கேஜ்ரிவாலுக்கு எத்தனை மதிப்பெண்?

By ஆர்.ஷாஜஹான்

பாஜகவின் நெருக்கடிகளையும் கடந்து சரியான திசையில் செல்கிறது ஆம் ஆத்மி அரசு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்னால் டெல்லி அரசின் அமைப்பு குறித்து அலசுவது அவசியமாகிறது. டெல்லி முழு அதிகாரம் பெற்ற மாநிலம் அல்ல, மைய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் வரும் ஒன்றிய ஆட்சிப் பகுதி (யூனியன் டெரிடரி). டெல்லியில் ஐந்து நகராட்சி அமைப்புகள் உண்டு. புதுடெல்லி மாநகராட்சி வாரியம் பகுதி மத்திய அரசின்கீழ் வருவது. இதன் நிர்வாகத்தில் டெல்லி அரசுக்கு மிகச் சிறிய பங்குதான் உண்டு. இவை தவிர, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய இதர மூன்று மாநகராட்சிகளும் மத்திய அரசின்கீழ் வருபவைதான். கன்டோன்மென்ட் நகராட்சி மற்றொரு தனி அமைப்பு.

டெல்லியில் காவல்துறை மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது. டெல்லி அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை நிர்வகிக்கும் டெல்லி மேம்பாட்டு வாரியம் (டிடிஏ) மைய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. இதிலும் டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் இதன் தலைவர்.

காற்றில் விடப்படும் வாக்குறுதி

ஒவ்வொரு தேர்தலின்போதும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரப்படும் என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் கூறும், தேர்தலுக்குப் பிறகு மறந்து விடும். கடந்த தேர்தலின்போதும் பாஜக அளித்த வாக்குறுதி அப்படியே ஆனது. ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் நிர்வகிக்கப்படும் இதர மாநில அரசுகளையும் டெல்லி அரசையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் டெல்லி அரசின் அதிகார எல்லை வரம்புக்கு உட்பட்டதே. மைய அரசின் அதிகாரம் எங்கே முடிகிறது, மாநில அரசின் அதிகாரம் எங்கே துவங்குகிறது என்று பிரித்தறிய முடியாத சிக்கலான அமைப்பைக் கொண்டது டெல்லி.

2012 நவம்பரில் உருவாகி, 2013 நவம்பரில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குறுகிய கால ஆட்சி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி. 2015 பிப்ரவரி தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று - 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி கண்டு ஆட்சி அமைத்தது. ஊழலற்ற நிர்வாகம், இலவச வைஃபை, 500 பள்ளிகள், 20 கல்லூரிகள், டிடிஏ சீரமைப்பு, லோக் பால் சட்டம் எனப் பல வாக்குறுதிகளை வழங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அரசு, இந்த வரம்புகளுக்குள் என்ன செய்திருக்கிறது அல்லது செய்யவில்லை?

மின் கட்டணம், குடிநீர்

ஆட்சிக்கு வந்ததும், ஆம் ஆத்மி அரசு செய்த முதல் நடவடிக்கை - முந்தைய 42 நாள் அரசின்போது செய்ததுபோலவே குறிப்பிட்ட யூனிட்டுகள் வரை மின் கட்டணத்தைக் குறைத்தது, குறிப்பிட்ட அளவுக்குக் குடிநீரை இலவசமாக்கியது. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்குப் பெரும் பயனைத் தரும் இந்த நடவடிக்கை வரவேற்பு பெற்றது. மேல்தட்டு மக்களுக்கும்கூட இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. அதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத வகையில் நிர்வகித்துள்ளது. குறிப்பாக, லட்சக்கணக்கான அடுக்கக வீடுகளுடன் உருவாக்கப்பட்ட துவாரகா பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் இருக்கவில்லை, அல்லது போதுமான அளவுக்கு இல்லை. எல்லாரும் நிலத்தடி நீரையும் தண்ணீர் லாரிகளையும் மட்டுமே நம்பியிருந்தனர். அங்கே இப்போது குடிநீர் விநியோகத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர்க் கட்டணத்தைக் குறைத்தபோதிலும், விநியோகத்தை முறைப்படுத்தியதன் மூலம் டெல்லி குடிநீர் வாரியம் லாபத்தில் இயங்குவதாகவும் தெரியவருகிறது.

ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், மின் துறையில் தனியார்மயத்தை அறிமுகம் செய்து மின் தடையைப் பெருமளவு போக்கியிருந்தது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. டெல்லியில் மின் தடை அறவே இல்லாத அல்லது அரிதாகவே தடை ஏற்படும் நிலைதான் உள்ளது.

போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள்தான். 40 ரூபாய் பாஸ் வாங்கி, ஒரு நாள் முழுவதும் ஏசி இல்லாத எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம். 50 ரூபாய் பாஸில் ஏசி பேருந்து உட்பட எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம் என்பது டெல்லிக்கே உரிய சிறப்பு. ஓராண்டில் கட்டண உயர்வு ஏதும் இல்லை. முந்தைய அரசுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டுவதில் முனைந்திருந்தன என்றால், இந்த அரசு வாக்களித்தபடி கடைக்கோடிப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேட்டரி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மெட்ரோவை இணைக்கும் வேன்கள் ஆகியவற்றைப் பரவலாக்கியுள்ளது. சில பேருந்துகளில் இலவச வைஃபை பெயரளவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி

சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஒற்றை, இரட்டை இலக்கத்தில் முடியும் வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களில் ஓடக் கூடாது என்ற சோதனை முயற்சி. ஜனவரி 1 முதல் 15 வரை மேற்கொண்ட இந்த முயற்சி கார் வைத்திருப்பவர்களுக்கு அதிருப்தி தருவதாக இருக்கலாம். ஆனால், சாலையில் அதிக கார்கள் இல்லாததால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்து வோருக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்தது. இதே திட்டத்தை, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் மோட்டார் பைக்குகளையும் இதில் சேர்க்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஊழலை ஒழிப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் கணிசமாக நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு துறையிடமும் ஓடுவதற்குப் பதிலாக ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்து, இணைய வழி அனுமதி பெறுவதற்கு வழி செய்தது. சாதிச் சான்றிதழை இணையவழி பெற வழி செய்தது. குடும்ப அட்டை முதல் வாகனப் பதிவு வரை சாமானிய மக்களின் பல்வேறு விண்ணப்பங்கள்மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. பிறப்பு இறப்புச் சான்றிதழ்களையும் இணைய வழியில் பெற முடியும். அரசு அலுவலகங்களில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கவும், லஞ்சத்துக்கு வழிசெய்த பல வேலைகளை இணையத்தின் மூலமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தகுந்த மாற்றமாகும்.

அதேபோல, அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அதிகாரமும் அதே அதிகாரிகளிடம் இருந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தலுக்கான நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டது. ஓராண்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. டெல்லி அரசின்கீழ் வரும் 38 மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒரு மருத்துவரைக் கொண்ட சிறிய மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறும் திட்டங்கள்.

சோதனையே சாதனை

அமைச்சராக இருந்த தோமர், போலிச் சான்றிதழ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும், ஆசீம் அகமத் கான் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டதும் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள். ஊழல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதும் அமைச்சர் நீக்கப்பட்டார், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, இது வேறெந்தக் கட்சியும் அரசும் செய்யாதது என சோதனையை சாதனையாக மாற்றிக்கொண்டார் கேஜ்ரிவால்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்குப் பிறகு, கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று சொன்னது சம்பிரதாயத்துக்காகவே என்பது அடுத்த ஓராண்டில் நிரூபணம் ஆனது.

ஆம் ஆத்மி கட்சி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த லோக் பால் மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முந்தைய மசோதாவிலிருந்து மாற்றப்பட்ட வடிவம்தான். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அதேபோல, மாநகராட்சிகள், டெல்லி மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளைச் சீரமைக்கும் வாக்குறுதியையும் டெல்லி அரசு எளிதாகச் செய்துவிட முடியாது. புதிய பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் நிலத்துக்காக மத்திய அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். டெல்லி அரசு - துணை நிலை ஆளுநர் (மத்திய அரசு) மோதல்கள் தொடரும் நிலையில், இவையெல்லாம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் கணிப்பது சிரமம்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு நெருக்கடியும் கொடுக்கிறார், நெருக்கடிக்கும் ஆளாகிறார். உள்கட்சி விவகாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போதே அரசியல் விவகாரக் குழுவை ஓரங்கட்டிய கேஜ்ரிவால், அடுத்த சில நாட்களில் தந்திரமாகக் காய் நகர்த்தினார். பெங்களூருவில் ஆயுர் வேத சிகிச்சைக்காகச் சென்றுவிட்ட நேரத்தில், அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் மீது தனது ஆட்களை விட்டு தாக்குதல் நடத்தச் செய்தார். அடுத்த சில நாட்களில் இருவரும் நீக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது ஒருகோடி ரூபாய் நன்கொடை கொடுத்த பிரசாந்த் பூஷண், கட்சிக்கு வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக இருந்த யோகேந்திர யாதவ் இருவரையும் நீக்கிய பிறகு, கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டார். அரசியல் விவகாரக் குழுவின் வழிகாட்டல்படி நடந்திருந்தால் போலிச் சான்றிதழ் கொடுத்தவரோ, சாராய விநியோகம் செய்தவரோ ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆகியிருக்க முடியாது.

சரியான திசை

அதே நேரத்தில், யோகேந்திர யாதவ் போன்றவர்களின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள், பகுதிவாழ் மக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து, டெல்லிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ‘டெல்லி டயலாக் கமிஷன்’ என்ற முறையை ஆம் ஆத்மி கட்சி அறிமுகம் செய்தது. அது இப்போது ‘மொகல்லா சபா’ என்ற வடிவிலும் ‘டெல்லி டயலாக் கமிஷன்’ வடிவிலும் முன்வைக்கப்படுகிறது. மக்களுடன் நேரடித் தொடர்பு, அவர்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படுவதாகக் காட்டுதல் என்னும் திசையில் சரியாகவே போய்க்கொண்டிருக்கிறார்.

ஓராண்டில் உடனடிப் பிரச்சினைகளில் ஆம் ஆத்மி அரசு ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டங்களை மதிப்பிட காலம் ஆகும்! அது மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இருக்க முடியும்.

- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்