உலகின் போக்கை மாற்றிய இரட்டை கோபுரத் தாக்குதல்

By முகம்மது ரியாஸ்

செப்டம்பர் 11, 2001. நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்களில் 3,000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோரும் கிறித்தவம், இஸ்லாம், யூதம், இந்து, பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும், பெரும் செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர், லிஃப்ட் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அடங்குவார்கள். தொழில்நுட்பரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவில் இப்படியொரு தாக்குதல் நிகழ்ந்தது அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே அசைத்துவிட்டது. 20-ம் நூற்றாண்டில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் போல் 21-ம் நூற்றாண்டின் துயர அடையாளங்களுள் ஒன்றாக இரட்டைக் கோபுரத் தகர்ப்பு மாறியது.

இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திவந்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிர்வினையாக ஒசாமா பின்லேடன் தலைமையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகெங்கும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு அதிகமானது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், அது பயங்கரவாதத்துக்கு எதிரானதாக மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராகவும் மாறியது.

ஆப்கனில் இருபது ஆண்டுகள்

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்திருந்தனர். பின்லேடனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி தாலிபானை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால், பின்லேடனை ஒப்படைக்க தாலிபான் மறுத்தது. இதன் நீட்சியாக 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா, அடுத்த சில வாரங்களிலே ஆட்சியிலிருந்து தாலிபானை விரட்டியடித்து, அந்த நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 2011-ல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படை ஆப்கனிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கியது. எனினும், முழுமையாக வெளியேற 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த 20 ஆண்டுகளில் பின்லேடனைக் காரணம் காட்டி, ஈராக் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை நிகழ்த்தியது. அனைத்துக்கும் மேலாக, கருத்தியல்ரீதியாக முஸ்லிம்கள் சார்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்தது.

இஸ்லாமோபோபியா

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதச் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ‘உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை’ (Department of Homeland Security) என்றொரு துறையை உருவாக்கி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களைக் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் நீட்சியாக, முஸ்லிம்கள் சுதந்திரமாகத் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற முடியாத வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் தொடங்கின. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மிக மோசமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தியாவிலே எந்த விசாரணையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறையில் வாடுகின்றனர். இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும், நிறுவனங்களில் வேலை கிடைப்பதும்கூடச் சிரமமான ஒன்றாக மாறியிருக்கிறது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான இந்த 20 ஆண்டுகளில் உலகளவில் முஸ்லிம்கள் மீது நியாயமற்ற அச்சமும் வெறுப்பும் உருவாகியுள்ளன. முஸ்லிம்களின் ஆடைகள், மத அடையாளங்கள், வழிபாடுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டன. பயங்கரவாதம் என்பது முஸ்லிம்களின் அங்கமாகப் பார்க்கப்படலானது. முஸ்லிம் வெறுப்பு பரவுவதற்கு ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் ஐநாவின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எங்காவது பயங்கரவாதச் செயல்பாடுகள் நடக்கும்போது பள்ளியில், கல்லூரியில் சக முஸ்லிம் நண்பனிடம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி “ஏன்டா இப்படிப் பண்றீங்க?” உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்குச் சாமானிய முஸ்லிம்கள் பொதுத்தளத்தில் மன்னிப்புக் கோர வேண்டிய நிலையிலும், தான் அவர்களில் ஒருவன் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையிலும் உள்ளார்கள்.

முஸ்லிம்களுக்கான பொறுப்பு

1979-க்குப் பிறகே பயங்கரவாதத் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் ஈரானில் ‘இஸ்லாமியப் புரட்சி’ நடைபெற்று, மத அடிப்படைவாதக் குழு ஈரானில் ஆட்சி அமைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா நுழைந்தது. அதே சமயத்தில் சவூதியில் வஹாபியிசம் தீவிரம் கொள்கிறது. இவற்றின் நீட்சியாகவே பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆங்காங்கு நிகழத் தொடங்கின. இவை, தனிப்பட்ட முஸ்லிம்களின் வெளிப்பாடோ நோக்கமோ அல்ல: அரசியல்ரீதியாக, கருத்தியல்ரீதியாக இஸ்லாமியக் கடும் போக்காளர்களின் எழுச்சியின் விளைவுகள் இவை.

இத்தகைய பயங்கரவாதிகளின் இலக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மட்டுமல்ல; சக முஸ்லிம்களும்தான். மதவெறி என்பது எல்லா மதங்களிலும் இருப்பது. தன் கொள்கையிலிருந்து மாறுபட்டால் அந்த வெறி தன் சொந்தச் சகோதரனைக்கூட விட்டுவைக்காது. கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானில்தான் அதிக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரையிலான பயங்கரவாதத் தாக்குதலில் அதிக அளவில் முஸ்லிம்களே உயிரிழந்திருக்கின்றனர். தற்போது ஆப்கனில் தாலிபான் ஆட்சியைக் கண்டு அஞ்சுவதும் முஸ்லிம்கள்தான்.

ஆக, சாமானிய முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதே சமயம், முஸ்லிம்கள் மீதான பிற மக்களின் விலக்கம் என்பது எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாற வாய்ப்புள்ளவர்கள் என்ற பார்வையிலிருந்து மட்டும் வருவதில்லை. மதம் சார்ந்த இறுக்கத்திலிருந்து அந்தப் பார்வை உருவாகிறது என்று சொல்ல முடியும்.

உலகளவில் பல்வேறு மதங்களுடன், கலாச்சாரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று நாம் நியாயம் கோர முடியும். ஆனால், ஒரு முஸ்லிம் தன்னளவில் எந்த அளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டவராக இருக்கிறார் என்பதும் முக்கியமல்லவா? முஸ்லிம் நாடுகளில் நிகழும் ஏனைய மதத்தினர் மீதான ஒடுக்குமுறை குறித்து ஒரு சாமானிய முஸ்லிமின் தரப்பு என்ன, ஒரு முஸ்லிம் பெண் பர்தா அணிய விரும்பவில்லையென்றால், அதற்கு ஒரு சாமானிய முஸ்லிமின் எதிர்வினை என்ன என்பதையும் நாம் ஒருமுறை கேட்டுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் வயதுக்கு வந்த பிறகுதான் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ஐந்து வயதுக் குழந்தைக்கே பர்தா அணிவிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நாம் என்ன நியாயம் சொல்லப்போகிறோம்?

முஸ்லிம் சமூகம் பொதுத்தளத்திலிருந்து விலகிப் பயணிக்கிறது என்ற விமர்சனத்துக்கு முதலில் நாம் முகம் கொடுக்க வேண்டும். ஒரு சமூகத்தில் காணப்படும் இறுக்கம் ஏனைய சமூகத்திடம் அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் மதம், எங்கள் உரிமை என்று மட்டும் இருந்துவிட முடியாது. ஏதோவொரு விதத்தில் கூடுதல் அக்கறை எடுத்துப் பொதுச் சமூகத்துடன் ஊடாட வேண்டியது எப்போதுமே அவசியம்.

மதம் கடந்த பொது உரையாடலில் தன்னை இணைத்துக்கொள்ளுதல், அரசியல் பங்கேற்பு, பெண் கல்வி ஆகிய விஷயங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது. இஸ்லாமோபோபியாவுக்கு மேற்கத்திய நாடுகளை மட்டும் காரணம் காட்டி நாம் தப்பித்துவிட முடியாது!

- முகம்மது ரியாஸ்,
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

செப்டம்பர் 11 - இரட்டைக் கோபுரத் தாக்குதல் 20 ஆண்டு நிறைவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்