பொழுதைப் போக்கவும், அரட்டை அடிக்கவும் இணையத்துக்கு வரும் பெரும்பாலானோர் மத்தியில் ஆக்கபூர்வமாக இணையத்தைப் பயன்படுத்துவோர் ஆங்காங்கே உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இணையத்தில் அறிவுபூர்வமான தகவல்களைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது விக்கிப்பீடியா எனும் களஞ்சியமாகும். அத்தகைய இணையக் கலைக் களஞ்சியத்தில் தமிழில் ஐம்பதாயிரத்துக்கும் மேல் தொகுப்புகள் செய்து, உலகின் ஐந்தாவது நபராக இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளரசன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கனகரத்தினம், கனடாவைச் சேர்ந்த நக்கீரன், இலங்கையைச் சேர்ந்த அன்ரன், மதுரையைச் சேர்ந்த எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையடுத்து இந்த இமாலயப் பங்களிப்பைச் செய்துவரும் இணையவாசி இவர்.
அருளரசன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். ஓசூரிலேயே படித்து வளர்ந்து, தற்போது சுயதொழில் செய்துவருகிறார். இவரது தந்தை கி.குருசாமி, ஓசூரின் முதல் நகராட்சித் தலைவராக இருந்தவர். முதன்முதலில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து சுஜாதா எழுதிய ஒரு கட்டுரை வழியாகத் தெரிந்துகொண்டவர். சிறு வயதிலிருந்தே மொழிப் பற்று கொண்டவராக வளர்ந்ததாலும் நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டதாலும் விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறார். விக்கிப்பீடியா என்பது யாரும் தொகுக்கக்கூடிய கூட்டு உழைப்பு என்பதால், மேலும் ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார். இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். அவ்வாறு தேடிப் படித்த தகவல்கள் அனைத்தும் இவரைப் போன்ற பல தன்னார்வப் பங்களிப்பாளர்களால் உருவானதாகும். தமிழ் விக்கிப்பீடியாவில் சுமார் 1.39 லட்சம் கட்டுரைகள் இருந்தாலும், அதில் ஏழில் ஒரு பங்குக் கட்டுரைகளில் இவரின் பங்கு இருக்கிறது.
2014 முதல் விக்கிப்பீடியாவில் அருளரசன் எழுதிவருகிறார். இதுவரை 4,000 புதுக் கட்டுரைகளைத் தொடங்கியும், சுமார் இருபதாயிரம் பக்கங்களில் ஐம்பதாயிரம் தொகுப்புத் திருத்தங்களைச் செய்தும் உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவரான இவர் இலங்கை, பஞ்சாப் போன்ற இடங்களில் நடந்த விக்கிப்பீடியா சார்ந்த மாநாடுகளுக்குச் சென்றுவந்துள்ளார். வரலாறு, அரசியல் தொடர்பான மிக முக்கியக் கட்டுரைகளைத் தொடங்கியவர். இவர் எழுதிய ‘கீத கோவிந்தம்’ (திரைப்படம்), ‘சாவித்திரிபாய் புலே’, ‘ஆற்காடு பஞ்சாங்கம்’ போன்ற கட்டுரைகள் அதிகம் படிக்கப்பட்டன. விக்கித்தரவு, விக்கிமூலம், விக்கிமேற்கோள், பொதுவகம் போன்ற துணைத் திட்டங்களிலும் கணிசமாகப் பங்களித்துவருகிறார். வேங்கைத் திட்டம் உட்பட பல்வேறு இந்திய அளவிலான போட்டிகளில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வெற்றிக்குத் துணைநின்றவர். இவருடன் இவர் மனைவி தீபாவும் பல்வேறு தலைப்புகளில் எழுதிவரும் விக்கிப்பீடியர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற முயற்சி. யாரும் எழுதலாம், யாரும் திருத்தலாம் என்பதுடன் ஆதாரபூர்வமாக ஒவ்வொரு செய்தியையும் குறிப்பிட வழிகாட்டுகிறது. முழுக்க முழுக்க வணிக நோக்கில்லாமல் தன்னார்வமாக ஒருங்கிணைப்பும் மேற்பார்வையும் செய்து, இணையத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்றால் இவரைப் போன்ற விக்கிப்பீடியர்களைச் சொல்லலாம். வெள்ளித்திரைக்கு முன்னால் கொண்டாடப்படுபவர்களைவிட இந்தக் கணினித் திரைக்குப் பின்னால் கட்டுரையாக எழுதிய இவர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே!
- நீச்சல்காரன், தொழில்நுட்ப எழுத்தாளர்.
தொடர்புக்கு: neechalkaran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago