இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்துக்குக் கடிவாளம் போடப்படும் காலம் நெருங்குகிறது. இணைய வர்த்தக ஜாம்பவான்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் மீது சில்லறை வியாபாரிகள் அளித்த புகார் தொடர்பாக இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) நடத்திவரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இரு நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தில் உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருப்பதைச் சுட்டிக்காட்டி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதன் பின்னணி என்ன?
வெகுண்டெழுந்த வியாபாரிகள்
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் இதில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த வர்த்தகத்தில் சில்லறை விற்பனை நிறுவனங்களும் பங்கேற்றுப் பொருட்களை விற்றுவருகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட சில செல்பேசி நிறுவனங்களுக்கு மட்டும் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் அதிக முன்னுரிமை தருவதாகக் குமுறிவந்த ‘டெல்லி வியாபார மகாசங்கம்’ எனும் அமைப்பு, இது தொடர்பாக இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தை 2019-ல் அணுகியது. இரு நிறுவனங்களின் இணையதளங்களும் செயலிகளும் குறிப்பிட்ட சில செல்போன் நிறுவனங்கள் மட்டும் வாடிக்கையாளர்களின் பார்வைக்குப் பிரதானமாகத் தெரியும் வகையில் முன்னுரிமை வழங்கியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
அதாவது, இந்த வணிகத் தளங்களின் தேடுபொறியில் குறிப்பிட்ட சில நிறுவனங்களே வாடிக்கையாளர்களின் பார்வைக்குப் படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். அதேபோல, புகழ்பெற்ற செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டுவரும்போது, குறிப்பிட்ட வணிகத் தளங்களின் மூலம் மட்டுமே அந்தத் தயாரிப்புகளை வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துவிடுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் அந்தப் புதிய தயாரிப்புகளை வாங்க ஒற்றை நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் இந்தியப் போட்டி சட்டத்தின் 3 மற்றும் 4-வது பிரிவின்கீழ், இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில், டெல்லி வியாபார மகாசங்கம் புகார்களைப் பதிவுசெய்திருந்தது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிக விலைக் குறைப்பு, அதீதமான தள்ளுபடி விலை எனச் செயல்பட்டுவந்ததாக அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. வணிகப் போட்டியில் பாரபட்சம் இருக்கக் கூடாது; வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுவரும் இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்த விஷயத்தைத் தீவிரமாகவே அணுகியது. 2020 ஜனவரியில் இது தொடர்பான விசாரணையை இந்த ஆணையத்தின் பொது இயக்குநர் தொடங்கினார். இந்த விசாரணையை எதிர்த்து, 2020 பிப்ரவரியில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடர உத்தரவிட்டது. 2021 ஜூன் 11-ல், அமேசான் தொடர்ந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.தினேஷ் குமார் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வில் அமேசான் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மாவும் நடராஜ் ரங்கசாமியும் அடங்கிய இரு நபர் அமர்வு, ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி ஜூலை 23-ல் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இரு நிறுவனங்களும் மேல் முறையீடு செய்தன. இந்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் மீதான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. பிரத்யேக முக்கியத்துவம் வழங்கும் வகையில் எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இந்நிறுவனங்கள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னடைவு
இதுவரையில், தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்றே இரு நிறுவனங்களும் கூறிவந்தன. தவறு இல்லை என்றால் ஏன் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்க வேண்டும் என்று பியூஷ் கோயல் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தார். இந்நிலையில், இந்தத் தீர்ப்பால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதில் வியப்பில்லை.
அமேசான் நிறுவனம், பல ஆண்டுகளாகவே குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்துவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. இரு நிறுவனங்களும் 2026 வாக்கில் இந்தியாவில் 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது இந்தியச் சந்தையில் இந்த நிறுவனங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தொழில் துறை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இரு நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த அதே நாளில், இன்னொரு முக்கியமான விஷயமும் நடந்திருக்கிறது. 2014 முதல் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து க்ளவுடுடெய்ல் எனும் பெயரில் ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தியின் கட்டமரான் நிறுவனம் ஒரு விற்பனை நிறுவனத்தை நடத்திவந்தது. அந்தக் கூட்டணியை முடித்துக்கொள்வதாக இரு நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன. க்ளவுடுடெய்ல் நிறுவனம் தொடர்பான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க, 2022 மே வரை அவகாசம் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த முடிவுக்கு என்ன காரணம் என இரு தரப்பும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்குப் பெரும் நிம்மதி தந்திருப்பதாகச் சில்லறை வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, பண்டிகைக் கால விற்பனை தொடங்கவிருக்கும் வேளையில் உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. “ஆன்லைன் வர்த்தகம் மக்களை ஒருவிதமான மயக்கத்தில் வைத்திருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இன்னும் அதிகமாகவே ஆன்லைன் விற்பனை பக்கம் மக்கள் சாய்ந்திருக்கிறார்கள். பணம் முதலீடு செய்து, அதிக உழைப்பைச் செலுத்தும் உள்ளூர் தொழில் முனைபவர்களைவிட ஆன்லைன் நிறுவனங்கள் சுரண்டும் லாபம் அதிகம்” என்று பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இனி என்ன?
விற்பனை, தள்ளுபடி விலை போன்றவை தொடர்பாக முடிவெடுப்பது யார் என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை ஜூலை 15-ல் இரு நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்த இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம், ஜூலை 30-க்குள் அதற்கான விளக்கங்களை அளிக்குமாறு கேட்டிருந்தது. இந்தச் சூழலில் ஆணையத்தின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க நான்கு வார அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதன் பின்னர் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு இரு நிறுவனங்களும் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.
இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது இயக்குநர் இது தொடர்பான விசாரணையை நிறைவுசெய்து, இறுதி அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிப்பார். அதன் பின்னர் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் போக்கில் கணிசமான மாறுதல்கள் இருக்கும் என்கிறார்கள் தொழில் துறை நிபுணர்கள். பார்ப்போம்!
- இது போன்ற கட்டுரைகளை ‘காமதேனு’ மின்னிதழில் (https://www.hindutamil.in/kamadenu) படிக்கலாம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago