தமிழக அரசின் புதிய ஆணை: வீடற்றவர்களுக்கு நம்பிக்கை

By சி.மகேந்திரன்

வீடற்றவர்களுக்கு நம்பிக்கை வீடின்றி வாழ்வது எத்தனை துயர் நிறைந்தது என்பதை, வீடற்றவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவைச் சந்திக்கப் பலர் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஒரு விதமான பதற்றம் இருந்தது. தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்க முடியாத பதற்றத்தில் அவர்கள் இருந்தார்கள். புல்டோசர் மூலம் அவர்களின் வீடுகளை இடிக்கப்போகிறார்கள் என்றார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில், அதில் வேறொரு உண்மை தெரிந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அரசோடு அவர்கள் நடத்திய போராட்டம் பழுப்பேறிய காகிதங்களாகக் கையில் இருந்தது.

60 ஆண்டுகளுக்கு முன்னர், பணம் கொடுத்து இந்த நிலத்தை வாங்கிய பத்திரம் அவர்களிடம் இருந்தது. அவர்கள் குடியிருக்கும் இடம் வசிப்பதற்கு ஏற்புடையது, பட்டா வழங்கலாம், தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை என்று ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அவர்களிடம் இருந்தது. ஏரிக்குக் கரை அமைக்கும் ‘நமக்கு நாமே’ திட்டத்துக்கு அவர்கள் அனைவரும் பணம் கொடுத்து, அதில் பங்கேற்ற விவரங்களும் அந்த ஆவணங்களில் இருந்தன. பெரும் வெள்ளத்தை சென்னை நகரமே சந்தித்தபோது, இந்த இடத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற ஆதாரத்தையும் அவர்கள் வைத்திருந்தார்கள். எல்லாம் இருந்தும் அவர்களிடம் பட்டா மட்டும் இல்லை.

நல்லகண்ணுவிடம் அந்த எளிய மக்கள் எழுப்பிய கேள்வி நெஞ்சில் ஆணியை அறைந்ததைப் போல இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் வாங்கிய நிலத்தில், எங்கள் குடும்பத்தினர் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் முதலீடு செய்து, உருவாக்கிய வீடு இது. இதைத் தவிர, எங்களுக்கென்று உரிமையானது என்று சொல்லிக்கொள்ள வேறு எதுவுமே இல்லை. ஒரு நொடியில் இதை இடித்துத்தள்ளுவது எப்படிச் சரியாக இருக்கும் என்று கேட்டார்கள். நல்லகண்ணு மௌனமானர். அவரைச் சந்தித்து இப்படிக் கேள்வி எழுப்பியவர்கள் அவருக்குப் புதியவர்கள் அல்ல. வறண்டு அனல் வீசிய ஒரு கோடைகாலத்தில், சிட்லபாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிக்கு நல்லகண்ணு அழைக்கப்பட்டபோது, அவருடன் நானும் சென்றிருந்தேன். அப்போது அவர் தாமிரபரணியில் மணல் அள்ளக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த காலம். தூர் அள்ளும் பணி போர்க்கால நடவடிக்கையைப் போலக் காணப்பட்டது. ஏரியைச் சுற்றி வாழ்ந்த பொதுமக்கள் அனைவரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இளைஞர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றது. திடீரென்று சூழலில் மாற்றம் ஏற்பட்டு, அந்த மக்களின் வீடுகள் அகற்றப்படுகின்றன என்பது வேதனை அளிப்பதாக இருந்தது.

அதே நேரத்தில், நீரின்றிக் காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளின் துயரத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறியாதவர்கள் அல்ல நாம். நீர்நிலைகளைப் பாதுகாக்கும் இன்றைய இளைஞர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது. பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் மக்களிடம் உருவாக்கிவருவது போற்றுதலுக்கு உரியது. ஆனால், இதில் மறைந்திருக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். இதில் வசதிபடைத்த நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. எளிய மக்கள், தங்கள் பக்கத்தில் அடிப்படை நியாயங்கள் இருந்தும் அதை நீதிமன்றங்களில் அவர்களால் நிரூபிக்க முடிவதில்லை. அதற்கான பணபலமும் அதிகாரபலமும் அவர்களிடம் இல்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நவீன வாழ்க்கை மனிதருக்கும் இயற்கைக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருபுறம் வீடற்ற மனிதர்கள். மறுபுறம் நீரற்ற நீர்நிலைகள். இரண்டையும் காப்பாற்ற வேண்டிய கடமை இன்றைய மானுடத்துக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் ஏரிகள், வயல்களுக்கு நீரை வழங்கும் கடமையைச் செய்துகொண்டிருந்தன. இன்று வயல்களின் பரப்பு குறைந்துகொண்டேவருகிறது. இன்று ஏரிகள் நீரைத் தேக்கி நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கும் கடமையைச் செய்துகொண்டிருக்கின்றன. ஏரி சார்ந்த ஆயக்கட்டுகள் நீர்ப் பிடிப்பிலிருந்து விடுபட்டுக் குடியிருப்புப் பகுதிகளாக மாறியிருக்கின்றன. இதில் சில பகுதி நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளுக்குப் பட்டா வழங்கப்படவில்லை. ஏரிகளைப் பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில், பட்டா வழங்கப்படாமல் துயரப்படும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் அனுதாபத்துடன் பார்க்க வேண்டியது அவசியம்.

இவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் என்று குற்றம் சுமத்த முடியுமா? நீர்நிலைகளின் பாதுகாவலர்களாகவும் இவர்களில் பலரும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. வறண்ட நீர்நிலைகளை ஒட்டி வேறு யாரும் குடியேறாதவாறு இவர்கள்தான் பல இடங்களில் நீர்நிலைகளைப் பாதுகாத்துவருகிறார்கள். உலகெங்கிலும் வனங்களைப் பாதுகாப்பதில் வனவாழ் பழங்குடியினருக்கு உள்ள பங்கை நாம் அறிவோம். அதைப் போல நீர்நிலைகளைப் பாதுகாப்பது அவற்றுக்கு அருகில் வாழும் மக்களாகத்தான் இருக்க முடியும். லாப நோக்கம் கொண்டவர்களால் ஒருபோதும் இயற்கைக்குப் பாதுகாப்பு தர முடியாது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்துள்ள ஒரு அரசு ஆணை, அந்த மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிப்பதாக உள்ளது. புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை அங்கிருந்து அகற்றி மறுகுடியமர்வு செய்யும் திட்டம் ஓராண்டுக்குத் தள்ளிப்போடப்படுவதாக அந்த ஆணை குறிப்பிடுகிறது. தங்கள் வீடுகள் இடிக்கப்படும் என்ற அச்சத்திலிருந்து அவர்களுக்குத் தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், அவற்றுக்கு அருகில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு, தேவைப்படும் பட்சத்தில் நிலத்தில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். எளிய மக்களின் துயர் துடைக்க தமிழ்நாட்டு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

- சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்