முதுகில் ரேடார் கருவியைச் சுமந்த ராணுவ ஆராய்ச்சி விமானம் ஒன்று 1999, ஜனவரி மாதத்தில் சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதிக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் கருவியில், பல விதமான சோதனைகளை விமானத்தில் இருந்தபடி பெங்களூரு ஆய்வகங்களைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் நால்வர் செய்துகொண்டிருந்தனர். திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட 8 பேரும் பலியானார்கள்.
அப்போதைய டிஆர்டிஓ-வின் தலைவர், விஞ்ஞானி ஏபிஜே அப்துல் கலாம், புதுடெல்லியிலிருந்து பெங்களூரு நோக்கி விரைகிறார். கண்ணீரோடு கதறிய விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும், கவலையோடு குழுமியிருந்த சக விஞ்ஞானிகளுக்கும் அவர் கூறிய வார்த்தைகள் இவை. ‘நாட்டின் அறிவியல் குறிக்கோளை நிறைவேற்றும் பணியில் இந்த இளம் விஞ்ஞானிகள் தங்கள் உயிரை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற மீதிப் பணியையும் முடித்து, அவர்களுடைய உழைப்பின் கனியைக் காத்திருக்கும் தேசத்தின் கரங்களில் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.’
இந்த ஆராய்ச்சியின் நீட்சியாக உருவாக்கப்பட்ட ரேடார் தாங்கி விமானம் தற்போது தேசப் பாதுகாப்பில் முக்கியப் பங்களிக்கிறது. பாலாகோட்டில் நடந்த தாக்குதலிலும் இது பங்காற்றியது. அதுதான் கலாம்.
மரபுகளை மீறிய மனிதர்
ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கிற விஞ்ஞானிகள் முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெறுவது வழக்கம். விஞ்ஞானிகளைப் பற்றிய இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு பொதுவெளியிலும் உண்டு. இந்த எழுதப்படாத எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி, வெறும் இளநிலை பொறியியல் பட்டத்துடன் டிஆர்டிஓ நிறுவனத்தின் உச்சபட்ச விஞ்ஞானி நிலையை அடைந்த, மரபை மீறிய சாதனையாளர் கலாம்.
விஞ்ஞானிகள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்தும், அந்தக் கட்டுரைகள் எத்தனை பேரால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கையை வைத்தும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை மதிப்பிடுவார்கள். பயன்பாட்டு ஆராய்ச்சித் (Applied Research) தளத்தில் இயங்கிய கலாம், இந்த நடைமுறைகளைத் தாண்டி ஆய்வுக் கட்டுரைகளின் தளத்திலேயே தேங்கிவிடாமல், தனது அறிவியல் படைப்புகளை ஏவுகணைகளாக, ஆயுதங்களாக மாற்றும் அயராத பணியில் இரவு பகலாக உழன்று வெற்றியும் பெற்றார். அக்னி, பிருத்வி, ஆகாஷ், பிரமோஸ் என அவரது அறிவியல் படைப்புகள் காகிதங்களாக நின்றுவிடாமல், எல்லை காக்கும் ஆயுதங்களாக நின்றுகொண்டிருக்கின்றன.
புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் தங்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பணி ஓய்வுக்குப் பிறகு எழுதுவதே வழக்கம். ஆனால், பணியில் இருக்கும்போதே ‘அக்னிச் சிறகு’களை எழுதிய துணிச்சல்காரர் கலாம். அந்த ‘அக்னிச் சிறகு’களைப் பயன்படுத்திப் பறக்கக் கற்றுக்கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன்.
மனிதர்கள் முக்கியம்
கலாமுடன் நெருங்கிப் பணியாற்றிய பிருத்வி ஏவுகணை நாயகர் ஜெனரல் சுந்தரம் ஒருமுறை என்னிடம் இப்படிக் கூறி்னார். ‘தனது குழுவிலுள்ள விஞ்ஞானிகளின் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மேலதிகாரி கலாம்’. பாதுகாப்பு ஆராய்ச்சியில் கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்தவர் கலாம். சிறந்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களைச் செழுமைப்படுத்துவார்கள். அந்த வகையில் சிவதாணுப் பிள்ளை, விகே சரஸ்வத், அவினாஷ் சந்தர், சதீஷ் ரெட்டி, டெஸ்ஸி தாமஸ் என அவர் அடையாளம் கண்ட தொழில்நுட்பத் தளபதிகளின் பட்டியல் நீள்கிறது. ‘பயனற்றவர் என்று ஒருவரும் இல்லை. ஒவ்வொருவரையும் ஏற்ற வகையில் நாம் பயன்படுத்த வேண்டும். இதுதான் கலாமிடம் நான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம்’ என்று ஒரு சந்திப்பில் என்னோடு பகிர்ந்துகொண்டார் பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை.
அடுத்து என்ன?
ஒரு இலக்கை அடைந்துவிட்டால், அந்த வெற்றியின் வெளிச்சத்திலேயே நின்றுகொண்டிருக் காமல், அடுத்த இலக்கை நோக்கித் தனது குழுவினரை உடனடியாக நகர்த்தும் குணம் கலாமிடம் இருந்தது. 2008-ல் சந்திரயான்-1 திட்டத்தின் மோதல் ஆய்வுக் கருவி (Moon Impact Probe) நிலவில் இறங்கிய நாளில் உலகமே அதன் வெற்றியை ருசித்துக்கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையில், வெற்றியைப் பற்றிப் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் எதிரில் நின்றிருந்த திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம் கலாம் கேட்கிறார், ‘அடுத்து என்ன?’ அந்தக் கேள்வியில் தொடங்குகிறது சந்திரயான்-2 திட்டத்தின் பயணம்.
அக்னிப் பரீட்சை
இன்று இந்தியாவின் பெருமையாகப் பொதுவெளியில் அறியப்படுகிற அக்னி ஏவுகணைத் திட்டத்தின் தொடக்க காலம் அக்னிப் பரீட்சையாக இருந்தது. 1989-ல் நடந்த அக்னி ஏவுகணையின் முதல் இரண்டு சோதனைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன. ஒட்டுமொத்த தேசமும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சோதனைகள் திட்டமிட்டபடி நடைபெறாததில் டிஆர்டிஓ நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வி.எஸ்.அருணாச்சலம் மற்றும் ஏவுகணைகள் திட்டங்களுக்குத் தலைமை ஏற்று இருந்த கலாம் ஆகியோர் மீது அழுத்தம் அதிகரித்தது. அக்னியின் காலதாமதம் தேசத்தின் பேசுபொருளானது. தோல்விக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்தார் வி.எஸ்.அருணாச்சலம். தானே காரணம் எனக் கூறி, தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்தார் கலாம். மேலும், வேலையை இழந்தாலும் ஒரு பிரம்மச்சாரியால் எளிதில் வாழ்க்கையைச் சமாளிக்க முடியும் என்று நகைச்சுவையாகவும் காரணம் சொன்னார் கலாம். ராஜிநாமா தேவை இல்லை, ஏவுகணை வெற்றி மட்டும்தான் தேவை என்று தீர்க்கமாகச் சொல்லித் திருப்பி அனுப்பினார் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த்.
ஹைதராபாத் நகரின் இரண்டு ஏவுகணை ஆய்வுக்கூடங்களின் விஞ்ஞானிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை ஓரிடத்தில் கூட்டினார் கலாம். சோர்ந்துபோயிருந்த அவர்களிடம் ‘நம்மால் முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைத்தார். விளைவு, மே 22, 1989-ல் நடந்த அடுத்த அக்னி சோதனை வெற்றியடைந்தது. ‘அக்னி’ சுதந்திர இந்தியாவின் பிரமிப்பான அறிவியல் படைப்பாக சரித்திரத்தில் இடம்பெற்றார். கலாம் இந்திய இதயங்களில் நிரந்தர இடம்பெற்றார்.
- வி.டில்லிபாபு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி. ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago