தமிழகம் நம்பிவரும் பொய்கள் பல. அவற்றில் முக்கியமானது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது. சமீபத்தில் 1,50,000 மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 80%க்கும் மேல் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் என்று தெரியவருகிறது. அறிக்கையை முழுவதுமாகப் படித்தால் சில உண்மைகள் தெரிகின்றன. மென்பொருள் சேவையைப் பொறுத்த அளவில்தான் சுமார் 20 சதவீதத்தினர் வேலைக்குத் தகுதியானவர். மென்பொருள் உற்பத்திக்கு வந்தால், இது நான்கு சதவீதத்துக்கும் கீழே வருகிறது. அடிப்படைத் தொழில்நுட்பத் துறைகளில் 10 சதவீதத்துக்கும் கீழ். கல்லூரிகள் அதிகமாக இருந்தால் கல்வித்தரமும் உயர்வாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்குத் தமிழகமும் ஒரு சான்று.
மருத்துவக் கல்வியின் நிலை என்ன?
தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் கல்வியின் நிலை இது என்றால், மருத்துவக் கல்வி இதைவிட மோசமாக இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அரசு நடத்தும் கல்லூரிகளையும், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளையும் தவிர, மற்ற கல்லூரிகளில் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அலோபதி அல்லாத மருத்துவக் கல்லூரிகளில் நிலைமை மிகவும் மோசம். இந்தத் துறையில் பல வருடங்கள் பணி செய்துவரும் ஓர் அறிஞர் சொல்வது இது: “தொழில்நுட்பக் கல்வி இயந்திரங்களைச் சார்ந்திருக்கிறது. மாறாக, மருத்துவக் கல்லூரிக்கு உயிருள்ள மனிதர்கள் அவசியம். உயிரிழந்த உடல்கள் அவசியம். சில சித்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் பயின்றவர்களின் பெற்றோர்கள் என்னைச் சந்தித்தனர். 10 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையும் வருடம் இரண்டு லட்சம் ரூபாய் படிப்புக் கட்டணமாகவும் கொடுத்து தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தவர்கள். படித்து வெளிவந்தவர்களில் ஒரு நோயாளியைக்கூட நேரில் பரிசோதித்திராதவர்களே அதிகம் என்கிறார்கள். எல்லா நேராய்வு ஆவணங்களும் பொய்யாகத் தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் ஏதும் இந்தக் கல்லூரிகளில் இல்லை என்கிறார்கள்.”
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 643 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளைத் தவிர, மற்றவற்றில் எத்தனை கல்லூரிகள் காசு பார்ப்பதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது பல்கலைக்கழகத்துக்குத் தெரியும். அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். கண்களை மூடிக்கொண்டு விட்டால் சிலருக்குப் பல வசதிகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், கண்களை மூடிக்கொண்டிருந்தனர். மூன்று மாணவிகளின் - 20 வயதுகூட நிரம்பாத மாணவிகளின் - மரணத்தினால் இன்று இவர்களுக்குக் கண்களைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மிகச் சிறிய உலகம்
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடு தழுவி விவாதிக்கப்படுகிறது. தலித்துகளுக்கு நடக்கும் இழிவு களும் நாடு தழுவியது என்றாலும், இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் அவர் பயின்ற பல்கலைக்கழகமும் ஒன்று. அவருக்கு உலகம் முழுவதும் நடந்தவற்றை, நடப்பவற்றைப் பற்றிய புரிதல், தெளிவு இருந்தது. அவரது உலகம் விரிந்தது. மாறாக, தமிழ கத்தில் பலரும் கேள்விப்படாத ஒரு கிராமத்தில், மரணித்த சிறுமிகளின் உலகம் மிகவும் சிறியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், செங்கற்களை எண்ண வேண்டாம். சிமெண்ட் மூட்டை களை எண்ண வேண்டாம். கழிப்பறைகளைக் கழுவ வேண் டாம். ஒரே அறையில் 30 பேர்களுக்கும் மேலாக தங்கள் இரவுகளைக் கழிக்க வேண்டாம். இவை அனைத்தையும் சிறுமிகள் செய்யத் தயாராக இருந்தார்கள். அவர்கள் பதிலாகக் கேட்டது ஒன்றே ஒன்று - தரமான கல்வி.
நாம் கேள்வி கேட்க வேண்டும்
கல்வியின் துணைகொண்டு தங்களது மிகச் சிறிய உலகத்தில் ஓரளவு பிரச்சினைகள் இன்றி வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கல்லூரியில் சேர்ந்தார்கள். எல்லா அவமதிப்புகளையும் தாங்கிக்கொண்டார்கள். அரசிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் முட்டி மோதி யதில் அந்தச் சிறிய உலகம் அவர்கள் கண் முன்னா லேயே உடைந்து சிதறியபோது, வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். என்னைப் பொறுத்தவரையில், சிறிய உலகங்கள் மிகப் பெரிய உலகத்தைவிட முக்கியமானவை. சிறிய உலகங்களை நாம் கவனித்துக்கொண்டால் பெரிய உலகம் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும்.
அவர்கள் உலகங்கள்தான் சிறியவை; மரணங்கள் சிறியவையல்ல. அவற்றை விதிவிலக்காகப் பார்ப்பதைவிட அபாயகரமானது ஏதும் இல்லை. இவர்களைப் போல தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கல்லூரிகள் என்று சொல்லப்படும் நரகக் குழிகளில் உழல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினமன்று. நாம் எல்லோரும் சேர்ந்து அரசையும் அரசியல் செய்பவர்களையும் கட்டாயப்படுத்தினால் இது நிச்சயம் நடக்கும்.
செய்ய வேண்டியவை என்ன?
முதலாவதாக, கல்லூரிகள் ஆண்டுக்கு ஒரு முறை யாவது பார்வையிடப்பட வேண்டும். அவை இப்போது நடப்பது போன்று உப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் மிக விரிவாக நடத்தப்பட வேண்டும். பார்வையிடும் பல்கலைக்கழகமோ, அரசுத் துறையோ பார்வையீடு அறிக்கைகளை முழுமையாக, மாற்றங்கள் ஏதும் இல்லாமல் தங்கள் வலைதளங்களில் அனைவரும் பார்த்தறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.
இரண்டாவதாக, கல்லூரிகள் தங்களது வலைதளங்களில் கீழ்க்கண்ட தகவல்களை வெளியிட வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்.
* கல்லூரியில் இருக்கும் வசதிகளைப் பற்றிய தெளிவான முழுத் தகவல்.
* கல்லூரி விடுதிகளில் இருக்கும் அடிப்படை வசதிகள், குறிப்பாக சமையலறை, கழிப்பறை பற்றிய தகவல். விடுதிக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள தூரம். விடுதிகளில் இருக்கும் அறைகளின் எண்ணிக்கை. கொடுக்கப்படும் உணவைப் பற்றிய தகவல். மருத்துவ வசதிகளைப் பற்றிய தகவல்.
* அரசிடம் இருந்து பெற்ற அனுமதிகளின் நகல்கள்.
* மாணவர்களின் சான்றிதழ்கள் அவர்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டன என்ற உறுதிமொழி.
* கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்களின் அட்டவணை.
* ஆசிரியர்களைப் பற்றிய முழுத் தகவல்.
* கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய தனிப் பக்கங்கள்.
மூன்றாவதாக, நிறுவன ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கும் வரைமுறை வேண்டும். உதாரணமாக, நிறுவன ஒதுக்கீட்டு அடிப்படையில் சேரும் மாணவனிடம் ஐந்து லட்சம் ரூபாய் அதிகம் வாங்கினால், ஐந்து லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரி சிறுமிகளின் மரணத்துக்கு நாடு இன்று வரை வெடித்தெழவில்லை. காரணம், இது நகர நிகழ்வல்ல. ஏதோ ஓர் ஓரத்தில் நடந்தது. மேலாக, கல்லூரிகளின் பின்புலத்தில் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். மீடியா சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். கேள்வி கேட்டால், எதிர்க் கேள்விகள், பதில்கள் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு.
இவர்கள்தான் கல்வியை மரணப் படுக்கைக்குக் கொண்டுவந்தவர்கள். கல்வியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் இவர்களிடம் கூரிய கேள்விகள் கேட்க வேண்டும். தயங்காமல் கேட்க வேண்டும்.
- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago