ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்பதுதான் உலகம் முழுக்க இருக்கும் ஜனநாயக சக்திகளின் குரலாகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்தக் குரல் நேரெதிராக மாறிவிட்டது. ஆப்கானியர்களைத் தாலிபான்களிடம் கைவிட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டது என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக ஒலிக்கின்றன. எது விடுதலை, எதிலிருந்து விடுதலை என்ற கேள்வியை நோக்கியே இவை மறுபடியும் இட்டுச்செல்கின்றன.
அமெரிக்கா, இஸ்லாமிய நாடுகளில் யாரையெல்லாம் எதிர்த்துத் தன்னுடைய படைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறதோ அவர்கள் அனைவரையும் அமெரிக்காதான் ஆயுதமும் பணமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்திருக்கிறது. முஜாஹிதீன்கள், ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, தாலிபான்கள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று தங்களால் வளர்க்கப்பட்ட தாலிபான்களிடம் 20 ஆண்டுகள் யுத்தம் நடத்தித் தோற்றுவிட்டு, அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. ஆப்கானில் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ நிலைநாட்ட அமெரிக்கா செய்தது ஏதுமில்லை. ஒரு நாட்டை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, அங்கு ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் கொண்டுவரும் கோட்பாடு ஒருபோதும் வென்றதில்லை. ஆக்கிரமிப்பாளரிடமிருந்து கிடைக்கும் எந்த சுதந்திரத்தையும் எந்த ஒரு தேசிய இனமும் ஏற்காது.
முதலாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனிக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இழைத்த அநீதி எப்படி நாஜிக்களையும் ஹிட்லரையும் உருவாக்கியதோ அதேபோன்ற ஒரு எழுச்சிதான் அமெரிக்கா, ஆப்கான் மக்களின் தேசிய உணர்வுகளை அவமதித்ததன் வாயிலாகத் தாலிபான்களுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், தாலிபான்கள் தங்கள் சொந்த பலத்தால் மட்டுமல்ல சீனா, பாகிஸ்தானின் முழு ஆதரவுடன் வென்றிருக்கிறார்கள்.
ஆப்கானில் மறுபடியும் ஒரு தாலிபான் பயங்கரவாத ஆட்சிக் காலம் தொடங்கிவிட்டது என்ற செய்தி உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் மேற்கத்திய ஊடகங்கள் தரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. குறிப்பாக, காபூல் விமான நிலையக் காட்சிகள் மனம் பதறச் செய்கின்றன. மீண்டும் பெண்களின் மீதான மத்திய கால மத அடிப்படைவாதக் கடும் ஒடுக்குமுறைகளும் கொடூரமான தண்டனை முறைகளும் ஆரம்பமாகப்போகின்றன என்ற பயம் எங்கும் நிலவுகிறது. தங்களைத் ‘தாலிபான் 2.0’ என்று அழைத்துக்கொள்ளும் புதிய ஆட்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். அவர்கள் சர்வதேச சமூகத்தின் முன் தங்களின் ஜனநாயக அடையாளத்தை முன்வைக்க முயற்சிக்கின்றனர். பெண்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம உரிமைகள் வழங்குவோம் என்றும் எவருடைய கெளரவத்துக்கோ உயிருக்கோ ஊறு விளைவிக்க மாட்டோம் என்றும் வாக்குறுதி அளிக்கின்றனர். இது உண்மையானால் மகிழ்ச்சிதான். முன்பைப் போல மூடுண்ட சமூகமாக இல்லாமல், சமூக வலைதளங்களில் தங்கள் நற்பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் பழமைவாத இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுவாதத்தின் மீது நின்றுகொண்டு இதை எப்படிச் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தாலிபான்களின் முதலாம் ஆட்சியின் நினைவுகள் கொடூரமானவை. பெண்கள் வேலைக்குப் போகாமல் தடுக்கப்பட்டதுடன் ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லக் கூடாது, கட்டாய முகத்திரை, கால்பந்தாட்ட மைதானங்களில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மரண தண்டனைகள், இசை, தொலைக்காட்சி, புகைப்படங்கள் போன்றவற்றுக்குத் தடை என நாட்டைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினார்கள். தாலிபான்களின் இந்த ஆட்சியை உலகின் பெரும்பாலான இஸ்லாமிய மக்களே ஏற்கவில்லை. அவை இஸ்லாமிய சமூகத்துக்குப் பெரும் கேட்டையே கொண்டுவரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தாலிபான்களும் அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளும் இழைத்த இந்தக் கொடுமைகளை இஸ்லாமிய வெறுப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த அமைப்புகள் செய்த பல மனித உரிமை மீறல் குற்றங்கள் மேற்கத்திய ஊடகங்களால் உலகம் முழுக்கக் கொண்டுசெல்லப்பட்டன. இஸ்லாம் என்பதைப் பயங்கரவாதத்தின் முகமாகவும் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதத்தின் பங்காளிகளாகவும் உலகம் முழுக்கக் கட்டமைத்ததில் இஸ்லாமியக் கடும் கோட்பாட்டாளர்களுக்கும் மேற்குலகுக்கும் சம பங்கு உண்டு.
இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுவாதம் இந்திய முஸ்லிம்களிடம் ஒருபோதும் செல்வாக்கு செலுத்தியதில்லை. வரலாற்றுரீதியாகவே ஒளரங்கசீப் போன்ற சில விதிவிலக்குகளை நீக்கிப் பார்த்தால், இந்திய இஸ்லாமிய ஆட்சியாளர்களும் சரி, இங்கு இஸ்லாத்தைப் பின்பற்றியவர்களும் சரி, ஒரு நெகிழ்வான கலாச்சாரப் போக்கையே பின்பற்றிவந்திருக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பிராந்தியப் பண்பாடுகளுடன் ஊடாடியே இஸ்லாம் இங்கு தன்னைத் தக்கவைத்துக்கொண்டது. ஒருவிதத்தில் இதை இந்திய இஸ்லாமின் தனித்துவம் எனலாம். சவுதி அரேபியா போன்ற ஒருசில நாடுகளில் செயல்படுத்தப்படும் வகாபியிஸக் கடுங்கோட்பாட்டுவாதம் இந்தியாவில் 90-களுக்குப் பிறகே செல்வாக்குப் பெற்றது. பாபர் மசூதி இடிப்பு, செப்டம்பர் 11-க்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதக் கட்டுக்கதைகள் எல்லாமே இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு பகுதியினரை இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுவாதம் நோக்கி ஈர்த்தது. இஸ்லாமியர்கள் அரசியல், தொழில், சமூக வெளிகளில் கடும் ஒதுக்குதலைச் சந்தித்தனர், தனிமைப்படுத்தப்பட்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டங்களுக்குப் பிறகு அவர்களது பாதுகாப்பற்ற உணர்வு தீவிரமடைந்திருக்கிறது. இது மதரீதியான கடும்கோட்பாட்டு வாழ்வியல் அரசியல் முறைகளில் அவர்களைப் பிணைத்துக்கொள்ளத் தூண்டியது.
இன்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் தாலிபான்களின் கடும்கோட்பாட்டுவாதத்தை ஏற்கவில்லை. அவர்கள் மைய நீரோட்டத்தில் இணைந்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பாலின சமத்துவத்திலும் முன்னேற விரும்புகின்றனர். ஆனால், சில இஸ்லாமியர்கள் தாலிபான்களின் இந்த வெற்றியால் பெருமிதம் அடைய முயல்கின்றனர், இதற்காகப் பல தரப்பிலும் அவர்கள் கடும் விமர்சனங்களைச் சந்திக்கின்றனர். இஸ்லாமிய வெறுப்பாளர்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவதற்கு இது ஒரு வாய்ப்பு.
உலகம் முழுக்கத் துரத்தித் துரத்தி வேட்டையாடப்படும் இஸ்லாமியர்களின் தன்னிலை இஸ்லாத்தின் பெயரால் உலகில் எங்கோ ஒரு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மனதளவில் திருப்தி அடையக்கூடும். ஆனால், இஸ்லாமியர்களுக்கு எந்த நன்மையையும் இது தரப்போவதில்லை. நாளை ஆப்கானிலோ அல்லது உலகில் வேறெங்குமோ தாலிபான்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கான பழியை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ஏற்க நேரிடும். நாகரிக, சர்வதேச சமூகத்தின் ஜனநாயக, மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, தாலிபான்கள் தங்கள் சித்தாந்தத்தை முழுமையாக மாற்றிக்கொள்ளாதவரை இந்திய முஸ்லிம்கள் அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்வதாகும்.
- மனுஷ்ய புத்திரன், கவிஞர், ‘உயிர்மை’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago