சவுதி அரேபியா குறித்த உலக நாடுகளின் பார்வை தெளிவானது அல்ல
சவுதி அரேபியாவைப் பற்றி தொலைதூரத்தில் இருந்தபடி எளிதாக எழுதிவிடலாம். ‘இஸ்லாமிய நெறிகளைக் கடும் விரதத்துடன் கடைப்பிடிக்கும் நாடு, பன்முகத்தன்மையுள்ள மத சித்தாந்தத்தை ஏற்காமல் ஒற்றைக் கலாச்சார வழிமுறையை வலியுறுத்தும் நாடு - அதிலே மிகவும் தீவிரமான ஒரு பிரிவுதான் இஸ்லாமிய அரசு அல்லது ஐ.எஸ். இயக்கம்’ என்று தொடங்கிவிடலாம். ஆனால், அங்கே சென்று மக்களை நேரில் சந்தித்த பிறகு, வியப்படைய வைக்கும் எதிர்போக்குகளைக் கண்டேன்.
ஐ.எஸ். அமைப்பின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ள சவுதிக்குச் சில வாரங்களுக்கு முன் சென்றேன். சுமார் 1,000 சவுதி இளைஞர்கள் அந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். சலாஃபியம், வஹாபியத்தில் ஊறிய முஸ்லிம்களின் எல்லா மசூதிகளிலும் நுழைந்து பார்த்துவிட்டேன் என்று நடிக்க மாட்டேன். பழமையான சிந்தனைகளில் ஊறிய மதகுருமார்கள் இப்போதும் ஆளும் அரசில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ட்விட்டரில் ஒலிக்கும் சில பிரபலமான குரல்கள் மத ரீதியாகத் தீவிரத்தன்மை கொண்டவர்களுடையது. அவர்கள் நீதித் துறையை நிர்வகிக்கின்றனர். சுதந்திரமாக வலைதளத்தில் கருத்து தெரிவிப்பவர்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். அவர்கள் ஏற்றுமதி செய்த சித்தாந்தம் உலகுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று சொன்னால், அப்படியெல்லாம் இல்லை என்று இன்னமும் மறுக்கின்றனர்.
ஆழமான கேள்விகள்
இது நம்முடைய பாட்டனார் காலத்து, நம்முடைய தகப்பனார் காலத்து, அல்லது நம்முடைய தலைமுறை யின் சவுதி அரேபியா அல்ல என்கிறார் சவுதி வெளியு றவுத் துறை அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் (52).
கான் அகாடமி விடியோக்களை அரபியில் மாற்றிக் கொண்டிருக்கும் மன்னர் சல்மான் பெயரிலான இளைஞர் மையத்துக்குச் சென்றிருந்தேன். ‘பெரிய தொழில்நுட்பங்கள் எப்படி பணிசெய்யும் இடங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன?’ என்கிற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். அரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அவர்களில் பாதிப் பேர் பெண்கள். பாரம்பரியமான கருப்பு பர்தா அணிந்திருந்தனர். சலாஃபியத்தைப் பற்றி எழுதிய அரசியல் விமர்சகரை ஏன் அழைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பயங்கரமான சொற்போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால், என்னுடைய பேச்சை அமைதியாகக் கேட்டார்கள். 21-வது நூற்றாண்டுக்குத் தங்களுடைய குழந்தைகளை எப்படித் தயார்படுத்துவது என்ற ஆழமான கேள்விகளே அவர்களிடமிருந்து வெளிப்பட்டன.
சவுதியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பழமைவாதிகள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். சவுதி அரேபியர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்கும் கீழுள்ளவர்கள். வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் சவுதி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று மன்னர் அப்துல்லா 10 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து முடித்து நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்கள். ஆண்டுதோறும் 30,000 பேர் மேற்கத்திய நாடுகளில் படித்து முடித்து நாடு திரும்புகின்றனர். சவுதி அலுவலகங்கள் அனைத்திலும் பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று கூச்சலிடும் பழமைவாதிகள்கூட, தனிப்பட்ட முறையில் தங்களை அணுகி, தங்கள் பெண்களுக்கு நல்ல பள்ளிக்கூடங்களில் அல்லது வேலையில் வாய்ப்பு தருமாறு அணுகுவதாக அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த இளைஞர்களின் வருகைக்குப் பின்னால் யூ டியூப், ட்விட்டர் பயன்பாடு பல மடங்காகிவிட்டது. அரசுடனும் தங்களுக்குள்ளும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். ஒரு மாதத்துக்கு 5 கோடித் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்திக் கொள் ளும் தலைமை இல்லாமலிருந்தது. அந்தக் குறையைப் போக்க, புதிய மன்னர் சல்மானின் மகனும் இளவரச ருமான முகம்மது பின் சல்மான் (30), மற்றொரு இளவரசர் முகம்மது பின் நயேஃப் ஆகியோர் அரசு நிர்வாகத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.
முகம்மது பின் சல்மானுடன் ஒரு மாலைப் பொழுதை அவருடைய அலுவலகத்தில் செலவிட்டேன். அவருடைய திட்டங்களை விவரித்து என்னை அசத்திவிட்டார். எண்ணெய் வளத்தை அதிகம் சார்ந்திருப்பது, பட்ஜெட் தயாரிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது, செலவுகளைக் கட்டுப்படுத்தாமல் விடுவது போன்றவைதான் பிரச்சினைகள் என்கிறார் முகம்மது.
“இதற்கு முன் நான் இவ்வளவு நம்பிக்கையோடு இருந்ததில்லை; இதற்கு முன்னர் இருந்திராத துடிப்பு காணப்படுகிறது. நாம் எப்போதும் பார்த்திராத வளர்ச்சித் திட்டம் அரசிடம் இருக்கிறது” என்று பூரிக்கிறார் சவுதி மூலதனச் சந்தை ஆணையத் தலைவர் முகம்மத் அப்துல்லா அல்ஜடான்.
இருந்தாலும், சகிப்புத்தன்மையற்ற கருத்துக்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இடங்களும் சவுதியில் இருக்கின்றன. புதிய மாற்றங்களை எதிர்ப்போர் இல்லாமல் இல்லை. ஆனால், எதிர்ப்புக்கு எதிர்ப்பும் தொடங்கிவிட்டது என்று சவுதி கல்வியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
சுமத்தப்படும் குற்றச்சாட்டு
சவுதிகளின் மத நம்பிக்கையில் பிறந்ததுதான் ஐ.எஸ். என்பதை முகம்மது ஏற்கவில்லை. பாக்தாதை ஆண்ட நூரி அல் மாலிகியின் ஷியா அரசு, (ஈரானின் வழிகாட்டலில்) இராக்கிய சன்னிகளைக் கொடுமைப் படுத்தியதால் எதிர்வினையாகத்தான் ஐ.எஸ். உருவானது என்கிறார். சிரியாவைச் சேர்ந்த சன்னிகளை ஈரானிய ஆதரவுள்ள அரசு டமாஸ்கஸில் ஒடுக்கியதும் மற்றொரு காரணம் என்கிறார். இராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்னால் ஐ.எஸ். அங்கு இல்லை. அமெரிக்கா விலகிய பிறகு ஈரான் நுழைந்ததை அடுத்துதான் ஐ.எஸ். தோன்றியது என்கிறார்.
“சவுதி அரசை அழிக்கும் எண்ணத்தோடு சவுதியில் உள்ள மசூதிகளை ஐ.எஸ். இயக்கம் ஒவ்வொன்றாகத் தகர்த்துக்கொண்டே வரும்போது, சவுதி அரேபியாதான் அந்த இயக்கத்துக்கு ஆதர்சமாக இருக்கிறது என்று உலகம் குற்றஞ்சாட்டுகிறது. நீ முஸ்லிம் அல்ல என்று ஐ.எஸ். இயக்கம் என்னைப் பார்த்துச் சொல்கிறது. ஆனால், உலகம் என்னிடம் சொல்கிறது நீ ஒரு பயங்கரவாதி என்று” என அங்கலாய்த்தார் முகம்மது.
இதுதான் சவுதிக்குக் கிடைத்த பிதுரார்ஜித சொத்து. சவுதி அரசின் ஒரு பகுதியும் சமூகத்தின் ஒரு பிரிவும் சலாஃபிய இஸ்லாத்தை ஆதரிக்கும்போது இன்னொரு பகுதி, மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஜிகாதிகளை ஒழிக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. நான் முன்னரே கூறியபடி, உலகம் இந்த இரட்டைப் போக்கு குறித்து எரிச்சலும் விரக்தியும் அடைந்திருக்கிறது.
அமெரிக்கா மீதான நம்பிக்கை
“மேற்கத்திய நாடுகள் எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது குறித்து நாங்கள் குற்றஞ்சாட்ட வில்லை. அதற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணம். எங்களுடைய நிலை என்ன என்று உலகுக்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டோம். உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எங்களுடைய முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டு உலகப் போக்குக்கு ஏற்ப பயணப்பட வேண்டும். இன்றைய உலகம் வித்தியாசமானது. உலகைவிட்டுத் தனித்தியங்க முடியாது. பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலகம் இப்போது சுருங்கி ஒரு கிராமமாகிவிட்டது” என்கிறார் முகம்மது.
யேமனில் சவுதி தலைமையிலான வளைகுடா தோழமை நாடுகள், ஹுதி தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டுவருகின்றன. ஹுதிகள் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவுக்கு விசுவாசமானவர்கள். அரசு எதிர்ப்பாளர்கள் யேமனின் அதிகாரபூர்வ அரசைத் தலைநகர் சானாவுக்கு வெளியே தள்ளிவிட்டார்கள். சவுதி தலைமையிலான தோழமை நாடுகள் அதிகாரத்தை மீட்பதற்குப் போரிட்டுவருகின்றன. இதுவரை 5,700 பேர் இறந்துவிட்டதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி மக்கள். பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்குத் தாங்கள் தயார் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் புதைச் சேற்றில் சிக்கியிருக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால், ஹுதிகள் போரில் கடும் தோல்வி கண்டால்தான் பேச்சுக்கு வருவார்கள்” என்ற முகம்மது, இந்தப் பிராந்தியத்தைவிட்டு அமெரிக்கா போய்விடக் கூடாது என்ற தனது விருப்பத்தையும் வெளியிட்டார்.
தமிழில்: சாரி,
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago