கரிம எரிபொருட்களை எரிப்பதன் வாயிலாக வரும் புகையால் புவிவெப்பமாதல் அபாயகரமாக அதிகரித்துப் பருவநிலையில் அபாயகரமான மாறுதல்களை ஏற்படுத்திவருவது அறிவியல் ஆய்வுகள் மூலம் வலுப்பட்டுவரும் காலம் இது. மேற்கு அமெரிக்காவில் நிலவும் வறட்சி, வெப்ப அலைகள், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீ, ஐரோப்பாவை அச்சுறுத்தும் கனமழை, சூறாவளிகள், இந்தியாவில் பருவம் தவறிப் பெய்யும் மழைகள் ஆகியவை பருவநிலையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டதை உறுதிசெய்கின்றன. வளிமண்டலத்தில் அதிகமாகக் கலக்கும் கரியமில வாயுவால் (கார்பன் டையாக்ஸைடு) புவி வெப்பமடையும் அபாயம் இருக்கிறதென்று, எளிய அடிப்படைப் பரிசோதனை மூலம் 165 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்குத் தெரிவித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த யூனிஸ் ஃபுட் (1819-1888) என்ற பெண் அறிவியலர். கார்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் நிலக்கரியிலிருந்து மின்சாரம் எடுக்கும் மின்நிலையங்கள் உருவாவதற்கும் முன்னர் புவிவெப்பமாதலின் அபாயத்தை உரைத்தவர் அவர். புவியை வெப்பமடையச் செய்யும் நிகழ்வுக்குக் காரணமான, கரியமில வாயுவின் வெப்பம் உறிஞ்சும் தன்மையை 1856-ல் தனது சுருக்கமான ஆய்வுக்கட்டுரை மூலம் யூனிஸ் ஃபுட் நிரூபித்தார்.
கரியமில வாயு வாசனை இல்லாதது, சுவையில்லாதது, நிறமில்லாதது. கரி, எண்ணெய், எரிவாயு, விறகுகளை எரிக்கும்போது இந்தக் கரியமில வாயு வெளிப்படுகிறது. புவியின் மேற்பரப்பு வெப்பமடையும்போது, அந்த வெப்பம் வானவெளிக்குள் உடனடியாகப் பரவிவிடும் என்று கருதப்படுகிறது. ஆனால், அது அத்தனை எளிதாக நடக்கும் காரியம் அல்ல. ஒரு கண்ணாடிக் கூரையிட்ட குடில் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பகலில் சூரியக் கதிரால் அந்தக் கண்ணாடிக் கூரைக்குக் கீழே தரையில் இருக்கும் வெப்பத்தை அந்தக் கூரை உறிஞ்சிவைத்துக்கொண்டு, இரவில் அதை மீண்டும் தரைக்குப் பரப்பும். இப்படித்தான் வானவெளிக்குச் செல்லும் வெப்பத்தைக் கரியமில வாயு, மீத்தேன், வளிமண்டலத்தில் உள்ள நீராவி போன்றவை உறிஞ்சிவைத்துக்கொள்ளும். உறிஞ்சிய வெப்பத்தை மீண்டும் பூமியின் மேற்பரப்புக்கு இவை திருப்பி அனுப்புவதாலேயே பசுங்குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெப்பத்தை வளிமண்டலம் பிடித்து வைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்ததாகவே இருந்தது. அதற்கான காரணத்தைத் தனது பரிசோதனையின் வழியாக யூனிஸ் ஃபுட் சொன்னார்.
யூனிஸ் இரண்டு கண்ணாடி உருளைகளை எடுத்துக்கொண்டு இரண்டிலும் வெப்பமானிகளைப் பொருத்தினார். ஒரு உருளையில் கரியமில வாயுவையும் இன்னொரு உருளையில் காற்றையும் அடைத்து இரண்டையும் சூரிய ஒளியில் வைத்தார். கரியமில வாயுவைக் கொண்டிருந்த உருளை சீக்கிரத்திலேயே உஷ்ணமானதைப் பார்த்தார். வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தைக் கரியமில வாயு சீக்கிரம் உறிஞ்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டார். தற்போதுள்ளதைவிடக் கூடுதலாகக் காற்றில் கரியமில வாயு கலக்குமானால், கூடுதல் வெப்பம் ஏற்படும் என்ற முடிவுக்கு யூனிஸ் வந்தார். சில ஆண்டுகள் கழித்து 1861-ல் ஐரிஷ் அறிவியலர் ஜான் டின்டால், கரியமில வாயு மிக வலுவாக வெப்பத்தை உறிஞ்சிக்கொள்வதை வைத்து நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்திப் பார்த்து அளவிட்டார். அத்துடன் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு சிறுதுளி மாறினாலும் அது பருவநிலையில் ஏற்படுத்தும் சாத்தியமான மாற்றங்களையும் கண்டறிந்தார். கரியமில வாயுவைப் போலவே மீத்தேன் போன்ற இன்ன பிற ஹைட்ரோ கார்பன் வாயுக்களும் பருவநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
1800-களிலேயே மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் விகிதம் கூடத் தொடங்கிவிட்டது. கரி, எண்ணெய் எரிபொருள், வாயு எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
கரியமில வாயுவின் தாக்கத்தால் ஏற்படும் பருவநிலை மாறுதலை அளவுரீதியாக முதலில் மதிப்பிட்டவர் ஸ்வீடிஷ் அறிவியலரும் நோபல் பரிசாளருமான ஸ்வான்தே அரேனியஸ். கரியமில வாயுவின் தாக்கம் மூன்று மடங்கு அதிகரித்தால் ஆர்க்டிக் துருவப் பிரதேசப் பகுதிகளில் வெப்பநிலை 8 அல்லது 9 டிகிரி செல்சியஸுக்கு உயரும் என்று மதிப்பிட்டார். ஆர்க்டிக்கில் ஏற்கெனவே 3.8 செல்சியஸுக்கு வெப்பநிலை உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் புவி சற்று வெப்பமடைவது நல்லது என்றே அறிவியலர்கள் கருதினார்கள். ஆனால், கரிம எரிபொருள்களின் பயன்பாடு இத்தனைப் பிரம்மாண்டமாக அதிகரிக்கும் என்று கற்பனை செய்யவேயில்லை. 1937-ல் பொறியாளர் கய் காலந்தர், அதிகரிக்கும் வெப்பநிலைகளை அதிகரிக்கும் கரியமில வாயுவின் நிலையோடு ஒப்பிட்டுப் பதிவுசெய்துள்ளார். கரிம எரிபொருட்களை எரிப்பதன் வாயிலாக மனிதர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மில்லியன் டன்கள் அளவுக்குக் கரியமில வாயுவை 50 ஆண்டுகளில் ஏற்றியுள்ளதாக எச்சரித்திருக்கிறார்.
1965-ல் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனிடம் பருவநிலை மாறுதல் குறித்து இப்படி எச்சரிக்கப்பட்டது. “50 கோடி ஆண்டுகளில் நிதானமாக சேகரமான கரிம எரிபொருளை மனிதர்கள் சில தலைமுறைகள் காலத்திலேயே எரித்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்பதுதான் அந்த எச்சரிக்கை. அரை நூற்றாண்டுக்கும் முன்னரே பனிமலைகள் உருகுவது, கடல் மட்டம் அதிகரிப்பது, கடல் நீரில் அமிலங்கள் அதிகரிப்பது குறித்தெல்லாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வந்த ஆண்டுகளில் கணிக்கப்பட்டதைவிட அதிக அளவில் பனிமலைகள் காணாமல் போயுள்ளன. கடல் மட்டம் அதிகரித்துள்ளது. கடல் நீரில் கார்போனிக் அமிலம் அதிகரித்துக் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
அறிவியலர்கள் கணித்ததையும் தாண்டிப் புவிவெப்பமாதலின் தாக்கங்களை நாம் ஏற்கெனவே மோசமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஆட்சியாளர்கள் மிக மெதுவாகவே புவிவெப்பமாதலுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். சிலரோ புவிவெப்பமாதல் என்ற கருத்தையே மறுக்கின்றனர். பிறரோ காத்திருந்து பார்க்கலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஆனால், மேற்கு அமெரிக்காவில் காணப்படும் வரலாறு காணாத வறட்சியும், வெப்ப அலைகளின் தாக்கமும், ஆஸ்திரேலியாவைத் தாக்கும் காட்டுத்தீயும், வளைகுடா பகுதிகளிலும் ஐரோப்பாவிலும் காணப்படும் மழை அளவும் சூறாவளிகளும் சீனப் பெருமழையும் வெள்ளமும் புவிவெப்பமாதலை இனியும் மனித குலம் புறக்கணிக்க முடியாது என்றே எச்சரிக்கை விடுக்கின்றன.
“50 கோடி ஆண்டுகளில் நிதானமாக சேகரமான கரிம எரிபொருளை மனிதர்கள் சில தலைமுறைகள் காலத்திலேயே எரித்துக்கொண்டிருக்கிறார்கள்!''
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago