நாம் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள உதவுவது, நம் தாய்மொழியாகும். புரியாத மொழி பேசுபவருடன் நம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள உலகில் அனைவராலும் புரிந்துகொள்ள முடிகின்ற மொழி, “சைகை மொழி”. கடுமையான பணி நெருக்கடி, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யவேண்டிய நிலையில் இருப்போர் ஆகியோர் வாய்மொழியிலிருந்து சடுதியில் சைகை மொழிக்கு மாறி, பலருடன் உரையாடுவதைப் பார்க்கிறோம்தானே!
ஆம், உலகின் மிகப் பழையதும் உலகப் பொதுமொழியும் சைகை மொழியே!
அத்தகைய சைகை மொழியை நாம், தினசரி வாழ்க்கையில் நிச்சயம் ஒன்றிரண்டு முறையாவது பயன்படுத்திவிடுகிறோம். அதாவது, நமக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று, பேச்சு மொழி, இன்னொன்று சைகை மொழி. இப்போது கொஞ்சம் யோசிப்போம். நமக்குப் பேசும் திறன் இல்லை. சைகை மொழிதான் நமது மொழி என்றாகிவிட்டது. நமக்கும் சமூகத்துக்குமான உரையாடல் எப்படி இருக்கும்? நம்மைப் போன்றவர்களின் குரலாக நாம் எங்கெல்லாம் ஒலிப்பது? நமக்கான உரிமைகள் என்னென்ன? சவால்கள் என்னென்ன? -இப்படியெல்லாம் மனது சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது அல்லவா!
அப்படித்தான் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சிந்திக்க வேண்டும் என்று வாய் பேச முடியாத, செவித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர். தங்களின் குரல், மக்கள் அரங்கங்களில் ஒலிக்கவேண்டும் என்று பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். இது, உலக உருண்டையில் எங்காவது நிகழ்ந்திருக்கிறதா என்று ஆர்வத்துடன் தேடுகின்றனர்.
» ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடங்கள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி இல்லை: தலிபான்கள் அறிவிப்பு
அதற்கு விடையாகத் திகழ்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சைகை மொழி பேசும் தோழி ஷெர்லி பின்டோ. காது கேட்காத- வாய் பேச முடியாத அத்தனை தோழமைகளுக்கும் ஒரே-முதல் பிரதிநிதியாக முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் அவர்.
விகிதாச்சார பிரதிநிதித்துவம்
உலகிலுள்ள அனைத்துப் பாராளுமன்றங்களையும் தேடித்தேடிப் பார்த்தோமேயானால், பாராளுமன்ற உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் ஜப்பானிலும் கொரியாவிலும் மலேசியாவிலும் சேர்த்து பதிமூன்று எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.
மாற்றுத்திறனாளிகளின் மக்கள்தொகை உலக அளவில், 110 முதல் 190 கோடி வரை இருக்கும் என்ற நிலையில் பதிமூன்று எம்.பி.க்கள் இத்தனை கோடி மாற்றுத்திறனாளிகளுக்கான சரியான விகிதாச்சார பிரதிநிதித்துவம் இல்லை என்பது யாவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.
கல்வி நிறுவனங்களில் ஒரு ஆசிரியருக்கு 40லிருந்து 60 வரையிலான மாணவச் செல்வங்களை மட்டுமே பாடம் கற்பிக்க முடியும் என்பது அறிவியல் ரீதியாகக் கண்டறிந்த உண்மை. அதே வாதம் மாற்றுத்திறனாளிகள் விஷயத்துக்கும் பொருந்தும்தானே!
காலந்தோறும் காத்திருப்பு
சமூகத்தால் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் இந்தியாவில் 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த இந்திய நாட்டில் 46 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான நலனில் அக்கறை கொண்டு தேசிய ஆணையம் தொடங்கப்பட்டு இருக்கிறது என்பதே வருத்தத்திற்குரியதுதான்.
அப்படியானால் தேசிய கட்டமைப்புகள், மாநிலங்களுக்கு வந்தடைய குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. அறிவியலில் உச்சம் தொடும் நம் இந்திய நாட்டில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட 50 ஆண்டுகள் பிடிக்கிறது என்பது ஆமை நடைக்கு ஒப்பானது.
இந்திய அரசியலை விடுங்கள், தமிழக அரசியலிலாவது மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்பதே விடை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்கள் மின்னக்கூடும். ஆனால், விதிவிலக்கு விண்மீன்கள் ஒருபோதும் வீதிவிளக்குகளாக ஆக முடியாதே.
இருப்பினும் நம்பிக்கை கீற்றுகளைத் தோற்றுவிக்கும் சக்தியாக அவர்களை மாற்றுத்திறனாளிகள் சமூகம் புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் போராடுகிறது.
பாடலூர் விஜய்
திமுகவில் களப்பணியாற்றிய தசைச்சிதைவு நோய் (டெஷூன் மஸ்குலர் டிஸ்ட்ரபி) தாக்கிய மாற்றுத்திறனாளி பாடலூர் விஜய் ஒரு சாதனையாளர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்நோயினால் பாதிப்புக்குள்ளாயிருப்பினும் பாடலூர் விஜய் அதன் பாதிப்பினால் உயிரிழந்திருந்தாலும், தன்னம்பிக்கையினால், பகுத்தறிவால், உணர்வால் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களிடையே ஒரு அரசியல் விழிப்புணர்வை, "மாற்றுத்திறனுடையோருக்கு அரசியல் பிடித்தம் உண்டு" என்று பறைசாற்றினார்.
"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு", என்று அண்ணா சொன்னது போன்று, "மாற்றுத்திறனுடையோர் என்றோர் மக்கள் சமூகமுண்டு; மக்கள் பணியாற்ற அரசியலில் அவர்களுக்கு விருப்பமுண்டு" என்பதை இச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
மாற்றுத்திறன் தோழர்கள் ஏதோ செய்தி வைத்திருக்கிறார்கள், ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறார்கள்!!!
மாற்றுத்திறனாளிள் தங்களின் உடல் மற்றும் மன வலிகளைத் தாண்டி, தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினையை அல்லது அதையும் தாண்டி வேறு ஒரு ஒடுக்கப்பட்ட, ஏதோ ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு கவனம் தேவை என்பதை உங்கள் மூலமாக வெளிப்படுத்த முனைகிறார்கள் என்பதை கொஞ்சம் சமூக நீதிப் பார்வையிலிருந்து புரிந்து, கம்பீரத்துடன வாய்ப்பளிக்க முன்வரவேண்டும்.
பெரும்பான்மையான கட்சிகள் மாற்றுத்திறனுடையோருக்கு எவ்வொரு வாய்ப்பையோ , தளத்தையோ தருவதில்லை என்பதே கசக்கும் உண்மை.
ஊறுகாய்
விதிவிலக்காக சில கட்சிகள் மாற்றுத்திறனுடையோருக்கென்று ஒரு அணியை வைத்திருக்கிறார்கள். ஆனால், உள்ளபடியே சொல்லவேண்டுமானால் "ஊறுகாய்" போன்றுதான் அவ்வணியை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. ‘எங்கள் துறைவாரிப் பண்டசாலையில் இந்தப் பண்டமும் உண்டு’ என்கிற ரீதியில் கிடைக்கும் வாய்ப்பு. இதற்காக மகிழ முடியாது.
இங்கே திமுகவிலிருந்து களப்பணியாற்றிய தோழர் விஜய் போன்ற ஒரு மாற்றுத்திறனாளி, மற்ற கட்சிகளில் இல்லையா? அல்லது மாற்றுத்திறன் சகோதரர்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லையா? இக்கேள்வியைத் தமிழக அரசியல் கட்சிகளுக்கும், இங்குள்ள தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைமைகளின் மனசாட்சிக்கும் விட்டுவிடுவோம்.
இன்னொன்றையும் கவனியுங்கள்… மாற்றுத்திறனுடையோருக்கென்று திமுகவில் தனியாக அணி இல்லை என்பதைக் குறிப்பிடும் அதே வேளையில், இப்படியான நோய் பாதிப்பில் இருந்து கொண்டு, அவதியுற்ற நிலையிலும், தோழர் விஜய்யின் பங்களிப்பைப் பாராட்டி திமுகவின் முன்னாள் முதல்வர் கலைஞரும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து, ஊக்கம் அளித்தது அந்த இளைஞனுக்கு எவ்வளவு ஊக்கம் கொடுத்திருக்கும் என்பதை ஒரு மாற்றுத்திறனாளியின் மனதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் இந்தச் சமூகம்.
சில கேள்விகள்
மாற்றுத்திறனாளிகளிடம் சில கேள்விகள் உண்டு:
*சமூக நீதியைத் தங்கள் கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள், மாற்றுத்திறனுடையோருக்கு அரசியல் பங்களிப்பைத் தரவும்; ஒதுக்கப்பட்டோர் தனியாகவே பங்களிப்பைச் செலுத்தவும், ஏன் வாய்ப்பினை அளிக்க மறுக்கின்றன?
*மாற்றுத்திறனாளிகளைத் தனி அணியாக வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ஏன் மாற்றுத்திறனுடையோர் பிரச்சனைகளை அக்கட்சி மாற்றுத்திறனுடையோரைக் கொண்டு பேசுவதில்லை? அக்கட்சியின் மாற்றுத்திறனுடையோரின் அற்றலை ஏன் கண்டுகொள்ளவில்லை ?
*மாற்றுத்திறனுடையோர் தினத்தன்று வாழ்த்து அறிக்கை கூட கொடுக்க சில கட்சிகள் தயங்குவது ஏன்?
நிழலும் நிஜமும்
டிசம்பர் 3 இயக்கம் மதுவிலக்குக்காக உண்ணாநிலை இருந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் எங்களைச் சந்தித்தார். அப்போது, "எங்கள் கட்சியில் மாற்றுத்திறனுடையோர் அணி வைத்திருக்கிறோம்" என்று இருவரைக் கண்ணில் காட்டினார். அதன்பிறகு அப்படி ஒரு அணி இருப்பதே தெரியவில்லை.
இன்னொரு கட்சி, தமிழக கட்சிகளில் நாங்கள்தான் முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக அணி உருவாக்கினோம் என்று பெருமையாகச் சொன்னது. ஆனால் அக்கட்சியிலும் அதே நிலைதான். அந்தக் கட்சியின் சில தலைவர்களுக்கு (தனிப்பட்ட நபராக) எங்கள் மேல் இருந்தது, ஒருவிதமான கரிசனை பார்வையே தவிர, ஒரு அணி உருவாக்குவதில் முனைப்பு இல்லை என்பது வெள்ளிடை மலை. அக்கட்சியின் சித்தாந்தத்திலோ, கொள்கையிலோ மாற்றுத்திறனாளிகளின் சமூகநீதி இல்லாமற் போனால், அந்தக் கட்சியிலும் நாங்கள் ஒரு காட்சிப் பொருளே.
அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களை எடுத்துக்கொள்ளுங்களேன். ஏதாவது ஒரு அரசியல் கூட்டத்தில் காது வாய் பேச முடியாத தோழமைகள் இருப்பார்களேயானால், தலைவர்கள் பேசும் கருத்துகள் எவ்வாறு அனைவரையும் சென்றடையும்? அதைப் பற்றி எவரேனும் சிந்திக்கிறார்களா? அவர்களும் நாட்டு நடப்பை அறிந்துகொள்ள உரிமையுள்ளவர்கள்தானே! அவர்களுக்கு, தான் பேசுவதை சைகை மொழிபெயர்ப்பு செய்ய, சைகை மொழிப்பெயர்ப்பாளர்களை நிகழ்விற்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை?
இணையதளங்கள்
ஒவ்வொரு கட்சிக்கும் இணையதளம் உண்டு. எல்லா இணையதளங்களும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கென்று பயன்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறதா? பார்வை மாற்றுத்திறனாளிகள் கட்சிகளில் இல்லை என்றாலும் கட்சிகளைப் பற்றிய புரிதல் வேண்டி இணையதளங்கள் அவர்களுக்கு ஏற்ப அமைத்தால் தானே கட்சிகளில் சேர முடியும்.
வாய்ச்சொல்லில் வீரரடி!
மேடைப் பேச்சுகளில் சில கட்சித் தலைவர்கள் நகைச்சுவையை, இலக்கிய மழையைப் பொழிந்து நம்மை மகிழ்விக்கின்றனர்தான். ஆனால், அதே வாயால் மாற்றுத்திறனாளிகளை அநாகரிகமாகப் பேசுகின்றனர். ஆனால், தங்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் போது, மாற்றுத்திறனாளிகளின் உடலின் இயலாமையைக் கிண்டலடித்துப் பேசுவதை மட்டும் நிறுத்த முடிவதில்லை. இதற்குக் காரணம் அக்கட்சிகள் மாற்றுத்திறனாளிகளை அரசியல்படுத்துவதில்லை செயல்படுத்துவதுமில்லை, அவர்கள் இடத்தில் தங்களை வைத்துப் (empathy) பார்ப்பதுவுமில்லை.
போகுமிடம் வெகுதூரம்
பல அரசியல் கட்சிகள் மாற்றுத்திறனாளிகளைக் கண்டுகொள்வதே கிடையாது. என்றபோதும், விதிவிலக்காக ஒருசில இயக்கங்கள் தங்கள் பணிகளிலும், மாற்றுத்திறனாளிகளின் முன்னெடுப்பிலும் உடன் பயணிக்கின்றனர். இது, அனைத்து இயக்கங்களுக்கும் நீள வேண்டாமா?
ஐ.நா.மாற்றுத்திறனாளி உரிமை உடன்படிக்கை சரத்து 29 (1)(2)ன்படி எல்லா கட்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாய் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனைப்பு ரிந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பிரச்சினைகளுக்காகவும், சமூகத்தின் பிரச்சினைக்காகவும் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
நாங்களும் சமூகத்தின் ஓர் அங்கமே
கஜா புயலின் பாதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளியின் விவசாயத் தந்தை பாதிக்கப்பட்டால், அது எங்களுக்கும் பாதிப்புதான்.
பெட்ரோல் விலை உயர்வால் எங்கள் சிறப்பு (பெட்ரோல் ஸ்கூட்டர்) வண்டிகளைப் பயன்படுத்த முடியாமல் வீட்டில் முடங்குகிறோம். பெட்ரோல் விலை உயர்வு எங்களையும் பாதிக்கிறதுதானே! நாங்கள் அதையும் பேசுவோம், எல்லோருக்குமான விலை உயர்வுத் துன்பம் குறித்தும் பேசுவோம். எங்களைப் பிரித்தாள முடியாது. நாங்களும் சமூகத்தின் ஓர் அங்கமே. பொறுப்புள்ள உலகக் குடிமக்களே!
இனியாவது சட்டமியற்றுவோர், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுச் சமூகம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பங்களிப்பு, பிரதிநிதித்துவம் குறித்துப் பேசட்டும்.
நாங்கள் எங்களுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் பேசுவோம் என்று புரிந்துகொள்ளட்டும்!
நாங்கள் எந்தக் கட்சிக்கும் உடனிருந்து புகைப்படங்களுக்கு மட்டும் போஸ் கொடுக்கும் ‘செட் பிராப்பர்டி’ அல்ல என்பதை உணர்ந்துகொள்ளட்டும்.
கட்டுரையாளர்கள்: பேராசிரியர்கள் டி.எம்.என்.தீபக், ரத்னா.
தொடர்புக்கு : deepaknathan315@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago