தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக ஏறக்குறைய கடந்த 18 மாதங்களாகப் பள்ளி, கல்லூரிகள் மூடிக் கிடந்தன. பெருந்தொற்று நெருக்கடி நிலையால் கல்வி நிலையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாணவ மாணவிகளை ஆன்லைன் வகுப்பிற்கு அழைத்துச் சென்றன. ஓராண்டுக்கும் மேலாக இணையம் வாயிலாகவே வகுப்புகளே நடந்தேறின.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பல வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு செப்டம்பா் 1ஆம் தேதியில் இருந்து கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்தது. நீண்ட காலத்துக்குப் பின் வகுப்பறைகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்தோடு பாடம் கற்றுக்கொள்ள வந்திருப்பாா்கள் என்ற அசட்டு நம்பிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தேன். எனது நம்பிக்கை வீணாகிப்போனது.
முதல் நாள் அதிர்ச்சி
கரோனா தடுப்பூசி செலுத்திய 30 மாணவா்கள் வந்திருந்தனர். அவா்களின் உடல் வகுப்பறையில் இருந்தது. ஆனால், அவர்களின் மனமோ நான் நடத்திய பாடத்தோடும், என்னோடும் இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் வகுப்பறையில் மயான அமைதி நிலவியது. முகக்கவசம் அணிந்திருப்பதால் மாணவர்களின் முக பாவனைகளையும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு அதுவே சிறந்த வழியாகவும் மாறிவிட்டது. மாணவர்களிடம் தீவிரமான கவனச்திதறல் ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவர்களோடு தொடர்ச்சியாக உரையாடியதில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாணவர்களால் ஓரிடத்ததில் நிலைக்க முடியவில்லை என்பது தெரியவந்தது.
கரோனா ஊரடங்கும் ஆன்லைன் கல்வியும் சேர்ந்து, மாணவர்களைப் பெரும் பள்ளத்தில் தள்ளிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நெருக்கடி காலம் மாணவர்களிடையே உடலளவிலும் மனதளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் அரசும் கல்விக்கூடங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தத் தலைமுறையினரை இக்காலத்தின் மோசமான விளைவுகளில் இருந்து மீட்டெடுக்க முடியும்.
ஆன்லைன் அலட்சியம்
கரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் நடைமுறை ஒரு தற்காலிகமான மாற்றாகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக முதல் அலை, இரண்டாம் அலை எனத் தொடர்ந்ததால் ஆன்லைன் கல்வி நிரந்தரமாகி விட்டது. மாணவா்கள் தங்களின் விருப்பப்படியும், வீட்டில் இருந்தபடியும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது அவர்களுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. வகுப்பில் தங்களின் இருப்பை உறுதிசெய்வதற்காக மட்டுமே ஆன்லைன் வகுப்புக்கு வந்தனா். மற்றபடி வகுப்பை ஆழமாக கவனிக்க வேண்டும், புரியாத கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும், ஆசிரியரோடு கலந்துரையாட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை.
ஆன்லைன் வகுப்பிற்குள் வந்தவுடன், மைக் மற்றும் கேமராவை அணைத்துவிட்டு செல்போனில் கேம் ஆடுகிறார்கள். நண்பர்களோடு சாட் செய்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். படுக்கையில் படுத்தவாறு, வீட்டில் அரட்டை அடித்தவாறு, மருத்துவமனையில் நின்றவாறு, பைக்கில் பறந்தவாறு, காய்கறிச் சந்தையில் நடந்தவாறு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.
ஆசிரியர் கனிணித் திரையை பார்த்து தனக்குத் தானே பேசிக்கொள்வதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். எத்துணை தயாரிப்புகளோடு வந்தாலும், ஆன்லைன் வகுப்பின் போதாமைகளால் ஆழமாகப் பாடம் நடத்த முடியாமல் போகிறது. கல்லுாரி வளாகத்துக்கு வந்து ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் இணைந்து கற்கும்போது கிடைக்கின்ற சமூக மயமாக்கல் ஆன்லைன் கல்வியில் இல்லாமல் போகிறது. நேருக்கு நேரான உரையாடல் இல்லை என்பதால் உணர்வுத் தளத்திலும், உளவியல் தளத்திலும் மாணவர்களுக்குப் பெரிய தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் பெரும் தடையாக மாறியுள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்ததால், மாணவர்களிடம் இருந்த ஒழுங்கு நெறிமுறையில் காணாமல் போய் உள்ளது. வீட்டுக்குள்ளே இருந்ததால் சோம்பலுக்கு ஆளாகியுள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துவண்டிருப்பதால் உழைக்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற லட்சிய சிந்தனையை இழந்துள்ளனர். எது எளிதானதோ அதைத் தேர்ந்து கொள்வதற்கான துரித மனநிலையில் இருக்கின்றனர்.
ஆன்லைன் அடிமைகள்
மாணவர்கள் ஒரு நாளைக்கு 75 சதவீத நேரத்தைத் தொடுதிரையை உற்றுப் பார்ப்பதிலும், பொழுதுபோக்குக்காக சமூக வலைதளங்களிலும் செலவிடப் பழகிவிட்டனர். பலர் இணைய செயலிகளுக்கு அடிமைகளாகிவிட்டனர். இதனால் அறிவார்ந்த கருத்துகளை உள்வாங்கவும், ஆழமான கருத்துகளை கற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறுகின்றனர். நுனிப்புல் மேய்வது போன்று, மேலோட்டமான விஷயங்களைத் தெரிந்துகொண்டால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த குணம் நாளடைவில் அவா்களை எதிலும் காலூன்ற முடியாதவர்களாகவும், வாழ்க்கையை மேம்போக்காக அணுகுபவர்களாகவும் மாற்றிவிடும் ஆபத்து இருக்கிறது.
இது மாணவா்களின் எதிா்காலத்தை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த கரோனா கால செல்போன் பயன்பாடு மாணவர்களை கற்பனையான உலகத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல் அதிலே மாணவர்கள் மிதக்கின்றனர். எதிர்காலம் குறித்து எந்தத் திட்டமும், ஆரோக்கியமான கனவும் அவா்களுக்கு இல்லை. தன்னுடைய உடனடித் தேவை என்ன? நீண்ட காலத் தேவை என்ன? எதைத் தேர்ந்துகொள்ள வேண்டும், எதை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
படிப்பை முடித்து, கல்லூரிக்கு வெளியே காலடியெடுத்து வைக்கும்போது தகுந்த வேலை கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். இதனால் தன் வாழ்வை மட்டுமல்லாமல் குடும்பத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியாமல் மாணவர்கள் வருந்தும் நிலை எதிர்காலத்தில் உருவாகும் ஆபத்து நெருங்குகிறது. இதனை மாணவர்களும் பெற்றோரும் உடனடியாக உணர வேண்டும்.
மாணவர்களின் இந்த அவல நிலையைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பான சூழலில் அரசு விரைந்து கல்லுாரிகளை முழுமையாகத் திறக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளைக் கல்லூரிக்கு துணிந்து அனுப்ப வேண்டும். துடிப்பை இழந்து நான்கு சுவருக்குள் வாடி வதங்கியும், செல்போனின் மாய வலையில் சிக்கியும் இருக்கும் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும்.
மாணவா்களை மீண்டும் உயிர்த் துடிப்புள்ளவா்களாக மாற்றும் மந்திர சக்தி வகுப்பறை கற்பித்தலுக்கே இருக்கிறது. வண்டியின் இரு சக்கரங்களைப் போல வகுப்பறையில் கற்றலும் கற்பித்தலும் தடையில்லாமல் நடைபெற வேண்டும். ஆன்லைன் கல்வியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தலைமுறையைக் காப்பாற்றாமல் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்!
கட்டுரையாளர்: முனைவர். அ. இருதயராஜ்,
‘வழக்காறுகள் காட்டும் வாழ்வியல்’ நூலின் ஆசிரியா்
தொடர்புக்கு:iruraj2020@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago