தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான பிணக்குகள் நிறைந்த வரலாற்றில், மேகேதாட்டு அணை விவகாரம் மற்றுமொரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது, இந்தச் சூழலில், மேகேதாட்டு அணை ஏன் கட்டப்படக் கூடாது என்பதற்கான காரணங்களைச் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பின்னணியில் விளக்குகிறார் நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்.
மேகேதாட்டு அணைத் திட்டம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியதாகிறது?
மேகேதாட்டு அணை 67.16 டிஎம்சி கொள்ளளவைக் கொண்ட நீர்த்தேக்கத்தையும் நீர்மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் உள்ளடக்கியது. இவ்வளவு பெரிய நீர்த்தேக்கம் நிரம்பி, நீர்மின்சாரம் எடுக்கப்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீர் கிடைக்கும். இந்த நீர்த்தேக்கத்தில் 7.75 டிஎம்சி நீர் நிரந்தரமாகத் தேங்கிவிடும் (Dead Storage). அதை யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள காவிரி நீரில் 7.75 டிஎம்சி என்பது கணிசமான அளவாகும். பற்றாக்குறைக் காலங்களில் இதும் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.
பெங்களூருவின் நீர்த் தேவைக்காகத்தான் இந்த அணை என்றும், இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் கர்நாடகம் கூறுகிறதே?
பெங்களூருவுக்கு நீர்ப் பற்றாக்குறை என்றால், அங்குள்ள ஏரிகளைச் சுத்திகரிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீரைச் சேமிக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆற்றில் ஒரு மாநில அரசு தனது அதிகரிக்கும் நீர்த் தேவைக்காக இன்னொரு அணை கட்டிக்கொள்கிறோம் என்று சொல்வதை ஏற்கவே முடியாது. தமிழ்நாட்டு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1.5 கோடிப் பேர் குடிநீர்த் தேவைக்காக காவிரி நீரைச் சார்ந்திருக்கிறார்கள். 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் காவிரி நீரை நம்பியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவு பாதகங்கள் நிறைந்த திட்டத்தை எந்தத் துணிச்சலில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள்?
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்கவில்லை. அப்போதிலிருந்து காவிரிப் பிரச்சினை மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்டுவிட்டது. 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ல் இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி ஒதுக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டுக்கு அவ்வளவு நீர் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடகத்தில் மிகப் பெரிய கலவரங்கள் நிகழ்ந்தன. தமிழர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். அதற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று போராடித்தான் காவிரியில் நமக்கான பங்கை நாம் பெற முடிந்தது. சில ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு நீர் தர மறுத்தது. 2007-ல்தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. 192 டிஎம்சி என்று நமது பங்கு குறைக்கப்பட்டது. கருணாநிதி இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முன்வந்தார். கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றன. ஆனால், நடுவர் மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் தேவைப்பட்டால், நடுவர் மன்றத்தில்தான் முறையிட வேண்டும் என்று ஒரு கூறு உள்ளது. அதை யாரும் கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றமாவது நடுவர் மன்றத்துக்குத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றமும் அதைச் செய்யவில்லை. மாறாக, மேல்முறையீட்டு மனுவின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ல்தான் தீர்ப்பளித்தது. அதில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை 177.25 டிஎம்சி என்று மேலும் குறைத்தது. ஆக, உச்ச நீதிமன்றமே பெங்களூருவின் அதிகரிக்கும் நீர்த் தேவைக்குத் தீர்வு வழங்கிவிட்டது. அதையும் தாண்டி இன்னொரு அணை கட்டிக்கொள்கிறோம் என்பதை ஏற்க முடியாது.
இந்த அணையால் வேறென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?
சமூக, பொருளாதாரரீதியிலும் சூழலியல்ரீதியிலும் மிக நீண்ட காலப் பாதிப்புகளை இந்த அணைத் திட்டம் ஏற்படுத்திவிடும். தமிழ்நாட்டில் கால்நடைப் பொருளாதாரம் மிக முக்கியமானது. விவசாயத்தை அடுத்துக் கால்நடை வளர்ப்பைத்தான் தமிழ்நாட்டுக் கிராமப் பொருளாதாரம் சார்ந்திருக்கிறது. காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால், இந்தப் பொருளாதாரமும் சீரழியும். இதைச் சார்ந்திருக்கும் பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இன்று காவிரிப் படுகையில் விவசாயிகள் பலர் போதிய அளவு காவிர் நீர் கிடைக்காததால் கால்நடை வளர்ப்புக்கு நகர்ந்துவிட்டார்கள். மேகேதாட்டு நீர்த்தேக்கம் வந்துவிட்டால் கொஞ்சநஞ்சம் கிடைக்கும் தண்ணீரும் கேள்விக்குறியாகிவிடும். இதனால் கால்நடை வளர்ப்புத் தொழில்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இந்த அணை மிகப் பெரிய சூழலியல் சீரழிவுகளையும் விளைவிக்கும். கர்நாடகத்தில் இருக்கும் ஏராளமான சூழலியலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மேகேதாட்டு அணையை எதிர்க்கிறார்கள். கர்நாடக வனத் துறைகூட இந்த அணைத் திட்டத்தை ஏற்கவில்லை. இந்த அணையால், கிட்டத்தட்ட 54 சதுர கிமீ நிலம் நீருக்குள் மூழ்கிவிடும் என்கிறார்கள். அங்குள்ள காவிரி வனவிலங்கு சரணாலயம் அழிந்துவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். லட்சக்கணக்கான பறவைகள் அங்குள்ள மரங்களை நம்பி வாழ்கின்றன. அவையும் அழிவைச் சந்திக்க நேரிடும். 22-23 கர்நாடகக் கிராமங்கள் மூழ்கிவிடும் என்று சூழலியலர்கள் அஞ்சுகிறார்கள். இதையெல்லாம் பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் ஆகியவற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நான்கில் மூன்று பங்கு காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டதாக மாதவ் காட்கில் அறிக்கை தெரிவிக்கிறது. மிச்சமுள்ள காடுகளையும் அழித்துவிட்டால், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? மேற்குத் தொடர்ச்சி மலைகள் தென்னிந்தியாவின் தண்ணீர்க் கோபுரம் என்று அறியப்படுகின்றன. ஏற்கெனவே காடுகள் அழிப்பினால் கேரளத்தில் 2018 வெள்ளத்தில் ஏராளமான நிலச்சரிவுகள் நிகழ்ந்தன. கிட்டத்தட்ட 700-800 பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் இந்த மாதிரி அழிவுகள் அதிகரிக்கும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணைக்கு எதிராக எல்லாக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து, நான்கு வரி தீர்மானமாக இல்லாமல், சட்டபூர்வமான, மிகக் கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அணையை எதிர்ப்பதற்கான மேலே சொன்ன காரணங்கள் அனைத்தையும் விரிவாக விளக்கும் அறிக்கையுடன் இணைத்து, அந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். அடுத்ததாக, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உடனடியாக ஒரு தலைவரை நியமித்து, அதை வலுப்படுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்குப் பிறகும், இதையெல்லாம் செய்யத் தவறினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். ஏனென்றால், ஆணையத்தைச் செயல்பாடற்ற நிலையில் வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
மேகேதாட்டு அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பதை முகாந்திரமாகக் கொண்டு, இந்த அணையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு சரியாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் நீர் வராததால் குறுவை, சம்பா இரண்டு சாகுபடிகளும் நசிவடைந்துள்ளன. இதனால், காவிரிப் படுகையில் நிறைய விவசாயிகள் கடனாளிகளாகி, தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகாணும் நடவடிக்கைகள் எதையும் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசு எடுக்கவில்லை. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசாவது உடனடியாக இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தித் தீர்வுகாண வேண்டும்.
- எஸ்.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago