கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய 18 வயதில் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து சென்று, தாய்நாட்டின் அரசியல் சூழல் காரணமாக அங்கு மீண்டும் திரும்ப முடியாமல், படிக்க வந்த நாட்டிலே அகதியாகத் தஞ்சமடைந்த ஒரு இளைஞன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றது வாழ்க்கைப் பயணம் குறித்து வியப்பை ஏற்படுத்துகிறது.
2021-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கறுப்பின ஆப்பிரிக்கப் பின்புலம் கொண்ட அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தேர்வில் கறுப்பின எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கறுப்பின ஆப்பிரிக்க எழுத்தாளர் என்பதற்காக மட்டுமல்ல, முஸ்லிம் பின்புலம் கொண்ட எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலும் – உலக அளவில் இஸ்லாமிய வெறுப்பு தீவிரம் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், அவருக்கான விருது கூடுதல் கவனம் பெறுகிறது. எகிப்து எழுத்தாளர் நஜீப் மஹ்ஃபூஸ், துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் ஆகிய இருவரும் இதற்கு முன்பு முஸ்லிம் பின்புலத்திலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள். தற்போது, மூன்றாவது நபராக குர்னாவும் அந்தப் பட்டியலில் இணைகிறார்.
1948-ல் தான்சானியாவில் உள்ள சான்சிபார் தீவில் பிறந்த குர்னா, 1967 வாக்கில் குடும்பத்தைப் பிரிந்து பிரிட்டனுக்குச் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில், சான்சிபாரில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் அங்கு உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. இதனால், சொந்த நாடு திரும்ப முடியாமல் பிரிட்டனிலே அகதியாகத் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த குர்னா, சமீபத்தில் ஓய்வுபெறும் வரையில் அங்கு பேராசிரியராகப் பணியாற்றினார். சிறிய வயதிலேயே வீட்டைப் பிரிந்து வேறொரு உலகில் தன்னந்தனியராகத் தனக்கான பாதையைக் கண்டடைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானதே தன்னுடைய எழுத்துகளுக்கு ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். 72 வயதாகும் குர்னா, தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை பிரிட்டனில் கழித்தாலும், அவர் தன்னை இன்னும் ஒரு அகதியாகவே உணர்கிறார். அந்த உணர்வே அவருடைய படைப்புகளைக் கட்டமைக்கிறது. அவருடைய எழுத்துகள் அகதிகளின் வாழ்க்கையையும், அவர்களின் உள்ளார்ந்த துயரத்தையும் தனிமையையும் பேசுபவை. அவருடைய நாவல்களை வாசிக்கையில் அவை தனித்தனியான கதைகள் என்பதாக இல்லாமல், காலனியம், அதன் விளைவுகள் மற்றும் அகதிகளின் வாழ்வு ஆகியவற்றின் ஒருபிடி உலகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவித துயரார்ந்த அமைதி அவற்றில் வெளிப்படுகிறது.
குர்னா இதுவரையில் 10 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய முதல் நாவல் ‘மெமரி ஆஃப் டிபார்ச்சர்’ 1987-ம் ஆண்டு வெளிவந்தது. 1994-ம் ஆண்டு வெளிவந்த நாவலான ‘பாரடைஸ்’, புக்கர் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. அது குர்னா மீது உலகளாவிய கவனம் ஏற்பட வழி செய்தது. 2005-ம் ஆண்டு வெளியான ‘டிஸெர்ஷன்’ (Desertion) நாவலைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆண்டு 1899. அடையாளம் தெரியாத ஒரு நபர், அடிபட்டு கந்தல் கோலத்தில், சாகும் தறுவாயில் கென்யாவில் தெற்குப் பகுதிக் கிராமத்தை அடைகிறார். அந்த நபரைத் தன்னுடைய வீட்டுக்குத் தூக்கிச்சென்று சிகிச்சை அளிக்கிறார், அக்கிராமத்தில் கடைவைத்திருக்கும் ஹசனலி. இந்த நிகழ்வு அதிகாலை சுபுஹூ தொழுகைக்கான நேரத்தில் நிகழ்கிறது. தொழுகைக்கான அதிகாலை வேளையை விவரிப்பதன் வழியே அக்கிராமத்தின் ஆன்மாவை நம்முள் கடத்திவிடுகிறார் குர்னா.
கிழக்கு ஆப்பிரிக்க மண்ணை ஆளும் பிரிட்டிஷாரின் தொடர்பு வட்டத்தில் உள்ள மார்டின் பியர்ஸ்தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நபர். ஹசனலி தனது மனைவியுடனும், திருமணமாகாத சகோதரியுடனும் ஒரு வீட்டில் வசிக்கிறார். வெள்ளையின நபர் மார்டின் பியர்ஸ், ஹசனலியின் சகோதரி ரெஹானா மீது காதல் வயப்படுகிறார். நாவலின் முதல் பாகம் இந்தப் பின்னணியைச் சுற்றி விரிகிறது. ஹசனலி, அவரது குடும்பம், அந்தக் கிராமம், பிரிட்டிஷார்களின் ஆதிக்கம் என்பதாக முதல் பாகம் பயணிக்கிறது.
நாவலின் இரண்டாவது பகுதியானது முதற்பகுதியின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிக் கதையாக ஆரம்பிக்கிறது. 1950-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் சான்சிபார் தீவில் உள்ள குடும்பத்தைச் சுற்றிக் கதை நடக்கிறது. அமீன், ரஷீத் என்ற இரு சகோதரர்கள், சகோதரி ஃபரிதா, அவர்களது பெற்றோர்களைச் சுற்றி நடக்கிறது. பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். கல்விரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முன்னேறிய குடும்பம். கிழக்கு ஆப்பிரிக்கச் சூழலில், அக்குடும்பத்தினரின் வாழ்க்கை - குறிப்பாக, ரஷீத், அமீன், ஃபரிதாவின் குழந்தைப் பருவம் - பேசப்படுகிறது. அந்நகரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரிட்டிஷ் – ஆப்பிரிக்கத் தம்பதியின் பரம்பரையைச் சேர்ந்த ஜமீலா என்ற தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணின் மீது அமீன் காதல் வயப்படுகிறான்.
மூன்றாவது பகுதி 1970-களில் நடக்கிறது. ரஷீத் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து செல்கிறான். புதிய உலகம், புதிய கலாச்சாரம். நிற வேற்றுமையை எதிர்கொள்கிறான். சான்சிபாரில் புரட்சி வெடிக்கிறது. பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற்றப்படுகிறது. கலவரச் சூழல் நீடிக்கிறது. இதனால், ரஷீத் கல்வி முடிந்தும் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை. இனி தன் வாழ்நாளை இங்கிலாந்திலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறான். அதற்கு முன்பு வரை மாணவன் என்ற அடையாளத்தில் இருந்தவன், கல்வி முடிந்ததும் அகதி என்ற உணர்வு நிலைக்கு ஆட்படுகிறான். அது சொந்த நிலத்துடனான நினைவுகளை அவனுள் பெருக்கச் செய்கிறது. எழுத ஆரம்பிக்கிறான்.
மார்டின் பியர்ஸ், அவனுடைய காதலி ரெஹானா, சகோதரன் அமீன், அவனுடைய காதலி ஜமீலா ஆகியோருக்கு இடையிலான தொடர்பு தூலமாகிறது. தனித்தனிக் கதைகளாக இருந்தவை, ஒரு நிலத்தின், ஒரு கலாச்சாரத்தின் கண்ணிகளாக மாறுகின்றன. ரஷீத்தின் நினைவுகளின் ஊடாக பின்காலனிய நிலம் ஒன்று கட்டமைகிறது. சுயசரிதைத் தன்மை கொண்டதாக இந்நாவல் இருக்கிறது. குர்னாதான் ரஷீத்தாக வருகிறார். குர்னாவின் எழுத்து ஆப்பிரிக்க நிலத்தின் ஆன்மாவை உணரச் செய்கிறது. இந்த நாவல் நேரடியாக கிழக்கு ஆப்பிரிக்காவின் அரசியல் சூழலையும் கலாச்சாரத்தையும் பேசுவதில்லை. காதல் கதைகளாக அது பயணிக்கிறது. அதன் வழியே காலனியம், அதன் விளைவுகள் ஆகியவை துலக்கம் கொள்கின்றன. குர்னாவைப் படிப்பது ஒரு வகையில் அசோகமித்திரனின் பாணியை நினைவூட்டுகிறது. குர்னா, நிகழ்வுகளைச் சாதாரண முறையிலேயே சொல்கிறார். ஆனால், அந்தச் சாதாரணத்துக்குப் பின்னால் பெரும் கனம் இருக்கிறது.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
5 days ago