தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் கோடை மழை குடை வியாபாரமா?

By ஆர்.முத்துக்குமார்

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாவது தேர்தல் அரசியலில் இயல்பான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் சுதந்திர காலம் தொட்டு ஏராளமான அரசியல் கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் உருவாகியிருக்கின்றன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் பச்சைத் தமிழகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சி என்று மூன்று கட்சிகள் புதிதாக உருவாகியுள்ளன.

‘நூறு பூக்கள் பூக்கட்டும், நூறு கருத்துகள் மோதட்டும்’ என்றார் மாவோ. அதுபோல வெவ்வேறு கொள்கைகளை முன்வைக்கும் பல்வேறு கட்சிகள் தோன்றுவதும், தனித்தோ, கூட்டணியில் கலந்தோ தேர்தலைச் சந்திப்பதும், மக்களின் ஆதரவைக் கோருவதும் ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் விஷயம்தான். என்ன ஒன்று, அப்படி தேர்தல் நேரத்தில் உருவாகும் கட்சிகளை மழைக் காலத்துக் காளான்களுடன் ஒப்பீடு செய்கின்ற போக்கு இங்கே புழக்கத்தில் இருக்கிறது.

தனிக் கட்சி தவறில்லை

பல்லாண்டுகளாக அரசியல் களத்தில் செயல்பட்டு, பல தேர்தல்களில் வெற்றி தோல்விகளைச் சந்தித்த கட்சிகளே தேர்தல் நெருக்கத்தில் வெற்றியை மையப்படுத்தி, தங்கள் கொள்கைகளைக் கைவிட்டோ, மாற்றியோ, சமரசம் செய்துகொண்டோ பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும்போது, ஏதோவொரு கொள்கையை முன்னிறுத்தியோ, கோரிக்கையை வலியுறுத்தியோ தனிக் கட்சி தொடங்குவதில் எந்தத் தவறுமில்லை.

தவிரவும், தேர்தல் நெருக்கத்தில் உருவாகும் அரசியல் கட்சிகளுக்கு இங்கே எந்தவிதமான அரசியல் பங்களிப்பும் இல்லை என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், சுதந்திரத்துக்குப் பிறகான முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. அப்போது ஆகப் பெரிய கட்சியான காங்கிரஸ் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்க உதவிய மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சியும் விழுப்புரம் ராமசாமி படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியும் தேர்தல் நெருக்கத்தில் உருவானவையே. முரண் என்னவென்றால், ராஜாஜி ஆட்சியில் மாணிக்கவேலரும், காமராஜர் ஆட்சியில் ராமசாமியாரும் தத்தமது கட்சிகளைக் காங்கிரஸிலேயே இணைத்துவிட்டனர்.

பின்னர் 1957 தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்து காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உருவானது. காமராஜருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஜெயராம ரெட்டியார், வெங்கடகிருஷ்ண ரெட்டியார், சட்டநாத கரையாளர் போன்றோரால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சிக்கு ராஜாஜி, தேவர் போன்றோரின் ஆதரவு இருந்தது. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று ராஜாஜி பிரச்சாரம் செய்த அந்தத் தேர்தலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி 16 இடங்களைப் பிடித்து, சட்டமன்றத்தின் பிரதான எதிர்க் கட்சியானது. பின்னர், அந்தக் கட்சி நீடிக்கவில்லை.

1962 தேர்தல் நெருக்கத்தில் அண்ணாவோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவும் திராவிட நாடு கோரிக்கை தொடர்பான சித்தாந்தச் சிக்கல் காரணமாகவும் திமுகவிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார் ஈ.வெ.கி.சம்பத். பின்னர் நடந்த தேர்தலில், ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தென்சென்னையில் போட்டியிட்ட சம்பத் மூன்றாமிடம் பெற்றார்.

சொந்தத் தொகுதியில் தோல்வி

80-களில் குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் போன்ற சிறுசிறு கட்சிகள் உருவாகி இயங்கியபோதும், அவை தேர்தல் களத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை. குறிப்பாக, 80-களின் மத்தியில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து நமது கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் எஸ்.டி. சோமசுந்தரம். 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அவருடைய கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தொடங்கிய எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர். புரட்சிக் கழகமும் பெரிதாக எடுபடவில்லை. இந்த இடத்தில் நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி பற்றிச் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இருகூறுகளாகப் பிளவுபட்டிருந்தது. அப்போது ஜானகி எம்.ஜி.ஆர். ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார் காங்கிரஸில் இருந்த சிவாஜி. அதற்கு ராஜீவ் காந்தி மறுக்கவே, அதிருப்தியடைந்த சிவாஜி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். பின்னர் நடந்த தேர்தலில் அதிமுக ஜானகி பிரிவுடன் சிவாஜி கூட்டணி அமைத்தார். சோகம் என்னவென்றால், அனைத்துத் தொகுதியிலும் தோல்வியடைந்ததோடு, தனது சொந்தத் தொகுதியான திருவையாறிலும் தோற்றுப்போனார் சிவாஜி.

கிட்டத்தட்ட இதே சமயத்தில், ‘என் கலையுலக வாரிசு’ என்று எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்ட இயக்குநர் பாக்யராஜ், தனது ஆதரவாளர்களோடு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் மனைவி தொடங்கிய கட்சியே மக்கள் மத்தியில் எடுபடவில்லை. முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசுவும் தேர்தல் நெருக்கத்தில் கட்சி தொடங்கியிருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் பாஜக, காங்கிரஸ் என்று தேசியக் கட்சிகளின் பக்கம் சென்றுவிட்டார்.

நிலைத்த பாமக

அதன் பிறகு, தேர்தல் நெருக்கத்தில் உருவான கட்சிகளுள் முக்கியமானது, பாட்டாளி மக்கள் கட்சி. 1989 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட பாமக, சுமார் 15 லட்சம் வாக்குகளைப் பெற்றது. முதலில் சிறிய கட்சிகளுடனும், பிறகு அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைச் சந்தித்தது. பாமக இடம்பெறும் அணியே வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. பிறகு, அந்த நிலை மாறியது. தற்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து, தமிழகம் முழுக்கத் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வந்திருக்கிறது பாமக. அநேகமாக, தேர்தல் நெருக்கத்தில் உருவாகி, தொடர்ந்து அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகளுள் பாமக குறிப்பிடத் தக்கது.

90-களில் உருவான இன்னொரு கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திமுக. ஆனால், அது தேர்தல் நெருக்கத்தில் உருவாகவில்லை. ஏன், தமிழகத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்டவை தேர்தல் நெருக்கத்தில் உருவானவையல்ல. 1996 தேர்தல் நெருக்கத்தில் உருவான மற்றொரு முக்கியமான கட்சி, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்.

பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு தமிழக காங்கிரஸில் பலத்த எதிர்ப்பு. அதனை பிரதமர் நரசிம்ம ராவ் ஏற்கவில்லை. அதிருப்தி அடைந்த மூப்பனார், தமாகா என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். அதே வேகத்தில், திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தார். 20 எம்.பி.க்களையும் 39 எம்.எல்.ஏ.க்களையும் வென்றதோடு, தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாகவே மாறியது தமாகா. ஆறு ஆண்டுகள் மட்டுமே களத்தில் நீடித்த தமாகாவை மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸில் இணைத்தார் ஜி.கே.வாசன். தற்போது அவரே காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் தமாகாவைத் தொடங்கியிருக்கிறார்.

யாரும் செய்யாததைச் செய்த தேமுதிக

2001 தேர்தல் நெருக்கத்தில் பல கட்சிகள் உருவாகின. தமாகா - அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த ப.சிதம்பரம், தமாகா ஜனநாயகப் பேரவையைத் தொடங்கினார். மேலும், பேராசிரியர் தீரனின் தமிழ் பாமக, குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ், எஸ்.கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, கு.ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி போன்ற பல கட்சிகள் அப்போது உருவாகியிருந்தன.

வாக்கு வங்கி ரீதியாகக் கணிசமான செல்வாக்கு பெற்றிருந்த மதிமுக, பாமக, தமாகா போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் மேற்கண்ட சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது திமுக. அந்த அணி சாதிக் கூட்டணி என்று விமரிசிக்கப்பட்டது. அது தேர்தல் களத்திலும் எதிரொலித்தது. தேர்தல் நேரத்தில் உருவான சிறுகட்சிகளுடன் உருவான கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.

2006 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கினார். கடந்த காலங்களில் தேர்தல் நெருக்கத்தில் உருவான எந்தவொரு கட்சியும் தமிழகம் தழுவிய அளவிலான கட்சியாக, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சியாக, பெரிய கட்சிகளுக்கான மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. அதனை தேமுதிக செய்தது.

தோல்வி, வீழ்ச்சி, சவால்!

மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தக் கட்சிக்கு எட்டரை சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2009 தேர்தலிலும் தனித்தே களம் கண்டது. பிறகு, கட்சியை உயிரோட்டத்துடன் வைத்திருக்க ஏதுவாக 2011-ல் அதிமுக அணியில் இணைந்து எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்று, பிறகு 2014ல் அதிமுக, திமுக இல்லாத அணியில் இடம்பெற்றார். வாக்குவங்கி கணிசமாகக் குறைந்தபோதும் இன்றைய தேர்தல் களத்தில் தேமுதிகவின் இடம் பிரதானமானது.

அந்த வகையில் பாமக, தேமுதிக தவிர, தேர்தல் நெருக்கத்தில் உருவான எந்தவொரு கட்சியும் தமிழகத் தேர்தல் களத்தில் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. நிலைத்தும் நிற்கவில்லை. ஆனாலும், கருத்து வேறுபாடுகளைக் காரணமாகச் சொல்லி சில கட்சிகள், சாதியப் பின்புலத்தோடு சில, சினிமா பிரபலத்தை அடித்தளமாகக்கொண்டு சில, மாற்று அரசியலை முன்னிறுத்தி சில என்று வெவ்வேறு காரணங்களைச் சொல்லி, புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், அவை ஏன் தமிழகத் தேர்தல் களத்தில் பெரிதாகச் சாதித்துவிடவில்லை?

காரணத்தை யோசிக்கும்போது ‘கோடை மழை குடை வியாபாரம்’ நினைவுக்கு வருகிறது. கோடை காலத்தில் திடீரென மழை வரும். அப்போது தள்ளுவண்டியில் பழம் விற்பவர், கடைவாசலில் பூவிற்பவர், பெட்டிக்கடைக்காரர் எல்லாம் குடைகளை அவசரகதியில் வாங்கிவந்து விற்பனை செய்வார்கள். கோடை மழை நின்றதும் விற்காத குடைகளைத் திருப்பிக்கொடுத்துவிட்டு, அவரவர் தொழிலைப் பார்க்கப்போய்விடுவார்கள்.

அதுபோல, தேர்தல் என்று வந்ததும் உற்சாக மிகுதியிலோ, வேறு பல திடீர் லாபங்களுக்காகவோ புதிய கட்சியைத் தொடங்கி, தேர்தல் முடிந்ததும் அல்லது தோல்வி வந்ததும் ஒதுங்கிவிட்டால், எந்தக் காலத்திலும் கட்சியை வளர்த்தெடுக்க முடியாது. தோல்வி, வீழ்ச்சி, சவால், சறுக்கல் என அனைத்தையும் கடந்து களத்தில் நின்றால் மட்டுமே வெற்றி சாத்தியம். இறுதியாக ஒன்று, தனிக் கட்சி தொடங்கிச் சாதிக்க வேண்டும் என்றால், நிறைய உழைக்கவும் வேண்டும், நிறைய இழக்கவும் வேண்டும். பிறகுதான் எல்லாம்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர்.

‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்