குரங்காட்டிகள், சுரைக்குடுக்கை கதை ராமா

By அ.கா.பெருமாள்

காந்தியின் எழுத்துகளையெல்லாம் புத்தகமாக்கும் பொறுப்பில் இருந்த பேராசிரியர் கே. சுவாமிநாதன், தன் கடைசிக் காலத்தில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் இருந்தார். ஒருமுறை எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர், தான் சிறுவயதில் ராமாயணம் படித்த நினைவுகளைச் சுவாரஸ்யமாகச் சொன்னார்.

1900-1920ம் ஆண்டுகளில் திருச்சியில் பண்டித நடேச சாஸ்திரி, ஆ. ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் சிலருக்காக வால்மீகி ராமாயணத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்களாம். பண்டித நடேச சாஸ்திரி, வால்மீகியைவிட அத்யாத்ம ராமாயணம் நாட்டுப்புற ராமாயணத்தில் பல்வேறு வடிவங்கள் உருவாகக் காரணமாயிருந்திருக்கிறது என்றாராம். அத்யாத்ம ராமாயணத்தின் செல்வாக்கு தென் மாவட்ட நாட்டுப்புற ராமாயணக் கதைகளில் உண்டு என்பதை நேரடியாகவே நான் கேட்டிருக்கிறேன்.

வதைப்பதுதான் சத்தியமா?

ஒருமுறை நாகர்கோவிலில் கலைஞர் சரஸ்வதியின் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. சரஸ்வதி, நாட்டுப்புற இசையில் சினிமாத் தன்மை கலக்காமல் பாடுபவர். அன்று லவகுசா கதை நடத்தினார். ஒரு மணி நேரம். லவகுசர்கள் அனுமனை மரத்தில் கட்டிவைத்துவிட்டனர். சீதை வந்து கட்டை அவிழ்க்கிறாள். அந்தக் காட்சியை அனுபவித்துப் பாடினார் சரஸ்வதி.

லவகுசரை எதிர்கொள்ள ராமன் வருகிறான். அப்போதும் ராமன் சத்தியத்தைக் காப்பாற்றி அன்பை வெளிப்படுத்தவில்லை. பாராமுகமாயிருக்கிறான். இந்தக் காட்சியை உணர்ச்சிவசப்பட்டுப் பாடினார். “சீதா அயோத்தி மக்கள் எல்லோரும் இங்கே வந்துவிட்டார்கள். லவகுசர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ இப்போது இவர்களுக்காக அக்கினியில் மூழ்க வேண்டும்” என்றான்.

கூடியிருந்த அயோத்தி மக்களைச் சுற்றிலும் பார்க்கிறாள் சீதை. அவர்கள் யாரும் அவள் தீக்குளிப்பதை விரும்பவில்லை என்பதை முகபாவத்தில் காட்டுகிறார்கள். துக்கம் கலந்த புன்னகையுடன் ராமனைப் பார்க்கிறாள். ராமன் சீதையின் முகத்தைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டான். சீதை சோகத்துடன் பாடுகிறாள்.

மாயவனே ராமா சத்தியமே பெரிதென்று

கானகம் போனேன்; சத்தியத்தைக் காப்பாற்ற

பாதாளம் போவேன்; ஜெயிக்கட்டும் சத்தியம்

பாசம் இல்லா சத்தியம் எதற்கு ராமா

அறியாத பெண்ணை வதைப்பது சத்தியமா

குடிகளை நம்பவைக்க - என்னைச்

சிதைப்பது சத்தியமா

என்று பாடுகிறாள். பூமி இரண்டாகப் பிளக்கிறது. அதில் அடங்கிவிடுகிறாள்.

நிர்வாகம் தெரியாத பரதன்

வில்லிசை நிகழ்ச்சி முடிந்த பிறகு சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர், “சீதை பரதனைக்கூடப் பழிப்பாள். ‘நாட்டு நிர்வாகம் தெரியாத பரதன்தான் சத்தியமோ?' என்று கேட்பாள். இந்த வரியும் என் பழைய நோட்டுப் புத்தகத்தில் உண்டு” என்றார். அவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதி மலையாள வருஷம் 1113-ல் (கி.பி. 1938) பிரதிசெய்யப்பட்டது. அதன் மூல ஏடும் அவரிடம் இருந்தது. ஆறுமுகப்பெருமாள் நாடாரின் பிரதி அது. 1824-ல் எழுதப்பட்டது. நான் அவரிடம் இருந்த லவகுசா ஏட்டை முழுதும் படித்தேன். அதில் பரதன் நிர்வாகம் செய்யத் தகுதியில்லாதவன் என்று குறைகூறிய செய்தி இருந்தது.

ராவண வதை முடிந்தது. ராமன் அவசரமாக மகுடம் தரித்துக்கொள்கிறான். 56 தேச மன்னர்களும் கூடுகிறார்கள். அவையில் ராமன் வீற்றிருக்கிறான். பரதன் ராமனை வணங்குகிறான். “தம்பி பரதா, நம் நாட்டில் மழை பொழிகிறதா? சம்சாரிகள் (விவசாயிகள்) சரியாக வரிகொடுக்கிறார்களா? கோயில்களில் ஒழுங்காகப் பூசை நடக்கிறதா” என்று கேட்கிறான். பரதன் ராமனை வணங்கி,

“….ஏய்த்துப் போட்டார் சமுசாரிகள்

அண்ணா நீ போன பின்பு அடவோலை எழுதினார்

என்னிடம் கேட்காமல் என்னவோ பயிர் செய்தார்

மஞ்சள் இஞ்சி மறுகிழங்கு ஈருள்ளி வெள்ளப்பூடு

இப்படி கிருஷி செய்தார் ஏச்சுப்போட்டார்

காடு விளையவில்லை காய்ப்பும் இல்லையண்ணா

…… என்ன செய்வேன் அண்ணாவே” என்கிறான்.

ராமனுக்குக் கோபம் வருகிறது. “அடே! உன்னை நம்பியல்லோ அயோத்தியை ஒப்படைத்தேன். நீ நிர்வாகம் செய்த முறையால் அல்லவா சம்சாரிகள் உன்னை ஏமாற்றினார்கள்” என்றான்.

பரதன் “அண்ணாவே சமுசாரிகள் ஆண்டுதோறும் அடவோலையை (குத்தகை ரசீது) மாற்றிமாற்றி எழுதி என்னை ஏமாற்றிவிட்டனர். இருந்தாலும், நான் கோயில் பூசையை முடக்கவில்லை. மூன்று தாய்மார்களுக்கும் உணவைக் குறைக்கவில்லை” என்றான். ராமன் “சரி போனது போகட்டும், அந்த சம்சாரிகள் என்னை ஏய்க்கட்டும் பார்க்கலாம். அவர்களை இங்கே அனுப்பு” என்றான். பரதன் அவர்களை அழைத்துவந்தான்.

சம்சாரிகள் எல்லோரும் வந்தனர். ராமன் அவர்களைப் பார்த்து, “என் தந்தை தசரதனுக்குத் திதி நடத்த நிறைய பூசணிக்காய் தேவைப்படுகிறது. பூசணி விதைகள் தருகிறேன். பயிரிட்டுக் காய்கள் கொண்டுவாருங்கள்; விளைச்சலில் நீங்கள் பாதி எடுத்துக்கொள்ளலாம். அடவோலை எழுதிக்கொள்வோம்” என்றான். சம்சாரிகள் அதற்குச் சம்மதித்தனர்.

ராமன் அனுமனை அழைத்துக் கொஞ்சம் பூசணி விதைகளைக் கொடுத்து “நம் கொல்லையிலே இதை விதைப்பாய்; முளைக்கட்டும்” என்றான். அனுமனும் அப்படியே செய்தான். விதைகள் முளைத்துக் கொடியாகிப் பூத்தன. தங்க நிறக் காய்கள் காய்த்தன.

விவசாயிகள் பூசணி விதைகளை மண்ணில் விதைத்தனர். விதைகள் முளைத்தன. பிஞ்சுகள் வந்தன. ஆனால், எல்லாம் கருகிவிட்டன. வெம்பி விழுந்தன. ஒரு காய்கூடத் தேறவில்லை. இந்த நேரத்தில், தசரதனின் சடங்குக்கு வேண்டிய பூசணிக் காய்களைக் கொண்டுவாருங்கள் என்று விவசாயிகளிடம் ராமன் ஆணையிட்டான். சம்சாரிகள் ராமனைப் பணிந்து “எங்கள் தோட்டத்துக் காய்கள் எல்லாம் பிஞ்சிலே வெம்பிவிட்டன. அனுமனின் தோட்டத்தில் பூசணிக் காய்கள் கிடப்பதைப் பார்த்தோம். அதை விலைக்கு வாங்கித்தருகிறோம்” என்றனர்.

ராமனும் “அப்படியே செய்யுங்கள்” என்றான்.

சம்சாரிகள் அனுமனின் தோட்டத்துக்குப் போனார்கள். அனுமனிடம் காய்களை விலை பேசினர். அவனும் பணத்தைப் பெற்றுக்கொண்டான். காய்களைப் பறித்துக்கொள்ளுங்கள் என்றான். சம்சாரிகள் பறித்தார்கள். உடனே அவை அழுகிவிட்டன. ராமனிடம் வந்தார்கள். எங்களுக்குப் பூசணி கிடைக்கவில்லை. அதற்கு எடையாகத் தங்கத்தைத் தருகிறோம் என்றனர். ராமனும் சரி என்றான்.

ராமன் அனுமனிடம் “உன் தோட்டத்திலிருந்து பூசணிக்காய் ஒன்றைப் பறித்துத் தராசிலே வை; சம்சாரிகள் அதன் எடைக்கு எடை தங்கம் தருவார்கள்” என்றான். அனுமன் அப்படியே செய்தான். சம்சாரிகள் தங்கப் பாளங்களைத் தராசில் வைத்தனர். அனுமன் கொடுத்த பூசணிக் காய்க்கு அவை ஈடாகவில்லை. சம்சாரிகள் ஆடு மாடுகளையும் சொத்துகளையும் விற்றுத் தங்கம் வாங்கித் தராசிலே வைத்தார்கள். தராசு அசையவில்லை. பெண்கள் தாலிகளைக் கழற்றி வைத்தனர். சரியாகவில்லை.

ராமனின் கட்டளை

சம்சாரிகள் ராமனைப் பார்த்து “எங்களிடம் இனி எதுவுமே இல்லை. 14 ஆண்டுகளாக பரதனை ஏய்த்துச் சம்பாதித்ததை எல்லாம் தராசிலே வைத்துவிட்டோம்” என்றனர். அப்போது தராசு முனை நேரானது. ராமன் அனுமனிடம் “தராசில் இருக்கும் தங்கத்தையெல்லாம் நம் அரண்மனைப் பொக்கிஷத்தில் சேர்த்துவிடு” என்றான். சம்சாரிகளிடம் “நீங்கள் ராமக் குழுவனாகத் தெருவிலே செல்லுங்கள்; குரங்கை ஆட்டிப் பிழையுங்கள்” என்றான்.

அவர்களுக்குச் சுரைக்குடுக்கை ஒன்றையும் கொடுத்தான். சம்சாரிகள் நாடோடிகளாகத் திரிந்தனர். பரதனுக்குச் செய்த துரோகப் பாவம் தீர ராமனைப் பற்றிக் கதைப் பாடல்களைப் பாடியும் கூத்து நடத்தியும் வாழ்க்கையைக் கழித்தனர்.

செவ்விலக்கிய வடிவ ராமாயண, பாரத கதாபாத்திரங்களின் உணர்வுகளை நாட்டுப்புற வழக்காற்றில் உள்வாங்கும் விதமே வேறு. கதாபாத்திரங்கள் செய்யும் தவறுகளைத் தத்துவார்த்தப் பூச்சுப் பூசி நியாயப்படுத்த மாட்டார்கள் நாட்டார் கலைஞர்கள். அழகியல்ரீதியான கற்பனையை யதார்த்தத்துக்கு எதிராக மெருகூட்டப் பயன்படுத்த மாட்டார்கள். நாட்டார் கலைஞர்களுக்குச் சத்தியம் என்பதே யதார்த்தம்தான்.

அதர்மம் மீறும்போது அமைதியாக இருப்பது என்ற காவிய அழகியல் அவர்களிடம் கிடையாது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி புத்திரப் பாசத்தால் பீமனைக் கொல்லச் சதிசெய்யும் மகாபாரதக் கதைப் பாடல் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அந்த பாரதத்தில் திரௌபதி துகிலுரியும் காட்சியில் பாண்டவர்கள் நாலு பேருமே தருமனைப் பழிப்பார்கள்.

- அ.கா. பெருமாள்,
நாட்டுப்புறவியலாளர்,
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்