கானமயில் – இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கலாம். ஔவையார் மூலம் 12-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் பதிவான பறவை. கடந்த நூற்றாண்டுவரை இந்தப் பறவை தமிழ் நிலத்தில் வசித்துவந்தது. 1930-களில் ஒகேனக்கல் புதர்க் காடு, கோவை சூலூர் விமானதளம் ஆகிய பகுதிகளில் இந்தப் பறவை இருந்ததாக சூழலியல் அறிஞர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Great Indian Bustard என்றழைக்கப்படும், இந்தியாவை மையமாகக் கொண்ட ஓரிடவாழ் பறவை இது. தேசியப் பறவையாக்கப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்ற முக்கியத்துவத்தைக் கொண்டது. உலகின் எடைமிகுந்த பறக்கும் பறவைகளில் ஒன்று. இப்படி அதன் பெருமைகள் பல.
புலிகளைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டபோது 268 புலிகளே இந்தியாவில் இருந்தன. அப்போது கானமயில்கள் ஆயிரத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்தன. தொடர்ச்சியான பாதுகாப்புச் செயல்பாடுகள் மூலம் புலிகள் எண்ணிக்கை இன்றைக்கு மூவாயிரத்தை எட்டியுள்ளது. கானமயில்களின் எண்ணிக்கையோ 150-க்கும் குறைவு. இந்த எண்ணிக்கைச் சரிவு வெறும் 50 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த ஒன்று.
ஆனால், கானமயில்கள் குறித்து நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. நமது அறிவியல் பாடப்புத்தகங்களிலோ, இன்றைய பண்பாட்டு அடையாளங்களிலோ கானமயில்களுக்கு இடமில்லை. அது ஏதோ வேற்றுக்கிரகவாசி போலிருக்கிறது. ஆனால் சிட்டுக்குருவிகள், பசியில் வாடும் தெருநாய், அநாதரவான மாடுகள் போன்றவை சட்டென்று நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
சிட்டுக்குருவிகள் அழிகின்றனவா?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் கைபேசி அலைவரிசைக் கதிர்வீச்சால் பறவைகள் மடிவதாகவும், இப்படிப் பறவைகள் மடியக் காரணமாக இருக்கும் மனிதர்களை பட்சிராஜன் என்கிற பறவையியலாளரின் ஆவி பழிவாங்குவதாகவும் கதை அமைக்கப்பட்டிருந்தது. கைபேசிக் கோபுரங்களால்தான் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்கிற அறிவியல்பூர்வமற்ற கருத்தை புனேவைச் சேர்ந்த முகமது திலாவர் என்பவர் பிரபலப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் அந்தக் கருத்து நாடெங்கும் பரவலானது. சிட்டுக்குருவிகளுக்காக எல்லோரும் உருகத் தொடங்கினார்கள்.
ஆனால், சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்பில் இல்லை. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக்குருவிகள் உள்ளன. இந்தியாவில் சில கோடி சிட்டுக்குருவிகளாவது இருக்கும். உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் மட்டும் 15,000 சிட்டுக்குருவிகள் உள்ளதாக, லக்னோ பல்கலைக்கழகக் காட்டுயிர் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒருபடி மேலே போய், ‘இ-பேர்டு’ தளத்தில் பறவை நோக்குபவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பதிவுசெய்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிட்டுக்குருவிகள் எங்கே தென்படுகின்றன என்பதை மாவட்டவாரி வரைபடமாக ‘சேலம் பறவையியல் கழகம்’ சமீபத்தில் வெளியிட்டுள்ளது (https://www.sof-life.org/hosp-distribution/). இந்தியாவில் பெருநகரங்களைத் தவிர்த்த பகுதிகளில் சிட்டுக்குருவிகள் பரவலாகவும் சீரான எண்ணிக்கையிலும் வாழ்ந்துவருகின்றன என்று ‘இந்தியப் பறவைகளின் நிலை 2020’ அறிக்கை தெரிவிக்கிறது. முக்கியப் பெருநகரங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை ஓரளவு சரிந்திருக்கலாம். நகரங்களில் சிட்டுக்குருவிகள் கூடமைக்க வசதியில்லாத கட்டிட அமைப்பும், சிட்டுக்குருவிக் குஞ்சுகளுக்கான புழுக்கள் கிடைக்கும் தோட்டங்கள் குறைந்ததும்தான் அதற்குக் காரணங்கள்.
கவனச் சிதறல்
இப்படியிருக்கும்போது, ‘சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன. அவற்றைப் பாதுகாப்போம் வாருங்கள்’ என்று ஊரைக் கூட்டுவதால் என்ன நேரும்? காட்டுயிர்கள் மீதும் சூழலியல் மீதும் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் கானமயில், வரகுக்கோழியைப் போன்று உண்மையிலேயே அழிவின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பறவைகளை விடுத்து, சிட்டுக்குருவிகளை நோக்கி நகர்வார்கள். சிறிதளவு தானியமோ ஒரு பாத்திரத்தில் தண்ணீரோ வைப்பது, அதிகம் போனால் ஒரு சிட்டுக்குருவிக் கூட்டை வாங்கி வைப்பது ஆகியவற்றோடு தாங்களும் காட்டுயிர்களைக் காப்பாற்றப் பங்களித்துவிட்டதாக நம்பிக்கொள்வார்கள். ஆட்சியாளர்களும் அரசு நிர்வாகமும்கூட இதுபோன்ற மேம்போக்கான சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறிதளவு பணம் ஒதுக்கி, தங்கள் கடமையை முடித்துக்கொள்ளும்.
உண்மையில், கானமயிலைப் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட இந்தியப் பறவைகள் அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்துவருகின்றன. ஒரு காலத்தில் மேற்கு இந்தியாவிலும் தக்காணப் பீடபூமியிலும் கானமயில்கள் வாழ்ந்துவந்தன. புல்வெளிகளிலும் ஓரளவு வறண்ட பகுதிகளிலும் வாழக்கூடிய இந்தப் பறவை, தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக்கூடியது. புல்வெளிகளும், திறந்தவெளிக் காட்டுப் பகுதிகளும் அழிக்கப்பட்ட நிலையில், இன்றைக்குத் தென்னிந்தியாவில் இந்தப் பறவைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. இந்தியாவில் எஞ்சியுள்ள 150 கானமயில்களில் 80%-க்கு மேல் ராஜஸ்தானில் உள்ளன. தார் பாலைவனம், குஜராத்தின் கட்ச் பகுதிகளில் மட்டுமே இவை இனப்பெருக்கம் செய்கின்றன.
பசுமை ஆற்றல் எனும் சமாதி
வேளாண்மை விரிவாக்கம், உணவில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம், புல்வெளிப் பகுதிகள் அழிப்பு, வாழிட அழிப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும், மின்கம்பிகளில் மோதியும் மின்சாரம் பாய்ந்தும் கானமயில் பலியாவது அதிகரித்துவருகிறது. வெறும் 200-க்கும் குறைவான பறவைகளே இந்தியாவில் வாழ்ந்துவரும் நிலையில், ஆண்டுக்கு 18-க்கும் குறையாத கானமயில்கள் மின்கம்பிகளில் மோதிப் பலியாவதாக ‘இந்தியக் காட்டுயிர் நிறுவனம்’ குறிப்பிடுகிறது. இதில் முரண் என்னவென்றால் குஜராத், ராஜஸ்தானில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலைகள், சூரியசக்தி மின்னாற்றல் திட்டங்களே கானமயிலின் உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. பசுமை ஆற்றல் ஆதாரங்கள், சூழலியலை மாசுபடுத்தாதவை எனும் அடையாளங்களுடன் தனியார் பெருநிறுவனங்களால் இந்த மின்னுற்பத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அழிவின் விளிம்பில் மிக அதிக அபாயத்தில் (Critically Endangered) தள்ளாடிக்கொண்டிருக்கும் கானமயில் உள்ளிட்ட பறவைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். ஆனால், அந்த முயற்சிகளைச் செயல்படுத்துவதில் அரசும் தனியார் நிறுவனங்களும் உறுதியாக இருக்கின்றனவா? எம்.கே.ரஞ்சித் சின் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் 2021 ஏப்ரலில் ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. ஓராண்டு காலத்துக்குள் கானமயில் வாழிடத்தில் உள்ள மின்கம்பிகள் நிலத்துக்கு அடியில் எடுத்துச்செல்லப்பட வேண்டும்; பறவைகளைத் திசைதிருப்பும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதுபோல் தெரியவில்லை. பறவைகளை திசைதிருப்பும் கருவிகள் பொருத்தப்பட்டாலும், உண்மையிலேயே பலன் கிடைக்குமா தெரியவில்லை.
“கவர்ந்திழுக்கும் பறவையினங்களில் ஒன்றான கானமயில் அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. உலகில் தார் பாலைவனம் மட்டுமே அதன் கடைசிப் புகலிடம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி அரசும் மின்னுற்பத்தி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்” என்கிறார் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக இயக்குநர் பிவஷ் பாண்டவ். கானமயில்கள் மட்டுமல்ல, தார் பாலைவன மின்கம்பிகளில் மோதி ஆண்டுக்கு 1 லட்சம் பறவைகள் இதுபோல் மடிகின்றன என்கிறது இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தின் மதிப்பீடு. இவற்றில் பெரும்பாலானவை வலசை வரும் அரிய பறவைகள்.
பறவைகள் எதற்கு?
சரி, பறவைகள் அழிவது குறித்துக் கவலைப்படுவதாலோ, பறவைகளைப் பாதுகாப்பதாலோ மனிதர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஒரு இயற்கைச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அடையாளப்படுத்துபவையாகப் பறவைகள் திகழ்கின்றன. அது மட்டுமல்லாமல், காலம்காலமாக நமது பண்பாட்டுச் சின்னங்களாகவும், கலை இலக்கியங்களிலும் மனிதர்களின் நினைவுகளிலும் காட்டுயிர்களும் பறவைகளும் நீங்காத இடத்தைப் பிடித்துவந்திருக்கின்றன. அதேநேரம், மனிதத் தேவைகளுக்காகப் புதுப்புது நிலப்பகுதிகள் அழிக்கப்படும்போதும் திருத்தப்படும்போதும் தாவரங்களும் உயிரினங்களும் தங்கள் வாழிடத்தை இழக்கின்றன, தொடர்ச்சியாக அழிந்தும் போகின்றன.
உலக அளவில் மனிதர்களால் அழிக்கப்பட்ட உயிரினங்களின் குறியீடாக டோடோ இருப்பதைப் போல், நவீன கால இந்தியா இழந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் அடையாளமாகக் கானமயில் மாறிவிட்டது. இந்தியா இழந்துவரும் இயற்கைப் புதையல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது. நம் மண்ணிலிருந்து கானமயில் அற்றுப்போவது என்பது ஓர் உயிரினத்தின் அழிவு மட்டுமல்ல, நம் காலத்தில் அந்த உயிரினம் பூண்டோடு அற்றுப்போவதற்கான மௌன சாட்சியாக நாம் அனைவரும் வாளாவிருந்திருக்கிறோம் என்பதாகவுமே வரலாறு பதிவுசெய்யும்.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு:valliappan.k@hindutamil.co.in
தமிழகத்தில் பாதுகாப்பை எதிர்நோக்கும் சில பறவைகள்:
நீலகிரி சிரிப்பான்
நீலகிரி நெட்டைக்காலி
நீலகிரி சோலைக்கிளி
நீலகிரி பூங்குருவி
நீலகிரி காட்டுப்புறா
இந்தியப் பாறு
வெண்முதுகுப் பாறு
செந்தலைப் பாறு
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago