ஊரக சுயாட்சி ஏன் முக்கியமானது?

By செல்வ புவியரசன்

புதிய மாவட்டங்களிலும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இன்றும் வருகிற 9-ம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த உச்ச நீதிமன்றம் மேலும் நான்கு மாதங்களுக்கு அவகாசம் அளித்துள்ளது என்றபோதும் அதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் இந்தியாவுக்கே முன்னோடியாகக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு, இன்று அது குறித்து அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது வரலாற்றின் முரண்நகை.

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய மிகப் பெரும் ஆய்வை நடத்தியவர் காந்தியச் சிந்தனையாளரான தரம்பால். அறுபதுகளில் அனைத்திந்திய பஞ்சாயத் பரிஷத் அமைப்பின் ஆய்வுத் துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். காலனிய காலகட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடர்பான அரசு ஆவணங்களைப் பார்வையிட்டும் ஊர் ஊராகச் சென்று நேரடிக் கள ஆய்வுகளை நடத்தியும் தனது ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் வரைக்கும் அவர் பார்வையிட்டு, உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் திரட்டினார். அவரது முடிவுகளின்படி, ஏற்கெனவே இங்கு நெடுங்காலமாக சிறப்பாகச் செயல்பட்டுவந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கால நில வருவாய் அமைப்பால் சீர்குலைக்கப்பட்டன. காலனிய அதிகார எந்திரம் உள்ளூர்ச் சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவில்லை. சுதந்திர இந்தியாவிலும் அந்த நிலை தொடராமல், சுயாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் மறுவுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது பிரதான பரிந்துரை.

கிராமப்புறக் குடியாட்சி

பஞ்சாயத்து என்கிற வார்த்தைக்கு உரிமையியல், குற்றவியல் பிரச்சினைகளைக் கிராம அளவில் பேசித் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு அமைப்பு என்றுதான் பொதுவாகப் பொருள்கொள்ளப்படுகிறது. அவை பின்பற்றிய வழக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தன என்றாலும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் நிர்வாகரீதியிலும் அரசியல்ரீதியிலும் தன்னைச் சுயாட்சி பெற்ற பகுதியாகக் கருதிவந்திருப்பதை இத்தகைய அமைப்புகளின் வரலாற்றிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. சார்லஸ் மெட்காப் போன்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் பஞ்சாயத்து அமைப்பைக் கிராமப்புறக் குடியாட்சி என்றே அழைத்துவந்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளே தங்களது நில நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டன என்கிறார் தரம்பால். நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் கர்ணம் என்று அழைக்கப்படுபவர்களின் பொறுப்பில் இருந்தன. வடஇந்தியாவில் இவர்கள் பத்வாரி (Patwari) என்று அழைக்கப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து நிலங்களும் தங்களது விவசாய வருமானத்தில் சரிபாதியை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்களது ஆளுகையை இழந்து, வரி வசூலிக்கும் முகவாண்மைகளாக மட்டுமே சுருங்கிப் போயின.

ஆட்சியர்களின் கட்டுப்பாடு

சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1880, 1907, 1946 ஆகிய ஆண்டுகளில் முழுமையான மறுபரிசீலனைக்கு ஆளாகியுள்ளன. 1880-களில் ஏற்கெனவே இருந்த திட்டங்களைத் தீவிரப்படுத்தவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மாவட்ட அளவில் கூடுதல் நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டன. மைய அரசின் வழக்கமான அரசு எந்திரத்திலிருந்து விடுபட்டு, மாவட்ட ஆட்சியர்கள் சூழலுக்கேற்பச் சுயமாக முடிவெடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 1884-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, சென்னை மாகாணத்தில் மாவட்ட, வட்ட, கிராம அளவில் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை பெருமளவில் தொடங்கப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். ஆனாலும்கூட, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரங்கள் பெரிதும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்படுத்தப்படும் நிலை இருந்தது.

1907-ல் நியமிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கான ராயல் கமிஷன், உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும் கவனம் செலுத்தியது. அப்போது உள்ளாட்சி அமைப்புகள் குறித்துப் பெறப்பட்ட கருத்துகள் 1920 வரையிலும் விவாதிக்கப்பட்டன. 1920-ல் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கான விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரித்தன. 1946-ல் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கான விவாதங்களின்போதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கியத்துவம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

பல்வந்த் ராய் பரிந்துரை

சுதந்திர இந்தியாவில் 1958-ல் மதராஸ் பஞ்சாயத்துகள் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் அந்தச் சட்டம் கொண்டிருந்தது. உள்ளாட்சி அமைப்பின் ஒவ்வொரு நோக்கத்தையும் எட்டுவதற்கு அச்சட்டம் முன்பிருந்த பிரிட்டிஷ் நடைமுறைகளைப் பின்பற்றியதே குழப்பங்களுக்குக் காரணமாயிற்று என்கிறார் தரம்பால். தவிர, உள்ளாட்சி அமைப்புகளின் மொத்தச் செலவினங்களும் குறைவாகவே இருந்தன. எனினும், 1958-ல் இயற்றப்பட்ட பஞ்சாயத்து சட்டம்தான், சென்னை மாநிலத்தில் உள்ள எல்லாக் குடிசைகளையும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர உதவியது. அதற்கு முன்னால், மாநிலத்தின் பாதிப் பரப்பளவு மட்டுமே கிராமப் பஞ்சாயத்துகளைப் பெற்றிருந்தது. 1957-ல் அளிக்கப்பட்ட பல்வந்த் ராய் மேத்தா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று இயற்றப்பட்ட சட்டம் அது. அரசு மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது அந்த கமிட்டியின் முக்கியப் பரிந்துரை.

73 மற்றும் 74-ம் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுப் பெண்களுக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடுகளும் அதிகரித்துவருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் இன்று அரசமைப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, அரசமைப்பில் நிகழும் அத்தனை தவறுகளும் உள்ளாட்சி அமைப்பிலும் பிரதிபலிக்கக்கூடும். மத்திய மாநில அளவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றி என்பது ஒவ்வொரு நிலையிலும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதால் மட்டுமே சாத்தியம். அந்தப் பொறுப்பேற்பு, உள்ளாட்சி அமைப்புகளின் நியாயமான நிர்வாகத்தாலேயே சாத்தியமாகும்.

ஒருவேளை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்றால், அது அமைப்பின் தவறால் அல்ல, அவ்வமைப்பின் பணிகளைப் பற்றிய அறியாமையின் காரணமாகத்தான் என்கிறார் தரம்பால். உள்ளாட்சி குறித்த விழிப்புணர்வால் மட்டுமே அந்த அமைப்புகளின் சுயாட்சியை மீட்டெடுக்க முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கிராமங்கள் சமுதாயங்களாகவும் மகமைகளாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொண்டன. அந்நியர்களிடம் இழந்த அந்த உரிமையைச் சுதந்திர இந்தியா திரும்பவும் கிராமங்களின் கைகளிலேயே திரும்பக் கொடுத்திருக்கிறது.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்