அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி!

By சு.மூர்த்தி

கல்வித் துறை அரசாணை எண் 250 நாள் 29.02.64-ன்படி, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளிலிருந்தே 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்கள். 20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பு என்ற நிலை அப்போது இருந்தது. 33 ஆண்டுகளாக இருந்த நடைமுறை அரசாணை எண் 525 பள்ளிக் கல்வித் துறை நாள் 27.12.1997-ன்படி 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்று மாற்றப்பட்டது.

புதிய அரசாணையின்படி, 1997-க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனக் குறைப்பு நடந்தது. இதனால், ஒரே ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டது. தொடக்கக் கல்வி பயிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அடிப்படைத் திறன்களில் கற்றல் அடைவுகள் குறையத் தொடங்கின. கற்றலில் பின்தங்கிய குழந்தைகள் பலர் இடைநிற்றலுக்கும் ஆளானார்கள். ஓரளவு வசதி படைத்தவர்களும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கத் தொடங்கினார்கள். அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை குறையவும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆசிரியர் நியமனக் குறைப்பு மூலம் வழிசெய்யப்பட்டது.

கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்பதெல்லாம் அரசுப் பள்ளிகளுக்குப் பொருந்தாத விதிகளாக இருப்பதால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் 2012-லிருந்து அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் வளர ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆங்கில வழிப் பிரிவுகளுக்கு இன்று வரை கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. எனவே, ஆங்கில வழிப் பிரிவுகள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் வளர வழி ஏற்படவில்லை. தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். 10, 1, 2 வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர் நியமிக்கப்படாததன் விளைவுதான் இன்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட இளநிலைத் தொழில் முறை பட்டப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் சமவாய்ப்பு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது.

தொடக்கக் கல்வி நிலையில், குழந்தைகளுக்கு முழுமையான கற்றல் வாய்ப்புகள் அவசியமானது. போதுமான ஆசிரியர் இருந்தால் மட்டுமே குழந்தைகள் எதிர்பார்க்கும் கற்றல் அடைவுகளைப் பெற முடியும். முழுமையான கற்றல் அடைவுகளைப் பெற முடியாத குழந்தைகளே பெரும்பாலும் இடைநிற்றலுக்கும் ஆளாகிறார்கள். கல்வியைத் தொடரும் குழந்தைகளும் பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வியில் பின்தங்கிய நிலைக்கு ஆளாகிறார்கள். எனவே, தொடக்கக் கல்வி நிலையில் முழுமையான கற்றல் வாய்ப்புகளைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டம்-2009-ல் வலியுறுத்தப்பட்ட முதன்மை இலக்கே இதுதான்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பாதிப்பு காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கிச் சில குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்கவும் கற்றல் இழப்புகளை ஈடுசெய்யவும் தன்னார்வலர்கள் மூலம் குழந்தைகளின் இருப்பிடங்களில் மாலை நேரத்தில் கல்வியளிக்க கல்வித் துறை முயற்சி எடுத்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு வேலை. அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் முழுமையான கல்வியைப் பெறச் செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளில் தேவைக்கு அதிகமாகத் தனியார் ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதிக அளவில் பணத்தைச் செலவுசெய்து, ஆசிரியர் கல்விப் படிப்பை முடித்துவிட்டுத் தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் வேலைக்கு வழியின்றி உள்ளனர். மற்றொரு புறம் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் மற்றும் கூடுதல் கலைத்திட்டச் செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களை நியமனம் செய்வது மட்டுமே இரண்டு சிக்கல்களுக்குமான தீர்வாக அமையும்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக அரசு அமைய தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் திமுக அரசு பூர்த்திசெய்ய வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வியை உறுதிசெய்ய மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஆசிரியர்களை நியமிப்பது அவற்றுள் முக்கியமான நடவடிக்கை ஆகும்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. தொடர்புக்கு: kmktamilnadu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்