நாட்டைத் தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இந்த 21-ம் நூற்றாண்டிலும் மேம்படவில்லை என்பது மட்டுமல்ல, இன்னும் அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருப்பதுதான் வேதனை. அவர்கள் சிந்தும் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று வரை எந்த அரசும் முயலவில்லை.
இந்தியா முழுவதுமே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிரந்தரப் பணியாளர்களைவிட ஒப்பந்தப் பணியாளர்கள் அதிகம். நிரந்தரப் பணியாளர்களுக்கு பிஃஎப், ஓய்வூதியம், நிரந்தர வீடு போன்ற விஷயங்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்பது அவர்கள் வேலைக்கு வருவதிலிருந்து, அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வரை தொடர்கிறது.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பெறும் ஊதியம் மிகக் குறைவு என்பது எல்லோருக்குமே தெரியும். தெரிந்தும் அரசுகள் கண்டும் காணாமல் இருக்கின்றன. குறைந்த ஊதியத்தைக்கூட ஒப்பந்தக்காரர்கள் இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரைகூடக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய கொடூரம்! அவர்களின் குடும்பம் மாத ஊதியம் இல்லாமல் எப்படிச் சாப்பிடும் என்ற அறச் சிந்தனையே இல்லாமல் இருக்கும் ஒப்பந்தக்காரர்கள்தான் இன்றும் தூய்மைப் பணியாளர்களின் முதலாளிகள். இப்படிப்பட்ட முதலாளிகளிடம்தான் இந்த அரசு தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறது.
ஒப்பந்தப் பணியாளர்களை மிரட்டி, அவர்களுக்குக் கொடுக்கும் குறைந்த ஊதியத்திலேயே பிடித்தம்செய்து ஊழல் செய்கிற ஒப்பந்தக்காரர்கள், மேற்பார்வையாளர்கள் இன்றும் இருந்துகொண்டிருக்கிறார்கள். பல ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பிஃஎப், இஎஸ்ஐ பிடிப்பதில்லை. அப்படிப் பிடித்தாலும் அதைப் பணியாளர்களின் பெயர்களில் செலுத்துவதில்லை. பணியாளர்களுக்கு பிஃஎப் எண்கூடத் தெரிவதில்லை. ஒப்பந்தம் முடிந்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் விலகிவிடுகிறார்கள். இவ்வளவு வருடங்கள் வேலைசெய்தும் பிஃஎப் தொகை இல்லாமல் – கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு, கடைசியில் நிர்க்கதியாகத் தெருவில் நிற்கிறார்கள் ஒப்பந்தப் பணியாளர்கள். ஒரு மாநகராட்சியில் ஒப்பந்தக்காரர் பிஎஃப் பிடித்து, அதைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டார். ஒப்பந்தக்காரருக்குச் சேர வேண்டிய பணத்தையும் மாநகராட்சி கொடுத்துவிட்டது. ஆனால், இன்று வரை அவர் பிடித்த பிஎஃப்-ஐக் கொடுக்கவில்லை. அவரிடமிருந்து மீட்கவும் முடியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அவருடைய பணத்தை மாநகராட்சி கொடுக்கும்போதே பிஎஃப் தொகையைப் பணியாளர்களுக்குக் கொடுத்திருந்தால்தான் ஒப்பந்தக்காரருடைய பணத்தைக் கொடுக்க முடியும் என்று சொல்லியிருந்தால், அன்றே இந்தப் பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால், அந்த மாநகராட்சி அப்படிச் செய்யவில்லை. இன்றும்கூடப் பல மாவட்டங்களில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பிஎஃப் தொகை பிடிப்பதில்லை.
ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் காப்பீடு இல்லை என்பது அடுத்த கொடுமை. ஒப்பந்தப் பணியாளர் இறந்தாலோ அல்லது விபத்தில் ஊனமுற்றாலோ அவருக்கு எந்தவிதப் பலனும் கிடைக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா காப்பீடு ரூ.330-தான். எந்தக் காரணத்தால் இறந்தாலும் ரூ.2 லட்சம் கிடைக்கும்.அதுபோல், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு ரூ.12 மட்டும்தான். விபத்தில் இறந்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும். ஊனமுற்றாலோ ரூ.2 லட்சத்துக்குள் அதற்கேற்ற தொகை கிடைக்கும். இவ்வளவு குறைந்த பிரீமியத்தில் பலன்கள் கிடைக்கும் இந்தக் காப்பீடுகளைக்கூட ஒப்பந்தக்காரர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்வதில்லை. அரசு அதிகாரிகள் இதை வலியுறுத்துவதும் இல்லை. சென்ற அதிமுக அரசு இதற்காகப் பணம் ஒதுக்கியது. அது என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. இஎஸ்ஐ தவிர, வேறு மருத்துவக் காப்பீடும் இல்லை. இஎஸ்ஐ மருத்துவமனை எல்லா இடத்திலும் இருப்பதில்லை. அதனால் பணியாளர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. தங்கள் ஊதியத்தில் பிடிக்கப்படும் இஎஸ்ஐ பணம் மருத்துவத்துக்குப் பயன்படுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். இதற்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா மிக முக்கியமான மருத்துவக் காப்பீடு ஆகும். இதில் வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில்கூடக் குடும்பத்தில் உள்ளவர்கள் கட்டணமின்றி மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். இது இலவசக் காப்பீடுதான். ஆனாலும்கூட, இப்போது வரை ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தக் காப்பீட்டை யாரும் பெற்றுத்தந்ததில்லை.
ஒப்பந்தப் பணியாளர்கள் எவருக்குமே சொந்த வீடு இல்லை. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் அவர்களைச் சேர்த்து, அவர்களுக்குச் சொந்த வீடு என்ற கனவை நிஜமாக்கலாம். இதுவரை யாருமே முயற்சி செய்யவில்லை. ஊதியத்தையே ஒழுங்காகத் தர மறுக்கிறவர்கள் இதையெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் என்று ஒரு தூய்மைப் பணியாளர் ஆதங்கப்பட்டார்.
எல்லாப் பணியாளர்களுக்கும் எட்டு மணி நேரம்தான் வேலை நேரம். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அப்படி இல்லை. ஒன்பது, பத்து மணி நேரம்கூட வேலை செய்ய வேண்டும். ஒருவேளை, அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தால் அன்று 12 மணி நேரம்கூட வேலை இருக்கும். யாராவது விஐபி வருகிறார்கள் என்றால், அன்றும் நேரம் பார்க்காமல் வேலை செய்தாக வேண்டும். அதற்குத் தனி ஊதியம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளர்கள் வார விடுமுறையின்றி எல்லா நாட்களிலும் வேலை செய்தாக வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில் இன்றும் நிலவிவருகிறது. அவர்கள் வேலை செய்வதற்கான அடையாள அட்டைகூடக் கொடுப்பதில்லை.
ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வருடத்துக்கு இரண்டு உடைகள், சோப்பு, கையுறை, பூட்ஸ், மழைகோட், முகக் கவசம் தர வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இவை எதுவுமே தரப்படுவதில்லை. என்றாவது, எதையாவது ஒன்றைத் தந்துவிட்டுக் கணக்குக் காட்டிவிடுகிறார்கள் ஒப்பந்தக்காரர்கள். பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை என்பது ஊரறிந்த செய்தி. ஒப்பந்தக்காரர்கள் கொடுக்கும் வண்டிகள் பெரும்பாலும் ஓடாநிலையில்தான் இருக்கின்றன. அதையும் மூச்சைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகும் தூய்மைப் பணியாளர்களை நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வண்டிகள் பழுதானால், அவற்றை இயக்கும் பணியாளர்களே தங்கள் ஊதியத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்கள் தனிச் சட்டமே போட்டிருக்கிறார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் ஒன்று இருப்பது ஒப்பந்தப் பணியாளர்களுக்குத் தெரிவதே இல்லை. அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தவறிவருகிறது. அதுபோலவே தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையம் இருப்பதுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இதுபோல ஏகப்பட்ட பிரச்சினைகளைத் தாங்கிக்கொண்டுதான் தூய்மைப் பணியாளர்கள் மக்களுக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அடிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளைப் பொதுவெளியில் சொன்னால், அன்றோடு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அந்தப் பயத்தினாலேயே தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் சொல்வதில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசும் அவர்களைக் கைவிட்டுவிட்டது. கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய பணி மகத்தானது. ஆனால், இன்று வரை ஊக்கத்தொகை, இழப்பீடு அறிவித்தும் அது அவர்களின் கைக்குக் கிடைக்கவில்லை.
இவர்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்பதைவிட தூய்மை மருத்துவர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடும்போது, தங்களுடைய உடலும் சீர்கெடுகிறது என்பது தெரிந்தேதான் மக்களுக்காக இவர்கள் பணி செய்கிறார்கள்.
அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே. இல்லையென்றாலும், ஊதியத்தையாவது உயர்த்தித் தர வேண்டும் என்பதுதான். கர்நாடகத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000 ஊதியமாகப் பெறுகிறார்கள். அதுபோலவே இங்கும் கொண்டுவர வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, ஒப்பந்தப் பணியாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கலாம்.
- ம.வெங்கடேசன், தலைவர், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம், புதுடெல்லி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago