் சரணடைந்தது. சீனக் குடியரசின் ஆட்சி தைவானுக்கும் நீண்டது.
எதிரிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் கோமிங்டாங் கட்சியும் 1937 முதல் இணைந்து, பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தன. ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, செம்படை தனது துப்பாக்கிகளை கோமிங்டாங் படைக்கு எதிராகத் திருப்பியது. உள்நாட்டு யுத்தம் உக்கிரமானது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது, மக்கள் சீனக் குடியரசை (PRO) நிறுவியது. கோமிங்டாங் கட்சியினரும் அதன் தலைவர் சியாங் கை ஷேக்கும் தைவானுக்குத் தப்பியோடினார்கள். சீனாவின் பொன்னையும் பொருளையும் கொண்டுபோனார்கள். தைவானில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இந்த ஆட்சி சில மாதங்களே தாக்குப்பிடிக்கும் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், கொரிய யுத்தம் கணக்குகளை மாற்றிப் போட்டது.
கொரிய யுத்தத்தில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் முறையே வட, தென்கொரியாக்களை ஆதரித்தன. சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், 1950-ல் பிலிப்பைன்ஸுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள தைவானில் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை நிறுவியது. கிழக்காசியச் சமன்பாடுகள் மாறிப்போயின.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் 1945-ல் அமைக்கப்பட்ட ஐநாவில், வீட்டோ அதிகாரமுள்ள பாதுகாப்பு கவுன்சில் இடங்களை நேச நாடுகள் பங்குபோட்டுக்கொண்டன. அப்போது சீனாவை ஆண்டுவந்த கோமிங்டாங் அரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால், உள்நாட்டு யுத்தத்தில் தோற்று, அது தைவான் அரசாகச் சுருங்கிப்போனபோதும் அந்த இடத்தை கோமிங்டாங்கே அனுபவித்து வந்தது. இதற்கு மேற்கு நாடுகளின் சம்மதமும் இருந்தது. இந்த இடம் அகண்ட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு வழங்கப்படுவதுதான் நியாயமாக இருக்கும் என்று குரல் கொடுத்த நாடுகளில் ஒன்று இந்தியா. 1971-ல்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஐநாவின் நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டது. தைவான் (ROC) வகித்து வந்த பாதுகாப்பு கவுன்சில் இடம் சீனாவுக்கு (PRC) கைமாறியது. சீனா என்கிற பெயர் பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு மட்டுமே உரித்தானது. தைவானை அங்கீகரிக்கும் எந்த நாட்டுடனும் சீனா ராஜீய உறவு வைத்துக்கொள்வதில்லை. இதனால் அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் தைவானோடு ராஜீய உறவுகள் இல்லை. எனினும், பல நாடுகளும் தைவானோடு ‘அலுவல் சாராத’ உறவைப் பேணுகின்றன. இந்திய அரசின் ‘இந்திய-தைபை சங்கம்’ தைவானின் தலைநகர் தைபையில் இயங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளிலும் உலக சுகாதாரம்/ வணிகம் போன்ற அமைப்புகளிலும் தைவான் ‘சீனத் தைபை’ என்கிற பெயரில் பங்கெடுக்கிறது.
தைவான் அற்புதம்
மேலும், 1950 முதற்கொண்டு ராணுவ உதவிகளை மட்டுமல்ல பொருளாதார உதவிகளையும் தைவானுக்கு அமெரிக்கா வாரிவழங்கியது. உதவிகளைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட தைவான், உள்கட்டமைப்பு, தொழில், வேளாண்மை என்று எல்லாத் துறைகளிலும் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது. 2.3 கோடி மக்கள்தொகையே உள்ளபோதும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருக்கிறது தைவான்.
1965-க்கும் 1985-க்கும் இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் தைவானின் பொருளாதாரம் 360% உயர்ந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்த அற்புதம் ராணுவ ஆட்சியில்தான் நடந்தது என்பது ஒரு வினோதம். 1949 முதல் 1987 வரை தைவானில் கோமிங்டாங்கின் ராணுவம்தான் கோலோச்சியது. 1980-ல் ஜனநாயக ஒளிக்கதிர் பரவத் தொடங்கியது. 1987 முதல், முறையான தேர்தல்கள் நடந்துவருகின்றன. இப்போது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கோமிங்டாங் எதிர்க் கட்சி.
ஒற்றை சீனா
தைவான், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட ‘ஒற்றைச் சீனா’வைக் கட்டுவதுதான் சீன அரசின் லட்சியம். ஹாங்காங்கைப் போல தைவானையும் ஒரு ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக மாற்றுவோம் என்று சொல்லிவருகிறது சீனா. ஹாங்காங் ஆட்சிக்கு ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ என்று பெயர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயாட்சி மிக்க மாநிலம் என்பது பொருள். அரசமைப்புச் சட்டம் தனியானது. நாணயம் வேறானது. சட்டமன்றம் இருக்கும். தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாதிரியைத்தான் தைவானுக்கு முன்மொழிகிறது சீனா. ஹாங்காங்கில் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வாதம். கோமிங்டாங் கட்சி, இயன்ற வரை சீனாவுக்கு இணக்கமாகப் போக விரும்புகிறது. ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறது.
எனில், இந்தத் தர்க்கங்கள் எதுவும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான வணிக உறவுகளுக்குத் தடையாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பரஸ்பர வணிகமும் முதலீடுகளும் அதிகரித்துவருகின்றன. 2019-ல் தைவான்-சீனா வணிக உறவின் மதிப்பு ரூ.11 லட்சம் கோடி (ஒரு ஒப்பீட்டுக்கு, இதே கால கட்டத்தில் இந்திய-சீன வணிக உறவு ரூ 6.5லட்சம் கோடி).
வணிக உறவு செழித்தாலும் பெரும்பான்மை தைவானியர்கள் சீனக் குடையின் கீழ் ஒதுங்க விரும்பவில்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். என்றாவது தைவானை சீனாவுடன் ஒன்றிணைத்தே தீருவோம், அதைச் சமாதான வழியில்தான் செய்வோம் என்கிறது சீனா. ஆனால் சீனா, ராணுவ மார்க்கத்தை நாடும் என்று கருதுகிறது தைவான். இடையிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தைவான் நீரிணையில் மிதக்கின்றன. ‘தைவானைக் கேடயமாகப் பயன்படுத்தி சீனாவை எதிர்கொள்ள முயல்கிறது அமெரிக்கா’ என்று குற்றம்சாட்டுகிறது சீனா. இதற்கிடையில்தான் சீனப் போர் விமானங்கள் தைவான் ஆகாயத்தில் பறந்தன. நீரிணையில் அரசியல் அலைகள் உயர்வதும் தாழ்வதும் மாறிமாறி நிகழ்கின்றன.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago