அதிமுக மீது ஊழல் வழக்கு- 1996 காட்சிகள் மீண்டும் திரும்புகின்றனவா?

By டி. கார்த்திக்

“இனி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது” என்று அறிவித்துவிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் செய்துகொண்டிருந்த நேரம். சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்த காலம். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த தருணம். பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத அந்தச் சூழலில், 2015 பிப்ரவரி 17 அன்று ராமதாஸ் தனது கட்சி சகாக்களுடன் அன்றைய தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அதிமுக அரசு மீது கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, மின்சாரம் கொள்முதலில் ஊழல் என 18 வகையான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் புகார்களாக அடுக்கினார். “புகார்களை ஆளுநருக்கும் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியும் அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்று பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், ஊழல் புகாரை முன்வைத்த அதிமுகவுடனேயே பாமக கூட்டணி அமைத்ததும், அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் அன்புமணி மாநிலங்களவை எம்.பி-யானதும் கிளைக் கதைகள்.

அரசு வழக்கறிஞரின் கருத்து

அதிமுகவோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும், 2015-ல் ஜி.கே.மணி தாக்கல்செய்த வழக்கைப் பாமக வாபஸ் பெறாமலேயே இருந்தது. அந்த வழக்கு அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராகி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்த கருத்துகள் அரசியல்ரீதியாகக் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

“பாமக அளித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கோரிக்கை மனுவை ஆளுநர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளார். கூடுதலாக, அதிமுக அரசு மீது பாமக சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும், தற்போது அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். தற்போது, அந்த மனுவின் நகல்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்குச் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தொடர்கிறது. இந்தப் புகாரில் உரிய விளக்கம் பெற்று சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார். இதன்படி, அதிமுக அரசு மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் திமுக அரசு ஏவ இருக்கும் அஸ்திரமாக பாமக-வின் புகாரே இருக்கும் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது முன்னாள் அமைச்சர்

எம்.ஆர்.விஜயபாஸ்கரிலிருந்து சோதனை வேட்டையைத் திமுக அரசு தொடங்கியுள்ளது. பதிலுக்கு, ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சி, அதிமுகவை அழிக்கச் சதி’ என்ற வழக்கமான அரசியலையே முன்னெடுக்கிறது அதிமுக. அதை மறைமுகமாக வைத்தும் பொதுவிஷயங்களை வெளிப்படையாக முன்வைத்தும் அதிமுக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் அதிமுகவுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சிகளைத் திமுக அரசு தொடங்கக்கூடும். அதற்கு, முந்தைய அதிமுக அரசு மீது பாமக கொடுத்த ஊழல் புகார்களைத் திமுக அரசு தூசுத் தட்டலாம். அதன் வெளிப்பாடுதான், உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்த கருத்துகள் எனலாம்.

சுவாமியின் புகார்கள்

இதற்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கே ஓர் உதாரணம். 1995-ல் அன்றைய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா மீதான ஊழல் புகார்களை அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் வழங்கி, வழக்குத் தொடர அனுமதி கேட்டார். சுவாமியின் புகார் தொடர்பாக விரைந்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் 1995 ஏப்ரல் 1-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கினார். அப்படித் தொடங்கியதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சுவாமியின் இந்த வழக்கைத் தமிழக அரசு ஏற்று நடத்தியது. அந்த வழக்கு விசாரணை நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருடைய தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே மாறியது. 1996-ல் சுவாமியின் புகாரைக் கையில் எடுத்த திமுக, இப்போது பாமகவின் ஊழல் புகாரைக் கையில் எடுக்காது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

கூட்டணிக்குள் வீசப்பட்ட குண்டு

1996 தேர்தல் அறிக்கையைப் போலவே 2021 தேர்தல் அறிக்கையிலும் அதிமுகவின் ஊழல் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று திமுக தெரிவித்திருந்தது. ஆக, இந்த விஷயத்தில் 25 ஆண்டுகள் கழித்து, ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அரசே நேரடியாக ஊழல் வழக்குகளைத் தோண்ட முடியும் என்றாலும், பிற கட்சிகள் கொடுத்த புகார்களைக் கையில் எடுப்பதன் மூலம், அரசு நடுநிலைமையோடு செயல்படுகிறது என்ற தோற்றத்தைக் காட்டிக்கொள்ள முடியும்.

காத்திருக்கும் கண்ணி வெடிகள்

ஜி.கே.மணி வழக்கில், இதுவரை கருத்துக் கூறாமல் அமைதி காக்கிறது பாமக தரப்பு. இதுதொடர்பாக ஜி.கே.மணியை நாம் தொடர்புகொண்டபோது, “இந்த வழக்கு சம்பந்தமாகப் பாமகவினர் அனைவரும் கட்சித் தலைமையிடம் பேசியிருக்கிறோம். கட்சியில் முடிவுசெய்து கட்சித் தலைமை விரிவான அறிக்கை வெளியிடும். இதனால் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் கிடையாது” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

ஆக, அதிமுகவின் முந்தைய அரசு மீது பாமக சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் கண்ணி வெடிகளைப் போல மறைந்துகிடக்கின்றன. அந்தப் புகார்களை அரசு தோண்டும்போது எந்த நேரத்திலும் அது வெடிக்கலாம். அது, தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்!

- இது போன்ற கட்டுரைகளை ‘காமதேனு’ மின்னிதழில் (https://www.hindutamil.in/kamadenu) படிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்