‘இந்திய மண்டலத்தில் பருவநிலை மாற்ற மதிப்பீடு’ என்கிற பெயரில் மத்திய அரசின் முதல் பருவநிலை அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. கரோனா பெருந்தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்த நிலையில், இந்த அறிக்கை போதிய கவனம் பெறாமல் போனது. கடந்த 30 ஆண்டுகளில் ஐந்து முழுமையான மதிப்பீட்டு அறிக்கைகளை ஐபிசிசி வெளியிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில்தான் முக்கியத்துவம் மிகுந்த இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
புனேவில் உள்ள ‘பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மைய’த்துடன் (ஐ.ஐ.டி.எம்.) இணைந்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தது. பருவநிலையைக் கணிப்பதற்காக இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ‘புவி அமைப்பியல் மாதிரி’யைக் கொண்டு இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள ஆபத்துகளில் பெரும்பாலானவை ஏற்கெனவே வெளியிடப்பட்ட கணிப்புகளை உறுதிப்படுத்துவதோடு, இதன் எச்சரிக்கைகள் நிச்சயமாக நம்மைத் தொந்தரவு செய்யக்கூடியவை.
வெப்ப அதிகரிப்பும் பருவமழையும்
இந்தியாவின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 118 ஆண்டுகளில் 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2100-ஐ ஒட்டி இந்த சராசரி வெப்பநிலை 2.4 - 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறது இந்த அறிக்கை. கணக்கீட்டுக்கு எடுத்துக்கொண்ட முந்தைய 30 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவந்திருக்கிறது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில் வெப்பமான நாட்களின் எண்ணிக்கையும் வெப்பநிலையின் தீவிரமும் அதிகரித்துக் காணப்படும். பருவமழைக்கு முந்தைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை தீவிரமாகவும், அதிக பகுதிகளிலும் நிலவும் என்பதை இந்த மதிப்பீடு உறுதிப்படுத்துகிறது.
கடந்த 65 ஆண்டு காலத்தில் ஆண்டு பருவமழைப் பொழிவு 6% சரிந்திருக்கிறது. அதேநேரம் உள்ளூர், அளவில் கனமழைப்பொழிவுகள் அதிகரித்திருக்கின்றன. மதிப்பீடுகளின்படி வருங்காலத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றாலும், அது குறுகிய காலத்தில் பொழிவதாகவே இருக்கும். சராசரி வெப்பநிலை அதிகரிப்பதால் தீவிர வானிலை நிகழ்வுகள், கனமழைப் பொழிவு நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்கும். விளைவாக, மழை இல்லாத வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, வறட்சி ஏற்பட வழிவகுக்கும். இதே 65 ஆண்டு காலத்தில் நாட்டில் வறட்சி அதிகரித்திருக்கிறது, புதிய பகுதிகளிலும் நிலவியிருக்கிறது. இந்த பாதிப்புகள் வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் கடுமையாக இருக்கும் என்றாலும், தென்னிந்தியாவுக்குப் பாதிப்பில்லை என்று கூறுவதற்கில்லை. இத்துடன் நகர்ப்புற வெள்ள நிகழ்வுகளும் அதிகரிக்கும்.
பெருங்கடலும் புயல் பாதிப்பும்
வெப்பநிலை அதிகரிப்பு, உப்புத்தன்மை மாறுபடுவது ஆகியவற்றின் காரணமாகவும் கடல் மட்டம் அதிகரிக்கிறது. 2004 வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் 1.06 முதல் 1.75 மிமீ வரை கடல் மட்டம் சீரற்று உயர்ந்துவந்திருக்கிறது. அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் கடல் மட்ட அதிகரிப்பு 3.3 மிமீ என இரட்டிப்பாகிவிட்டது. ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பகுதிப் பனிப்பாறைகள் உருகுதல் இதில் கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்தால் வெப்ப அலை போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும், தென்மேற்குப் பருவமழையில் ஏற்றஇறக்கமும் அதிகரித்துள்ளது. புவியில் நிலவும் வெப்பத்தை உலகப் பெருங்கடல்கள் பெருமளவு கிரகித்துக்கொள்கின்றன. இந்தக் கிரகித்தலில் இந்தியப் பெருங்கடலின் பங்கு 21%. எனவே, இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவது இந்தியாவை மட்டுமல்லாமல், உலக அளவிலான பருவநிலையையும் சேர்த்தே சீர்குலைக்கும்.
கடந்த 68 ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல்கள் 105% அதிகரித்துள்ளன. தானே, வர்தா, ஒக்கி, அம்பன் போன்றவை இந்தியப் பெருங்கடலில் உருவான புயல்களே. இதே காலத்தில் வங்கக் கடலில் தீவிரப் புயல்கள் 49% அதிகரித்துள்ளன. உலக வெப்பமண்டலப் புயல்களில் 5% இப்பகுதியில் உருவானாலும், வெப்பமண்டலப் புயல்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பில் 80% இந்தப் பகுதியிலேயே நிகழ்கிறது. அரபிக் கடலில் 52% புயல்கள் அதிகரித்துள்ள அதேநேரம், 2000-க்குப் பிந்தைய ஆண்டுகளில் புயல்களின் தீவிரம் கூடியுள்ளது.
துருவப் பகுதிகளை அடுத்து அதிகமாகப் பனி இருக்குமிடம் இமயமலைப் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள 9,500-க்கும் மேற்பட்ட பனிச் சிகரங்களில் உலகில் உறைநிலையில் உள்ள நன்னீரில் 75% உள்ளது. 2100-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பகுதியின் வெப்பநிலை 2.6 – 4.6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இப்பகுதியில் பனிப்பொழிவு குறைதல், பனிச்சிகரங்கள் உருகுதல், குளிர்கால மழைப்பொழிவு போன்றவை அதிகரித்துவருகின்றன. முந்தைய 25 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கி.பி. 2000-க்குப் பிறகு பனிச்சிகரங்கள் உருகுதல் இரட்டிப்பாகியுள்ளது. இதே வேகத்தில் அவை உருகத் தொடங்கினால் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய ஆறுகளில் அடுத்த பத்தாண்டுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். பனிச்சிகரங்களின் தொடர்ச்சியான உருகுதலால் கி.பி. 2050-க்குப் பிறகு ஜீவநதிகள் என்று கூறப்படும் இந்த ஆறுகளில் நீர்வரத்து கடுமையாகக் குறையும். இதன் காரணமாக இந்த ஆறுகளின் பாசனப் பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, நீர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்த ஆறுகளையே நம்பியுள்ள 150 கோடி மக்களின் நீர், உணவு, ஆற்றல் ஆதாரங்களும் உத்தரவாதமற்றுப் போகும்.
யார் காரணம்?
பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் கரியமில வாயு வெளியீட்டில் ஆண்டுக்கு 2.6 கிகா டன்னுடன் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இது அமெரிக்கா வெளியிடுவதில் பாதி, சீனா வெளியிடுவதில் கால் பங்கு. மின்னாற்றல் உற்பத்தி, வாகனப் பயன்பாடு, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்காக மட்டும் 52% கரியமில வாயுவை இந்தியா வெளியிடுகிறது. இந்திய மின்னாற்றல் தேவையில் 62% நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கிறது. இந்தியாவில் 30 கோடி கார்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மின்னாற்றலிலும் போக்குவரத்திலும் பெருமளவு நிலக்கரி, பெட்ரோலியப் பொருள் பயன்பாட்டையே இந்தியா அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்தியா தற்போது வெளியிட்டுவரும் கரியமில வாயுவில் யாருடைய பங்கு அதிகம் என்கிற கேள்வியும் வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேர் அதாவது 65 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். இவர்களால் எந்த வகையிலும் கரியமில வாயுவை வெளியிட முடியாது. அதேநேரம், நாட்டின் மொத்த செல்வ வளத்தில் முக்கால் பங்கைத் தங்கள் வசம் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கத்தினரும் உயர் நடுத்தர வர்க்கத்தினருமே இந்தியாவின் கரியமில வாயு வெளியீட்டுக்குப் பெருமளவு காரணமாக இருக்கிறார்கள். ஒருபுறம் சமூகநீதி அடிப்படையில் ஏழைகளைச் சுரண்டும் மேல்தட்டு வர்க்கமும் உயர் நடுத்தர வர்க்கமும் மற்றொருபுறம் புவியின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் பருவநிலை மாற்றம் தீவிரமடையவும் காரணமாக இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் உலக நாடுகள் கரியமில வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கு எப்படிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமோ, அதேபோன்ற கட்டுப்பாடுகள் இந்தியாவுக்குள்ளும் வேண்டும். பருவநிலை மாற்றத்தால் அப்படியென்ன கெட்டுவிடப் போகிறது என்று சிலர் நினைக்கலாம். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், ஏன் இந்தியாவில் மஹாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் நிகழ்ந்துவரும் வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அதற்கான பதிலைத் தரும். பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் அடித்தட்டு மக்களாக இருக்கலாம், அதேநேரம், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் பாதிக்கப்போகிறவை என்பதுதான் நிதர்சனம்.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago