சமீபத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக ‘கோப்பா அமெரிக்கா’, ‘யூரோ- 2020’ கால்பந்தாட்டக் கோப்பைகளுக்கான போட்டிகளில் நாம் மூழ்கித் திளைத்திருந்த வேளையில் இந்தக் கட்டுரையை நான் எழுதியிருந்தால், கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பேன். நானும் ஒரு கால்பந்தாட்ட ரசிகன் என்ற முறையில் அந்தக் கொண்டாட்டங்களின் மயக்கத்திலிருந்து தெளிந்து, இலக்கிய மாணவன் என்ற முறையில் இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமானது. இந்தக் கட்டுரையை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த பிரெஞ்சு தத்துவவியலரும், தலைசிறந்த படைப்பாளியுமான ஆல்பெர் காம்யு பற்றிய சிறு குறிப்புடன் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.
ஆல்பெர் காம்யு
பிரெஞ்சு அல்ஜீரியாவில் 7 நவம்பர் 1913 அன்று பிறந்த காம்யு சிறுவயது முதலே கிரேக்கப் புராணக் கதைகளிலும், கிரேக்கத் தத்துவங்களிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால், அல்ஜீரியப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தைத் தெரிவுசெய்தார். மற்றுமொரு பிரெஞ்சுத் தத்துவவியலரான ழான் பால் சார்த்ரின் ‘இருத்தலியல்’ கோட்பாட்டினால் ஆரம்பத்தில் ஈர்க்கப்பட்டார். எனினும், அந்தக் கோட்பாட்டின் இறுக்கமான தன்மைக்கு மாற்றாகத் தனது ‘அபத்தம்’ என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இருத்தலியல் கோட்பாடு மனித வாழ்வின் ‘இருத்தலை’ விதிக்கப்பட்டதாகக் கருதி, அதன் இறுக்கத்தை விவரித்தது என்றால் ‘அபத்தம்’ மனித வாழ்வின் பொருளற்றதன்மையைப் பற்றி விளக்கியதுடன், வாழ்வின் பொருளைத் தேடி வாழ்க்கையைத் தொலைக்கும் அபத்தத்தை விவரிக்கிறது. தனது ‘அபத்த’ கோட்பாட்டை இலக்கியத்தின் மூலமாக நிறுவியதற்காக காம்யு 1957-ல் நோபல் பரிசைப் பெற்றார்.
அபத்தக் கோட்பாடு
மனித வாழ்வில் இருத்தலைக் குறித்த கேள்விகள் பல எழுந்தாலும், அவற்றுக்கான விடைதேடும் வீண் முயற்சியில் மனிதர்கள் ஈடுபடுகையில், இந்த உலகம் வெறும் பார்வையாளராக இருப்பதை எடுத்துக்காட்டிய காம்யு, வாழ்வின் பொருளென்று ஏதாவது இருந்தால், மனிதர்கள் அதைத் தேடும் அபத்தத்தை விடுத்து, அர்த்தமற்ற வாழ்வின் அபத்தத்தை ஏற்றுக்கொண்டு அதைக் கொண்டாடுவதன் மூலமாக அபத்தத்தை வெற்றிகொண்டவர்கள் ஆகிறார்கள் என்றார். தனது அபத்தக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அவர் எடுத்துக்கொண்டது கிரேக்கப் புராணத்தின் சிசிபஸ் என்ற தொன்மத்தைத்தான்.
சிசிபஸ் எனும் தொன்மம்
தனது அபத்தக் கோட்பாட்டை விளக்குவதற்கு காம்யு கையாண்ட சிசிபஸ் எனும் கிரேக்கத் தொன்மத்தில், சிசிபஸ் கடவுளருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவன். எந்த மனிதரும் சாகக் கூடாது என்ற நோக்கில் இறப்புக்கான கடவுளைச் சங்கிலியில் பிணைத்துவிடுகிறான். தன்னை விடுவித்துக்கொண்ட இறப்புக் கடவுள், சிசிபஸுக்கு வாழ்நாள் தண்டனையாகப் பாறை ஒன்றை மலையின் கீழிருந்து உச்சியை நோக்கிச் சுமந்து, பிறகு மலையுச்சியில் இருந்து பாறையைத் தள்ளி விட்டு, மறுபடியும் அடி முதல் உச்சி வரை பாறையைச் சுமக்குமாறு தண்டிக்கிறது. இந்தத் தண்டனையைச் சுமையாக அல்லாமல் சுகமாகக் கருதுவதன் மூலமாகவே சிசிபஸ் தண்டனையைக் கொண்டாட்டமாக மாற்றுகிறான் என்கிறார் காம்யு. ‘‘அந்தப் போராட்டமே மனநிறைவைத் தருவதால், சிசிபஸ் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதலாம்’’ என்கிறார். மேலும் அவர், ‘‘மனிதன் வாழ்வின் பகுத்தறியவியலா தன்மையை எதிர்கொள்ளும்போது, அவனது மகிழ்ச்சிக்கும் பகுத்தறிவுக்குமான ஏக்கத்தை உணர்கிறான். அப்போது அவனது தேவைக்கும் இந்த உலகின் கள்ள மெளனத்துக்குமான எதிர்ப்பாடு ஏற்படும்போது அபத்தம் பிறக்கிறது’’ என்கிறார். சுருக்கமாகக் கூறுவது என்றால், வாழ்வின் அபத்தத்தை எதிர்கொள்வதற்கு அவ்வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தைப் போராடிக் கற்பித்துக்கொண்டு, அதில் தங்களைத் தொலைப்பதன் மூலம் மனிதர்கள் தன்னிறைவை அடைகிறார்கள்.
காம்யுவும் கால்பந்தும்
அல்ஜீரியப் பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவில் காம்யு கோல்கீப்பராக விளையாடியுள்ளார். காசநோய் காரணமாக அவர் கால்பந்தை விட நேரிட்டது. பின்னாளில், ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும், தத்துவவியலராகவும் அவர் அறியப்பெற்ற பிறகு, அல்ஜீரியப் பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகைதந்தபோது, ‘‘கால்பந்து அல்லது நாடகம் - இவ்விரண்டில் உங்களது தெரிவு எதுவாக இருக்கும்?’’ என்று வினவப்பட்டபோது, ‘‘தயக்கமேயின்றி கால்பந்து’’ என்று பதில் அளித்தார். கால்பந்து அவரை அந்த அளவுக்கு ஆட்கொண்டிருந்தது. அந்தப் பல்கலையின் விளையாட்டுச் சிறப்பிதழில், தனது கால்பந்து நாட்களைப் பற்றி அவரை எழுதச்சொன்னபோது அவர் பின்வருமாறு எழுதுகிறார்: ‘‘பல வருடங்களுக்குப் பிறகு நான் கண்ட பலவற்றுள், அறத்தைப் பற்றியும், மனிதனின் கடமையைப் பற்றியும் நான் உறுதியாக அறிந்ததற்குப் பல்கலையில் நான் பயின்ற கால்பந்தாட்டத்துக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’
காம்யு குறிப்பிடுவது எளிய அறமான சக தோழர்களுக்காகத் தோள் கொடுப்பது, அதற்கான துணிவையும் நேர்மையையும் மதிப்பதே ஆகும். அரசியலும் மதமும் தத்தமது குழப்பமான அறக் கருத்துகள் மூலமாக மக்களைக் குழப்புவதாகவே அவர் எண்ணினார். அதனாலேயே கால்பந்தாட்டத்தில் உள்ள எளிய அறத்தையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் விரும்பினார். களத்திலும் வெளியிலும் ரகளைக்கும் கலவரத்துக்கும் பெயர் பெற்ற கால்பந்தாட்டத்தைக் குறித்து சிறந்த இலக்கியவாதி ஒருவர் தத்துவார்த்தமான கருத்துகளைத் தெரிவிக்கையில், எந்தக் கால்பந்து ரசிகனுக்குத்தான் காம்யுவைப் பிடிக்காது!?
கால்பந்துக் காய்ச்சல் குறைவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமானது என்றால், அதைப் பற்றி உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக எழுதுவதற்கும் இந்தக் கால அவகாசம் தேவைப்படத்தான் செய்கிறது.
கால்பந்தாட்டமே ஒரு மிகப்பெரிய அபத்தம்தான். எப்படியென்றால், காற்றடைத்த ஒரு சிறிய தோல் பந்தை ஒரு பெரிய செவ்வகச் சட்டத்துக்குள் செலுத்துவதற்கு இரு அணிகளாகப் பிரிந்துகொண்டு, அதைத் துரத்துவதும் அதைக் கோடிக்கணக்கானோர் நேரிலும் நேரலையிலும் வெறித்தனமாகப் பார்த்து ரசிப்பதும் அபத்தத்தின் உச்சக்கட்டம்தானே! கால்பந்தாட்டத்தில் தம்மைத் தொலைக்கும் அனைவருக்கும் தெரியும், ‘‘அது வெறும் விளையாட்டுதான். ஆனாலும் அதற்கும் மேலே.’’ இந்த மெய்யுணர்வுதான் ஒரு கால்பந்தாட்ட ரசிகரை/ வெறியரைக் கால்பந்தாட்டத்தை ‘மதம்’ என்று போற்றுவதற்கும், சராசரி மதவெறியர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளும் தெளிவைப் பெறுவதற்கும் பேருதவி பெறுகிறது. இந்தப் புரிதல் அளிக்கும் மனநிறைவிலும் அமைதியிலுமே அவர் அபத்தத்தைக் கொண்டாடுகிறவராக ஆகிறார்!
இறுதியாக, சிசிபஸ் மலையுச்சியை நோக்கிப் பாறையைச் சுமப்பதற்கும், உங்களது விருப்பத் தெரிவான கால்பந்தாட்டக் குழுவை அதன் வெற்றி-தோல்வி குறித்த கவலையின்றி ஆதரிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இப்போது நாம் காம்யு, ‘‘அந்தப் போராட்டமே மனநிறைவைத் தருவதால் சிசிபஸ் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதலாம்’’ என்று சொன்னதை எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். யாருக்குத் தெரியும்? கால்பந்தாட்டத்தை முதலில் கண்டுபிடித்தது சிசிபஸாகக்கூட இருக்கலாம். இந்தப் பற்றுதலும், பற்று அறுத்தலும்தான் காம்யுவைக் கால்பந்தாட்டத்தைத் தத்துவத் தளத்துக்கு உயர்த்தச் செய்திருக்கலாம். அந்த வகையில், அன்றாட வாழ்க்கையின் வழக்கமான செயல்களை, அவற்றைச் செய்வதற்கான உற்சாகத்துடன் செய்தால் நாமும் சிசிபஸ்தானே!
- நா.சோமசுந்தரம், தொடர்புக்கு: nsscg1992@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago