இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பெற்றிருந்த முன்னோடி அந்தஸ்தை தமிழ்நாடு இழந்துவிட்டது. தற்போது 6.50 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான நிலக்கரி சார்ந்த அனல் மின்நிலையங்களைப் புதிதாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 விழுக்காடு நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களிலிருந்தே கிடைக்கிறது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 139 நாடுகளை உள்ளடக்கி சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், அந்த நாடுகள் அனைத்துமே 2050-க்குள் பசுமையான, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு முற்றிலும் மாறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளன. அதில், 80% மாற்றங்களை 2030-க்குள்ளாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளன. இதன்மூலம், குறைந்த செலவில் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் கரிமமில்லா மின்சாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் தொழில்நுட்பத் தடைகளோ பொருளாதாரத் தடைகளோ இல்லை என்பது தெளிவாகிறது.
இந்த வகையில் எஞ்சியிருக்கும் ஒரே தடை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிக்கலானது என்ற பார்வை கொண்ட மின்கட்டமைப்பை இயக்குபவர்களும் கொள்கை வகுப்பாளர்களும்தான். இந்தத் தடையை அகற்றுவதே, கரிமமில்லா மின்கட்டமைப்புக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான தொடக்கமாக அமையும். பிறகு, அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கி, கொள்கை - திட்டமிடலைச் சீரமைத்து, தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான, தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மாசுபடுத்தும் மின்னுற்பத்தி
தமிழ்நாட்டிலுள்ள நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி நிலையங்களில் 3.10 ஜிகாவாட் அளவிலான நிலையங்கள், 20 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. அவை தம் இறுதிக் காலத்தில் இருக்கின்றன. இவை திறன் குறைந்தவையாகவும் அதிகம் மாசுபடுத்துபவையாகவும் இருப்பதோடு, மாசு வெளியீட்டுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பூர்த்திசெய்வதுமில்லை. இந்த நெறிமுறைகளைப் பூர்த்திசெய்யும் நிலைக்கு இந்த ஆலைகளைச் சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அதிகச் செலவுபிடிக்கும். அந்தச் செலவுகளின் எதிரொலியாக, மின்கட்டணம் அதிகரிக்கும்.
புதிதாக 6.50 ஜிகாவாட் அளவுக்கு நிலக்கரி சார்ந்த மின்திட்டங்கள் பல்வேறு கட்ட அமலாக்க நிலைகளில் இருக்கின்றன. காலநிலை மாற்றம் பற்றிய நாடுகளுக்கு இடையிலான குழுவின் (IPCC) கூற்றுப்படி, புவிவெப்பமாதலைக் கட்டுப்படுத்த சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள்ளாகத் தக்கவைக்க வேண்டும். அதற்கு, அனைத்து நிலக்கரி மின்நிலையங்களுமே 2040-க்குள் கைவிடப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய அனல் மின்நிலையங்களைக் குறைந்த கரிம உமிழ்வு நிலையோடு கட்டி முடிக்க, அதிக செலவு பிடிக்கும்.
ஜெர்மனி தன்னுடைய பழைய மின் நிலையங்களை, உருகிய உப்பு ஆற்றல் சேமிப்பு நிலையங்களாக மாற்றத் தொடங்கிவிட்டது. அத்தகைய மறுபயன்பாடுகளுக்கு, அனல் மின் நிலையங்களில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்த முடியும். இது பொருளாதார அடிப்படையில் சாத்தியமான தீர்வு. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்து விநியோகிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையையும் இது வழங்கக்கூடும்.
கொட்டிக்கிடக்கும் ஆதாரம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறப்பான காற்று, சூரிய மின்னுற்பத்தித் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சூரிய மின்னுற்பத்தித் திறன் 17 ஜிகாவாட், காற்று மின்னுற்பத்தித் திறன் 103 ஜிகாவாட். இத்தகைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை மொத்தமாக ஒருங்கிணைப்பதே, தமிழ்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைக் கரிமமில்லாததாக மாற்றப் போதுமானது. 2021 மே மாத நிலவரப்படி, தமிழ்நாட்டின் காற்று - சூரிய மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் முறையே 8.52 ஜிகாவாட் - 4 ஜிகாவாட் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்த அளவு, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 12%. இவற்றோடு காற்றாலை மின்னுற்பத்தி - கட்டமைப்புத் திறன்களையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, உபரி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மற்ற மாநிலங்களுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும்கூட வழங்குவதற்குரிய வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பரிமாற்றத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதும் மேம்படுத்துவதும் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மையமாகத் தமிழ்நாட்டை மாற்றும்.
2020-ம் ஆண்டின் ஆற்றல் நுகர்வோடு ஒப்பிடும்போது, 2030-ல் இப்போது உள்ளதைவிட தமிழ்நாட்டின் ஆற்றல் நுகர்வு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அதிகரிக்கும்போது, விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். தற்போதுள்ள ஒருவழிப் போக்குவரத்துக்கு மாறாக, இருவழியிலும் ஆற்றலைக் கடத்துவதற்குரிய (மின்சாரத்தை நுகர்வோருக்கு விநியோகிப்பதோடு, அவர்களிடமிருந்து சூரிய மின்னாற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வாங்கிக்கொள்வது) மேலாண்மை முறைக்கு மாற வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த மாற்றத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, லட்சக்கணக்கான நுகர்வோர் பயன்படுத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிர்வகிப்பதற்கான புதுமையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்குக் கணிசமான முதலீடும் தேவைப்படுகிறது. அதோடு, மின்வாரியம் ஆற்றல் உற்பத்தித் தொழிலிலிருந்து வெளியேறி, மின்னுற்பத்தியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அதன் முதன்மைப் பணியான மின்விநியோகத் துறையில் அதிகமாக முதலீடு செய்ய நேரலாம்.
மாறும் கட்டண முறை
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கு, மின்கட்டமைப்பில் நெகிழ்வான சேவைகள் அவசியம். இதற்கு மாறிக்கொண்டேயிருக்கும் மின்கட்டண முறை தேவை. அதாவது, ஒரு நாளின் நேரம் - பருவநிலைக்கு ஏற்பக் கட்டணங்களும் மாறுபடும். அதோடு, மின்கல சேமிப்புக் கட்டமைப்புகளின் உதவியோடு நுகர்வோராகவும் உற்பத்தியாளராகவும் செயல்படும் தனிநபர்களிடமிருந்து விநியோகத்துக்குப் பெறப்படும் ஆற்றலை மதிப்பிடுவதற்குரிய சட்டரீதியான முறைகளும் தேவைப்படுகின்றன. அத்தகைய மெய்நிகர் மின்நிலையம் நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகளை வழங்குவதோடு, மின்விநியோகம் தடைபடாமல் தக்கவைக்கவும் உதவும்.
தமிழ்நாடு கரிமமில்லா மின்சாரக் கட்டமைப்பை எட்டுவதற்கான தொழில்நுட்பத் தீர்வுகள் இருக்கின்றன, பொருளாதாரமும் அத்தகைய மாற்றத்துக்கு வசதியாகவே இருக்கிறது. அது மட்டுமில்லாமல், புவி வெப்பமாதல் காரணமாக நமக்கு வேறு வாய்ப்புகளும் இல்லை. ஆகவே, கரிமமில்லா மின்சாரக் கட்டமைப்புக்கான இலக்கை நிர்ணயித்து, ஆற்றல் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஒருங்கிணைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைவதற்கான அமலாக்கத் திட்டங்களை உருவாக்குவதற்கான ஒன்றுதிரண்ட அரசியல் உறுதிதான் இப்போதைய அவசியத் தேவை.
- மார்ட்டின் ஷெர்ஃப்லெர், மாற்று ஆற்றல் துறைச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: martin@aurovilleconsulting.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago