அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவுகளைச் சுற்றிய கடல் பகுதிகளில் நீலத் திமிங்கிலங்கள் பாடும் பாடல்களை முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். எரிமலைக் குழம்பிலிருந்து உருவான தீவுக்கூட்டங்கள் இருக்கும் இப்பகுதியில், நீலத் திமிங்கிலங்கள் இருப்பது அக்கடல் பகுதியின் உயிர் வளத்தைக் காண்பிப்பதாக உள்ளது. ஆண்டின் சில மாதங்களில் பேருயிர்களான நீலத் திமிங்கிலங்கள் இங்கிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தக் கடல்பகுதி உள்ளது முக்கியமான செய்தி.
2019-ம் ஆண்டின் உஷ்ணமான ஒரு பிற்பகலில், கடல் பாலூட்டிகளை ஆராய்ச்சி செய்பவரான திவ்யா பணிக்கர், முதல் முறையாக ஆழ்கடல் ஒலிப்பதிவுக் கருவிகள் வழியாக, நீலத் திமிங்கிலங்களின் முனகல் பாடல்களைக் கேட்டபோது சிலிர்த்துப்போனார். தனது ஆய்வு அனுபவத்தில் திமிங்கிலங்களின் பாடல்களைக் கேட்டது மிக முக்கியமான ஓர் அனுபவம் என்று விவரிக்கும் திவ்யா, அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவு பகுதியில் ஒலிப்பதிவுசெய்யப்பட்ட முதல் ஆவணம் இது என்கிறார்.
இரண்டு நீலத் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் பாடியதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார். ``மூன்று ஸ்வரங்கள், மூன்று ஸ்தாயிகளில் ஒலிவீச்சின் அளவு முப்பது ஹெர்ட்ஸ்க்கும் நூறு ஹெர்ட்ஸ்க்கும் இடையில் அந்தப் பாடல் உள்ளது. ரூஸ்டர் மீன்களின் கூவல் சத்தத்துக்கு நடுவே மிகக் குறைந்த ஒலியைக் கொண்ட நீலத் திமிங்கிலங்களின் பாடலைக் கேட்பது வேடிக்கையான அனுபவமாக இருந்தது” என்கிறார் திவ்யா பணிக்கர்.
2018 முதல் 2020 வரை ஒலிப்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தென்மேற்குப் பருவக் காற்றுக்குச் சற்று முன்னர் ஏப்ரல், மே மாதங்களில் நீலத் திமிங்கிலங்கள் லட்சத்தீவுகள் இருக்கும் கடல் பகுதியில் தென்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நீலத் திமிங்கிலங்கள் இங்கு காணப்படுவது உறுதிசெய்யப்பட்டாலும் இங்கேயே இருந்து இரையெடுத்துத் தங்கியிருக்கிறது என்பதையோ, வெறுமனே இந்தப் பகுதியைக் கடந்து செல்வதையோ இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் திவ்யா பணிக்கர். அடுத்த சில ஆண்டுகளில் நீலத் திமிங்கிலங்களை வீடியோ வழியாக அவற்றின் இரையெடுக்கும் முறையையும் நடத்தைகளையும் பதிவுசெய்யும் திட்டங்கள் உள்ளன.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கலங்களை மாற்றி, தரவுகளைச் சேமித்து, ஒலிப்பதிவுக் கருவிகள் கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குக் கடலடியில் செயல்பட்டிருக்கின்றன.
அரபிக் கடலில் மிகப் பெரிய சுற்றுலா மையமாகவும், உள்கட்டுமானரீதியில் விரிவாக்கத்துக்கும் தயாராகிவரும் லட்சத்தீவுகள் இருக்கும் கடல் பகுதி எவ்வளவு உயிர் வளத்தோடு இருக்கிறது என்பதைத்தான் இந்த நீலத் திமிங்கிலங்களின் வருகை தெரியப்படுத்துகிறது.
எந்த வளர்ச்சித் திட்டங்களும் உள்கட்டுமானப் பணிகளும் பவளப் பாறைகள், காயல், தீவு மற்றும் வளமான கடல்பகுதியின் நலத்துடன் சேர்ந்து ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம். சூழலியல் நிபுணர்களைக் கலந்தாலோசித்தும், கடல்வாழ் உயிர்களின் வளத்தைப் பாதிக்காமலும் இந்த உள்கட்டுமானப் பணிகளைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நீலத் திமிங்கிலங்களின் பாடல்கள் ஆண் திமிங்கிலம், பெண் திமிங்கிலத்தை இனப்பெருக்கத்துக்கு அழைப்பதற்காக வெளிப்படுத்தப்படுபவை என்கிறார் கடல்சார் பாலூட்டிகள் நிபுணரான திபான சுடாரியா. உணவு தேடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும் ஒலியைத் திமிங்கிலங்களும் ஓங்கில்களும் (டால்பின்கள்) கடல்பன்றிகளும் பயன்படுத்துகின்றன.
கடலில் ஒலி, காற்றைவிட வேகமாகப் பயணிக்கிறதாம். ஒளி குறைவான இடத்துக்குப் பழகி, ஒலியைக் காண்பதற்கான வழியாகப் பயன்படுத்துவதற்குக் கடற்பாலூட்டிகள் கச்சிதமாகப் பழகியுள்ளன. நீலத் திமிங்கிலங்கள் வெளியிடும் முனகல்களை வைத்து இந்தப் பாலூட்டிகளின் அடையாளம் பற்றிய குறிப்புகளை விஞ்ஞானிகள் தருகின்றனர். பிக்மி வகை நீலத் திமிங்கிலங்கள் இவை என்கின்றனர். லட்சத்தீவு பகுதிகளில் ஒலிப்பதிவில் கேட்ட பாடல்களின் அதே ஒழுங்கில் 1980-ல் இலங்கை கடல் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட நீலத் திமிங்கிலங்களின் பாடல்களும் ஒத்திருக்கின்றன.
பொதுவாக, நீலத் திமிங்கிலங்கள் எழுப்பும் பாடல்கள் ஒரே விதமான முறைமையில் இருக்குமாம். ஆனால், லட்சத்தீவு பகுதியில் பதிவுசெய்யப்பட்ட சில ஒலிப்பதிவுகளில் பாடலின் கடைசிப் பகுதியை மட்டும் அந்த நீலத் திமிங்கிலங்கள் விட்டுவிடுவது மர்மமாகவே உள்ளது என்கிறார் திவ்யா பணிக்கர். இந்தப் பாடல் வகை வடக்கு இந்தியப் பெருங்கடலின் நீலத் திமிங்கிலப் பாடல் என்றே குறிக்கப்படுகிறது.
கடலுக்குள் முக்குளிப்பவர்களைக் கொண்டு பவளப்பாறைகளின் திட்டுக்களில் ஆழ்கடலில் ஒலிப்பதிவுக் கருவிகள் பதிக்கப்படுகின்றன. தற்போதைய ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு சராசரிக்கும் அதிகமாகச் சீக்கிரமே வெப்பமடைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தகரீதியாக நீலத் திமிங்கிலங்களை வேட்டையாடியதால் கிட்டத்தட்ட கடந்த நூற்றாண்டில் அழித்தொழிக்கப்பட்ட நீலத் திமிங்கிலங்கள் சூழலியல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாகச் சமீப காலத்தில்தான் மீண்டும் செழித்துத் தழைத்துவருகின்றன. பருவநிலை மாற்றமும் நீலத் திமிங்கிலங்களின் இருப்பை அச்சுறுத்தும் இன்னொரு காரணியாக விளங்குகிறது. பருவமழைக் காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களும், அடிக்கடி நிகழும் சூறாவளிகளும் நீலத் திமிங்கிலங்களின் உயிர் வளத்தைப் பாதிப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடலின் உயிர் வளத்தைப் பாதிக்காமல் மீன்பிடிக்க உதவும் பைகேட்ச் ரிடக்சன் கருவிகளைப் படகுகளில் கட்டாயமாகப் பொருத்துவதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் லட்சத்தீவுகள் கடல் பகுதியின் உயிர் வளத்தைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் ஓங்கில்கள், ஆமைகள், சிறிய திமிங்கிலங்கள் தேவையில்லாமல் பிடிக்கப்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகாது. அத்துடன் அதிக ஒலியை ஏற்படுத்தும் கப்பல்கள், கலங்களின் சத்தத்தையும் குறைப்பது நீலத் திமிங்கிலங்களின் பாடல்களை எப்போதைக்குமாகக் காப்பாற்றுவதாக இருக்கும். அவற்றின் பாடல்களைக் காப்பதென்பது சூழலையும் காப்பதே ஆகும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago