நெல் சாகுபடி எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

By வெ.ஜீவகுமார்

காவிரிப் படுகை விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்பாராத பெருமழையைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். குறிப்பாக, நெல் அறுவடைக் காலத்தில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து, பயிர்கள் வயல்களிலும் களத்துமேடுகளிலும் ஈரமாகியும் அழுகியும் முளைத்தும் பேரிழப்பை உருவாக்குகின்றன.

கரோனா பெருந்தொற்றின் நெருக்கடிக்கு நடுவிலும் வரலாறு காணாத அமோக மகசூலை காவிரிப் படுகை விவசாயிகள் குவித்துள்ளனர். கடந்த ஆண்டு நெல் கொள்முதல் இலக்கு 43 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் அந்த இலக்கைக் கடந்து, மொத்தம் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் ஆனது. நடப்பாண்டிலோ குறுவை சாகுபடி இலக்கு 45 லட்சம் டன் என்றாலும் செப்டம்பர் 30-க்குள்ளேயே அநேகமாக அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. சுமார் 4.31 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதில், பாதிக்கு மேல் அறுவடையாகியுள்ளது. கனமழை காரணமாக இதுவரையிலும் சுமார் 2 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மீதம் அறுவடையாக வேண்டிய நெல்லை ஈரப்பதத்தைக் காரணம் காட்டிக் கொள்முதல் செய்யத் தவறினால், உழவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளிலும் குப்பைக்குழி ஓரங்களிலும் சுடுகாட்டு மைதானங்களிலும் விற்பனைக்காகக் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும். உழைப்பின் பயனாய், வளத்தின் குறியீடாய் வணங்கப்படும் நெல்மணிகளுக்கு நேரும் அவமதிப்பு அது. நெல்லும் மலரும் தூவித்தான் பழந்தமிழர்கள் தெய்வ வழிபாடு நடத்தியுள்ளனர். நெல் பொலிக, பொன் பெரிது சிறக்க எனப் பொன்னின் சிறப்புக்கு நெல்லே ஆணிவேராகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அவை சிந்திச் சீரழிகின்றன.

குறையும் சாகுபடி பரப்பு

தமிழ்நாடு முழுவதும் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டாலும் காவிரிப் படுகைதான் அதன் மையமாக இருந்துவருகிறது. மன்னராட்சிக் காலத்திலும் அதன் பின்பு வந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நெல் சாகுபடியில் தமிழ்நாடு முந்தியிருந்ததற்கு முதன்மையான காரணம், காவிரிப் படுகைதான். பாசன வசதிகள் மேம்படுத்தப்படாத 1902-1903ம் ஆண்டுகளிலேயே இந்தியா முழுவதும் மாவட்டவாரியாகப் பாசனப் பரப்பு ஆராயப்பட்டது. அப்போது, 10,83,000 ஏக்கர் பரப்பில் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான காவிரிப் படுகையே இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. 7,05,000 ஏக்கர் என்ற கணக்கில் கோதாவரி மாவட்டம் இரண்டாம் இடமே பிடித்தது. அதே போல் வருவாயிலும் இந்தியாவின் வேறு எந்த நதிப் பாசனப் பரப்பைக் காட்டிலும் காவிரிப் படுகையே முதலிடம் பிடித்தது. கீழ் அணைக்கட்டு பகுதியைச் சேர்க்காமலே ரூ.43,60,000/- என்ற வருவாயை அக்காலத்தில் நெல் சாகுபடி ஈட்டியது. ஆனால், காவிரிப் படுகையின் இப்போதைய நிலவரம் கவலைக்குரியதாகிவிட்டது.

தமிழ்நாட்டிலேயே காவிரிப் படுகையில்தான் நெல் சாகுபடி அதிகம் என்றாலும் மொத்த சாகுபடி பரப்பு குறைந்துவருகிறது. காரணம், உற்பத்திச் செலவு இந்தியாவின் எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டில்தான் அதிகம். நாட்டின் சராசரிச் செலவைவிட தமிழ்நாட்டின் நெல் உற்பத்திச் செலவு 26.01% மிகுதி. இந்தியாவின் வேறு எந்த மாநில உழவர்களையும்விட தமிழ்நாட்டு உழவர்கள் அதிகக் கடனாளியாக உள்ளனர். இந்திய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் விவசாயிகள் பெறும் கடன் அளவு 47% அதிகமாக உள்ளது. 2016-17 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு விவசாயி 61% கடன் பெற்றுள்ளார்.

கடன்களுக்குக் காரணம்

தமிழ்நாட்டு விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதற்கு, தமிழ்நாட்டின் நெல் கொள்முதல், இந்தியாவிலேயே குறைவாக இருப்பதே முக்கியமான காரணம். நெல் கொள்முதல் ஆந்திரத்தில் 58.36% ஆகவும் தெலங்கானாவில் 77.75% ஆகவும் உள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் கொள்முதல் வெறும் 21% மட்டுமே என்பதை 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது. இதனால், தமிழ்நாட்டு உழவர்கள் மற்ற மாநிலங்களைவிட அதிக வருமான இழப்பைச் சந்திக்கிறார்கள். தமிழ்நாட்டு உழவர்களின் மொத்த வருமானத்தில் விவசாயத்திலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் 27% மட்டுமே.

பல மாநிலங்கள் தங்கள் வேளாண் பரப்பை அதிகப்படுத்தும்போது, தமிழ்நாட்டில் மட்டும் அதன் அளவு குறைந்தபடியே உள்ளது. 1960-61 முதல் 2016-17 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து இது தெரியவருகிறது. 1970-71 முதல் 2018-19 வரையிலான காலத்தில் 15.87 லட்சம் ஹெக்டேர் சாகுபடி நிலத்தைத் தமிழ்நாடு இழந்துள்ளது.

நம்பிக்கையான கொள்முதல்

2019-20-ல் இந்திய நெல் உற்பத்தி 29.20 கோடி டன் என்றால், 2020-21ல் இது 30.81 கோடி டன் ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா முதன்மையைப் பெறும் சூழலில், தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு உற்சாகமாக இல்லை. நெல் உற்பத்தியில் இழந்த பெருமையைத் தமிழ்நாடு மீட்க முடியாதா? நிச்சயம், அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நெல் கொள்முதல் குறித்து உழவர்களின் நம்பிக்கையை உருவாக்குவது அதற்கான முதல் முயற்சியாக இருக்க வேண்டும். மன்னர்கள் காலத்திலேயே அதற்கான உதாரணங்கள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பாலத்துறை, தாஸ்தான்மால் தோட்டம் ஆகிய இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைக் களஞ்சியங்களில் பாதுகாத்துவந்துள்ளனர்.

தற்போது, காவிரிப் படுகையில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளில் உடனடியாகச் சில நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். வருவாய்க் கிராமங்கள்தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களின் தளவாடப் பொருட்களான சணல் சாக்குகள், தார்பாய் ஆகியவற்றின் விநியோகத்தில் தட்டுப்பாடுகளைக் களைய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களை மையப்படுத்தித் துணைக் கிடங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

உணவு தானியங்களின் ஈரப்பதம் அதிகரிப்பதற்கு பனிப்பொழிவும் எதிர்பாராத பெருமழையுமே காரணம். அவ்வாறான பருவங்களில், கொள்முதலின்போது ஈரப்பதம் குறித்த நிபந்தனைகளைத் தளர்த்துவதே மனிதாபிமானம் கொண்ட அணுகுமுறையாக இருக்க முடியும். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும். கொள்முதல் மீது விவசாயிகள் முழு நம்பிக்கை வைக்கும் சூழலை உருவாக்குவதே நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முதன்மையான வழிமுறை.

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்