‘நாங்க புடிக்காம வுட்டுட்டம்னா அந்த மீனு திரும்ப வராது’ என்பது பல மீனவர்களின் வாதம். இது கடலைப் புரிந்துகொண்ட பூர்வகுடிகளின் குரலல்ல; பெருமுதலீட்டுக்கும் பிழைப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்ட நிகழ்காலத் தலைமுறையின் தவிப்பு. இழுவைமடி, சுருக்குமடி போன்ற தொழில்நுட்பங்களின் கண்காணிப்பற்ற, நீண்ட காலப் பயன்பாடு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இழுவைமடிப் பயன்பாடு தமிழகக் கடல்களின் மீன்வளத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மன்னார் கடலில் 200-க்கும் மேற்பட்ட இரட்டைமடிகள் இயக்கப்படுகின்றன. இழுவைமடி, சுருக்குமடித் தொழில்நுட்பங்கள் இந்தோ - நார்வீஜியன் திட்டத்தின் கீழ் (1953-72) அறிமுகப்படுத்தப்பட்டன. நடுவண் மீன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைப்பால் (CIFT- ICAR கொச்சி) 1982-ல் கேரளத்தில் பரவத் தொடங்கிய சுருக்குமடித் தொழில்நுட்பம், விரைவில் வடமேற்கு, கிழக்குக் கடற்கரைகளிலும் பரவத் தொடங்கியது.
‘ரேஸ்மடி’ எனப்படும் ‘இரட்டைப் படகு மடி’ (otter trawl), இழுவைமடியின் இன்னொரு வடிவம். மடியின் வாய்ப் பகுதியின் இரண்டு பக்கங்களையும் இரண்டு படகுகளின் கொம்போடு இணைத்துக்கொண்டு 12 கடல்மைல் வேகத்தில் மடியை இழுக்கிறது. சிறு கண்ணிகள் கொண்ட கடைமடி, கிளறு பலகைகளால் விரிந்தும், அதிவேக இழுவிசையினால் உயர்ந்து நிற்கும் வாய்ப் பகுதியுடன் நகரும் இரட்டைமடியானது, குஞ்சுமீன், முட்டைகளோடு பெருவாரியான மீனை வாரிக்கொண்டு வருகிறது.
மேற்கடலில் பெருங்கூட்டமாய்ப் பயணித்துப் போகும் அயிலை, சூரை போன்ற மீன்களைக் குறிவைத்து, சுவர்போல அவற்றை வலையால் சூழ்ந்து, மீன்கள் வெளியேறிவிடாமல் இரு முனைகளையும் மேல் (மிதவை), கீழ் (குண்டு) பகுதிகளிலுள்ள கயிற்றால் சுருக்குப்பைபோல இணைத்துவிடுவார்கள். மீன்வள அறிஞர் சைலஸ் ‘இந்த நாசகரமான மீன்பிடி முறை கிழக்குக் கடற்கரையின் மீன்வளங்களை ஒட்டுமொத்தமாய் அழித்துவிடும்…’ என்று 1980-லேயே எச்சரித்திருந்தார். ‘சுருக்குமடிகளை அரசு கட்டுப்படுத்தத் தாமதித்துவிட்டது’ என்கிறார் கடல் உயிரின வளர்ப்பு கலந்தறிவாளர் சக்திவேல். தமிழகக் கடல்களில் மீன்பிடி முறைகள் மட்டுமின்றி, விசைப்படகுகளின் எண்ணிக்கையும் இயந்திரங்களின் விசைத்திறனும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பது அடிப்படை யான சிக்கல்.
மீன்வள வீழ்ச்சியின் காரணிகள்
கடல் மீன்வள வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியவை நவீனத் தொழில்நுட்பங்கள் மட்டுமல்ல; கரைக்கடல் மீன்வளத்தில் நன்னீர்ப் பெறுமதிக்கு முக்கியமான பங்குண்டு. டெல்டா தண்ணீர் சதுப்புநிலத்தில் வந்துசேர்ந்த காலத்தில் நல்ல இறால் பாடு கிடைத்துவந்ததை நினைவுகூர்கிறார் தாஜுதீன் (62, கள்ளிவயல்தோட்டம்). ‘பாக் நீரிணைப் பகுதியில் மீன் உற்பத்தி அழிந்துபோனதற்குக் கடற்கரையில் இயங்கும் இறால் பண்ணைகளும் கடலில் இயங்கும் இழுவைமடி, சுருக்குமடிகளும்தான் காரணம்’ என்கிறார் காளிதாஸ் (62, அதிராம்பட்டினம்). ‘கிழக்குக் கடற்கரை முழுவதும் வனங்களை அழித்து இறால் பண்ணைகள் அமைக்க அரசு உடந்தை’ என்கிறார் அர்ஜுனன் (61, மணமேல்குடி). ‘விழுப்புரம் மாவட்டத்துல 19 குப்பங்கள்லயும் இருக்கற இறால் பண்ணைலயிருந்து வர்ற கழிவுகளும் ரசாயனங்களும் எங்க மண்ணையும் நிலத்தடி நீராதாரத்தையும் மட்டுமில்லாம கடலையும் கால்வாயையும் அழிச்சுக்கிட்டிருக்கு’ என்கிறார் பராசரன் (32, கைப்பாணிக்குப்பம்).
மத்திய அரசு செயல்படுத்திவரும் ‘சாகர் மாலா’ திட்டத்தின் மதிப்பீடு எட்டு லட்சம் கோடி என்கிறார்கள். ‘பெருவணிகத்தை முன்னிட்டுக் கடலோரத்தில் அதிவிரைவுச் சாலை அமைப்பது, துறைமுகங்களை மேம்படுத்துவது, மீன்பிடி தொழிலைத் துறைமுகமயமாக்குவது உள்ளிட்ட பெருந்திட்டத்துடன் அரசு காய்களை நகர்த்துகிறது’ என்கிறார் செயல்பாட்டாளர் அருணபாரதி.
மீனவர்களைக் கைவிட்ட மீன்பிடி விதிகள்
1983-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மீன்வள ஒழுங்காற்றுச் சட்டம் 2017-ல் திருத்தி அமைக்கப்பட்டது. எல்லா வகையான இழுவைமடி, சுருக்குமடிகளுக்கும் 2000-ல் தடைவிதித்து அரசாணை வெளியிட்டது; அத்தடையை சென்னை உயர் நீதிமன்றம் 2018-ல் உறுதிப்படுத்தவும் செய்தது.
ஆனால், 12 கடல்மைலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பின் வளங்கள், தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்து, மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது புதிய நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறது. ‘கடல் மீன்வளத்தை மேம்படுத்தி, மீனவர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு’ மத்திய அரசு மீன்வள மசோதாவை (2021-வரைவு) முன்வைக்கிறது. ஆனால், ‘கடலுக்குள் போகும் விசைப்படகுகள் உரிமம் பெற வேண்டும், மீன்பிடிக்கும் இடத்துக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்கிறது இம்மசோதா (பகுதி 7). 2017-ல் முந்தைய தமிழ்நாடு அரசு வெளியிட்ட, சீரமைத்த மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டமும் இதே விதிகளை வைத்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.
மீன்வள மசோதாவிலும், மாநில அரசின் மேற்சொன்ன சட்டத்திலும் இடம்பெறும் மற்றொரு பொதுவான கூறு, இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்திருப்பது. ‘ஏற்கெனவே தமிழ்நாடு காவல் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது; அத்தோடு, 2020-ல் 112 காவல் அதிகாரிகளுடன் கடல்சார் நடப்பாக்கப் பிரிவும் நிறுவப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி தொழிலை ஒழுங்காற்றும் அதிகாரத்தைக் கடலோரப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைப்பதன் நோக்கம் என்ன?’ என்று விஜோ ரொசாரியோ (28, கூட்டப்புளி) எழுப்பும் கேள்வி நியாயமானது.
மாற்று ஏற்பாடுகள் தேவை
மீனவர்களின் வாழ்வாதாரமாய் நீடித்துவந்த கரைக்கடலிலும் பெரும் லாபத்தைக் குறிவைத்து செல்வாக்கு மிக்கவர்கள் முதலீடுகளுடன் உள்ளே நுழைந்துவிட்டனர்; இழுவைமடி, சுருக்குமடி முதலீட்டாளர்கள் பலர் நாட்கூலி அடிப்படையில் வேலையாட்களை அமர்த்தி மீன்பிடிக்கின்றனர். பெரும் லாபத்தைக் குறிவைப்பவர்கள், ஒருபோதும் கடல்வளத்தைப் பேணுவதில் அக்கறைப்பட மாட்டார்கள். கடலூர், ராமேஸ்வரம் போராட்டங்கள் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். ‘இழுவைமடி, சுருக்குமடிகளை ஒழுங்குபடுத்தலாம் என்பது கண்துடைப்பு; தடைசெய்வதுதான் ஒரே தீர்வு’ என்பது அடிமட்ட, சிறுதொழில் மீனவர்களின் குரல்.
இந்நிலையில், மாநில அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. தடைப் பட்டியலிலுள்ள அனைத்து மீன்பிடி முறைகளையும் இதே கரிசனத்துடன் கண்காணிப்பதும் நடைமுறைச் சாத்தியமான மாற்று ஏற்பாடுகளை வகுத்துச் செயல்படுத்துவதுமே நீடித்த தீர்வைத் தரும். மீன்பிடி ஒழுங்காற்று விதிகள் - 2020லுள்ள மீனவர் விரோத விதிகளை நீக்க வேண்டும். 12 கடல்மைலுக்கு அப்பாலுள்ள ‘முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதி’யில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு முற்றிலுமாய்த் தடை போடுமாறு மத்தியக் கால்நடை-மீன்வளத் துறையை வலியுறுத்த வேண்டும்.
- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர், vareeth2021@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago