திரையரங்குகளில் மட்டுமே வெளியான திரைப்படங்கள் இப்போது ஓடிடி தளங்கள் வழியாக வீட்டுக்கே வந்துவிட்டன. ஆனால், படத்தில் பேசப்படும் கருத்துகள் மாறவேயில்லை. திரைக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் உருவக் கேலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சக மனிதரின் குறைபாடுகளைக் கேலிசெய்து இன்பம் காணும் குரூர மனநிலை வந்துவிட்டது, கசப்பான உண்மை.
கண்ணியம் மீறிய கவுண்டமணி
‘கட்டபொம்மன்’ திரைப்படத்தில் மில்லில் வேலை கேட்டு வரும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் பெயரைக் கேட்டதும், “சங்கு ஊதுற வயசுல சங்கீதாவா?” என கவுண்டமணி அலட்சியம் செய்வார். அங்கு வேலை தேடி வரும் திருநங்கையை கிண்டல் செய்து, வேலை தராமல் துரத்துவார். ஏன், அவர்கள் எல்லாம் வேலை செய்யத் தகுதியற்றவர்களா?
காலம் மாறிவிட்டாலும் பிற்போக்குத்தனங்களுக்கு இன்னும் முடிவுகட்டப்படாததுதான் சோகம். ஒருவரின் நிறம், வயது, உடல் எடை, தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வது இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் வெளிவந்த படங்களே அதற்கான சாட்சி.
சந்தானத்தின் பொறுப்பற்றதனம்
ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் விஞ்ஞானியை சர்வ சாதாரணமாக சைடு ஸ்டேண்ட் என்று ‘டிக்கிலோனா’ படத்தில் கேவலப்படுத்தியுள்ளார் சந்தானம். பெண்களைப் பற்றி அவர் எல்லை மீறிப் பேசுவதும், ஆபாச அர்ச்சனை செய்வதும், அறிவுரை என்ற பெயரில் வகுப்பெடுப்பதும் ஆணாதிக்கத்தின் உச்சம். ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் “5.10-க்குப் போறேன்” என ஒரு பெண் கூற, “ஏன் நல்லாத்தானே இருக்கே 500, 1000-க்குக்கூடப் போலாமே” என்று சந்தானம் கூறுவார். அந்தப் பெண் சொல்வது அலுவலகப் பணி முடித்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தை... சந்தானம் சொல்வது என்ன? கண்டனங்களுக்கு எதிரொலியாக அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.
யோகி பாபு மீதான கேலி
நடிகர்கள் யோகி பாபுவை எல்லா படங்களிலும் இழிவுசெய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். பன்னிவாயன், காட்டெருமை, பன்னிமூஞ்சி வாயன், பித்தளை சொம்பு என்று கிண்டல் செய்தும், அவரின் தலை முடியை வைத்துக் கிண்டல் செய்தும் தொடர்ந்து அவமானப்படுத்திவருகிறார்கள். ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’ படங்களில் தொடங்கிய இந்த மோசமான முன்னுதாரணம், அவர் பிரபல நடிகராகி, திறமையை நிரூபித்து, தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த பிறகும் தொடர்கிறது. ‘அனபெல் சேதுபதி’ படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம், “கரடி பொம்மை சேர்ல உக்கார்ந்து இப்போதான் பார்க்கிறேன்” என்று யோகி பாபுவிடம் சொல்லிச் சிரிப்பதன் மூலம், இந்த ஆபத்தான போக்கை அறிந்துகொள்ளலாம்.
இன்னொரு பக்கம், உருவக் கேலிக்கு உள்ளாகும் யோகி பாபுவே, ‘அரண்மனை - 3’ படத்தில் “பல்லி மூஞ்சி” என்று மனோபாலாவைக் கலாய்க்கிறார். ஆக, அறம் தவறும் இச்செயல்களில் காமெடி நடிகர்கள், இயக்குநர்கள், வசனம் எழுதியவர்கள் என அத்தனை பேருக்கும் பங்கு இருக்கிறது.
திரைக்கு வெளியே
திரைக்கு வெளியேயும் இப்படி உருவக் கேலிக்கு ஆளானவர்களைச் சொல்ல முடியும். உயரம் குறைந்தவர் என சூர்யாவும், ஒல்லியான தேகத்தால் தனுஷும், குண்டாக இருப்பதாக அஜித்தும், தோற்றத்தை வைத்து விஜய்யும் உருவக் கேலிக்கு ஆளாகியுள்ளனர். நடிகைகளில் உடல் எடை காரணமாக ஸ்ரீப்ரியா, குஷ்பு, ஹன்சிகா, சமீரா ரெட்டி, சனுஷா, சுவாதி, வித்யுலேகா, பிரியங்கா போன்றோரும், நிறம் காரணமாக குணச்சித்திர நடிகை தீபாவும், உருவம் காரணமாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். உலக அழகி ஐஸ்வர்யா ராயையும் உருவக் கேலி விட்டுவைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஆணாதிக்க மனோபாவம்
“பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம்... கன்ஃபியூஸ் பண்றது ஈஸி”, “பார்த்தா லூஸு மாதிரி தெரியலை... ஆனா, பேசினா தெரியுது” என்று சிவகார்த்திகேயன் போன்ற நாயக நடிகர்களும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதை மன்னிக்க முடியாது. ‘டாக்டர்’ படத்திலும் இது தொடர்ந்துள்ளது.
விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சிங்கப் பெண்களின் கதை என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால், அதில் பாண்டியம்மா எனும் வீராங்கனைக்குப் பயிற்சியாளராக நடித்த விஜய், ‘ஓடச்சொன்னா உருள்றே… குண்டம்மா குண்டம்மா’ என்று திட்டிக் காயப்படுத்தியது உளவியல் தாக்குதல்தானே. இதுவா பெண்களைக் கொண்டாடிய படம்?
‘ருத்ர தாண்டவம்’ படத்தில், “போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்தி மிரட்டுவது என்பதெல்லாம் பப், கிளப்புக்குப் போகும் பெண்களுக்கு வழக்கமா நடக்கிறதுதான்” என்று அதை நியாயப்படுத்தும் விதத்தில் காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி பேசியது ஆணாதிக்க மனோபாவமே.
இதைவிட மோசமான ஒரு காட்சி. “மீசையை எடுத்துவிட்டு வந்தால் உன் பெண்ணை விட்டுவிடுகிறேன்” என்று ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் உள்ளூர் ரவுடி நிபந்தனை விதிக்கிறார். “மீசை எடுத்தா கவுரவம் என்னாகுறது? பொண்ணு போனாப் போகுது” என்று ஒரு காவலர் சொல்கிறார். மீசை என்பது வெறும் முடிதான் என்பதை அறியாமல், கடத்தப்பட்ட பெண்ணின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்குக் கஞ்சி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள்.
பிம்பம் உடையுமா?
‘டாக்டர்’ படத்தில், ஒரு போட்டியில் தோற்ற அடியாளுக்கு நைட்டி அணிவித்து, பூச் சூட்டி, ‘கோமதி’ என்று பெயர் வைத்து மகிழ்கிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி ஆண்களை இழிவுபடுத்த பெண்களின் உடையையும், பெயரையும் பயன்படுத்துவார்கள்? ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் இயக்குநர் சசி, “ஆண்கள் ஏன் பெண்கள் வசதிக்காகப் போடும் உடையைக் கேவலமாகப் பார்க்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருப்பார். அந்த முற்போக்குச் சிந்தனையுடன், அறத்துடன் திரைத் துறையில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும்.
சமூகக் குற்றவாளிகள்
பிறரின் நிறத்தை, உருவத்தை, உடல் எடையைக் கிண்டல் செய்வது மனிதம் அல்ல. அப்படிக் கேலி செய்பவர்கள் சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளே. அண்ணனோ, தம்பியோ, காதலனோ, கணவனோ, நண்பனோ, அலுவலக மேலாளரோ, சக ஊழியரோ, யாராக இருந்தாலும் உங்களை, உங்கள் உருவத்தைக் கேலி செய்ய விடாதீர்கள்.
மனித மாண்பைச் சிதைக்காததுதான் நகைச்சுவை. புகைபிடிக்கும் காட்சி, வன்முறைக் காட்சி, ஆபாசக் காட்சிகளுக்குத் தடை போடும் தணிக்கை வாரியம், உருவக் கேலியையும் கவனத்தில் கொண்டு தடைபோடட்டும்.
- க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago