நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி சமீபத்தில் தொலைபேசியில் அழைத்தார். மிகவும் உரிமையுடன் பேசக்கூடியவர் அவர். ஹலோ சொன்ன அடுத்த நொடியே, ‘உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா? எங்கள் மகள் திருமணம் ஜூன் மாதம் நடக்க நிச்சயமாகி இருந்ததே… திருமணம் நடந்ததா, இல்லையா… என்ன ஆனது என்று ஒரு வார்த்தை கேட்டீர்களா?’ என்று உரிமையுடன் திட்ட ஆரம்பித்தார்.
உடனே நான் சுதாரித்துக்கொண்டு, ‘ஓ… உங்கள் கணவரிடம் திருமணத் தேதிக்கு ஒரு வாரம் முன்பே பேசினேனே… திருமணத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்திரிகை கொடுக்க வரவில்லையே என்று கேட்டேன். கரோனா ஊரடங்கு காரணமாக திருமண ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை… திருமணத்தை 3 மாதங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிவைத்து விட்டதாகச் சொன்னாரே… திருமண மண்டபத்திற்குக் கொடுத்த முன்பணத்தைக் கூட மண்டப உரிமையாளர் திரும்பத் தர மறுப்பதாகவும், அதைத் திரும்பப் பெற முயற்சி எடுத்து வருவதாகவும் சொன்னாரே…’ என்றேன்.
அதைக் கேட்ட நண்பரின் மனைவி, ‘அப்படியா… என்னிடம் நீங்கள் பேசியதை அவர் சொல்லவே இல்லையே… மண்டபத்திற்குக் கொடுத்த முன்பணம் திரும்ப வரவில்லையா… அதையும் சொல்லவில்லையே… வரட்டும் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன்…’ என்றார். எனக்குத் துாக்கி வாரிப்போட்டது.
நண்பர் தன் மனைவியிடம் கூட சொல்லாத ஒரு தகவலை என்னிடம் சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. தேவையில்லாமல் உளறிவைத்து, கணவன் மனைவி இடையே சச்சரவுக்கு நான் காரணமாகிவிட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் மனைவிக்குத் தெரியாமலா இருக்கும் என்று நினைத்து நான் சொன்னது விபரீதமாகிவிட்டது.
» மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உலர் தானியம் வழங்குக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
இதேபோன்று இன்னொரு உறவினர் ஒருவரும் தன் மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கரோனா ஊரடங்கில் சிக்கி, மண்டபத்தில் திருமணத்தை நடத்தமுடியாமல் வீட்டிலேயே 50 பேருடன் திருமணத்தை நடத்தி முடிக்கும் நிலை ஏற்பட்டது. அவரும் மண்டபத்தை முன்கூட்டியே முழு தொகையையும் கொடுத்து பதிவு செய்து வைத்திருந்தார். அந்தப் பணத்தையும் அவரால் திரும்ப வாங்க முடியவில்லை என்ற தகவலும் கிடைத்தது.
இதென்ன புது நடைமுறையாக இருக்கிறது என்று விசாரித்தபோது, கரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் திருமண மண்டப உரிமையாளர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், மண்டபத்தைப் பதிவு செய்ய கொடுத்த முன்பணத்தை வைத்துதான் அவர்கள் சமாளிக்க வேண்டும். அவர்களும் பாவம் தானே என்று மண்டபத்திற்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் உண்மையில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்று கவனத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்று பிறப்பித்தது. அதில், ‘மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்ட திருமணங்களுக்கு மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை வழங்கக் கூடாது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, திருமண வீட்டாருக்குப் பணத்தை திருப்பித் தர வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், சங்கத்தின் தலைவர் என்.சிங்கைமுத்து, ‘தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நடைபெறாவிட்டால், மண்டபத்தைப் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட தொகையை நாங்கள் பொதுவாகத் திரும்பத் தருவதில்லை. இது எங்கள் வாடிக்கையான நடைமுறை. திருமண மண்டப வாடகை விஷயம் ஒரு சிவில் நடவடிக்கை என்பதால், இதில் காவல்துறை தலையிடக் கூடாது’ என்று உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கரோனா காரணமாக நிறைய திட்டமிடப்பட்ட திருமணங்கள் நடத்த முடியாமல் போனதில், மண்டப வாடகையாகப் பெருந்தொகையைச் செலுத்திவிட்டு அதைத் திரும்ப வாங்க முடியாமல் பலர் சிரமப்படும் தகவல் கிடைத்தது. இதுகுறித்துப் பல இடங்களில் காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், நுகர்வோர் நீதிமன்றங்களிலும் புகார்கள் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் காவல்துறையும் திணறி வருகிறது.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் இதுவும் ஒன்று. திருமணம் நடைபெற முடியாமல் போனதற்கு திருமண வீட்டாரையும் குறை சொல்ல முடியாது. மண்டப உரிமையாளர்களும் பொறுப்பேற்க முடியாது. அரசு ஊரடங்கு என்ற உத்தரவு பிறப்பிக்கும்போது அதைப் பின்பற்றுவது இருதரப்பினரின் கடமை. ஆனால், திருமண மண்டபத்தைப் பயன்படுத்தாமலே மண்டப வாடகையாக பெருந்தொகை செலுத்தி பொருளாதார இழப்பைச் சந்திப்பது நியாயமல்ல.
திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது வாடிக்கையான நடைமுறை என்று கூறி, பணத்தைத் திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பிலிருந்து தவறுவதை ஏற்க முடியாது. அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, மண்டப உரிமையாளர்கள் சேவைக் கட்டணமாக ஒரு சிறிய தொகையை மட்டும் பிடித்துக் கொண்டு மீதத்தை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் வகையில் மாநில அளவில் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago