பாண்டோரா ஆவணங்களும் கிழியும் முகத்திரைகளும்

By ஆர்.ஷாஜஹான்

கிரேக்கப் புராணங்களின்படி பாண்டோரா என்பவள் உலகின் முதல் பெண். கடவுள்களுக்கெல்லாம் கடவுளான சியூஸ் பணித்தபடி, ஹஃபீஸ்தஸ் அவளை உருவாக்கினார். புரமீதீயஸ் சொர்க்கத்திலிருந்து தீயைத் திருடிவிட்டார். அதற்குப் பழி வாங்க, புரமீதீயஸின் சகோதரன் எபீமீதஸுக்கு பாண்டோராவை அளித்தார் கடவுள் சியூஸ். பாண்டோராவுக்கு ஒரு ஜாடியைப் பரிசளித்து, அதை எப்போதும் திறக்கக் கூடாது என்றும் சொன்னார்.

இந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று சொன்னதாலேயே ஆர்வத் தூண்டல் ஏற்பட்டு, ஏவாள் ஆப்பிளைச் சாப்பிட்டாள் என்னும் விவிலியத்தின் கதையைப் போலவே இங்கும் நடந்தது. பாண்டோரா அந்த ஜாடியைத் திறந்தாள். அதன் உள்ளே அடைக்கப்பட்டிருந்த தீமைகள் அனைத்தும் வெளியேறின. பாண்டோரா அதை மூட முனைவதற்குள் எல்லாத் தீமைகளும் உலகில் பரவிவிட்டன.

இப்படிப் போகிறது கிரேக்கத் தொன்மக் கதை. இந்தக் கதையை ஒட்டித்தான் உருவானது பாண்டோராவின் பெட்டி (Pandora's Box) என்ற சொல். ஏதேனும் ஊழல் அல்லது ரகசியங்கள் அடுக்கடுக்காக வெளிவரும்போது பாண்டோராவின் பெட்டி திறந்தது என்று சொல்வார்கள். இப்போதும் அப்படியொன்று வந்திருக்கிறது. அதற்கு ‘பாண்டோரா பேப்பர்ஸ்’ என்று பெயர்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள், அதிகாரம் மிக்க தலைவர்கள், பிரபலங்கள் பலரும் பணமாகவும் சொத்துக்களாகவும் வெளிநாடுகளில் வாங்கி வைத்திருக்கிற, முதலீடு செய்திருக்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், விளையாட்டு உலகினர் எனப் பலருடைய ரகசியங்கள் லட்சக்கணக்கான ஆவணங்களாக வெளிவந்துள்ளன. அதுதான் பாண்டோரா பேப்பர்ஸ்.

இதற்கு முன்னால் பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ் என்றும்கூட ரகசியங்கள் வெளிவந்தன. ஆனால், அவை பெரும்பாலும் தனிநபர்களும் பெருநிறுவனங்களும் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் போட்டு வைத்த பணத்தைப் பற்றிய ரகசியங்களை வெளிக்கொண்டு வந்தன. இப்போது வந்துள்ள பாண்டோரா பேப்பர்ஸ், வரி ஏய்ப்பின் மூலமும் தவறான வழிகளிலும் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில், சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அறக்கட்டளைகளாக, சொத்துகளாக முதலீடு செய்திருக்கிறார்கள் என்று காட்டுகின்றன.

இதற்கு முந்தைய ஊழல்களில் எல்லாம் கறுப்புப் பணம் என்றாலே சுவிஸ் வங்கிகள், பனாமா, கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் போன்ற நாடுகளைக் குறிப்பதாக இருந்தன. இப்போதோ, சமோவா, பெலிஸ், சிங்கப்பூர், துபாய், நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிடைக்கும் வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி பலரும் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேசக் கூட்டமைப்புக்கு (International Consortium of Investigative Journalists - ICIJ) இந்த ஊழல் ஆவணங்கள் கிடைத்தன. அது, உலகின் முக்கியமான பத்திரிகைகளான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி கார்டியன்’, ‘பிபிசி’ போன்ற ஊடகங்களுக்குப் பகிர்ந்தளித்தது. உலகின் 14 நிதிச் சேவை நிறுவனங்களின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆவணங்களிலிருந்து இந்த ஊழல் வெளிவந்தது.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, செக்கஸ்லோவாகியா பிரதமர் ஆந்த்ரேஜ் பாபிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உறவினர்கள் உள்ளிட்ட பெருந்தலைகளின் பெயர்கள் அதில் உள்ளன. இந்தியர்கள் மட்டும் இல்லாமல் இருக்க முடியுமா?

பிரிட்டனில் திவால் ஆனதாக அறிவித்த அனில் அம்பானி 18 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக இந்த ஆவணங்களை ஆய்வுசெய்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கூறுகிறது. பல்லாயிரம் கோடி மோசடி செய்துவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் சகோதரி, பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தாரின் கணவர் ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளன. பனாமா பேப்பர்ஸ் வெளிவந்த சில மாதங்களில், சச்சின் டெண்டுல்கர் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் செய்திருந்த முதலீடுகளை மூடிவிடுமாறு சொன்னதாகவும் இப்போது தெரியவந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் நானூறு பேரின் பெயர்கள் இதுவரை தெரியவந்துள்ளன.

எப்படியெல்லாம் இந்த ஊழலைச் செய்திருக்கிறார்கள் என்ற விவரங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். உள்நாட்டில் ஒரு ஊழல் மூலமாகவோ, ஏதேனும் வேலை முடித்த வகையிலோ கிடைத்த பணத்தைக் கொண்டு வெளிநாட்டில் ஒரு அறக்கட்டளை ஆரம்பிப்பது. அந்த அறக்கட்டளையின் மூலம் ரியல் எஸ்டேட் உட்படப் பல துறைகளிலும் முதலீடு செய்யப்படும். இதில், அறக்கட்டளையை உருவாக்கும் ஒருவர் இருப்பார், அவர் செட்லர் (Settlor) எனப்படுவார். அதன் பிறகு செட்லர் குறிப்பிடும் நபர்களின் சார்பாக அந்த அறக்கட்டளையை நிர்வகிக்க ஒரு அறங்காவலர் இருப்பார். மூன்றாவதாக, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை அனுபவிக்கும் பயனாளிகள் இருப்பார்கள்.

சட்டரீதியாகப் பார்த்தால் இதில் தவறு ஏதும் இல்லை என்பதுதான் இவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. தவறான வழியில் கிடைத்தது, வரி ஏய்ப்பு செய்தது, லஞ்சமாகப் பெற்றது, தரகு வேலையில் கிடைத்தது எனப் பல வகையிலும் கிடைத்த பணத்தை இப்படி வெளிநாடுகளில் அறக்கட்டளைகளில் முதலீடு செய்கிறார்கள். ஒருவேளை, உள்நாட்டில் ஒரு தொழிலதிபர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனாலும், அவருடைய இந்த அறக்கட்டளையில் இருக்கும் பணத்தைக் கைப்பற்ற முடியாது. அது தனிப் பாதுகாப்புப் பெற்றதாக இருக்கும்.

இதுபோன்ற ஒருசில முதலீடுகள் நேர்மையானவையாகக்கூட இருக்க முடியும். ஆனால், பெரும்பாலானவை கறுப்புப் பண முதலீடாகவே இருக்கும். இப்போதுதான் விவகாரம் வெடித்துள்ளது. சர்வதேசப் பத்திரிகையாளர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, இதுவரை இந்தியாவில் 60 பேரின் ஆவணங்களை மட்டுமே சரிபார்த்துள்ளதாகவும், இந்தியர்கள் 380 பேரின் பெயர்கள் இதில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் தோண்டத் தோண்ட எவ்வளவு வருமோ தெரியாது.

ஏற்கெனவே வெளிவந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்திலும் இந்தியர்களின் பெயர்கள் இருந்தன. ஆனால், எதுவும் நடக்கவில்லை. பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இருந்தன. அதிலும் எதுவும் நடக்கவில்லை. இப்போது திறந்துள்ள பாண்டோரா பெட்டியிலாவது ஊழல் மன்னர்கள் மாட்டுவார்களா? அரசியல் நிலைமைகளைப் பார்க்கும்போது அது சந்தேகம்தான்.

- ஆர்.ஷாஜஹான், ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: shahjahanr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்